Published:Updated:

கறுப்புத் துணிகளை வாங்கிய பக்தவத்சலம்! பிறந்த தின சிறப்புப் பகிர்வு

Vikatan Correspondent
கறுப்புத் துணிகளை வாங்கிய பக்தவத்சலம்! பிறந்த தின சிறப்புப் பகிர்வு
கறுப்புத் துணிகளை வாங்கிய பக்தவத்சலம்! பிறந்த தின சிறப்புப் பகிர்வு

“எனது தமிழாசிரியர் உ.வே.சாமிநாத ஐயர். ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்” என்றவர் தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம். அவருடைய பிறந்த தினம் இன்று.

‘பல்கலைக்கழகப் படிப்புக்குச் சமமானவர்!’
‘‘இவரோடு பழகுவது பல்கலைக்கழகத்தில் படிப்பதற்குச் சமமானது’’ என்று கூறியுள்ளனர், இவருடைய நெருக்கமானவர்கள். சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு இலக்கணம் வகுத்தவர்; எதிர் தரப்பினரின் மனம் புண்படாமல் தனது கருத்தைப் பதிவுசெய்வதில் வல்லவர்; ராஜாஜி தன்மேல் வைத்த நம்பிக்கைக்குரியவராக வாழ்ந்தவர்; பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மை, தூய்மையைக் கடைப்பிடித்தவர். அதனால்தான், “பொதுவாழ்விலும் இருந்துகொண்டு தூய்மையாகவும் இருக்க முடியும் என்னும் உண்மையை வாழ்ந்துகாட்டுபவர் பக்தவத்சலம்” என்றார் முன்னாள் மத்திய அமைச்சரான ஓ.வி.அளகேசன்.

கறுப்புத் துணிகளை வாங்கினார்!
ராஜாஜி மந்திரி சபையில், அமைச்சராக இருந்தசமயம் அரக்கோணத்துக்குப் பேசச் சென்றார் பக்தவத்சலம். அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் அவருக்கு கறுப்புத் துணியை வீசி எறிந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். உடனே, அவர்களை அழைத்து அவர்களிடம் இருந்த கறுப்புத் துணிகளை வாங்கிக்கொண்டு, ‘‘உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டேன். முதலமைச்சரிடமும் கூறுகிறேன்’’ என்றார். அவர்களும் அமைதியாகக் கலைந்துசென்றனர். அப்படிப்பட்ட நன்மதிப்புக்குரியவர் பக்தவத்சலம்.

1960-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றுவந்த பக்தவத்சலம், ‘‘இன்னும் இரு ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றிவிட்டால், நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம்’’ என்று அப்போதே நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.

‘பணம் கொடுப்பவர் பெயரில் மட்டுமே கல்லூரி ஆரம்பிக்கப்படும்’ என்று பக்தவத்சலம் காலத்தில் ஒரு திட்டம் இருந்தது. அதைப் பார்த்த பெரியார், ‘‘இது நல்ல திட்டம். ஆனால், பணத்துக்கு நான் எங்கே போவேன்? திருச்சியில் எனக்கு இருக்கும் நிலத்தைத் தருகிறேன். ஒரு கல்லூரி தொடங்குங்கள்” என்றார். அப்படிப் பிறந்த கல்லூரிதான் திருச்சி ஈ.வெ.ரா. அரசுக் கலைக் கல்லூரி.

இந்திய அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நேரத்தில், “கோயிலில் இருக்கும் தங்கக் குடங்களை நாட்டுக்குத் தரக் கூடாதா?” என்று கேட்டவர் பக்தவத்சலம்.

‘விஷக் கிருமிகள் பரவிவிட்டன!’
பக்தவத்சலத்துடைய துரதிர்ஷ்டம் அவர் முதலமைச்சர் பதவி வகித்த காலத்தில் உணவு தானியங்களுக்குத் தட்டுப்பாடு வந்தது. சாஸ்திரி அரசின், ‘இரவில் உணவகங்கள் திறக்கக் கூடாது’ என்கிற ஆணையை அப்படியே நிறைவேற்றியதும் மக்களிடையே கொந்தளிப்பைக் கொண்டு வந்தது. உணவுப் பொருட்களின் விலை எகிறி நின்றது. தேர்தல் காலத்தில், ‘பக்தவத்சலம் அண்ணாச்சி... அரிசி விலை என்னாச்சி’ என்று எதிர்க் கட்சிகள் கோஷம் போட்டன. 1967 தேர்தல் தோல்விக்கு பக்தவத்சலத்தைக் குறை கூறியவர்களும் உண்டு. எனினும், தேர்தல் முடிவு குறித்து பத்திரிகையாளர்களிடம் அவர் சொன்னது, “தமிழ்நாட்டில் விஷக் கிருமிகள் பரவிவிட்டன” என்றுதான்.

சொந்த ஊரிலிருந்த தனது பூர்வீக வீட்டை ஒரு நூலகமாக மாற்ற கருணாநிதி முடிவெடுத்து, அதைத் திறந்துவைக்க அழைத்தது பக்தவத்சலத்தைத்தான். மதுரையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவுக்கு பக்தவத்சலத்தை (அவருடைய கடைசிக்காலத்தில்) அழைத்தார் பி.டி.ராஜன். அவருடைய உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, “இந்தத் தள்ளாத வயதில், உடல் நலமும் சரியில்லாத நிலையில், மதுரைக்குச் செல்ல வேண்டாம்” என்று கூறினர், அவருடன் உடனிருந்தோர். ஆனால், அதை எதையும் பொருட்படுத்தாத அவர், அந்த விழாவுக்குச் சென்று உரையாற்றினார்.

மிகவும் எளிமையானவராகவும் எதிர்க் கட்சியினரும் விரும்பும் தலைவராகவும் விளங்கிய பக்தவத்சலம் தன்னுடய 90-வது வயதில் மறைந்தார்.

‘‘பக்தவத்சலம், மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மனிதர்’’ என்ற முன்னாள் கேரள ஆளுநரின் புகழுரைக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்தவர்.

- ஜெ.பிரகாஷ்