Published:Updated:

''நானும் விகடனும்!''

இந்த வாரம் : நாஞ்சில் சம்பத்படம் : எல்.ராஜேந்திரன்

பிரீமியம் ஸ்டோரி

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

தாய் முகம் தந்தாலும் எனக்கு முகவரி தந்ததில் விகடனுக்கு முக்கியப் பங்கு உண்டு. எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்து, கலையைத் தேடுவதற்குக் கல்லூரியில் சேர்ந்தபோதுதான் கல்லூரியில் ஆனந்த விகடனைப் படித்தேன். 'படித் தேனாக’ இனித்தது. ஒருகணம் 'சுட்டுவிடலாமா?’ என்று யோசித்தேன். மறுகணம் விட்டுவிட மாட்டார்கள் என்று எண்ணி சுடுகிற முடிவைக் கைவிட்டேன்.

அன்று மாலை நான் கலை பயின்ற தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி அமைந்து இருக்கிற செட்டியார்குளம் சந்திப்பில் இருந்து பேருந்து நிலையம் வரை இருக்கிற ஒவ்வொரு பேப்பர் கடையிலும் போய் 'ஆனந்த விகடன் இருக்கிறதா?’ என்று ஆசை ஆசையாகக் கேட்டேன். அலெக்சாந்திரா பிரஸ் சாலையில் இருந்த ஒரு கடையில் ஆனந்த விகடனை வாங்கினேன். அப்போது நான் வழிகாட்டியின் கையில் ஒப்படைக்கப்பட்டதாக உணர்ந்து பூரித்தேன். அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை, கண்களில் மழையாய், மாலை நிழலாய், மகிழ்ச்சிக் கவிதையாய், ஈர நதியாய், நதி வளமாய், வசியச் சுரங்கமாய் என் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள என்னில் ஆனந்த நர்த்தனம் புரிந்துகொண்டே இருக்கிறது ஆனந்த விகடன். மண்ணில் தெரிந்த மதுர நிலமாய் என்னை மயக்கிய ஆனந்த விகடனால்தான் எனது கனவுகளுக்குக் கை, கால்கள் முளைத்தன.

''நானும் விகடனும்!''

மூக்குத்திகளுக்கு முக்கியத்துவம் தருகிற ஏடுகளுக்கு மத்தியில் மூக்குக்கும் முன்னேற்றத் துக்கும் முக்கியத்துவம் தருகிற ஆனந்த விகடனின் பெருமையை, அருமையை விவரிக்க விவரிக்க அத்தியாயங்கள் பல தேவைப்படும். பூமி சிரிக்கவும் புத்தூற்று பிறக்கவும் கிழக்கை வசமாக்கவும் வியாழன்தோறும் உதிக்கிற ஆனந்த விகடனை அன்றைக்கே வாசிக்கா விட்டால், பித்துப் பிடித்துவிடும்.

எனது கிராமத்தில் இருந்தால், வியாழன் அன்று விகடன் கிடைப்பது முயற்கொம்புதான். வியாழன் புலர்ந்தால், ஆனந்த விகடனில் கண் விழிப்பதைத் தவமாய்க்கொண்ட, வானமும் சிறகுமாய் எனக்கு வாய்த்த தம்பி நாகர்கோவில் நடராஜனிடம் தொடர்புகொண்டால் ஆனந்த விகடனின் தித்திப்பான பக்கங்களை எல்லாம் அவன் என்னில் வரவுவைத்துவிடுவான். பித்தம் அப்போதுதான் தெளியும். சித்தத்தில் அப்போதுதான் நிம்மதி தெரியும்.

மழைக்கு முன் வருகிற மண் வாசனைபோல நாளை நடப்பதை முன்கூட்டியே முரசறைந்துவிடுகிற 'ஜூனியர் விகடன்’, பெண்ணின் பெருமை மட்டுமல்ல... பிரச்னைகளையும் பேசும் 'அவள் விகடன்’, காலத்தால் காயப்பட்ட விவசாயிகளுக்கு 'பசுமை விகடன்’, அருளையும் அறத்தையும் யாசிப்பவர்களுக்கு 'சக்தி விகடன்’, பொருளாதாரத்தில் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு 'நாணயம் விகடன்’, பட்டாம்பூச்சியாய் செல்லும் பிள்ளைச் செல்வங்களுக்கு 'சுட்டி விகடன்’ என ஆனந்த விகடன் இத்தனை  விதவிதமாக அவதாரம் எடுத்தாலும், நவநவமாய்ச் செய்திகளைத் தந்தாலும் ஆனந்த விகடனுக்கு என்றும் மார்க்கெட்டில் மதிப்புதான். மார்கண்டேய இளமைதான்!

கோபுர உச்சியோ... குடிசை முற்றமோ... எல்லா இடங்களிலும் இடம் பிடிக்கும் காற்றைப்போல் வலியோர், எளியோர் என எல்லா வீடுகளிலும் இடம்பிடித்துவிட்ட விகடன்  இடத்தை வேறு எந்த இதழும் எட்ட  முடியவில்லை. கோமல் சுவாமிநாதனின் 'சுபமங்களா’ நின்றுபோனபோதும், அருணாசலம் அப்பாவின் 'நந்தன்’ நின்றுபோனபோதும் அதிர்ச்சி அடைந்தேன். ஆனாலும், ஆனந்த விகடன்தான் வருகிறதே என மனம் ஆறுதல் அடைந்தது. பல்வேறு எண்ணங்கள்கொண்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் வசீகரித்த விகடனின் பன்முகத்தன்மையை விவரித்தால் பெருகும். தொகுத்தால் எஞ்சும்.

கால் நூற்றாண்டு காலமாக வேரினைத் தொடர்ந்து செல்லும் நீரினைப்போல் ஆனந்த விகடனைத் தொடர்ந்து வாசிக்கிறேன் என்பதைவிட சுவாசிக்கிறேன் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். சேக்கிழாருக்கு சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்ததைப்போல என் நாக்கு நர்த்தனம் புரியவும் எனது சொற்கள் சூறாவளியைச் சூடிக்கொள்ளவும் அடியெடுத்துத் தருகிற ஆனந்த விகடனைப் படியளக்கும் சாமியாகத்தான் கருதுகிறேன்.

ஆனந்த விகடனின் நேர்மையும் சீர்மையும் கூர்மையும்தான் என்னையும் அப்படி இருக்க நித்தமும் தூண்டுகிறது. வதந்திகளை வாந்தி எடுக்கும் ஏடுகளுக்கு மத்தியில், உண்மையான ஊர்வலமாய் உணர்வுகளின் கொள்ளிடமாய் தமிழ் மக்களின் நெஞ்சில் உலா வரும் ஆனந்த விகடன் என்னுடன் எப்போதும் உலா வரும் தென்றல். எனக்கு உற்சாகம் தருகிற டானிக்.

கால் நூற்றாண்டு காலம் களத்தில் நின்று மக்களின் கவனத்தைக் கவர்ந்தும் அதிகாரத்துக்கு வராத என்னை, என் இயல்புகளை அரசியல் அப்பாவிகள் வரிசையில் அப்படியே படம் பிடித்தது விகடன். அப்போது எனக்கு வாசகர்கள் மத்தியில் இடம் கிடைத்தது. கடந்த கால கலைஞர் ஆட்சி ஏன் கூடாது என கடுமையாக விமர்சித்து ஆனந்த விகடனில் அடியேன் எழுதிய கட்டுரைதான், கோவை சிறையில் என்னை அடைக்கக் காரணம் ஆயிற்று. இசை, கவிதை, சிறை என அவரவர்க்குப் பிடித்ததைப்பற்றி எழுதச் சொன்ன போது, எனக்கு மேடை பிடிக்கும் என்று மேடையைப்பற்றி எழுதச் சொன்ன ஆனந்த விகடனை எப்போதும் எனக்குப் பிடிக்கும்.

இதற்கு முந்தைய சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் வைகோவை நோகடித்த தி.மு.க. தலைமையை நான் கடுமையாக விமர்சித்த நிலையில், 'தி.மு.க-வில் புயல் கிளப்பிய வைகோவின் ஜெராக்ஸ்’ என்று என்னைப்பற்றி எழுதி எனக்கோர் அங்கீகாரத்தைத் தந்தது விகடன். கடந்த ஜெயலலிதா ஆட்சியில் எனது விமர்சனத்தைத் தாங்கிக்கொள்ளாமல் என் வீட்டைத் தரைமட்டமாக்கியபோது, 'மேடையில் பளார் பளார்... வீடு டமால் டமால்!’ என எனது வீழ்ச்சியிலும் என்னை உச்சியில் உட்காரவைத்து அழகு பார்த்தது விகடன்.

நீலத் திரை கடல் ஓரத்தில் நின்று தவம் செய்யும் குமரியின் எல்லையில் ஆறாவது விரலாக ஒதுங்கிக்கிடக்கிற என் ஊரைப்பற்றி, 'என் ஊர்’ பகுதியில் வெளியிட்டு உலகறியச் செய்ததும் விகடன். கடந்த மே திங்களில் என் மகள் நிச்சய தாம்பூலத்தை 'வித்தியாசமான நிச்சயதார்த்தம்’ என கழுகார் பகுதியில் இட்டு என்னை வானத்துக்கு உயர்த்தியதும் விகடன்தான். நவீன இலக்கியங்களை, நல்ல கவிதைகளை எனக்கு அறிமுகம் செய்வது விகடன்தான். அண்ணாவைப் பற்றிப் பேசுகிற நான் அண்ணா ஹசாரேவைப் பற்றியும் பேச சொல்லித் தந்ததும் விகடன்தான்.

நாஞ்சில் சம்பத்துக்கு நாஞ்சில் நாடனை அறிமுகம் செய்ததே விகடன்தான். உள்ளூர் சினிமாவைப் பார்க்க விரும்பாத என்னை உலக சினிமாவைப் பார்க்கத் தூண்டியதும் விகடன்தான். மதன் பதில்களில் உலகத்தைப் பார்க்கிறேன். திருமாவேலனின் கட்டுரைகளில் செய்திகளைத் திருடுகிறேன். பொக்கிஷத்தில் புதையலைத் தேடுகிறேன். வாலி என்னில் நாற்காலி போட்டதும் வாசகர்கள் நெஞ்சில் எனக்கொரு நாற்காலி போடவும் விகடனே காரணமானான்.... எனக்குப் பூரணமானான்!

தமிழீழத்தின் வருங்காலம் கல்லறை யில் பொசுக்கப்பட்டபோது, சிங்கள இனவெறிக் காடையர்கள் கைகளில் ஏந்திய மதுக் கிண்ணங்களில் தமிழ் மழலைகளின் ரத்தம் நிரப்பப்பட்ட போது, ஈழத்துச் சொந்தங்களின் புன்னகைகளும் உதடுகளும் மறந்துபோனபோது பூமி மௌனம் சாதித்தது. விகடன்

''நானும் விகடனும்!''

மட்டும்தான் ஆதிக்கத்துக்கு எதிராகக் கொடி பிடித்தது. சின்னா பின்னமான தமிழினக் கனவுகளையும் சிதைந்த வைகறைகளையும் பார்வை செத்த உலகத்துக்கு விகடன்தான் படம் பிடித்துக் காட்டியது.

புண்களோடும் புரையோடிய வாழ்க்கையோடும் முள் சூழ்ந்த முள்ளி வாய்க்கால் முகாமில் அவதிப்படும் ஈழத்து உறவுகளின் கண்ணீரைப் பதிவு செய்த விகடன், என் கண்ணில் மட்டு மல்ல... கருத்திலும் கைப்பிடி அளவு இதயத்திலும் இடம் பிடித்துவிட்டது.

தலைவனும் விகடனும் எனக்கு வாய்த்திராவிட்டால், நகச் சாயத்துக்குக் கிடைக்கிற மரியாதைகூட நாஞ்சில் சம்பத்துக்குக் கிடைத்திருக்காது. மரத்தின் உச்சியில் கூவிக்கொண்டு இருந்த என்னை நிலவின் உச்சியில் உட்காரவைத்த விகடனுக்கே முதல் வணக்கம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு