Published:Updated:

அறிவிழி - 44

அண்டன் பிரகாஷ்

அறிவிழி - 44

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி - 44

நியூயார்க் நகரில் வாழும் மரினா ஷிஃப்ரீனின் பெற்றோர், ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். மரினா, வேலை பார்ப்பது தைவான் நாட்டு நிறுவனம் ஒன்றில். சரியாக மீண்டும் சொல்கிறேன்...  வேலை 'பார்த்தது’ தைவான் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'நெக்ஸ்ட் மீடியா அனிமேஷன்’ என்ற நிறுவனத்தில்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகில் நடக்கும் உண்மைச் சம்பவ செய்திகளை, கிண்டலும் குத்தலும் கலந்த வீடியோக்களாக மாற்றி அவற்றை யூ-டியூபில் பதிவேற்றுவதுதான் மரினாவுக்கு அளிக்கப்பட்டிருந்த முக்கிய பணி. மரினா போன்றவர்கள் தயாரிக்கும் வீடியோக்களைக் கொண்டு மேற்படி நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களது பொருட்களையோ, சேவைகளையோ விளம்பரப்படுத்தும்.

மரினாவின் பணிக்கு அபரிமிதமான அர்ப்பணிப்பு தேவை. செய்தி சம்பந்தப்பட்ட புனைவு, படைப்பு என்பதால், அவரது வீடியோக்கள் காலதாமதமாகிவிடக் கூடாது; அதேநேரத்தில் விறுவிறுப்பாகவும் இருந்திட வேண்டும். அவரது வீடியோக்களை எத்தனை பேர் பார்க்கிறார்கள்; எத்தனை பேர் பின்னூட்டம் இடுகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அவருக்கு பதவி உயர்வோ, சம்பள உயர்வோ கிடைக்கும்.

  இரவும் பகலுமாக இரண்டு வருடங்கள் உழைத்தப் பின், தனது வேலைக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்து, வேலையை விட்டு விலக சென்ற வாரம் தீர்மானித்தார் மரினா. வேலையை விட்டு விலகுபவர்கள், பொதுவாக விலகல் கடிதத்தைச் சமர்ப்பிப்பார்கள்தானே? ஆனால் மரினா, தனது வேலையைச் சார்ந்த விதத்தில், அதே வேளையில் வித்தியாசமாக இருக்கும்படி விலகல் கடிதத்தை வீடியோ வடிவில் தயாரித்து யூ-டியூபில் பதிவேற்ற, வைரல் வேகத்தில் பரவியபடி இருக்கிறது அந்த வீடியோ.

அறிவிழி - 44

  'காலை 4:30 ஆகிறது. நான் இன்னும் அலுவலகத்தில்தான் இருக்கிறேன்!’ - 'Kayne West என்ற பிரபல பாடகரின் 'Gone’ என்ற பாடல் பின்னணியில் ஒலித்தபடி இருக்க, மரினாவின் வீடியோ இப்படி ஆரம்பிக்கிறது. பாடலுக்குத் தகுந்தபடி நளினமாக மரினா நடனமாடியபடி இருக்க, அவரது பணியைப் பற்றிய அவதானிப்புகள் திரையில் வார்த்தைகளாக வருகின்றன. பாடலின் முடிவில், 'நான் சென்றுவிட்டேன்’ என்ற வரிகளுடன், அலுவலகத்தின் விளக்குகளை அணைத்துவிட்டு மரினா வெளியேறுவதாக வீடியோ முடிகிறது. ஒரு கோடிக்கும் அதிகமான ஹிட்களை இது தாண்டிவிட்டது. வீடியோவின் உரலி http://youtu.be/Ew_tdY0V4Zo

மரினாவின் வீடியோ, வைரல் பிரபலமாவதைத் தெரிந்ததும் நெக்ஸ்ட் மீடியா அனிமேஷன் நிறுவனம் எடுத்த முடிவு ஸ்மார்ட். தங்களது ஊழியர்கள் எட்டு மணி நேரமே வேலை பார்க்க அவசியம், தங்களது அலுவலகத்தில் மாடியில் நீச்சல் குளம் இருக்கிறது என்றெல்லாம் சொல்லிவிட்டு, மரினாவின் வேலை காலியாக இருக்கிறது என்றபடி வேலைக்கு ஆள் சேகரிக்கும் ஒரு வீடியோவைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. அதன் உரலி http://youtu.be/1ukGrwL4ky4

மொத்தத்தில் மரினாவுக்கும், அவர் வேலையைத் துறந்த நிறுவனத்துக்கும் இலவசமாக நல்ல விளம்பரம். இணையத்தில் மட்டுமே இது சாத்தியம்!

அறிவிழி - 44

சான் ஃபிரான்சிஸ்கோ, டெக் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விரும்பி வந்து குவியும் நகரமாகிவிட்டது. ஃபேஸ்புக், கூகுள், ஆப்பிள், ஓரக்கிள் போன்ற நிறுவனங்கள் இந்த நகரில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயண தூரத்தில் இருந்தாலும், இந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் சான்ஃப்ரான்சிஸ்கோவில் வசிக்க விரும்புவதால், காலையும் மாலையும் டெக் நிறுவனங்களின் பெயரைக்கொண்ட பேருந்துகளை அந்த நகரத்தில் அதிகம் பார்க்கலாம். இந்தப் பேருந்துகளில் பிரத்யேக WiFi வசதி இருப்பதால், உள்ளே நுழைந்ததுமே பணியைத் தொடங்கி விடலாம். டெக் ஆசாமிகளுக்குப் பிடித்த நகரமாக இருப்பதாலோ என்னவோ, இந்த நகரின் நகராட்சி நிர்வாகம் மற்ற நகரங்களைவிட ஒரு படி முன்னேறி இருக்கிறது. தண்ணீர் விநியோகத்தில் இருந்து, தீயணைப்பு நிலைய இயக்கம் வரை நகரத்தின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும் அடிப்படையாக வைத்து என்னென்ன டெக் தீர்வுகளை உருவாக்கி மக்களது வாழ்வை எளிதாக்கலாம் என்ற நோக்கில், Entrepreneurship in Residence என்ற திட்டத்தை உருவாக்கி இருக்கிறது இந்த நகரம்.

  தேர்ந்தெடுக்கப்படும் தொழில்முனைவர்களுக்கு, நகர நிர்வாக அதிகாரிகளின் நேரம், அரசு இயந்திரம் எப்படி இயங்கும் என்பதைப் பற்றிய பயிற்சி, உருவாக்கப்படும் தீர்வுகளைப் பற்றிய பின்னூட்டங்கள் போன்றவை வழங்கப்படும்.     தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் கடைசி வருடத்தில் புராஜெக்ட் வொர்க் என்பதை ஏதாவது நிறுவனங்களில், ஏனோதானோவென செய்துவைப்பதைப் பார்க்கிறேன். அவர்களுக்கு, நமது நகர, மாநில அரசுகளின் நிர்வாகம் பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கினால், சிறந்த தீர்வுகளை உருவாக்க முடியும். இந்தத் திட்டத்தின் வலைத்தளம் அதிகத் தகவல்களைக் கொண்டிருக்கிறது http://entrepreneur.sfgov.org/

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, 'சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் ஐ.டி. ஆசாமிகள் சராசரிக்கும் அதிகமாகச் செலவழித்து வீட்டு வாடகையில் இருந்து பல்வேறு பொருட்களின் விலைகளை ஏற்றிவிட்டார்கள்’ என்ற பொதுவான குற்றச்சாட்டு சான் ஃபிரான்சிஸ்கோவில் டெக் துறையில் பணிபுரிபவர்கள் மீதும் இருக்கிறது. அக்கரையிலும் இக்கரையிலும் ஒரே பச்சை!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism