Published:Updated:

`குழந்தைங்களோட விளையாட்டுல நீங்களும் சேரணுமா..?' - இந்த 7 ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க! #MyVikatan

விளையாட்டு முடியும்போது குண்டு வெடித்த இடம் போல வீடு முழுக்கப் பொருள்கள் சிதறிக் கிடக்கும்.

குழந்தைகளின் விளையாட்டு உலகம் எப்போதுமே தனித்துவமான ஒன்றுதான்.

"தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்" என்னும் டார்வினின் பரிணாமக் கொள்கையின்படி குழந்தைகள் உலகத்தில் நாம் நுழைய வேண்டுமானால் அதற்குத் தகுதியானவர்களாக நாம் மாற வேண்டும்!

'போங்க தம்பி நாங்க அடி வாங்காத ஏரியாவே கிடையாது' என்னும் கைப்பிள்ளைகளாக - காமெடியன்களாக நாம் மாறினால் மட்டுமே குழந்தைகளின் விளையாட்டினுள் நம்மால் எல்லை தாண்டி ஓரளவு ஊடுருவ முடியும்.

குழந்தைகள் விளையாட்டில் நாம் சேர உதவும் 7 விதிமுறைகள்:

Representational Image
Representational Image

# 01.வெற்றிகரமான தோல்வி:

எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக எனக்கு எல்லாம் தெரியும் என்று இருந்தால் ஒன்றும் வேலைக்கு ஆகாது. நமக்கு அநேக விஷயங்கள் தெரியாது என்பதைக் குழந்தைகள் நம்பினால் மட்டுமே அவர்களின் விளையாட்டில் நாம் இணைய முடியும் என்பதே இந்த டாஸ்க்கின் அடிப்படையான உண்மையாகும். சாந்த சொரூபத்துடன் கூடிய அப்பாவித்தனமான செயல்கள் இதற்கு உறுதுணை புரியும்.

கடினமான சோதனைகளுக்குப் பின் ஒருவேளை குழந்தைகளின் விளையாட்டில் நாம் சேர்க்கப்பட்டால், தொடர்ந்து தோற்றுக்கொண்டேதான் இருக்க வேண்டும்.

அவ்வாறு தோற்றுக்கொண்டே இருக்கும் போது குழந்தைகளின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சிக்கும் புன்னகைக்கும் இணையான வெற்றி எதுவும் இல்லை. எனவே ஒவ்வொரு முறையும் இந்த வெற்றிகரமான தோல்வியை அடைய நாம் கடினமாகப் பாடுபடுவது அவசியம்.

Representational Image
Representational Image

விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொண்டு தவறிப்போய் ஓரிரு முறை நாம் வெற்றி பெற்றுவிட்டால் அதன் பிறகு விழும் அடிகளுக்கும் உதைகளுக்கும் நிர்வாகம் பொறுப்பேற்காது.

தோற்றாலும் அடி விழும், ஜெயித்தாலும் அடி விழும் என்பதால் "என்ன தம்பி போன வாரமே அடிக்க வரேன்னு சென்னீங்க, வரவே இல்லை" என்னும் மனநிலையில் நாம் எப்போதும் இருந்து விடுவதே சிறந்தது.

ஆனால், ஒரே மாதிரியே தோற்றுக்கொண்டு இருந்தால் குழந்தைகள் நிச்சயமாக நம்மைக் கண்டுபிடித்து விடுவர். எனவே ஒவ்வொரு முறை விளையாட்டு ஆரம்பிக்கும் போதும் இதில் புதிதாக எப்படித் தோற்பது என்பதை, "எதையுமே பிளான் பண்ணிப் பண்ணனும்" என்பது போன்று முன்கூட்டியே பிளான் செய்துவிட வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

# 02.ஜென் மனநிலை:

விளையாடும்போதும் குழந்தைகளுக்கு அட்வைஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று அறிவுரை கூற ஆரம்பித்தோம் என்றால் நாம் நிச்சயமாகக் கோட்டுக்கு வெளியேதான் இருப்போம். "மொறடா மொற" என்று கோபமாகக் குழந்தைகளிடம் நாம் முறைக்க ஆரம்பித்தால் விளையாட்டில் நம் முறை எப்போதும் வரவே வராது.

விளையாடும்போது வீட்டில் ஏதேனும் பொருள்கள் உடைந்தால் ஞானிகளுக்கு இணையான பொறுமையுடன் அதனைக் கையாள வேண்டும். தண்ணீரிலேயே குழந்தைகள் கிடக்கும்போது வாக்குக்கேட்டு நம் வீடுகளுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு இணையான சகிப்புத்தன்மையை நிச்சயம் நாம் கைக்கொள்ள வேண்டும். இவற்றை வளர்த்துக்கொள்ள அதிகாலை தியானங்கள் துணைபுரியும்.

Representational Image
Representational Image

விளையாட்டு முடியும்போது குண்டு வெடித்த இடம் போல வீடு முழுக்கப் பொருள்கள் சிதறிக் கிடக்கும். விளையாட்டு முடிந்ததுமே குழந்தைகளின் பொறுப்பு துறக்கப்பட்டுவிடும்.

எனவே அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பு நம்முடையதே, நம்முடையது மட்டுமே என்பதை நாம் மறந்துவிடாமல் இருக்க மந்திரம் போல உச்சரித்து நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த நாள் விளையாட்டில் நாம் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகும்.

சில விஷயங்கள் நமக்குத் தெரியாதது போல் நடிக்கும் போது "அப்பாவுக்கு இதுகூட தெரியலடா?" என்று குழந்தைகள் வெடித்துச் சிரிப்பதைப் புன்னகையுடன் ஏற்க வேண்டும். நமது அறியாமை குறித்த கேலி கிண்டல்களை ஒருவித ஜென் மனநிலையுடன் சகித்துக் கொள்வதும் அவசியம்.

நாம் ஒன்று கேட்டால் குழந்தைகள் அதற்கு பதில் சொல்லாமல் வேறு ஒன்றைச் சொல்லிக்கொண்டிருப்பர். "ஏம்பா நான் கரெக்டா தானே பேசறேன்" என்ற ரீதியில் கேள்வி கேட்காமல், நமது கேள்விகளை அந்த இடத்திலேயே விட்டு விட்டு, அவர்களின் வழிக்கே சென்றுவிடுவது அப்போதைக்குச் சிறந்ததாக இருக்கும்.

குழந்தைகள் பாடும் சில பாடல் வரிகளும் கதைகளும் "திரும்பத் திரும்பப் பேசுற " என்ற ரீதியில் வரும்போது, நாமும் பல நேரங்களில் அவர்களுடன் சேர்ந்து திரும்பத் திரும்ப பேச வேண்டியிருக்கும் என்பதை எப்போதும் மறந்து விடக்கூடாது.

Representational Image
Representational Image

# 03.ஜோராகக் கைதட்டுதல்:

விளையாடும் போது குழந்தைகளை நாம் தொடர்ந்து பாராட்டிக்கொண்டே இருப்பது விளையாட்டில் தொடர்ந்து நீடிப்பதற்கான ஒரு சாமர்த்தியமான வழிமுறை ஆகும்.

டாவின்சி கோடுக்கு நிகராகக் குழந்தைகளின் முகத்தைப் பார்த்தே அவர்கள் தங்களைப் பாராட்டச் சொல்வதை நாம் குறியீடாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

துன்பம் வரும்போதும் சிரிக்க வேண்டும் என்பது போல நாம் களைப்பாகவும் வேலையாகவும் இருக்கும்போதும்கூட அவ்வப்போது பாராட்ட வேண்டியது வரும். புரியாத ஓவியத்திற்கும் தெரியாத பாடலுக்கும் தொடர்ந்து ஜோராகக் கைதட்டி கொண்டேதான் இருக்க வேண்டும்.

குழந்தைகள் அடிக்கும் குட்டிக் கரணங்களுக்கும், குரளி வித்தைகளுக்கும் குடும்பத்தினர் அனைவரையும் கூட்டி வந்து சுற்றி நிற்கவைத்துக் கைதட்டச் சொன்னோம் என்றால் அடுத்த நாள் விளையாட்டில் நாம் நிச்சயமாக இடம்பிடிப்பது உறுதி.

நாம் விளையாட்டில் தோற்றவுடன் குழந்தைகள் ஆடும் ஆட்டத்திற்கு அழுவது போலச் சிரிக்க வேண்டும். சிரிப்பது போல அழவும் வேண்டும். தமிழ் சீரியல்களைப் பார்த்து இதனைக் கற்றுக்கொள்வது சிறந்தது.

வெறும் கைத்தட்டலாக மட்டுமே நம்முடைய பாராட்டுகள் நின்றுவிடாமல் அருமை, அற்புதம் போன்ற வார்த்தைகளையும் அவ்வப்போது கூறுவது நல்லது.

டன் மற்றும் டபுள் டன் என்றெல்லாம் உற்சாகமூட்ட வேண்டிய தேவையும், புரியாத கதைகளைப் புரிந்தது போல நடிக்க வேண்டிய அவசியமும் அவ்வப்போது வருவதும் இந்த டாஸ்க்கின் நிபந்தனைக்கு உட்பட்டதுதான்!

Representational Image
Representational Image

# 04. அதெல்லாம் நீ சொல்லாத:

விளையாடும் போது நாம் ஏதேனும் ஆலோசனை கூறினோம் என்றால் 'அதெல்லாம் நீ சொல்லாத' என்பது போல தன் குழந்தைகள் நம்மை நோக்குவர்.

எனவே விளையாட்டுக்களின் போது ஆலோசனை கூறாமல், ஒரு தலைவன் கூறுவதை தலைமேற்கொண்டு நிறைவேற்றும் படைவீரனாய் நாம் இருப்பதே சிறந்தது.

ஒளிந்து விளையாடும் போது குழந்தைகளுக்குத் தெரிவது போலவே நாம் கட்டாயம் ஒளிந்துகொள்ள வேண்டும்.

அவ்வாறே அவர்கள் ஒளிந்துகொள்வது நமக்கு தெரிந்தும் தெரியாதது போலவே நடந்துகொள்ளவும் வேண்டும்.

நாம் இணையத்தில் தேடிக் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்த விளையாட்டுகள் உடனடியாக நிராகரிக்கப்படும் போதும் மனம் சோர்ந்துவிடாமல் புன்னகையுடன் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

அவ்வப்போது குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு கூகுள் சர்ச் செய்து பதில் அளிக்காமல், நம்முடைய மூளையில் தேடிப் பதில் அளிப்பது குழந்தைகளின் புரிதலுக்கு சுலபமான ஒன்றாக இருக்கும்.

ஏதேனும் நாம் சொல்ல விரும்பும்போது முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டால் நாம் கருத்து சொல்வதற்கு அவ்வப்போது அனுமதி கிடைக்கும்தான். ஆனால் நாம் சொல்வதை எல்லாம் கேட்டுவிட்டு குழந்தைகளை அவர்கள் போக்கில் விளையாட ஆரம்பிக்கும் போது, நாம் 'அதுவும் சரிதான்' என்று வேறுவழியின்றி இணைந்து விளையாட வேண்டி வரும். கருத்துச் சுதந்திரம் என்றெல்லாம் கலகக்குரல் எழுப்பினால் அதோடு சோலி முடிந்துவிடும்.

Representational Image
Representational Image

# 05. மலரும் நினைவுகள்:

நாம் குழந்தையாக இருக்கும்போது என்னவெல்லாம் செய்தோம் என்னும் மலரும் நினைவுகளை அவ்வப்போது குழந்தைகள் நம்மிடம் கேட்பர். அவற்றை நாம் சுவாரஸ்யமாக கூறிக்கொண்டிருக்கும் போது வேறு ஏதேனும் முக்கிய வேலை வந்துவிட்டால் குழந்தைகள் அந்த இடத்திலிருந்து அகன்று விடுவர்.

எதுவரை நாம் கூறி இருக்கிறோமோ அந்த இடத்தை நாம் கவனமாக ஞாபகத்தில் வைத்திருந்து, பிறகு குழந்தைகள் கேட்கும் போது அந்த இடத்திலிருந்து கூறவேண்டும். மீண்டும் முதலில் இருந்து கூறக்கூடாது என்பது முக்கியமான எழுதப்படாத விதிமுறை.

மலரும் நினைவுகளாக நமது கஷ்டங்களைக் கூறும்போது குழந்தைகள் கவனமாகக் கேட்டாலும், அவர்கள் அதற்கு எதிர்வினை ஆற்றுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது.

அவுட் ஆஃப் சிலபஸ் போல எதையோ ஒன்றைக் கூறிக் கொண்டிருக்காமல், தற்போதைய விளையாட்டிற்கு ஏற்ற நினைவுகளை மட்டுமே தொகுத்துக் கூறுவது சிறந்ததாக இருக்கும்.

உண்மையைக் கூறுகிறேன் என்று நாம் எப்போதோ பொய் கூறிய கதை எல்லாம் குழந்தைகளிடம் கூறிக்கொண்டு இருந்தால் அவர்களுடைய மதிப்பில் நாம் தாழ்ந்து போய் விடுவோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Representational Image
Representational Image

# 06. உண்மை உலகம்:

செல்போனே கதியாகக் கிடந்தோம் என்றால், இதுவும் கடந்து போகும் என்று குழந்தைகளின் விளையாட்டு உலகம் நம்மைக் கடந்து எங்கேயோ போய்விடும்.

உயிரற்ற செல்போனுடன் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு உயிர்ப்புள்ள குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிட நாம் மனதளவில் தயாராக வேண்டும்.

எனவே டிஜிட்டல் உலகத்திலேயே எந்நேரமும் சஞ்சரிக்காமல், குழந்தைகள் உலகத்திற்கும் அவ்வப்போது பயணம் சென்று வருவது சிறந்தது. இங்கும் ஸ்பேஸ் டிராவல் போலவே ஆச்சர்யமூட்டும் பல உண்மைகளை நாம் தேடிக் கண்டறிய முடியும்.

செல்போனில் நாம் ஏதேனும் ஆர்வமாகப் பார்த்து டிஜிட்டல் உலகில் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டு இருக்கும்போது, குழந்தைகள் வந்து நம்மை விளையாடக் கூப்பிட்டால், உடனே செல்போனைக் கடாசிவிட்டு குழந்தைகளின் உலகில் குதித்துவிடத் தயாரான மனநிலையில் நாம் எப்போதும் இருக்க வேண்டும்.

குழந்தைகள் உலகில் நாம் மகிழ்ச்சியாகச் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது திடீரென விளையாட்டில் இருந்து கழட்டி விடப்பட்டோம் என்றால் உண்மை உலகத்தைப் புன்னகையுடனும் பூரிப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

டைம் டிராவல் போல உண்மை உலகிலிருந்து டிஜிட்டல் உலகிற்கும் குழந்தைகள் உலகிற்கும் நாம் மாறி மாறிப் பயணம் செய்யப் பழகிக்கொண்டோம் என்றால் வாழ்க்கை போரடிக்காமல் இருப்பதுடன், ரசனைக்குரிய ஒன்றாக மாறும்.

Representational Image
Representational Image

# 07. அதிரடி விதிமுறைகள்:

விளையாட்டின் விதிமுறைகள் திடீர் திடீரென மாற்றப்படும். அவ்வப்போது அதிரடியாய்ப் புதுப்பிக்கப்படும். பழைய விதிமுறைகளைத் தூக்கி குப்பைத்தொட்டியில் வீசிவிட்டுப் புதுவிதிகளை குருட்டு மனப்பாடம் செய்துகொள்ள வேண்டிய தேவை அடிக்கடி நமக்கு ஏற்படும்.

விதிமுறைகள் திடீர் திடீரென மாற்றப்படும்போது கருத்து தெரிவிக்க நமக்கு உரிமை உண்டு என்றாலும், அந்தக் கருத்து ஏற்கப்படும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.

சில நேரங்களில் புதிய விதிகளைக் குழந்தைகள் நம்மிடம் கூறாமல் தம் மனதிற்குள்ளேயே வகுத்துக்கொள்வர்.

அவற்றையும் நாம் மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

"நேத்து அப்படி சொன்ன, இன்னைக்கு இப்படி சொல்ற" என்னும் வார்த்தை தப்பித்தவறியும் நம் வாயிலிருந்து வந்துவிடக்கூடாது. 'அப்படியா சரி' என்பதே குழந்தைகள் உலகில் கவசகுண்டலம் ஆக மாறி நம்மைக் காப்பாற்றும்.

Representational Image
Representational Image

விளையாட்டில் குழந்தைகள் பொய் சொல்லுவது சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என்றாலும், நாம் பொய் சொல்வது அணுவளவும் அனுமதிக்கப்படாது.

குழந்தைகள் விளையாட்டில் நாம் தொடர்ந்து இடம்பிடிக்க ஒரு அரைகுறையான அப்பாவித்தனமும், ஆர்ப்பாட்டமில்லாத அறிவாளித்தனமும் அவசியம் தேவை.

குழந்தைகளின் விளையாட்டு உலகத்தில் நாம் இணைவது என்பது எப்போதுமே கடினமான ஒரு செயலாக இருந்தாலும், அது என்றுமே நமக்கு மனமகிழ்ச்சி அளிக்கக் கூடிய இனிமையான ஒன்றாகவே இருந்து வருகிறது.

குழந்தைகளுடன் நாம் இணைந்து விளையாடும் போது நம்முடைய குழந்தைப் பருவத்திற்குக் காலப் பயணம் சென்று வந்தது போன்றே ஒவ்வொரு முறையும் நம் நினைவுகள் மீட்கப்படுவது ஏக்கம் கலந்த சுவாரஸ்யமான ஒன்று.

நண்பர்களே! உயிரற்ற டிஜிட்டல் உலகைவிட, உயிர்ப்புள்ள குழந்தைகள் உலகம் நமக்கு அள்ளி வழங்கக் காத்திருக்கும் அனுபவங்கள் அலாதியானவை! அனுபவிப்போம்..!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு