Published:Updated:

ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலசந்தர்...

ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலசந்தர்...

ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலசந்தர்...

''கெட் லாஸ்ட்!''

- உரக்கக் கத்திக்கொண்டிருந்தார் டைரக்டர் பாலசந்தர். ரொம்பவும் கோபமாக இருக்கிறாரோ என்று உள்ளே எட்டிப் பார்த்தபோதுதான், விஷயம் புரிந்தது...

'' 'கெட் லாஸ்ட்’னு உன்னோட எடிட்டர் சொல்லிட்டார். உனக்குக் கோபம் வர்றது. ஆத்திரம் பத்திக்கிறது. அவருக்கு ஒரு அறை கொடுத்துடலாம்னு தோண்றது. பட், உன்னோட கைகள் கட்டப்பட்டிருக்கு. அவரை எதிர்க்க முடியாம எல்லாத்தையும் அடக்கிண்டு, 'தேங்க் யூ’னு கிண்டலா சொல்றே...''

- பத்திரிகை நிருபராக நடிக்கும் பிரசன்ன சீனிவாசனுக்கு காட்சியை விளக்கிக்கொண்டு இருந்தார் பாலசந்தர். இரண்டு, மூன்று ரிகர்சல் பார்த்தார். திருப்தியடையாமல் மீண்டும் மீண்டும் ரியாக்ஷன் சொல்லித் தந்தார்.

##~##

''லோகு... ரெடியா?'' என்று ஒளிப்பதிவாளரைக் கேட்டார்.

''ரெடி ஸார்.''

''கண்ல அத்தனை கோபம் வேண்டாம். ஆர்டர்... லைட்ஸ் ஆன்...'' - பரபரத்தார் பாலசந்தர்.

விளக்குகள் பிரகாசித்தன. குளோசப்களாக கேமராவுக்குள் புகுந்தவர் பிரசன்ன சீனிவாசன்.

கலாகேந்திராவின் 'தண்ணீர் தண்ணீர்’ படத்துக்காக வீனஸ் ஸ்டூடியோவில் ஒரு சின்னக் காட்சி படமாக்கப்பட்டது.

டுத்த நாள்...

செங்கல்பட்டை அடுத்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் அவுட்டோர் யூனிட் வேன்கள் நின்றிருந்தன. ஜெனரேட்டர் சத்தம் காதுக்குள் ரீங்காரமிட, கேபிள்கள் பாம்புகளாய் தரையில் நெளிய...

''மடமடன்னு ஆகட்டும்...'' - மீண்டும் பாலசந்தரின் உரத்த குரல்.

சாலையோரமாகக் கால்வாய் வெட்டும் பணி மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. கையில் கடப்பாரை, மண்வெட்டி, அரிவாளுடன் ஆண்களும் பெண்களும் அணிவகுத்து நின்றார்கள். முன் வரிசையில் மண் கூடையுடன் சரிதா. கணுக்கால் தெரியும் அவருடைய நூல் புடவை வேலியில் சிக்கிக்கொண்ட மாதிரி பல இடங்களில் கிழிந்திருந்தது. சட்டையில்லாத உடம்பில் கப்பி மண் அப்பியிருக்க, கையில் ஆயுதங்களுடன் வீராச்சாமி, ஆர்.கே.ராமன், மது என்று 'தண்ணீர் தண்ணீர்’ நாடகத்தில் நடித்த பலரும் டைரக்டரின் ஆணைக்காகக் காத்திருந்தார்கள்.

ஒரு பள்ளத்தாக்கில் கேமராவை நிற்க வைத்து, கோணம் பார்த்தார் கே.பி.

''ஆர்டர்... ஸ்டார்ட் கேமரா...'' என்று டைரக்டர் குரல் கொடுக்க, வேலை செய்யும் ஆட்கள் நடந்து வருவது மாதிரி, பின்னர் கால்வாயைத் தோண்டுவது மாதிரி சில காட்சிகளை எடுத்து முடித்தார் லோகநாதன்.

''கட்!'' என்று சொல்லிவிட்டு, அடுத்த நிமிடம் கால்வாயின் மறுகோடிக்கு ஓடினார் பாலசந்தர். பள்ளத்தில் இறங்கி, மேடுகளில் ஏறி, பாறை மீது நின்று... அவருடைய வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் யூனிட்காரர்களே திக்குமுக்காடினர்.

''ரெண்டு, மூணு அலுமினிய டிபன் பாத்திரம் கிடைக்குமா?'' - திடீரென்று கேட்டார் கே.பி.

''பக்கத்திலே போய் வாங்கிட்டு வந்துடலாம்... அரை மணிதான் ஆகும்!'' என்றார் அசோசியேட் ராமன்.

''அதுக்கெல்லாம் டயம் கிடையாது. நான் அடுத்தடுத்து ஷாட் எடுக்கணும்ல...''

ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலசந்தர்...

- பேசிக் கொண்டிருந்தபோதே ஒரு பெண்மணி, யாரென்று தெரியவில்லை... டைரக்டரிடம் வந்தார். பக்கத்தில் ஒரு டீன் ஏஜ் பெண், நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்து நின்றாள்.

''எக்ஸ்கியூஸ் மி... நான் உங்ககிட்டே அஞ்சு நிமிஷம் பேசணும்.''

''இங்கே வேலை செய்துட்டிருக்கிறப்போ எப்படிப் பேச முடியும்?'' - கேள்வியை முடிக்காமலேயே கேமராவிடம் ஓடிவிட்டார் டைரக்டர்.

டிராலியின் எதிரே ஒரு அசிஸ்டென்ட்டை அமரச் சொல்லி பொசிஷன் பார்த்து, பின்பு அந்த இடத்தில் சரிதாவை உட்காரவைத்து, அவர் கையில் ஒரு கைக்குழந்தையைக் கொடுத்து, டிராலி ஷாட்டை எடுத்து முடித்த பின் பாலசந்தர் சொன்னார்:

''சரிதாவுக்கு இது மூணாவது குழந்தை. ஏற்கெனவே கோவில்பட்டி ஷூட்டிங்ல வேற ரெண்டு குழந்தைகளுக்கு இவ தாயா நடிச்சிருக்கா!''

திருவடிசூலம் என்ற கிராமம் இந்தப் படத்துக்கு இன்னொரு லொகேஷன். பழைய கோயில், சின்னக் குளம், படித்துறை... என்று ரம்மியமான சூழ்நிலை.

''ஒரு கிராமம்தான் 'தண்ணீர் தண்ணீர்’ படத்தோட கதாநாயகன். தண்ணீர்ப் பிரச்னைதான் கதாநாயகி. இந்த இரண்டும் எப்படி ஜாயின் ஆறதுங்கறதுதான் படம்'' என்றார் பாலசந்தர்.

''இது ஒரு வித்தியாசமான படமா இருக்கும்னு நினைக்கிறேன். மற்ற படங்கள் மாதிரி இல்லாம வேற ஸ்கேல்ல இந்தப் படத்தைப் பார்க்கணும்னு எதிர்பார்க்கிறேன். உதாரணமா, சரிதாவோட வேலையை பத்து நாள்லே முடிச்சிருக்கலாம். ஆனா, எனக்கு இருபத்தஞ்சு நாளாயிடுச்சு. ஆரம்பத்திலே அவ ரொம்பக் கஷ்டப்பட்டு கிராமத்தைவிட்டு வெளியே போய்த் தண்ணி எடுத்து வர்றதைப் பார்க்கறச்சே, தண்ணிக்காக அவ பத்து மைல் நடந்து போறதையே ஃபீல் பண்ணுவீங்க'' என்று சொன்னார்.

சேற்றிலும் சகதியிலும் வயலிலும் வரப்பிலும் நடந்து ஏரிக்கரையை அடைந்தார் டைரக்டர். 'பாறையை உடைத்தே தீருவோம்!’ என்று ஊர் மக்களும், 'தடியடிப் பிரயோகம் நடத்துவோம்!’ என்று போலீஸ் இன்ஸ்பெக்டரும் காரசாரமாக மோதும் சில காட்சிகள் கிடுகிடுவென்று படமாக்கப்பட்டன.

போலீஸ் இன்ஸ்பெக்டர்தான் டைரக்டரை கொஞ்சம் கஷ்டப்படுத்தினார். கோபமாகச் சொல்லவேண்டிய வசனங்களை சாதாரணமாக அவர் சொல்ல, ''இன்னும் அழுத்தமா... கோபமா சொல்லுங்க...'' என்று பலமுறை சொன்னார் கே.பி.

ஊர் மக்கள் கூட்டமாக ஓடிவரும் காட்சியில் ஒருவர் கடப்பாரையை உயரமாகத் தூக்கிவிட, பாலசந்தருக்கு ஏக கோபம்!

ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலசந்தர்...

''சொல்லாமலே அதை ஏன் தூக்கறாங்க... இவங்களே டைரக்ட் செய்துகிறாங்க!'' என்று கோபமாகக் கடிந்துகொண்டார்.

ஓரமாக உட்கார்ந்திருந்த சரிதா, கேமராவுக்கு அருகில் வந்தார்.

''வாம்மா... நமஸ்காரம்'' என்ற பாலசந்தர் சிரித்துக்கொண்டே, '' 'இவ்வளவு நாழி நான் சும்மா உட்கார்ந்துட்டிருக்கேன்; எனக்கு இன்னும் 'ஷாட்’டே வரலே’னு சொல்ற மாதிரி இருக்கு உன்னைப் பார்த்தா!'' என்று கிண்டலும் செய்தார்.

''இல்லே சார்... இங்கே ஒரு நல்ல சீன் எடுக்கற மாதிரி இருந்தது. பார்க்கலாம்னு வந்தேன்'' - சிரித்தபடியே மெதுவாகச் சொன்னார் சரிதா.

''ஓகே! டிராமாவுக்குப் போறவங்கெல்லாம் கிளம்பலாம்'' என்று டைரக்டர் உத்தரவு கொடுக்க, அன்று அண்ணாமலை மன்றத்தில் நடக்க இருந்த 'தண்ணீர் தண்ணீர்’ நாடகத்தில் நடிக்க, 'திரைப்படப் புகழ்’ அடையப்போகும் பல நாடக நடிகர்கள் மேக்கப்பைக் கலைக்காமலேயே வண்டியில் ஏறினார்கள்!

- ஆனந்த்

படங்கள்: 'ஸ்டில்ஸ்’ ரவி