Published:Updated:

டீன் கொஸ்டீன்

கூந்தலுக்கு ஹென்னா... ஆரோக்கியமா?

##~##

நடராஜன், கோவை.

 ''என் காதலி சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். இதனால் அவர் பெயரில் ஒரு ரேஷன் கார்டுகூட இல்லை. அவருக்குத் திருமணமான ஒரு சகோதரி இருக்கிறார். நாங்கள் பதிவுத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். அதற்கு ரேஷன் கார்டு அவசியம் தேவையா? நாங்கள் எங்களுக்கென ரேஷன் கார்டு பெறுவது எப்படி?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டீன் கொஸ்டீன்

தி.மோகனராஜன்
உதவி ஆணையாளர், உணவுப் பொருள் வழங்கல்
மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை.

''உங்கள் காதலியின் சகோதரி குடும்பத்தினரின் ரேஷன் அட்டையில் உங்கள் காதலியின் பெயர் இடம்பெற்று இருக்கிறதா என்பதை நீங்கள் தெரிவிக்கவில்லை. ஒருவேளை, அந்தக் குடும்ப அட்டையில் அவர் பெயர் இருந்து, தற்போது உங்கள் குடும்ப அட்டையில் இவர் பெயரை இணைக்க வேண்டுமானால், உங்கள் காதலி கடைசியாக வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பெயர் நீக்கச் சான்றிதழைப் பெற்று, அத்துடன் நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் உங்கள் குடும்ப அட்டையில் அவர் பெயரைச் சேர்க்கக் கோரி மனு கொடுக்கலாம். உங்கள் குடும்ப அட்டையில் அவர் பெயர் சேர்க்கப்படும். ஒருவேளை, சிறு வயதில் இருந்தே குடும்ப அட்டையில் உங்கள் காதலி பெயர் சேர்க்கப்பட வில்லை என்றால், அவருடைய பழைய முகவரியில் அவரது பெயர் சேர்க்கப் படவில்லை என்ற சான்றிதழைச் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம் இருந்து பெற்று, புதிய முகவரியில் அவரது பெயரை உங்களுடைய குடும்ப அட்டையில் இணைக்கக் கோரி மனு செய்யலாம். பதிவுத் திருமணம் செய்ய குடும்ப அட்டைதான் வேண்டும் என்பது இல்லை. ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்குப் புத்தகம், இருப்பிடச் சான்றிதழ் போன்ற ஏதேனும் ஒன்றை வழங்கலாம். உங்கள் மண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்!''  

டீன் கொஸ்டீன்

ஃபரூக், திண்டுக்கல்.

''காதல் மணம் புரிந்தவன் நான். நான் முஸ்லிம். என் மனைவி இந்து. விரைவில் அவர் அரசாங்கப் பணியில் இணைய இருக்கிறார். இதற்கிடையில், என் மனைவி முஸ்லிமாக மதம் மாற இருக்கிறார்.  அதோடு, பெயரையும் மாற்றிக்கொள்வார். இந்த மாற்றத்தால் அவருக்குக் கிடைக்க இருக்கும் அரசாங்க வேலையில் ஏதும் சிக்கல் ஏற்படுமா?''

டீன் கொஸ்டீன்

சுமதி, வழக்கறிஞர்.

''அரசாங்கப் பணிக்கும் மத மாற்றத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. உங்கள் மனைவியின் தேர்வுச் சான்றிதழில் நிச்சயம் அவர் எந்தப் பெயரில் விண்ணப்பித்தாரோ அந்தப் பெயர்தான் வரும். அதே சமயம், அரசின் கெசட்டில் விண்ணப்பம் பெற்று அதில் கோரப்பட்டு இருக்கும் போட்டோ மற்றும் ஆதாரச் சான்றிதழ்களை இணைத்துப் பூர்த்திசெய்து, உங்கள் மனைவியின் பெயர் மாற்றத்தினை அதிகாரபூர்வமாக்கிக்கொள்ளலாம். அப்படிப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, அவர் பணிபுரிய இருக்கும் அலுவலகத்தில் சேலரி செக், பதவி உயர்வு போன்றவற்றில் பெயரை மாற்றி அமைக்கும்படி சொல்லலாம்!''  

உ.ரமேஷ், தூத்துக்குடி.

''இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாய் நான். பெரியவளுக்கு மூன்றரை வயதும், இளையவளுக்கு 10 மாதமும் ஆகிறது. இதுவரை சமர்த்தாக இருந்த என் மூத்த பெண், சமீபகாலமாக நின்ற இடத்திலேயே சிறுநீர் கழிப்பது, சொல் பேச்சு கேட்காமல் பிடிவாதம் பிடிப்பது என்று அடம் செய்கிறாள். ஏன் இந்தத் திடீர் மாற்றம்?''

டீன் கொஸ்டீன்

பிருந்தா ஜெயராமன், மனநல ஆலோசகர்.

''பொதுவாக, குழந்தைகள் தனக்கு அடுத்ததாக தம்பியோ, தங்கையோ பிறக்கும்போது பெற்றோரிடம்  இருந்து பிரிக்கப்பட்டதாக உணரும். எந்தக் குழந்தையும் அம்மா எப்போதும் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்பும். தாயின் கவனம் தம்பி, தங்கைகள் பக்கம் திசை மாறும்போது, தன்பால் கவனம் ஈர்க்க இதுபோல் எதிர்மறைச் செயல்களில் ஈடுபடும். அதனால், கூடுமானவரை உங்கள் இரண் டாவது குழந்தையோடு செலவிடும் நேரத்தில் சரி பாதியை முதல் குழந்தைக்கும் ஒதுக்குங்கள். உங்களது மூத்த மகளை, அவள் குட்டித் தங்கைக்கு பவுடர் பூசச் சொல்லுங்கள். குழந்தையைக் கொஞ்சும்போது அவளையும் உடன் சேர்ந்து விளையாடச் சொல்லுங் கள். மூத்தவள் ஏதேனும் நல்ல விஷயம் செய்தால், உடனே கொஞ்சம் கூடுதலாகவே பாராட்டுங்கள். இதனால் எதிர்மறையான விஷயங்கள் மீது கவனம் விலகி, அவளாகவே இயல்பு நிலைக்குத் திரும்புவாள். மேலும், அவள் பிடிவாதம் பிடிக்கும்போது, மறந்தும் குரல் உயர்த்திப் பேசாதீர்கள். இதைக் கடைப் பிடித் தாலே, உங்கள் குழந்தை மீண்டும் சமர்த்துப் பிள்ளை ஆவாள்!''

டீன் கொஸ்டீன்

எம்.பால பிரேம்குமார், தென்காசி.

''வேலைக்குச் செல்லும் 23 வயதுப் பெண் நான். எனக்கு ஹென்னா உபயோகிக்க ஆசை. ஆனால், ஹென்னா கூந்தலை செம்பட்டை ஆக்கிவிடும் என்கிறார்கள் என் தோழிகள். ஆனால், எனக்கோ முடி வலுவிழந்ததுபோலக் காணப்படுகிறது. ஹென்னா உபயோகம் அந்தக் குறையைப் போக்குமா?''

டீன் கொஸ்டீன்

ஷாலி, அழகுக் கலை நிபுணர்.

''ஆரோக்கியம் இல்லாத தலைமுடிகொண்டவர்களுக்கு ஹென்னா, ஒரு வரப்பிரசாதம். மாதம் ஒரு முறை உபயோகப்படுத்துவதினால், கூந்தலுக்கு அது கவசம்போல் செயல்படும். வெயிலின் உஷ்ணம் நேரடி யாக மயிர்க் கால்களைத் தாக்கி கூந்தலை வலுவிழக்கச் செய்வதை, ஹென்னா தடுக்கும். வெயில் காலத்தில் ஹென்னா உபயோகம், உடலைக் குளிர்ச்சி ஆக்குவதுடன், கூந்தலையும் பாதுகாக்கும். ஆனால், அதே சமயம், வெறும் ஹென்னா உபயோகித்தால் முடி வறண்டு போகும் வாய்ப்பு இருக்கிறது. அதனுடன் முட்டை, தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து உபயோகித்து, பின் தரமான கண்டிஷனர்கொண்டு அலசினால், கூந்தல் ஆரோக்கியத்துடன் மிளிரும். முக்கியமான ஒரு விஷயம், ஹென்னா குளிர்ச்சி என்பதால் ஆஸ்துமா, சுவாசப் பிரச்னை உள்ள வர்கள் அதனைத் தவிர்க்கவும். மற்ற படி, ஹென்னா கூந்தலை செம்பட்டை ஆக்கும் என்பது எல்லாம் கட்டுக்கதை. ஹென்னாவின் நிறம் முடியில் சார்ந்து படர்வதால் வெளிர் ப்ரவுன் நிறம் கொடுக்கும். பயப்படத் தேவை இல்லை. அந்தச் சாயம் ஆரோக்கியமானதே!''

டீன் கொஸ்டீன்