Published:Updated:

'கடவுளையும் சேவையையும் மறக்காதீங்க!'

நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்

'கடவுளையும் சேவையையும் மறக்காதீங்க!'
##~##
''இ
ந்த உலகத்துல சமைக்கத் தெரியாதவங்க கூட இருக்காங்க; ஆனா சாப்பிடாதவங்கன்னு யாருமே இல்லை. ஆனா, அந்தச் சாப்பாட்டை எப்படி, எப்பச் சாப்பிடணுங்கறது, இங்கே யாருக்குமே தெரியலை. உணவுங்கறது ருசிக்கானதா... இல்லவே இல்லை. அதுதான் உயிர் வாழ்வதற்கான போஷாக்கு'' என்று உணவில் இருந்தே ஆரோக்கிய ரகசியத்தை விவரிக்கத் துவங்குகிறார் மதுரை ஆதீனம்.

''திருவள்ளுவர், 'மருந்து என வேண்டாவாம் ஆக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’- ன்னு சொல்றார். அதாவது, சாப்பிட்ட உணவு ஜீரண மாகி, வெளியேறிருச்சா? அதுக்கு அப்புறம்தான் அடுத்த வேளைக்கான உணவைச் சாப்பிடணுமாம்! அப்படிச் சாப்பிட்டா, மருந்தோ மாத்திரையோ தேவையே இல்லைன்னு அழகாவும் தெளிவாவும் சொல்றார்.

மருத்துவத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு இருக்கறதா நினைச்சுச் செயல்படற உலகம் இது. ஆனா ஆன்மிகத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் நெருங்கின தொடர்பு உண்டு தெரியுமா? உடலும் உள்ளமும் தூய்மையா இருக்கறதுக்கு ஆன்மிகம் உதவுது; இந்த இரண்டும் தெளிவாயிட்டா, எந்த உறுப்புக்கும் செய்கூலியும் இல்லை; சேதாரமும் கிடையாது. 'உள்ளம் பெருங்கோயில்; ஊண் உடம்பு ஆலயம்’னு சிலாகிக்கிற திருமூலர், 'கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே’ன்னு தெளிவாச் சொல்லியிருக்காரே?!

அதேபோல், உடம்புங்கறது எந்திரம் மாதிரிதான். கொஞ்சம் அதிகமா வேலைப் பார்த்துட்டா, உடம்பும் மக்கர் பண்ணும்; சோர்வுல சுருண்டுக்கும். ஆனா, அந்த எந்திரத்தைப் பராமரிக்கற மாதிரி, உடம்புங்கற எந்திரத்துக்குத் தேவையான மந்திரங்களைக் கொடுத்துட்டிருந்தா, நம்ம உடம்பு... 'மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல...’ ஒரு ஒழுங்குல ஓடிக்கிட்டிருக்கும். சுலபத்துல ஜீரணமாகற உணவைச் சாப்பிடறதும் முக்கியம்; போதுமான வேளைல, போதுமான அளவுக்குச் சாப்பிடறது அதைவிட முக்கியம். அதனால, அந்தக் காலத்துல விரத முறைகளே நடைமுறைக்கு வந்துச்சு. வயிறு காலியா இருந்தா, புத்தி பரபரன்னு வேலைப் பாக்கும்; வயிறு முட்டச் சாப்பிட்டா, உடம்போட சேர்ந்து புத்தியும் ஓய்வு கேக்கும். அப்புறம் எப்படி ஞானம் வரும்? பொன்னும் பொருளும் சேர்க்கறதுக்கு மூலதனமே, உழைப்புதானே? இப்படி இருந்தா... எப்படி உழைக்க முடியும்?  

'கடவுளையும் சேவையையும் மறக்காதீங்க!'

வேற எந்த எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காம, மனசை ஒருபுள்ளியில நிறுத்தறதுதான் தியானம். அந்தத் தியானத்தை மேற்கொண்டா, கடவுளோட அருளும் கிடைக்கும்; உடம்பும் மனசும் கனிஞ்சு, உள்ளுக்குள்ளே ஒரு தெளிவு எப்பவும் இருக்கும்!

உடம்பையும் அதுக்குள்ளே இருக்கிற உயிரையும் இயங்க வைச்சுக்கிட்டிருக்கறது இறைவன். அந்த உடம்பும் உயிரும், சலனமோ சஞ்சலமோ இல்லாம, பிரச்னைகளோ பிணிகளோ வராம இருக்கறதுக்கு, அந்தப் பரம்பொருளை சதாசர்வ காலமும் நினைக் கணும். அது நம்ம கடமையும் கூட! அவ்வளவு ஏன்... திருஞானசம்பந்தரின் பதிகங்களுக்கு, நோயைத் தீர்க்கற சக்தி இருக்கு தெரியுமா?

'துணிவளர் திங்கள் துலங்கி விளங்கச்சுடர்சடை சுற்றிமுடித்துப்
பணி வளர் கொள்ளையர் பாரிடம் சூழ ஆர் இடமும் பலி தேர்வர்
அணிவளர் கோலம்எலாம் செய்து பாச்சில் அச்சிராமத்து உறைகின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மண்பே’

- என்று அழகாகப் பாடிக் காட்டுகிறார் ஆதீனம்.

'கடவுளையும் சேவையையும் மறக்காதீங்க!'

''இந்தப் பதிகத்தைப் பாடினா, ரத்தக் கொதிப்பு வராது; நீரிழிவு நோய் தாக்காது. இதேபோல, கல்வியும் ஞானமும் கிடைக்கறதுக்கு, குடும்பத்துல அமைதி நிலவுறதுக்கு, எதிரிகளால் ஏற்படும் தொல்லையில் இருந்து விடுபடுறதுக்கு, உணவு, உடை, உறைவிடம் கிடைக்கறதுக்குன்னு பதிகங்கள் இருக்கு. இந்தப் பாடல்களைப் பாடி, பரமனைத் தொழுதால், நம்மைப் போல் ஆரோக்கியமானவங்க எவருமே இல்லை. கடவுளைப் போற்றுகிற மந்திரங்களை எழுத்துக்களா, சொற்களா, வாக்கியங்களா, வசனங்களா நினைக்காதீங்க. அந்த மந்திரங்கள் எல்லாமே, தேக - மன ஆரோக்கியத்துக்கான அருமருந்துகள்!

இன்னொரு விஷயம்... 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’னு சத்திய வாக்கு. நாம வாழறதுக்கு, உணவு தேவை; அப்படின்னா அடுத்தவங்க வாழறதுக்கும் உணவு முக்கியம்தானே?! அதனால, உயிர் வாழறதுக்குத் தேவையான உணவே கிடைக்காம தவிக்கறவங்களுக்கு, அன்னதானம் பண்ணுங்க. அதைச் சாப்பிட்டு, அந்த உயிர், அந்த ஆத்மா நிறைஞ்சு போயிரும்; சந்தோஷத்துல பூரிச்சுரும்; உற்சாகமும் தெம்புமா இருக்கற அந்த ஆத்மாவோட எண்ண அலைகள், நம்மை வாழ்த்தும். அதுதான் ஆத்மார்த்தமான வாழ்த்து!

நம்மளை நாலு பேர் வாழ்த்தறாங்கன்னா... நம்மோட ஆயுளும் ஆனந்தமும் இன்னும் அதிகமாகும். அமைதியும் தெளிவும் இன்னும் கூடுதலாக் கிடைக்கும். கடவுளையும் மறக்க வேண்டாம்; சேவையையும் மறக்காதீங்க! இந்த ரெண்டும்தான், ஆரோக்கியத்துக்கான ரகசிய மந்திரங்கள்''என்று சொல்லி, கண்மூடி அனைவருக்காகவும் பிரார்த்தித் தார் மதுரை ஆதீனம்.

நமசிவாயம்...
நமசிவாயம்...
நமசிவாயம்!

- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

அடுத்த கட்டுரைக்கு