Election bannerElection banner
Published:Updated:

கல்லைத் தூக்கினால்... கணவன்!

கல்லைத் தூக்கினால்... கணவன்!

##~##

ளவட்டக் கல் கேள்விப்பட்டு இருப்பீர்கள். வழக்கொழிந்து போன இளவட்டக் கல்லை இப்போதும் ஞாபகத்தில்வைத்து திருவிழா கொண்டாடிக்கொண்டு இருக்கிறது ஒரு கிராமம்.  

கல்லைத் தூக்கினால்... கணவன்!

எட்டையபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது அயன் வடமலாபுரம். இங்கே அம்மன் கோயில் திருவிழாவை மூன்று நாட்கள் விமரிசையாகக் கொண் டாடுவார்கள். மூன்றாவது நாள் வீர விளையாட்டு ஆரம்பமாகிறது. சிறுவர்களுக்கு மியூஸிக் சேர், காலேஜ் பெண்களுக்குத் தட்டாங்கல், இல்லத்தரசிகளுக்குத் தாயக்கட்டை விளையாட்டு, இளந்தாரிகளுக்கு உறியடி என்று கிராமமே விளையாடத் தொடங்குகிறது. எல்லா வற்றையும் விட ஹைலைட்... இளவட்டக்கல்தான்!

கல்லைத் தூக்கினால்... கணவன்!

''இளவட்டக் கல் தூக்கும் போட்டி ஆரம்பமாகப் போகுது. அதனால், எல்லா இளந்தாரிகளும் போட்டி நடக்கிற இடத்துக்கு சீக்கிரம் வாங்க'' என்று மைக்கில் அறிவிக்கிறது ஒரு குரல். ஊர்த் தலைவர் கல்லுக்குக் கற்பூரம் காட்டி வீரர்களுக்கு விபூதி பூசிவிடுகிறார். பச்சைக் கொடி அசைத்ததும் முறைப்படி தொடங்குகிறது விளையாட்டு. கோவில்பட்டி, கீழ ஈரால், மேல ஈரால், புதூர், விளாத்திகுளம், பாஞ்சாலங்குறிச்சி, எட்டையபுரம் என எட்டுத் திக்கும் உள்ள சுத்துப்பட்டிகளில் இருந்து இளைஞர்கள் ஆஜராகி இருந்தார்கள். சிலர் முக்கினார்கள். சிலர் தூக்கினார்கள். பலர் தோற்றார்கள். 'யேய் வழிவிடு... சிங்கம் வருதுலே’ என்று தனக்குத் தானே பில்ட்-அப் கொடுத்தபடி வந்த கணேசன், அசராமல் தொடர்ந்து 19 முறை கல்லைத் தூக்கிப் போட் டார். 20-வது முறை கல்லைத் தூக்கி தோளில் வைத்தபடி ஒரு மினி ரவுண்ட் அடிக்க, கூடி இருந்த பெண்கள் முகத்தில் செம வியப்பு. முதல் பரிசு

கல்லைத் தூக்கினால்... கணவன்!

3 ஆயிரம் வென்றவரை ஓரம் கட்டினோம். ''நான் இந்த ஊர்க்காரன்தான். விவசாயம் பார்க்குறேன். அதனால், உடம்பு கிண்ணுனு இருக்கும். எங்க அப்பா கல்லைத் தூக்கித்தான் எங்க அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. இந்த ஊருல இருக்குற பாதி ஆளுங்க கல் தூக்கி கல்யாணம் பண்ணவங்கதான். 'கல் தூக்குற பாரம்பரிய வழக்கம் மறைஞ்சிடக் கூடாது’னு ஊர்க்காரங்க முடிவு செஞ்சு 30 வருஷங்களா போட்டியை நடத்திட்டு இருக்காங்க. இளவட்டக் கல் 101 கிலோ எடை இருக்கும். இதைக் கையால் உருட்டிப் போடுறதே கஷ்டம். தினம் தூக்கிப் பழகணும். சாப்பிட்டதும் தூக்கினா வயிறு பிடிச்சிக்கும். மண்டி போட்டு உக்காந்துத் தூக்கி, தொடையில் உருட்டி, தோளில் ஏற்றி அப்புறம் கழுத்தில்வெச்சு தூக்கிப் போடணும். கல் தூக்கி உருட்டும்போது நெஞ்சு வலிக்கும், நரம்புப் புடைக்கும். இருந்தாலும் அசரக் கூடாது.'' என்கிறார் கணேசன். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுப் பணம் கொடுக்கும் கிருஷ்ணசாமித் தாத்தா அந்தக் காலத்தில் 30 முறை கல் தூக்கிப் போட்டு கல்யாணம் செய்தவர். ''எனக்கு 20 வயசா இருக்கும்போது பக்கத்து ஊருக்கு வேலைக்குப் போனேன். ஒருநாள் வெயில் மண்டையப் பொளந்ததால ஆலமரத்துக்குக் கீழே கிடந்த கல் மேல செத்த உக்காந்தேன். உடனே ஊர்க்காரங்க ரெண்டு பேரு வந்து, 'இது மாப்பிள்ளை கல்லு. இதைத் தொடக் கூடாது. தொட்டா தூக்கிப் போடணும். இல்லைன்னா

கல்லைத் தூக்கினால்... கணவன்!

51 அபராதம்’னு சொன்னாங்க. 'அய்யா... நான் அசலூர்க்காரன்  எனக்கு எதுவும் தெரியாது’னு சொல்லிப் பார்த்தேன். அவங்க கேட்கவே இல்லை. கையில காசும் இல்லை. 'சரி... என்னதான் நடக்குதுனு பார்க்கலாம்’ன்னு முடிவு பண்ணி கல்லை முக்கித்தக்கி தூக்கிட்டேன். அதுல இருந்து தினமும் வேலை முடிஞ்சு வீட்டுக்குக் கிளம்புற நேரத்துல, கல்லைத் தூக்கிப் போட ஆரம்பிச்சேன். இதை ஒருத்தி கவனிச்சுக்கிட்டே இருந்திருக்கா. அவ அப்பன் ஆத்தாட்ட சொல்லி அனுப்பிட்டா. எனக்கும் அவளைப் பிடிச்சிருந்தது. 'தனக்குத்தான் கட்டிவைக்கணும்’னு  பெண்ணோட முறை மாமன் பஞ்சாயத்துல  வழக்கு கொடுத்துட்டான். நாட்டாமை 'யார் அதிகமா கல்லு தூக்கிப் போடுறாங்களோ, அவங்களுக்குத்தான் பொண்ணு’னு தீர்ப்பு கொடுத்தாரு. நான் பொண்ணு முகத்தைப் பார்த்துக்கிட்டே 30 தடவை கல்லைத் தூக்கி போட்டுட்டேன். அந்த முறை மாமனுக்கு இசக்கு (சத்து) இல்லை. மூணு தடவைக்கே முக்கிட்டான். அப்புறம் என்ன, கல்யாணம்தான்'' தலை நரை முடியைத் தடவியபடியே சிரிக்கிறார் தாத்தா.

கல்லைத் தூக்கினால்... கணவன்!
கல்லைத் தூக்கினால்... கணவன்!

இப்போதும்கூட அந்தக் கிராமத்தில் கல் தூக்கி கல்யாணம் நடந்திருக்கிறது என்கிற ஆச்சர்யத் தகவல் சொன்னார்கள். போன வருடம் இதே திருவிழாவில் கல் தூக்கிப் போட்ட சீனிவாசனைப் பார்த்து காதலாகி கல்யாணம் செய்திருக்கிறார் ஆண்டாள் தேவி.

''போன திருவிழாவுல நிறையப் பேரு கல்லு தூக்கிப் போட்டாங்க. ஆனா இவரு அசால்ட்டா தூக்கிப் போட்டாரு. அப்பவே எனக்கு இவரைப் பிடிச்சிப் போச்சு. அம்மாக்கிட்டே விஷயத்தைச் சொன்னேன். அன்னிக்கே நிச்சயதார்த்தம் பண்ணிட்டாங்க. நான் எம்.சி.ஏ. ஃபைனல் இயர் படிச்சிட்டு இருந்ததால படிப்பு முடிஞ்சு இந்த வருஷம் கல்யாணம் பண்ணிக் கிட்டோம்'' என்று ஆண்டாள் தேவி சொல்ல, ஆசையாகக் கல்லைத் தடவுகிறார் சீனிவாசன்!

- இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு