##~##

திருச்சியில் நான் படித்துக் கொண்டு இருந்தபோது, வார இறுதிகளில் சினிமா, முக்கொம்பு, கிரிக்கெட் போட்டிகள் என்று களை கட்டும். ஒவ்வொரு வாரமும் கொண்டாடுவதற்கு என்று ஏதேனும் ஒன்று இருக்கும். மாதத்தில் முதல் மூன்று வாரங்களை உற்சாகமாகக் கொண்டாடிவிட்டு, கடைசி வாரத்தை ஊருக்குச் சென்று குடும்பத்தோடு கொண்டாடுவோம். உண்மையைச் சொன்னால், மற்ற மூன்று வாரங்களைப் போல ஊருக்குப் போகிற வாரம் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது. ஆனால், எங்கள் செட்டில் செந்தில் மட்டும் விதிவிலக்கு!

எங்களோடு சேர்ந்து செம சேட்டை செய்வான். ஆனால், மாதத்தில் மூன்று வாரங்களும் ஊருக்குப் போய்விடுவான். வெள்ளிக்கிழமை நெருங்கினாலே, அவன் முகத்தில் ஒருவித தேஜஸ் குடிகொண்டுவிடும்.

'என்னதாண்டா பண்ணுவ ஊர்ல போயி?’ என்று அவனிடம் கேட்டால், 'நீங்க இங்கே பண்ற எல்லா வேலையையும் வீட்ல பண்ணுவோம்டா. ரொம்ப ஜாலியா இருக்கும்’ என்பான். 'அப்படி என்னடா ஜாலியா இருக்கும்?’ என்று கேட்டால், வசதியாக சாய்ந்து அமர்ந்துகொண்டு பேசுவான்.

பாஸ்வேர்டு் - 27

'சனிக்கிழமை எங்க அப்பா சமைப்பார். காலைலயே கிளம்பி நான், அம்மா, தங்கச்சி எல்லாம் மார்க்கெட் போவோம். காய்கறி வாங்கினது போக எங்களுக்குத் தேவையான மிட்டாய், விளையாட்டு சாமான்னு பிடிச்சதெல்லாம் வாங்குவோம். வீட்டுக்கு வந்து ஆளுக்கொரு வேலையைப் பிரிச்சுக்கிட்டுப் பார்ப்போம். அப்பா ஜோக் அடிச்சுட்டே சமையல் வேலையைப் பார்ப்பார். மதியம் சாப்பாடு முடிச்சுட்டு வீட்டுக்குள்ளயே விளையாடி, பேசி, சிரிச்சுட்டுக்கிடப்போம். சாயங்காலம் சினிமாவுக்குப் போவோம். படம் முடிஞ்சு வர்றப்போ ஹோட்டல்ல ஏதாவது சாப்பிட்டு வீட்டுக்கு வந்து ராத்திரி ரெண்டு மணி வரை அரட்டையும் விளையாட்டுமா இருக்கும்டா. அப்புறம் தூங்கி எந்திரிச்சா, ஞாயித்துக்கிழமை. அது இன்னும் களை கட்டும்...’ என்று இன்னுமோர் அரை மணி நேரம் பேசுவான்.

'டேய்... என்ன விக்ரமன் பட சென்ட்டிமென்ட்டா அடுக்குற. சும்மா கதை சொல்லாத. வீட்ல எப்படிடா ஜாலியா இருக்க முடியும்?’ என்று கலாய்க்கும் நண்பர்களின் கமென்ட்களை அவன் கண்டுகொள்ளவே மாட்டான். கைச்செலவுக்குக் காசு வாங்கவோ, 'என்னடா வீட்டுக்கே வர மாட்டேங்குற... கண்ணுக்குள்ளயே நிக்கிற தம்பி. ஒரு எட்டு வந்துட்டுப் போ’ என்று அம்மாவின் நச்சரிப்புக்காகவோ மாதம் ஒருமுறை வீட்டுக்குப் போகும் எங்களுக்கு, செந்தில் சொல்வதெல்லாம் நிச்சயம் ஆச்சர்யம்தான்.

'ஊர்ல ஏதோ ஃபிகரை கரெக்ட் பண்றான்டா. அதான் வாராவாரம் ஓடிப்போயிடுறான்’ என்று நண்பர்கள் கிண்டலடித்தாலும், 'நீ என்னடா பச்சப்புள்ளையா? அடிக்கடி வீட்டுக்கு ஓடிப் போயிடுற!’ என்று நையாண்டி செய்தாலும் செந்திலுக்கு அவன் வீடு சொர்க்கம்தான். அவன் வீட்டு உறுப்பினர்கள், அதை சொர்க்கமாக மாற்றிவைத்திருக்கிறார்கள். செந்தில் ஒன்றும் கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளை இல்லை. வரவுக்கும் செலவுக்கும் இழுத்துப் பறிக்கும் சாதாரணக் குடும்பம்தான். இருப்பினும், அங்கு குதூகலத்துக்கும் அன்புக்கும் குறைவே இல்லை.

பாஸ்வேர்டு் - 27

ம் எல்லோருடைய வீடுகளும் செந்திலின் வீடு போலவே இருந்துவிட்டால் எப்படி இருக்கும்? 'வீடுன்னா கலகலன்னு இருக்கணும். எல்லாரும் சிரிச்சிப் பேசி சந்தோஷமா இருக்கணும்’ என்று யாராவது சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், அது தானாக நடந்துவிடுமா என்ன? நாமாகத்தான் உருவாக்க வேண்டும்!

நண்பர்களுடன் அமர்ந்து அரட்டை அடிக்கும் மகிழ்ச்சியை, விடுதி, மேன்ஷன்களில் இருக்கும் கொண்டாட்டத்தை, அலுவலகச் சூழலில் கிடைக்கும் குதூகலத்தை, மனமகிழ் மன்றங்களில், நட்புச் சந்திப்புகளில் இருக்கிற துறுதுறுப்பை... ஏன் வீடுகளுக்குள் உருவாக்க முடிவதில்லை?

இரண்டு பேர் இருக்கிற வீடானாலும், ஏழு பேர் இருக்கிற வீடானாலும் இனம்புரியாத ஒரு மௌனம் ஏன் வீடு முழுக்க வியாபித்துக் கிடக்கிறது? அரை மணி நேரம் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டாலும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் நம் உணவு நேரங்கள் கரைந்து போகின்றனவே... ஏன்? புத்தகத்துக்குள் தலை கவிழ்ந்து ஒருவரும், ஹாலில் உள்ள சோஃபாவில் காமெடிச் சேனலின் ஒளிபரப்பை வெறித்தபடி ஒருவருமாக நேரத்தைக் கொல்கிறோமே... ஏன்?

பள்ளிக்கூடம் முடிந்துவருகிற பிள்ளை 'ஹோ’வென்று கத்திக்கொண்டு வீட்டுக்குள் ஓடி வருவதைப் போல, வயது வந்தவர்களால் ஏன் வீடுகளை அணுக முடியவில்லை. வீடு என்பது அடைந்துகொள்வதற்கான ஒரு கூடாக, குளித்து முடித்துத் தயாராவதற்கு ஏதுவான ஓர் இடமாக, சாப்பாடு கொட்டிக்கொள்கிற ஒரு ஹோட்டலாக, தூங்குவதற்கான ஒரு விடுதியாக, அதிகாரம் பண்ணுவதற்குத் தோதான ஓர் அரங்கமாக மாறிப்போயிருக்கிறதா? இல்லை... நாம் அப்படி மாற்றிவைத்திருக்கிறோமா?

'சார்... நான் வீட்ல இருந்தாலே சண்டைதான் வருது. அப்புறம் எப்படி நிம்மதியா சந்தோஷமா இருக்க முடியும்?னு கேட்டதுக்கு, எங்க மேனேஜர் எனக்கு ஒரு அட்வைஸ் பண்ணினார், 'சனி, ஞாயிறெல்லாம் வீட்ல இருக்காத... இருந்தா தேவையில்லாத சண்டை வரும். அதுக்குப் பதிலா ஆபீஸ் வந்துடு. இங்க எல்லா வசதியும் இருக்கு. காபி ஷாப் இருக்கு; டேபிள் டென்னிஸ் விளையாடலாம்; அப்படியே ஜாலியா வேலை பார்க்கலாம்’னு. நானும் இப்ப அதைத்தான் ஃபாலோ பண்றேன்’ என்று ஒருவர் என் நிகழ்ச்சியில் சொன்னார். எனக்கு மட்டுமல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது. ஒருவரை வருடம் முழுவதும் வேலைவாங்கி, குடும்பத்தையே எதிரியாக, சந்தோஷமற்ற இடமாக அறிவிக்கும் வேலைகள் நிறைய இடத்தில் நடக்கின்றன.

பாஸ்வேர்டு் - 27

நிலையான மனநிம்மதியையும், நீட்டித்த மகிழ்ச்சியையும் வீடுகளைத் தவிர வேறு யாரால் தர முடியும்? ஆனால், அந்த வீடுகள் சுமையானதாக, இறுக்கமானதாக இருக்க தொடர்ந்து அனுமதித்துக்கொண்டே இருக்கிறோம். அந்த இறுக்கத்தைத் தளர்த்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல், அந்த இடத்தில் இருக்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்வதற்கான வழியைத் தேடுகிறோம். பொதுவெளியில் நமக்குக் கிடைக்கும் சுதந்திரம், விரும்பியதைச் செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி, நம்மைக் கொண்டாடும் மனிதர்களின் புகழ் பேச்சுகள், நம் அதிகாரத்துக்குக் கட்டுப்படும் மனிதர்கள், நாம் செய்யும் சின்ன வேலையைப் பெரிதாகக் கொண்டாடும் ஜால்ராக்கள், நம்முடைய சிற்றின்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் 'நலன் விரும்பிகள்’... இவர்கள் வீட்டுக்குள்ளும் இருந்தால் அநேகமாக ஆனந்தமாக இருக்கக்கூடும்!

ஆனால், இந்த அகில உலகத்திலும் பெரும்பாலும் கிடைக்காத ஒன்று வீட்டில் மட்டுமே கிடைக்கும். அது, உங்கள் மீதான கரிசனம்!

'இந்தக் குடும்பத்துக்காக எவ்வளவோ உழைக்கிறேன்; போராடுகிறேன்; சம்பாதிக்கிறேன். எனக்கென்று ஓர் அந்தஸ்து, முக்கியத்துவம் கொடுப்பதில்லை’ என்ற மனக்குறை, நம்மை அறியாமல் துறுதுறுப்பற்ற மந்தமான மனநிலைக்கு மாற்றிவிடுகிறது.

உண்மையில், வீட்டில் இருக்கும் மனைவியும் மற்றவர்களும்தான் உங்களுக்காக எல்லா வேலைகளையும் கவனித்துக்கொள்கிறார்கள். அதனால்தான் உங்களால் வெளியே போய் சந்தோஷமாகச் சம்பாதிக்கவோ, கொண்டாடவோ முடிகிறது. நாம் இறுக்கமானதாக, சுவாரஸ்யம் அற்றதாகக் கருதும் அந்த வீட்டுக்குள்தான் நமக்காகவே வாழும் மனிதர்கள் காலை முதல் மாலை வரை அடைபட்டுக்கிடக்கிறார்கள். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஓடியாடி உழைத்துக் களைத்த, எப்போதும் துறுதுறுப்பாக இருந்த அப்பா அதே வீட்டுக்குள் ஒரு கைதியைப் போல உட்கார்ந்து கிடக்கிறார்; வீடே கதியென்று இருந்த அம்மா, வீட்டின் வெறுமையைச் சுவாசித்தவாறே டி.வி. பார்த்துக்கொண்டிருக்கிறார்; உங்களுக்காகவே தனது ஒவ்வொரு நிமிடத்தையும் நினைப்பையும் செலவிடும் மனைவி, அந்த வீட்டுக்குள் பல்லைக் கடித்துக்கொண்டு காலம் தள்ளுகிறார்.

உங்களுக்கு மட்டுமல்ல, குதூகலம் இல்லாத உங்கள் வீடு எல்லோருக்குமே இறுக்கமாகத்தான் இருக்கிறது. அதிலிருந்து நான் மட்டும் தப்பித்துக்கொள்கிறேன் என்று முடிந்த வரை வீட்டுக்குத் தாமதமாகச் செல்கிற மனசு ரொம்பவும் சுயநலமானது. செந்திலின் வீட்டைக் குதூகலமாக்க அவர் அப்பாவும் அம்மாவும் நிறைய மெனக்கெடுகிறார்கள். அந்த மெனக்கெடல் நிரந்தரமான மகிழ்ச்சியைத் தரும் என்று அவர்களால் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது.

கோபதாபங்கள், சண்டைகள், மனச்சோர்வுகள் நிறைந்த இடமாக வீடு தொடர்ந்து இருப்பதற்கான காரணம், அந்தச் சூழ்நிலையை மாற்ற நாம் முயலாமல் இருப்பதுதான். முகமலர்ச்சியோடு வீட்டுக்குள் ஓடிவரும் குழந்தையைப் போல நாமும் வீட்டை நேசிக்க முடியும். நம் சந்தோஷமே அவர்களின் வாழ்க்கை என்று நினைக்கிற மனிதர்கள் இருக்கும் அந்த இடத்தை சந்தோஷமாக மாற்ற முடியாதா என்ன?

- ஸ்டாண்ட் பை...