Published:Updated:

ஆறாம் திணை - 57

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை - 57

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:
##~##

ம் கொள்ளுத் தாத்தாவைவிட தாத்தா, அதிக வயது வாழ்ந்தார்.  தாத்தாவைவிட அப்பா, அதிக வயதுடன் இருக்கிறார். ஆனால், நாம் அப்படி இருப்போமா? எதிர்காலத்தில், நம் குழந்தைகள்..? சமீபத்திய வாழ்வியல் நோய்கள் அடிக்கும் இந்த அலாரத்தைத்தான், 'சர்க்கரை வியாதியஸ்தர்களின் எண்ணிக்கை இன்னும் 10 வருடங்களில் 70 மில்லியன்களைத் தொடும்’ என்கிறது பன்னாட்டுச் சர்க்கரை நோய்க் கழகம்.

உலகில் சர்க்கரை நோயாளிகளின் அளவில் முதல் இடத்தை நாம் ஏற்கெனவே பிடித்தாயிற்று. வருங்காலத்தில் 'மேட்ரிமோனி’ விளம்பரங்கள், 'ஐந்து இலக்க சம்பளம் வாங்குகிற, சர்க்கரை நோயில்லாத ஆண்/பெண் தேவை’ என்றுதான் வெளிவரும். காய்ச்சல், தலைவலி என எதற்கு மருத்துவரைப் பார்த்தாலும், 'எதுக்கும் சர்க்கரை இருக்குதானு பார்த்துருங்க’ என மருத்துவர்கள் பரிந்துரைப்பது வாடிக்கையாகிவிட்டது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈரலுக்குப் பின்னே ஒளிந்திருந்து, உடம்பின் ஜீரணத்தை சமர்த்தாகப் பாதுகாத்துவந்த கணையத்தின் பீட்டா செல்கள், கண்ணுக்குத் தெரியாத வைரஸில் பாதிப்படைந்ததா? மரபணு செய்த சேட்டையா? அவ்வப்போது வரும் அலைபேசி அவதி போல, செல்களுக்கு இடையிலான சிக்னல் பிரச்னையா? சொகுசான சோம்பேறி வாழ்க்கை முறையா? வெள்ளைச் சர்க்கரை, வெள்ளை அரிசி, வெள்ளைக் கோதுமை மாவு, வெள்ளைக் கோழி... என வெள்ளை(யர்) உணவு தினசரி வாடிக்கையாகிவிட்டதாலா? அடுக்கடுக்காகக் கேள்விகள்  முளைத்துக் கொண்டே இருக்கின்றன. பதில்கள்தான் கிடைத்தபாடில்லை. ஆனால், மேலே சொன்னவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால்கூட, சர்க்கரை நோய் டோக்கன் போட்டு அமர்ந்துவிடும் என்பதுதான்  வேதனையான உண்மை.

ஆறாம் திணை - 57

'ஆத்தி... சர்க்கரை நோய் வந்தாச்சு. இனி எதைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என நம்மவர்கள் போடும் ஆட்டம் இருக்கிறதே! 'கொய்யாக்கா இலை சாப்பிடுங்க; கோவைக்காய் பொரியல் சாப்பிடுங்க; வெண்டைக்காயை நடுவுல பொளந்து, ராத்திரியெல்லாம் ஊற வெச்சுச் சாப்பிடுங்க; தஞ்சாவூர் பக்கம் சர்க்கரை ஈஸ்வரர்னு ஒரு கோயில் இருக்கு. அங்க ஒருமுறை போய்ட்டு வந்துருங்க; தொடு சிகிச்சையை முயற்சி செய்யுங்க; தொடாத சிகிச்சைல கேன்சரே குணமாகுதாம்’ என திரும்பும் திசையெல்லாம் புத்திமதிகள். சர்க்கரை நோய் பற்றிய புரிதலை ஏற்படுத்திக்கொள்ள முனைவது தப்பு இல்லை. ஆனால், முப்பதே நாட்களில் இந்தி கற்றுக்கொள்வது போல, முப்பதே நாட்களில் சர்க்கரையை முறியடித்து ஜாங்கிரி சாப்பிட நினைப்பதுதான் தப்பு.

சர்க்கரை நோய், டைஃபாய்டு ஜுரம் மாதிரி கிடையாது, கிருமியை ஒழித்தால் நோய் மறைந்துபோவதற்கு. சரியான மருத்துவத்தோடு, ஒட்டுமொத்தமாக வாழ்வியலைப் புரட்டிப் போட்டால்தான் நல்வாழ்வு நிச்சயம். சமீபத்திய ஆய்வுகள், நீங்கள் IMPAIRED GLUCOSE TOLERANCE அல்லது IMPAIRED FASTING GLUCOSE  அளவில், அதாவது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருந்தாலே, ஓரிரு ஆண்டிலேயே சர்க்கரை நோயாளியாக மாற வாய்ப்பு மிக அதிகம் என்கிறது நவீன அறிவியல்.

45 நிமிட வேக நடை, தினசரி காலை-மாலை 20 நிமிட பிராணாயாமப் பயிற்சி இவற்றுடன் வெள்ளைச் சர்க்கரை முதலான வெள்ளை உணவை விலக்கும் மனோபாவம் உங்களிடம் இருந்தால், சர்க்கரையின் வரவை முடிந்தவரை தள்ளிப்போடலாம். சில நேரத்தில் தப்பிக்கவும் செய்யலாம்.

ஆறாம் திணை - 57

ஆன்ட்டி-ஆக்சிடென்ட் நிறைந்த க்ரீன் டீ அல்லது ஆவாரைக் கஷாயத்தை காலை பானமாகவும், கைக்குத்தலில் தவிடு நீக்கிய தினை, ராகி, கம்பு, சிறு சோள மாவில் செய்த தோசையோ, இட்லியோ, கொழுக்கட்டையோ காலை உணவாகச் சாப்பிடுங்கள். வாரம் இரு நாள் மட்டும் மாப்பிள்ளைச் சம்பாவில் அல்லது வேறு பாரம்பரிய அரிசியில் பொங்கலோ, தவிடு நீக்காத கோதுமையில் சப்பாத்தியோ சாப்பிடுங்கள். தானியங்களை கஞ்சியாகச் சாப்பிடுவதை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கலாம். இன்னொரு முக்கிய விஷயம். சிறுதானியங்களிலும் பாலிஷ் போடத் தொடங்கிவிட்டார்கள். சிறுதானியத்தை கைக்குத்தலாக மட்டும் வாங்கிச் சாப்பிடுங்கள். அல்லது, அரிசிக்கு நேர்ந்த கதை விரைவில் தினைக்கும் பிற தானியங்களுக்கும்கூட வரக்கூடும்.

ஆறாம் திணை - 57

மதிய உணவை, வெங்காயம், தக்காளி சாலட்டில் தொடங்குங்கள். முளைகட்டிய பாசிப்பயறு, முருங்கைக் கீரை பொரியல், வாழைத்தண்டுப் பச்சடி, வெள்ளைப் பூசணிக் கூட்டு, வெண்டைக்காய், கத்திரி, கோவை இவற்றில் செய்த கூட்டுப் பொரியல், தினையரிசி சாதம் அல்லது கைக்குதல் கார அரிசி அல்லது பழுப்பு அரிசியில் அல்லது புழுங்கல் அரிசியில் சோறு, கண்டிப்பாக ரசமும் மோரும் என சாப்பிடுங்கள். சொன்ன அத்தனையும் குறைந்த கிளைசிமிக் தன்மையும், சர்க்கரை நோய்க்கு எதிரான மூலக்கூறுகளையும் கொண்டவை.

மாலையில் சர்க்கரை நோயாளிகள் ஏதேனும் சாப்பிடுவது மிக அவசியம். பப்பாளி துண்டுகளோ சிவப்பு மூக்குக்கடலைச் சுண்டலோ நல்லது. சிவப்பு அரிசி வெள்ளைச் சோள அவல் சாப்பிடுவதும் இரவு அகோரப் பசியைக் குறைக்கும். இரவில் கம்பு அடை, சோள தோசை அல்லது கேழ்வரகு தோசை-வெங்காய சட்னி அல்லது கத்திரிக்காய் கொத்சுவுடன் சாப்பிடுவதும், தேவைப்பட்டால், ஒரு கப் மோரும் சாப்பிடலாம். 8 மணிக்கு மேல் குறு நடை ஒன்று போடுவதும் அவசியம். கும்மிருட்டில் இரவுத் தூக்கம் தடையின்றி 6-7 மணி நேரம் சர்க்கரையைக் கட்டுப்படுத்த, புற்றைத் தடுக்க மிக அவசியம்.

இந்த நடைமுறைக்கு ஏற்ப வாழ்க்கையை முறைபடுத்திக்கொண்டாலே, உடலில் சர்க்கரை மறைந்து வாழ்க்கையில் தித்திப்பு சேரும்!

- பரிமாறுவேன்...