Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
##~##

'ஜக்கம்மா... நான் எலும்பு தின்ன சூட்டோட வந்திருக்கேன். ச்சீ தூரப் போ... விலகிப் போ!

நல் மக்கள் ஒறங்கும் நடுவூட்டுல
செத்தக் கன்னி ஒருத்தி கதறியிருக்கா
 பச்சத் தண்ணி பல்லுல படாமப் 
பாவமாத் தவிச்சிருக்கா
ச்சீ விலகிப் போ...
சுடுகாட்டுப் பேச்சி நான்!’

நீங்கள் அவர்களை 'குடுகுடுப்பைக்காரர்கள்’ என்றா சொல்வீர்கள்? நாங்கள் அவர்களை 'ராப்பாடிகள்’ என்று சொல்வோம். ராப்பாடிகள் என்றால், 'நாம் பட்ட பாட்டை, படும் பாட்டை, படப்போகிற பாட்டை சாமிகிட்ட கேட்டுட்டு நடுராத்திரியில் வந்து பாட்டாகப் பாடுகிறவர்கள்’ என்று அம்மா சொல்லியிருக்கிறாள்.

ஒரு காலையில் கண் விழித்துப் பார்த்தால், நடுவீட்டில் அம்மா, சித்தி, பெரியம்மா, பக்கத்து வீட்டுக்காரர்கள் சூழ, சாப்பாட்டுக்குச் சம்மணம் போட்டதைப் போல அமர்ந்திருந்தார் இரவு வந்த ராப்பாடி.

முழுக்க தண்ணீர் நிரம்பிய ஒரு செம்பை முன்னால் வைத்துக்கொண்டு, துணி தைக்கும் ஊசியையும் நூலையும் எடுத்து ஊசியை மட்டும் நீருக்குள் போட்டுவிட்டு, நூலை செம்புக்கு மேலே  செங்குத்தாக அந்தரங்கத்தில் அவர் பறக்கவிட்டு இருந்ததை வாய் பிளந்தபடி பார்த்துக்கொண்டு இருந்தார்கள் எல்லோரும். அந்த நூல் எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் நின்ற இடத்தில் நின்றபடி காற்றில் பறந்துகொண்டு இருக்கும்போது, ராப்பாடி தன் உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிப் பாடத் தொடங்குவான்.

'சுடுகாட்டுப் பேச்சி சொன்னது பொய்யில்ல... கன்னங்கருத்தக் கன்னியருத்தி கண்ணீரோட கதவு இடைக்குள்ள பத்திரமாப் பதுங்கியிருக்கா’ என்று அவர் சொல்லும்போது, நைஸாக கதவின் இடைக்குள் போய்ப் பார்ப்பேன். அங்கே எங்கள் பூனை ராஜிதான் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்கும். 'பாவம்... அவ 10 வருஷப் பசியோட இருக்கா. லேசுல போ மாட்டா. சொல் பேச்சுக் கேட்க மாட்டா...’ என்று மறுபடியும் அவர் உடுக்கையை உருட்டும்போது, நான் ராஜியை எழுப்பிவிடுவேன். அரைத் தூக்கத்தில் எழுந்த ராஜி, முட்டி மோதி அம்மாவின் சேலைக்குள் போய் முடங்கிக்கொள்ளும். ஆனால் அம்மா, 10 வருடங்களுக்கு முன் இறந்துபோன அக்கா உச்சினியை நினைத்துக் கண்ணீரோடு, 'பரிகாரம் என்னன்னு பேச்சி சொன்னா... அவ அம்ம நான் தட்டாமச் செய்றேன்’ என்று மருகுவாள்.

மறக்கவே நினைக்கிறேன்

''பச்சப்புள்ள அவ... பத்திரமா காடு போய்ச் சேர பச்ச சேவல் கேக்கிறா!''

''அது என்ன பச்ச சேவல்?''

''கோழி கலக்காத, கொண்டை முளைக்காத சேவல்!''

''அதை எப்படி நாங்க கண்டுபிடிக்கிறது?''

''கேட்டதைக் கொண்டுவா... சுடுகாட்டுப் பேச்சிக்குத் தெரியும் எது சுத்தம்னு!''

ராப்பாடி சொல்லி முடித்ததும் அம்மா என்னைப் பார்த்து ஏதோ முனங்குவாள். நான் உடனே ஓடிச் சென்று கோழி மடத்துக்குள் கையைவிட்டு உள்ளிருக்கும் சேவலோ கோழியோ கையில் கிடைத்ததை எல்லாம் பிடித்துக் கொண்டுவருவேன். அம்மா அதை வாங்கி ராப்பாடியின் கையில் கொடுப்பாள். வாங்கியவர், தனித்தனியாகத் தூக்கிப் பார்த்து 'சுடுகாட்டுப் பேச்சி’ தேர்ந்தெடுத்த ஒன்றை எடுத்துவைத்துக்கொண்டு, மிச்சம் இருப்பதை என் கையில் கொடுப்பார்.

எல்லோரும், இப்போது அவர் என்ன செய்யப்போகிறார் எனக் காத்திருக்க, அவர் செம்புத் தண்ணீருக்குள் மூழ்கிக்கிடக்கும் ஊசியை எடுத்து, அந்தரத்தில் பறந்துகொண்டிருக்கும் நூலை அதற்குள் கோத்து, நாங்கள் கொடுத்த சேவலின் அலகில் சர்வ சாதாரணமாக நுழைப்பார். சேவல், றெக்கைகளை கொஞ்ச நேரம் உயிர் நழுவுகிற மாதிரி அடித்து நொறுக்கும்.

'பசியோடதான் அவ வந்தா... அவ பசி போக்கிட்ட. நீ இனி கண்ணீர்விட வேண்டாம். கவலைய விடு... கன்னி கிளம்பிப் போறா!’ என்று திருநீறை எடுத்துச் சுற்றி இருக்கும் எல்லோருடைய நெற்றியிலும் பூசி சேவலை கையில் தூக்கிக்கொண்டு கிளம்பிப் போவார் ராப்பாடி. அவர் போன பின்தான் எங்களுக்குத் தெரியும், அவர் கொண்டுபோனது சரியான வெடக்கோழி என்று!

அம்மா இப்படித்தான் எல்லாத்துக்கும் பயப்படுவாள், அதனாலேயே எல்லாவற்றையும் நம்புவாள். அது சாதாரண நம்பிக்கை இல்லை. கடவுளைவிட சாத்தான்களே உலகில் அதிகம் என்று நம்புகிற அப்பாவிக் கிராமத்து அம்மாக்களின் நம்பிக்கை. அம்மாக்கள் மட்டுமல்ல, கிராமங்களில் ஜீவித்துக்கிடக்கும் ஒவ்வொரு மனதின் நம்பிக்கையும்கூட!

ங்கள் ஊரில் முத்தையா என்ற அண்ணன் இருந்தான். என்னைவிட எப்படியும் ஐந்து வயது மூத்தவனாக இருப்பான். 'மீசை முத்தையா’, 'கோண முத்தையா’, 'கறுப்பு முத்தையா’, 'கவுண்டமணி முத்தையா’... என நிறைய முத்தையாக்கள் ஊரில் இருப்பதால், அவனை எல்லோரும் 'சிவப்பு முத்தையா’ என்றுதான் சொல்வார்கள். சிவப்பு முத்தையா, வீட்டுக்கு ஒரே பிள்ளை. ஆனால், அவன் ஏழாவது படிக்கும்போது அவனுடைய அம்மா வயலில் பாம்பு கடித்து துரதிர்ஷ்டவசமாக இறந்துபோனாள். அம்மா இறந்துபோன துயரத்தில் கொஞ்ச நாள் பள்ளிக்கும் போகாமல் வீட்டுக்கும் போகாமல் ஊருக்குள் அழுத கண்களோடு சுற்றித் திரிந்தவன், ஒருநாள் காணாமலே போய்விட்டான்.

திடீரென்று அவனுடைய 21-வது வயதில், கிட்டத்தட்ட 'வைகாசி பொறந்தாச்சு’ பிரசாந்தின் முகச் சாயலில் ஊருக்குள் வந்தான் முத்தையா. நிஜமாகவே ஆணழகனாக மாறி வந்தவனுக்கு பெரிய அதிர்ச்சி, அவனுடைய அப்பா இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டு, இரண்டு பெண் குழந்தைகளுக்கு அவனை அண்ணனாக மாற்றியது. வந்ததும் வராததுமாக சண்டை போட்டான்; அழுதான்; கற்களை எடுத்து வீட்டை நோக்கி வீசி எறிந்தான்; ஊர் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தபோதே காலில் விழுந்த பெத்த அப்பனைத் தூக்கிப்போட்டு மிதித்தான். ஆனாலும், அந்த நாளுக்குப் பிறகு அந்த வீட்டில்தான் இரண்டு வருடங்களாக சிவப்பு முத்தையா இருந்தான். காரணம், பிறந்த இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகளாக இருந்தாலும், அப்படியே அவன் முகச் சாயலில் இருந்தன. அந்தக் குழந்தைகளைத் தூக்கி வைத்துக்கொண்டு, 'கண்ணே கரிசல் மண்ணுப் பூவே...’ என்று  பாடித் திரிந்தவன், திடீரென்று ஒருநாள் விஷம் அருந்தி இறந்துபோனதுதான், அவன் கதையில் எங்களுக்கான பேரதிர்ச்சி!

மறக்கவே நினைக்கிறேன்

விஷம் குடித்து இறந்துபோன சிவப்பு முத்தையாவை வேகவேகமாக அழுது ஒப்பாரி வைத்து எரித்துவிட எல்லோரும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். முத்தையாவின் உடலைக் குளிப்பாட்டி அவனுக்கு புது உடைகளை உடுத்தியபோதுதான், வேடிக்கை பார்த்த பெருசு சொன்னது, ''எப்பா... பய கல்யாணம் ஆகாத, கன்னிப் பய. வங்கொலையா இப்படிச் செத்துப் போயிட்டான். அதனால எரிக்கிறதுக்கு முன்னால அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப்புடுவோம்பா. இல்லைன்னா பய உசுரு, காத்தாவும் கறுப்பாவும் கண்ணக் கசக்கிட்டுத் திரியும். அது நமக்குத் தேவையா?'' என்றார்.

'என்னது... செத்தவனுக்குக் கல்யாணமா? இது நல்லா இருக்கே!’ என்று நாங்கள் துயரமான ஒரு வேடிக்கைக்கு ஆயத்தமானபோது, பக்கத்தில் நின்ற பெருசுகள், 'எப்பா யாராவது ரெண்டு இளவட்டங்க போய் குலை தள்ளாத, பூ பூக்காத பெரிய வாழைக்கன்னு ஒண்ணை வெட்டிட்டு வாங்கப்பா’ என்றார்கள். 'வாழக்கன்னு எதுக்கு?’ என்று கேட்டவர்களிடம், 'செத்துப்போன சிவப்பு முத்தையாவுக்கு அந்த வாழக்கன்னுதான் இன்னைக்குப் பொண்ணு. நீங்க போய் வெட்டிட்டு வாங்கப்பா சீக்கிரம்’ என்று விரட்டினார்கள்.

நானும் முத்துவும் கிளம்பிப் போனோம். வாழைக்காட்டுக்குள் போனதும் ஒரு கதிலி வாழைக்கன்றை வேகமாக வெட்டப் போனேன். முத்து ஓடிவந்து தடுத்து, 'ஏலேய், முத்தையா அண்ணன் பாக்குறதுக்கு அப்படியே செம்பருத்தி பிரசாந்த் மாதிரி இருக்கான். அவனுக்கு ஜோடியா ஏம்ல இந்தக் கறுப்பு கதிலி வாழைய வெட்டுற? நல்லாத் தேடிப் பாரு... எங்கேயாவது செம்பருத்தி ரோசா மாதிரி நல்ல பளபளனு வாழக்கன்னு இருக்கும்’ என்று சொன்னான். ஒவ்வொரு வாழையாகத் தேடத் தொடங்கினோம். 'படத்தி வாழைக்கன்னு வேணாம்... பாக்கிறதுக்கு அப்படியே அர்ச்சனா மாதிரி கறுப்பா ஒல்லியா இருக்கு. மலையேத்தன் வாழைக்கன்னும் வேண்டாம். ஏதோ பம்பாய் நடிகை மாதிரி குச்சியா ஒசரமா இருக்கு. கற்பகவள்ளி வாழைக்கன்னு வேண்டவே வேண்டாம். அப்படியே கறுப்பா கண்ணு ரெண்டையும் உருட்டிக்கிட்டு சரிதா மாதிரி இருக்கு’ என்றெல்லாம் நொள்ளை நொட்டை சொல்லி முத்தையா அண்ணனுக்காக வாழைக்கன்னு வரன்களைத் தட்டிக்கழித்துக் கொண்டே இருந்தோம். மனசு விடாமல் தேடிக்கொண்டு இருக்கும்போதுதான் 'சக்கை’ எனப்படும் நல்ல குண்டாக பளபளவென்று இருக்கும் வாழைக்கன்றைப் வெட்டி வந்தோம்.

வாசனைத் திரவியங்கள் தடவி குளிப்பாட்டி பட்டுச்சட்டை, பட்டு வேஷ்டியில் அப்படியே கண்களை மூடிக்கொண்டு இருக்கும் மாப்பிள்ளைக் கோலத்தில் இருந்தான் சிவப்பு முத்தையா அண்ணன். அவனுக்கு அருகில் மஞ்சளைத் தடவி, தண்ணீரை ஊற்றி, மல்லிகைப் பூ சூடி, சந்தனம் குங்குமம் வைத்து, மடல்களில் ஒரு மாலையையும் போட்டு அந்தச் சக்கை வாழைக்கன்றை வைத்தார்கள். ஏற்கெனவே எதுவும் வேண்டாம் என்று சுருண்டிருந்த முத்தையாவின் விரல்களுக்குள் ஒரு மஞ்சள் கயிறைத் திணித்து பெண்கள் கண்ணீரோடு குலவையிட, அந்த மஞ்சள் கயிற்றை முத்தையா அண்ணனின் கையால் வாழை மடலின் மீது போடவைத்து, பிறகு பெண்கள் அதை மூன்று முடிச்சிட்டு தாலி போல இறுக்கமாகக் கட்டினார்கள். தாலி கட்டிய கொஞ்ச நேரத்தில் அந்த வாழையை பெண்கள் எடுத்துக்கொண்டு போய் சுற்றி உட்கார்ந்து அழுது, கட்டப்பட்ட தாலியை அரிவாளால் அறுத்து ஒரு வெள்ளைத் துணியைச் சுற்றி சக்கை வாழைக்கன்றை குப்பைமேட்டில் தூக்கி வீசி எறிந்தார்கள். அதன் பிறகே முத்தையாவின் உடலை எரிப்பதற்குத் தூக்கிக்கொண்டு போனார்கள். நிஜமாகவே காரணம் எதுவும் சொல்லாமல், அகாலமாக மரித்துப்போனவனின் மேல் இருந்த துயரம் வடிந்து, அந்த இடமும் அந்த மரணமும் எங்களுக்கு அவ்வளவு வேடிக்கையாகிப்போயிருந்தது.

மறக்கவே நினைக்கிறேன்

றுநாள் காலையில் அவசர அவசரமாக அம்மா என்னைத் தட்டி எழுப்பி நேற்று குப்பையில் தூக்கி வீசியெறியப்பட்ட வாழைக்கன்றை எடுத்துக் கொண்டுபோய் இரண்டு துண்டாக வெட்டி, ஆற்றில் வீசிவிட்டு வரச் சொன்னதுதான் வேடிக்கையின் பெரிய முற்றுப்புள்ளி.

குப்பைமேட்டில் ஆடுகள் தின்றதுபோக மீதம் இருந்த அந்தச் சக்கை வாழைக்கன்றை, வெள்ளைத் துணியோடு தூக்கிக்கொண்டு நானும் முத்துவும் ஆற்றுக்குப் போனோம். கரையில் நிற்கவைத்து வாழையை நான் பிடித்துக்கொள்ள, கண்களை சிக்கென்று மூடிக்கொண்டு ஓங்கி ஒரு வெட்டு வெட்டினான், முத்து. வாழைக்கன்று இரண்டு துண்டாகியது. அவன் ஒரு துண்டை எடுத்து ஆற்றுக்குள் வீச, நானொரு துண்டை எடுத்து ஆற்றுக்குள் வீசினேன். சிவப்பு முத்தையாவின் மனைவி செம்பருத்தி ரோசா, இரண்டு துண்டுகளாக முன்னும் பின்னுமாக மிதந்து போனாள். அதைப் பார்த்துக்கொண்டு இருக்க சகிக்காமல் திரும்பி வரும் வழியில் முத்து கேட்டான்.

''எதுக்காகல அந்த அண்ணன் திடீர்னு எதுவும் சொல்லாம செத்துப்போனான்?''

''யாருக்குத் தெரியும்?''

''அந்த அண்ணனுக்கு அது கண்டிப்பா தெரியும்லா?''

ஆமாம்... 30 வயது சித்தியின் சிரிப்புக்கும், 50 வயது அப்பாவின் அருவருப்பான இயலாமை முறைப்புக்கும், 10 வயது தங்கச்சிகளின் பாவமான பார்வைக்கும் பதில்சொல்ல முடியாமல்தான் சிவப்பு முத்தையா மரித்துப் போனான் என்ற காரணத்தை, ஆற்றங்கரையில் எரியூட்டப்பட்ட அவன் சாம்பல் பறந்து வந்து எங்கள் முகத்தின் மீது கறுப்பாக கறையாகப் படிய, 10 நாட்கள் ஆனது!

- இன்னும் மறக்கலாம்...