Published:Updated:

“நல்ல வில்லன்கள் இன்னும் வருவாங்க!”

விகடன் மேடை - பிரகாஷ்ராஜ் பதில்கள்வாசகர் கேள்விகள்

##~##

ரகுராமன், துறையூர்.

''ஓடாதுனு தெரிஞ்சும் எதுக்காக சில படங்களில் நடிக்கிறீங்க?''

''சில படங்களில் கமிட் ஆகும்போது, 'நான் இவங்களுக்குப் பயன்படுவேன்’னு தோணும். 'எனக்கு இவங்க பயன்படவே மாட்டாங்க’னு தெரிஞ்சும் புரிஞ்சும் சில படங்கள்ல நடிச்சிருக்கேன். அதுக்குக் காரணம்... காசு. இதை வெளிப்படையா சொல்றதுல எனக்கு வெட்கம் எதுவும் இல்லை!''

மு.அழகரசன், சேலம்.

''ரகுவரன், நாசர், பிரகாஷ்ராஜ்...என 'பளிச்’னு நடிக்கிற நடிகர்கள் வரிசை உங்களோடு முடிவுக்கு வந்து நிக்குதே. இதை எப்படிப் பார்க்கிறீங்க?''

''எங்க மூணு பேருக்கும் இருக்கிற ஒற்றுமை, வாழ்க்கையை சினிமாவுல பிரதிபலிக்கிற வாய்ப்பு கிடைச்சா சந்தோஷமா அதைப் பண்ணுவோம். நீங்க பசுபதியை இந்த வரிசையில சேர்த்துக்கணும். இன்னும் பலர் வருவாங்க.

நான் வில்லனா எஸ்டாபிளிஷ் ஆகி தினம் தினம் கேமரா முன்னாடி வில்லத்தனம் பண்ணிட்டு இருந்த நேரம் அது. ஒருநாள், 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படம் பார்த்தேன். அந்தப் படத்துல ஒரு குழந்தையோட அப்பாவா ரகுவரன் அட்டகாசப்படுத்தி இருப்பார். 'அடடா, நாம இந்த மாதிரி கேரக்டர்தானே தேடித் தேடிப் பண்ணணும்’னு என்னைப் பொறாமைப்பட வெச்ச நடிகர் ரகுவரன். அவருடைய திறமைக்கு வாய்ப்புகள் கொட்டிக்கிடந்தன இங்கே. ஆனா, அவர்தான் தன் ஆயுளைக் கொஞ்சமாக் குறைச்சிக்கிட்டார்; ப்ச்!''

“நல்ல வில்லன்கள் இன்னும் வருவாங்க!”

ஜெயசக்தி, மலைக்கோட்டை.

''பிரகாஷ்... எதற்காக இப்படி ஓடிட்டே இருக்கீங்க?''

''தேங்கி ஒரே இடத்துல நிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை. சும்மா இருந்து துருப்பிடிக்கிறதுக்கு, உழைச்சித் தேய்ஞ்சுபோறது எவ்வளவோ மேல்!''

கவிதா செந்தில்குமார், கும்பகோணம்.

''உங்கள் வில்லத்தனத்தால் சில நல்லது நடந்திருக்கு. நீங்க நடிச்ச ஒரு படம் பார்த்த பிறகு என் கணவர் என்னைத் திட்டுறதே இல்லை. என்ன புரியுதா, 'பன்னாடை... பன்னாடை’?''

''அது என் வில்லத்தனம் இல்லை கவிதா. உங்க கணவருக்குள் ஒளிஞ்சுட்டு இருந்த ஹீரோயிசம். நான் நடிக்கிறதை நீங்க ரசிக்கலாம். திருந்துற அல்லது மாத்திக்கிற பெருமையெல்லாம் அவங்களுக்குத்தான் சொந்தம். இப்போ நான் இந்தப் பெருமையை ஏத்துக்கிட்டா, 'பிரகாஷ்ராஜ் நடிப்பைப் பார்த்துதான் நான் இந்தக் கொலை பண்ணேன்’னு யாராவது கத்தியோட வந்து நின்னா, அதை ஏத்துக்கிட்டு நான் என்ன ஜெயிலுக்காப் போக முடியும்?''

சண்முகசுந்தரம்,   வைத்தீஸ்வரன்கோயில்.

'' தற்கொலை செய்துகொண்ட, தற்கொலைக்கு முயற்சித்த நடிகைகளை நீங்க எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறீங்க?''

''தற்கொலை பண்ணிச் செத்துப் போறதுக்கு, ஒரு காரணம் கிடைக்குதுன்னா, வாழ்றதுக்கு நூறு காரணங்கள் இருக்கு. இது நடிகைகளுக்கு மட்டுமில்லை, நம்ம எல்லாருக்குமே பொருந்தும்!

கொஞ்ச நாள் முன்னாடி, 'நான் அழகா இல்லை. என்னை எல்லாரும் கேலி பண்றாங்க’னு சொல்லி ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்ட செய்தியைப் படிச்சுத் தூக்கமில்லாமப்போச்சு. என் அப்பா, எங்க அம்மாவை விட்டுட்டுப் போன பிறகு, 'இனி வாழ்றதுல அர்த்தமில்லை’னு அவங்க தற்கொலை பண்ணிக்க நினைச்சப்ப, நான் கைக்குழந்தை. அம்மா மனசு உடைஞ்சி இருந்த நேரத்துல, நான் அவங்களைப் பார்த்துச் சிரிச்சேனாம். 'இந்தப் பிள்ளையை விட்டுட்டு எப்படிச் சாகுறது?’னு அம்மா  வைராக்கியமா மூணு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கினாங்க.

தெலுங்கு சினிமாவுல ஒரு குணசித்திர நடிகன் இருக்கான். எல்லார்கிட்டயும் சிரிச்சிப் பேசி கலகலனு இருப்பான். அங்கே முக்கியமான நடிகர்கள் எல்லாருக்கும் அவன் நண்பன். ஏதோ பிரச்னையில் தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கான். அதிர்ஷ்டவசமா உயிர் தப்பினான். நான் உடனே திட்டினேன், அவன் நண்பர்களை!

ஒருத்தன் துணிஞ்சு கயித்துல தொங்குறதுக்கு சில நொடிகள்தான் ஆகும். ஆனா, அந்த முடிவுக்கு அவன் வர்றதுக்கு சில நாட்களாவது தேவைப்படும். சிரிச்சிப் பேசிட்டு இருக்கிற ஒருத்தன் திடீர்னு மௌனமாகிட்டா, 'என்னாச்சு’னு கவனிச்சிக் கேட்க வேண்டியது அவனைச் சுத்தி இருக்கிறவங்களோட பொறுப்பு. கஷ்டத்தைக் காது கொடுத்துக் கேட்க ஒருத்தராவது இருந்துட்டா, தற்கொலைகள் அத்தனை சுலபமா நடக்காது. அப்படி நம்ம மனசுக்கு நெருக்கமானவங்களுக்கு காது கொடுத்துக்கூட கேட்க முடியாம, நாம எதைச் சாதிக்க இவ்ளோ பரபரப்பா ஓடிட்டு இருக்கோம்?''

“நல்ல வில்லன்கள் இன்னும் வருவாங்க!”

கு.உலகேந்திரன், கன்னியாகுமரி.

'' 'சிங்கம்’ தவிர்த்து கடந்த இரண்டு வருடங்களில் ஹிட் அடித்த தமிழ் படங்களில் நீங்கள் இல்லை. சமீபமாகவே ஹீரோ, வில்லன், இயக்குநர் என்று எதிலும் அறிமுக இளைஞர்கள்தான் முத்திரைப் பதிக்கிறார்கள். ஆக, இனி பிரகாஷ்ராஜின் எதிர்காலம்?''

''நான் மட்டும் அல்ல, எந்த ஒரு நடிகனோட எதிர்காலமும் உத்தரவாதமா இருக்கணும்னா, அது யார் கையில இருக்கு தெரியுமா? எப்படியாவது வெற்றிப்படம் தரணும்னு வெறியோட கதை பண்ணிட்டு இருக்கிற உதவி இயக்குநர், ஒரு கேரக்டரை யோசிக்கும்போது, 'பிரகாஷ்ராஜ் மாதிரி ஒருத்தர்’னு நினைச்சு கதை பண்றார்ல... அவங்க கையில் இருக்கு!

அப்படி யாராவது யோசிக்கிற வரைக்கும் நடிகனா எனக்கு எந்தக் குறையும் வராது. உதவி இயக்குநர்கள் சிந்தனையில் நான் இல்லாமப் போயிட்டா, இன்னொருத்தர் அந்த இடத்துக்கு வந்துட்டா, என் பங்களிப்பு பத்தலைனு யாரும் சொல்லாமலேயே எனக்குப் புரிஞ்சிடும்.

நடிகனா எனக்கு தேசிய விருது பெற்றுத்தந்த  'காஞ்சிவரம்’ படத்துல நடிக்க ஒப்புக்கிறப்போ, சம்பளம் பத்தி நான் யோசிக்கவே இல்லை. அந்த மாதிரி ஒரு கதை கிடைச்சா போதும்னு முழு மனசோட போய் நின்னேன். அந்தப் படத்துல எனக்கு முதல் சம்பளம், எனக்குக் கிடைச்ச மனதிருப்தி. அப்புறம் பாராட்டுகள், தேசிய விருது எக்ஸ்ட்ரா போனஸ். அந்த மனநிலையை என்னைக்கும் நான் தொலைக்க மாட்டேன்.

எனக்கே போர் அடிச்சு, 'போதும்’னு நடிப்பை நிறுத்தினாதான் உண்டு. மத்தபடி, ஒரு மேடை நாடகத்துலகூட ஒரு கேரக்டரா, என் ஆர்வத்துக்கு தீனி கிடைச்சிடும்!''

“நல்ல வில்லன்கள் இன்னும் வருவாங்க!”

சுதந்திரதேவி, சிவகாசி.

''உங்க குழந்தைகளின் எதிர்காலம் குறித்த உங்க திட்டமிடல் என்ன? நடிக்க விரும்பினா வரவேற்பீர்களா?''

''ஒரு காக்கா, தன் குஞ்சுக்கு எப்படிப் பறக்கணும்னு சொல்லிக்கொடுக்குமே தவிர, எங்க பறக்கணும்னு வட்டம் போட்டுக் கட்டுப்படுத்தாது. காக்காவுக்கு இருக்கிற அந்த அறிவுகூட ஆறறிவு கொண்ட மனுஷனுக்கு இல்லை. தன் குழந்தைகள் என்ன படிக்கணும், என்ன வேலை செய்யணும், எப்படி வாழணும்னு ஒரு வட்டம் போட்டு அதுல அவங்களை நிறுத்துறாங்க. அப்படியே கையில் ஒரு சாட்டையை வெச்சுக்கிட்டு காவல் வேற காக்குறாங்க. பிள்ளைகளோட விருப்பத்துக்கு முக்கியத்துவம் தராம, இவங்களோட கணக்குப்படி வாழணும்னு வற்புறுத்துறாங்க.

என் குழந்தைகள் என்ன ஆகணும்னு விருப்பப் படுறாங்களோ, அந்தத் துறையில் அவங்க கடினமா உழைச்சு, திறமையைச் சரியாப் பயன்படுத்தி நல்ல நிலைமையில் இருக்கணுங்கிறதுதான் என் விருப்பம்.

சுருக்கமா சொல்லணும்னா, அவங்க விருப்பம்தான் என் விருப்பம். என்னால முடிஞ்ச அளவு அதுக்குத் துணையா இருப்பேன்!''

பவானிசங்கர், குளித்தலை.

''சினிமா கனவோடு இருக்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கு உங்க அறிவுரை என்ன?''

''அறிவுரை சொல்ற அளவுக்கு நான் இன்னும் சினிமா கத்துக்கல. ஆனா, ஒரு விஷயத்தை மனசுல பதிச்சுக்கங்க... 'தூங்கும்போது வருவது கனவு இல்லை. உன்னைத் தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு’னு அப்துல் கலாம் சொல்லிருக்காரே! சினிமா வெறும் ஆசையாகவோ, கனவாகவோ மட்டும் இருந்தா பத்தாது. இது அறிவுரை இல்லை. என் அனுபவம்!''

எஸ்.புவனா, சூளைமேடு.

''எல்லாரும் விரும்பும்படி வாழ்வது சுலபமா இல்லையே பிரகாஷ்?''

''எதுவுமே சுலபமா இருந்துட்டா, அதுக்கு மதிப்பே இல்லை புவனா. சுலபமாக் கிடைக்கிற எதுவும் ரொம்ப நாளைக்கு நிக்காது. நாம விரும்புற வாழ்க்கை, நமக்குக் கிடைக்கணும்னா போராடணும். அப்புறம் கிடைச்ச வாழ்க்கையைத் தக்கவெச்சிக்க, அந்தப் போராட்டம் தொடரணும். நாளுக்குநாள் போராட்டம் இன்னும் தீவிரமாகுமே தவிர, சுலபமா இருக்காது. போராடுறது நிக்கிறதும், இதயத்துடிப்பு நிக்கிறதும் ஒண்ணுதான். அப்புறம் வாழ்றதுல எந்தப் பிரயோஜனமும் இல்லை.

தொடர்ந்து இனிப்பாவே இருந்துட்டா கரும்பும் திகட்டும். அதனால, அப்பப்போ இஞ்சி சாறு குடிச்சாதான், கரும்புச் சாறோட அருமை புரியும்!''

கனகராஜ், திருப்பூர்.

 ''நடிகன்/கலைஞன் என்ற அடையாளம் தாண்டி, 'நெருக்கமான நண்பன்’ என்ற கோணத்தில் உங்களை வாசகர்களிடம் வெளிப்படுத்திய 'சொல்லாததும் உண்மை’ தொடர் பற்றியும், அதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான தருணங்கள் பற்றியும் சில வார்த்தைகள்...''

''அந்தத் தொடர் மூலமா என்னையே எனக்குப் புதுசா அறிமுகப்படுத்துச்சு விகடன். எனக்குள்ள எவ்ளோ தைரியம் இருக்குனு நான் உரசிப் பார்த்துக்கிட்ட பயணம் அது. என் தவறுகளுக்குப் பகிரங்கமா மன்னிப்புக் கேட்டிருக்கேன். வெளிப்படுத்தத் தவறிய அன்பை திரும்ப மீட்டு எடுத்திருக்கேன். சினிமாவுல எனக்கு ரசிகர்களா இருந்தவங்க, 'சொல்லாததும் உண்மை’ படிச்சிட்டு நண்பர்கள் ஆனாங்க. அது எழுதி பல வருஷமாகிருச்சு. ஆனா, இப்பவும் விமான நிலையங்களில், படப்பிடிப்புத் தளங்களில், பொதுநிகழ்ச்சிகளில் சந்திக்கும் விகடன் வாசகர்கள் நேசத்தோட கைகுலுக்குறாங்க. 'நீங்க பகிர்ந்துக்கிட்ட அந்த விஷயம், என்னை மாத்திக்க உதவுச்சு’னு நெகிழ்ச்சியா சொல்றாங்க.

எனக்கும் எழுத்துக்கும் 70 மைல் தூரம். ஓடிக்கிட்டே இருந்த என்னை இழுத்துப் பிடிச்சு, பேச வெச்ச விகடனுக்கு எப்பவும் என் நன்றி!''

- நிறைந்தது _

“நல்ல வில்லன்கள் இன்னும் வருவாங்க!”

ன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.