Published:Updated:

புரட்சிப்பாடகன் பாப் டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு! #BobDylan

புரட்சிப்பாடகன் பாப் டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு! #BobDylan
புரட்சிப்பாடகன் பாப் டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு! #BobDylan

புரட்சிப்பாடகன் பாப் டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு! #BobDylan

2016-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞரும் இசை ஆளுமையுமான பாப் டிலனுக்கு (Bob Dylan)வழங்கப்படுகிறது. கென்யாவைச் சேர்ந்த ஆங்கில நாவலாசிரியர் நுகிகி வா தியாங்கோ, ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமி, `போர்ட்நாய்ஸ் கம்ப்ளைண்ட்' என்ற சர்ச்சைக்குரிய நாவல் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்த அமெரிக்க நாவலாசிரியர் பிலிப் ராத்.. இவர்களில் ஒருவருக்கு கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் புரட்சிப்பாடகரான டிலனை தேர்வு செய்து வியப்பை உருவாக்கியிருக்கிறது ஸ்வீடன் அகாடமி. 

டிலன், அமெரிக்காவின் மினஸோட்டா மாகாணத்தில் உள்ள துளூத் (Duluth)நகரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 1941, மே 24ம் தேதி பிறந்தவர். அப்பா போலியோவால் பாதிக்கப்பட்டவர். அம்மாவே உலகமென வளர்ந்தவர். இவருடைய மூதாதையர்கள், 1905ல் ரஷ்யாவில் யூதர்களைக் குறிவைத்து நடந்த படுகொலை சம்பவங்களுக்கு அஞ்சி அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர்கள். 'ராபர்ட் ஆலன் ஸிம்மர்மேன்' என்ற இயற்பெயர் கொண்ட டிலன், இளவயதிலேயே அமெரிக்க நாட்டுப்புற இசை மீது தீராத் தாகம் கொண்டார். பள்ளிக் காலத்திலேயே தனி இசைக்குழுக்கள் உருவாக்கி காஃபி விடுதிகளில் பாடத் தொடங்கினார். விரக்தி, கோபம், மகிழ்ச்சி, நம்பிக்கை, ஆவேசம், கொண்டாட்டம் என என சகல உணர்வுகளும் நிரம்பிய டிலனின் பாடல்கள் அமெரிக்க இளைஞர்களை வெகுவாக ஆட்கொண்டன. இசையின் மீதியிருந்த ஈடுபாட்டால் முதல் ஆண்டோடு கல்லூரியில் இருந்து இடை நின்ற டிலன், நியூயார்க் சென்று தீவிரமாக இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 1962ல் வெளிவந்த இவரது முதல் இசைத்தொகுப்பான 'பாப் டிலன்' அமெரிக்க இசை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் கவனத்தை உருவாக்கிக் கொடுத்தது.  

இசைக்கருவிகளின் சத்தத்திற்கு இரையாகாமல், தனித்தன்மையோடும், நகைச்சுவையோடும் வெளிப்பட்ட டிலனின் வார்த்தைகள் இளைஞர்களை வசீகரித்தன. 1963ல் வெளிவந்த அவரது இரண்டாவது இசைத்தொகுப்பான `தி ப்ரிவீலிங் பாப் டிலன்", அவரை தனித்து அடையாளம் காட்டியது. கருப்பின மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அரசியல் மற்றும் சமூகச் சூழலையும், அணு ஆயுதங்களால் ஏற்படும் கேடுகளையும் விவரிக்கும் பாடல்கள் அதில் இடம் பெற்றன. அதன்பிறகு வெளியான பெரும்பாலான இசைத் தொகுப்புகளில் டிலன், மனித உரிமைகளையும், சமூக ஒடுக்குமுறைகளையும் வெளிப்படையாகவே விமர்சித்தார். அவரது பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. நிகழ்ச்சிகளில் வன்முறைகள் நடந்தன. தொடக்கத்தில் நாட்டுப்புற இசையில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய டிலன் காலப்போக்கில் ராப், ராக் பாடல்களின் திசையிலும் பயணித்தார். இந்தாண்டு வெளிவந்த ஃபாலென் ஏஞ்சல் இசைத்தொகுப்பையும் சேர்த்து, 69 இசைத்தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் இசை, நடிப்பு, பாடல் என பல நிலைகளில் பங்களிப்பு செய்திருக்கிறார். மேன் ஹேவ் நேம்ஸ் அன்ட் ஆல்தி அனிமல்,  பாப் டிலன் சாங் புக் உள்பட கவிதைகள், ஓவியங்கள், பாடல்களை உள்ளடக்கி 28 புத்தகங்களும் வெளிவந்திருக்கிறது. எலியட்ஸ்,  கீத்ஸ், டென்னிஸன் போன்ற இசைமாமேதைகள் வரிசையில் வைக்கத் தகுந்த ஆளுமையாக உலக இசை வல்லுனர்கள் டிலனை கொண்டாடுகிறார்கள். 

1979ல் வெளியிடப்பட்ட ஸ்லோ ட்ரெயின் கமிங் என்ற இசைத்தொகுப்புக்காக கிராமி விருதையும், 2000மாவது ஆண்டில் வெளிவந்த ஒண்டர் பாய்ஸ் என்ற படத்தில் இடம்பெற்ற பாடலுக்காக ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதையும் பெற்றிருக்கிறார் டிலன். `கவித்துவமான உணர்களால் அமெரிக்க இசைக்கலாச்சாரத்தை மேம்படுத்தியவர்' என்று டிலனை கொண்டாடி இப்போது நோபல் பரிசை வழங்கியிருக்கிறது ஸ்வீடன் அகாடமி. 

டிலனின் வாழ்க்கை இசையால் நிரம்பியது என்றாலும் பெரும்பாலும் போராட்டங்களும் அவரின் வாழ்க்கையில் அங்கமாக இருந்திருக்கின்றன. ஏராளமான இளைஞர்களின் ஏகோபித்த இசை ஆளுமையாக விளங்கினாலும் பெரும்பாலான ஆதிக்க மையங்கள் டிலனுக்கு எதிராகவே செயல்பட்டன. எதற்காகவும் தன் இயல்பை விட்டுக்கொடுக்கவில்லை டிலன். இலக்கணங்களைத் தகர்த்து, கரடுமுரடாக தொடங்கும் டிலனின் இசை, ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த உணர்வுகளின் சங்கமமாக மாறி, உச்சமாக ரசிகனைப் பற்றிக்கொள்ளும். நகைச்சுவையும் பகடி ததும்பும் அவரது விமர்சனங்களும் அவரை உலகத்தின் தனித்தன்மை மிக்க இசைக்கலைஞனாகவும் பாடலாசிரியனாகவும் மாற்றியது. 

டிலன் தான் சம்பாதித்த செல்வத்தை சேவைகளுக்கு கொட்டிக் கொடுத்தார். ஆப்பிரிக்க நாடுகளின் பஞ்சத்தைப் போக்க ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டினார். இன்றளவும் அவருக்கு கிடைக்கும் உரிமத்தொகைகள் நன்கொடைகளாக பல்வேறு அமைப்புகளுக்கு செல்கின்றன.

வழக்கமான மரபுகளை உடைத்து, இசை ஆளுமையாக, மனித உரிமை செயற்பாட்டாளராக, எளிய மக்களின் துயரத்தைப் பாடும் புரட்சிப்பாடகனாக பயணித்துக் கொண்டிருக்கும் பாப் டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசை வழங்கி இந்தாண்டு புதிய வரலாற்றைப் படைத்திருக்கிறது ஸ்வீடன் அகாடமி.  

-வெ. நீலகண்டன்

அடுத்த கட்டுரைக்கு