Published:Updated:

உலகின் 200 கலைஞர்களில் இவரும் ஒருவர்! #WireSculpture

உலகின் 200 கலைஞர்களில் இவரும் ஒருவர்! #WireSculpture
உலகின் 200 கலைஞர்களில் இவரும் ஒருவர்! #WireSculpture

உலகின் 200 கலைஞர்களில் இவரும் ஒருவர்! #WireSculpture

“சென்னையில மட்டும் ஒருநாளைக்கு 4500 டன் கழிவுகள் சேருது. அதை அப்படியே அள்ளிக்கொண்டு போய் பள்ளிகரணையிலயோ, கொடுங்கையூர்லயோ கொட்டுறாங்க. இந்த 4500 டன் கழிவுகளை தரம் பிரிச்சு விற்பனை செஞ்சா பல ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆனா, அதை யாருமே பெரிசா எடுத்துக்கிறதில்லை. தெருவெல்லாம் கொட்டி வைக்கிறாங்க. நீர்நிலைகள்ல எல்லாம் போட்டு அழிக்கிறாங்க. இந்தக் குப்பைகளைக் கொண்டு போய் கொட்டுறதுக்குப் பயன்படுத்தும் வாகனங்களால ஏற்படுற மாசு, இன்னொரு பெரிய பிரச்னை. ஒவ்வொருத்தரும் வீட்டுல அஞ்சு நிமிஷம் ஒதுக்கி, கழிவுகளை தரம் பிரிச்சுட்டா நாட்டுல குப்பைகளே சேராது. அதை மக்களுக்கு உணர்த்தத் தான் இந்தக் கலையை கையில எடுத்தேன்..." 

வெகு லாவகமாக கம்பிகளை வளைத்துக்கொண்டே உற்சாகமாகப் பேசுகிறார் ராஜாராம். 

சென்னை போரூரில் வசிக்கும் ராஜாராம், வயர் சிற்பக் கலைஞர். கழிவென்று தூக்கி வீசப்படும் மின் வயரில் இருக்கும் கம்பியைக் கொண்டு அற்புதமான சிற்பங்களை வடிக்கிறார். ராஜாராம் கை லாவகத்தில் தட்டான் பூச்சியாக, ஒட்டகச் சிவிங்கியாக, மானாக, விட்டில் பூச்சியாக அந்த கம்பிக்குள் இருந்து உருவங்கள் உயிர் பெற்று உலவுகின்றன. சட்டக சிற்பங்களையும் வடிக்கிறார்.  wire sculpture   என்று அழைக்கப்படும் இந்த நுட்பமான கலையில் உலகெங்கும் இருநூறுக்கும் குறைவான கலைஞர்களே இருக்கிறார்கள். 

ராஜாராம் ஒரு நிறுவனத்தில் எலெக்ட்ரிகல் இன்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இயல்பிலேயே சுற்றுச்சூழல் ஆர்வம் உண்டு. அது சார்ந்த ஒரு அங்கமாகத்தான் இந்த வயர் சிற்பக் கலையைப் பயன்படுத்துகிறார் ராஜாராம். பூங்காக்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும் ராஜாராம், ஓரிடத்தில் அமர்ந்து கம்பிகளை வளைத்து சிற்பமாக்கி குழந்தைகளுக்குத் தருகிறார். மெல்ல மெல்ல மக்கள் அவரைச் சுற்றி கூடி நிற்கிறார்கள். குப்பைகளை வீட்டிலேயே தரம் பிரிக்கும் அவசியத்தையும், குப்பைகளால் ஏற்படும் சூழலியல் சிக்கல்களையும், தற்சார்பு வாழ்க்கை முறையின் பயன்களையும் அவர்களுக்கு விளக்குகிறார். பிறகு அடுத்த இடத்தை நோக்கி நகர்கிறார்.

“சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் உண்டு. பள்ளியில் ரகுபதி என்ற ஆசிரியர் மிகச்சிறப்பாக ஓவியம் வரைவார். அவர் என்னை உற்சாகப்படுத்தினார். சரித்திர நாவல்களைப் படித்துவிட்டு, அதில் வரும் பாத்திரங்களை, அணிகலன்களை எல்லாம் ஓவியங்களாக வரைவது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. லேண்ட்ஸ்கேப், நேச்சுரல் சீனரி ஓவியங்களும் வரைவேன். தஞ்சாவூர் ஓவியங்களும் வரையக் கற்றுக்கொண்டேன். 

படிப்பு முடித்து, மின் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். ஓவிய வாழ்க்கை அதோடு முடிந்துபோனது. பிற்காலம் முழுவதும் மின் வயர்களோடு என் வாழ்க்கை கலந்திருந்தது. விளையாட்டாக ஒருநாள், வயர்களுக்கு மேலுள்ள பாகத்தை அகற்றிவிட்டு, கம்பியை வளைத்துக் கொண்டிருந்தேன். என்னையறியாமலே ஒரு தட்டானின் சிற்பம் உயிர்பெற்றது. அதன்பிறகு, ஓய்வு நேரங்களில் விதவிதமாக செய்து பார்க்க முயற்சித்தேன். இணையத்தில் தேடியபோது, இது ஒரு கலையாகவே வளர்ந்திருப்பது தெரிந்தது. ஜிம்பாப்வேயைச் சேர்ந்த கவின் வொர்த் (www.gavinworth.com), இங்கிலாந்தைச் சேர்ந்த ரேச்சல் டக்கர்  போன்றோர் இந்தக் கலையில் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்தார்கள். 

இடைக்காலத்தில், பல பட்டனுபவங்களால் சுற்றுச்சூழல் சார்ந்த சிந்தனைகள் அதிகரித்தன. நாம் வாழும் இந்த பூவுலகு மீது சிறிதும் அக்கறையின்றி, பல பேரழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது இந்த மனித இனம். அடுத்த தலைமுறைக்கேனும் இந்த பிரபஞ்சம் பற்றிய சிந்தனை வரவேண்டும். குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் தன்னளவில் தவறுகளைத் திருத்திக்கொண்டு, எவரையும் பாதிக்காத ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும். ஒரு புறம் குளோபல் வார்மிங் பிரச்னை. மற்றொருபுறம் அணுஉலை போன்ற மனிதத் தவறுகளால் ஏற்படும் தீங்குகள், கட்டுப்பாடில்லாத எரிபொருள் பயன்பாடு, வன அழிப்பு... இது குறித்தெல்லாம் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் புரிதலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதற்கு, இந்த வயர் சிற்பக் கலையை பயன்படுத்த நினைத்தேன். 

தினமும் காலையும், மாலையும் பூங்காக்களுக்குப் போய் விடுவேன். வயர் சிற்பங்களை செய்து குழந்தைகளுத்துத் தருவேன். செய்யவும் கற்றுத்தருவேன். இதை வேடிக்கைப் பார்க்க கூடுகிறவர்களை அமர வைத்து பேசுவேன். அவர்களிடம் உறுதிமொழி வாங்குவேன். கடந்த நான்கைந்து வருடங்களாக இதுதான் என் பணி..." என்கிறார் ராஜாராம்.

வயர் சிற்பக்கலை மிகவும் எளிமையான கலை. கற்பனையும் கைத்திறனும் மட்டுமே பிரதானம். ஒரு மூக்குக் குரடு, கொஞ்சம் வயர்கள், கொஞ்சம் படைப்புத்திறன்... இவை போதும்.

“வயர் சிற்பக்கலைக்கு உலகமெங்கும் நிறைய டிமாண்ட் இருக்கிறது. கிரானைட், உலோகங்களில் பெரிய பெரிய உருவங்கள், சிற்பங்கள் செய்வதற்கு முன்பு, மினிமலாக வயர் சிற்பம் செய்து  பார்ப்பார்கள். வெளிநாடுகளில் பொறியியல் படிப்புகளில் வயர் சிற்பக் கலையும் பாடமாக இருக்கிறது. அண்மைக்காலமாக இங்குள்ள கட்டுமானப் பொறியாளர்கள் பலர் வந்து இந்தக் கலையை கற்றுக் கொண்டு போகிறார்கள். வீடுகளில் இன்டீரியர் செய்வதற்கு இக்கலையை பயன்படுத்துகிறார்கள். ஐ.ஐ.டி போன்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று வகுப்புகளும் எடுக்கிறேன். இப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கற்றுத்தருகிறேன். எங்கு சென்றாலும் இந்தக் கலையை மட்டும் பயிற்றுவிப்பதில்லை. அவர்களிடம், "இந்த பூமியை வதைக்க மாட்டேன். என்னளவில் தற்சார்பான வாழ்க்கையை வாழ்வேன்" என்ற உறுதிமொழிகளையும் பெற்றுக்கொள்கிறேன்..." என்கிறார் ராஜாராம். 

- வெ.நீலகண்டன்

படங்கள்; உசேன்   

அடுத்த கட்டுரைக்கு