Published:Updated:

பரதநாட்டியம்...

தொட்டில் குழந்தைகளுக்கு குரு!

பரதநாட்டியம்...
##~##

ரதம் பற்றிப் பேச ஆரம் பித்தால் நேரம், காலம், அம்மா போட்டுக்கொடுத்த காபி எல்லாமே மறந்துபோகிறது ஸ்ரீநிதி ரங்கராஜனுக்கு... வீட்டில் செல்லமாக ஸ்ரீநி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 மெள்ள கிசுகிசுப்பான குரலில் ஸ்ரீநி பேசிக்கொண்டு இருக்க... விரல்களும் விழிகளும் அது பாட்டுக்கு அபிநயம் பிடிக் கின்றன. இந்த வருடத்தின் 'கலைமாமணி’ விருது பெற்று இருக்கிறார். வாழ்த்து சொன்னால் 'எல்லாம் கடவுள் செயல்’ என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கச்சி மாதிரி!

'பரதநாட்டியம் ஆடுபவர்கள் 'காடி’யாக டிரஸ் செய்து கண் களை உறுத்தாமல், எப்படி டிரெஸ் செய்வது என்று ஸ்ரீநிதி யிடம் கற்றுக்கொள்ளலாம்’ என்று ஒரு டிசம்பர் சீஸனில் சென்னை வந்திருந்த சுப்புடு பாராட்டியிருந்தார். டான்ஸில் மட்டுமல்ல... அவர் கேஷ§வலாக வீட்டில் உடுத்தியிருந்த 'எத்னிக்’ டிஸைனுடன் கூடிய பிஸ்கட் கலர் சுடிதாரும்கூட ரசிப்புக்குரியதாகவே இருந்தது!

பரதநாட்டியம்...

எம்.எஸ்.சுப்புலட்சுமி பரிசளித்த குத்துவிளக்கைப் பக்கத்திலேயே வைத்திருக்கிறார். பரதநாட்டியம் கற்றுத்தரக் கேட்டு நிறையப் பேர் வருகிறார்களாம்.

''அதிகமா செலவாகிற விஷயம்னு வசதி இல்லாதவங்க நிறையப் பேரு ஆர்வம் இருந்தும் கத்துக்க முடியறதில்லை. அப்படிப்பட்டவங்களுக்குப் பரதம் கத்துத் தரணும்னு விரும்பறேன்'' என்கிறார் உற்சாகத்துடன். தமிழக அரசின் 'தொட்டில் குழந்தைகள் திட்டம்’ பற்றிய செய்தியை பேப்பரில் பார்த்துவிட்டு, அந்த ஆர்வத்தில், 'தொட்டில் குழந்தைகளுக்கு நான் பரதம் கற்றுத்தர விரும்பு கிறேன்’ என்று முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார் ஸ்ரீநி.

அடுத்த இரண்டாவது நாளே ஜெயலலிதாவிடம் இருந்து பதில் வந்துவிட்டது. ஆதரவற்ற அந்தச் சின்னக் குழந்தைகளுக்குக் கற்றுத்தர முன்வந்ததற்காக ஸ்ரீநிதிக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியிருக்கிறார் ஜெயலலிதா. தற்சமயம் அந்தக் குழந்தைகளுக்கு மூன்றே வயது ஆவதால், ஐந்து வயதில் ஆரம் பிக்கலாம் என்று தீர்மானித்திருக்கிறார்கள். இப்போதைக்கு ஸ்ரீநிதியின் மிகப் பெரிய சந்தோஷம் இதுதான்!

சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.டி. படிப்பு, டான்ஸ் ரிகர்சல், தவிர கச்சேரிகள் என்று ரொம்ப பிஸி. கூடவே, இப்போது பொது மேடைகளில் இருந்தும் பேச அழைப்புகள்!

ஸ்ரீநிதிக்கு வீட்டில் சீரியஸாக இப்போது மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

'அமெரிக்கா, லண்டன்னுதான் நிறைய மாப்பிள்ளை வர்றாங்க. ஆனா, ஸ்ரீநிதிக்கு அதிலெல்லாம் இஷ்டம் இல்லை. நம் மண்ணிலேயே கால் பதிச்ச ஒருத்தர்தான் வேணும்கிறா, முக்கியமா அவர் பரதநாட்டியத்துல ரசனைகொண்டவரா இருக்கணும்!''

பேத்தி திருமணம்பற்றிக் கண் நிறைய எதிர் பார்ப்போடு பேசுகிறார், ஸ்ரீநிதியின் அருகிலேயே இருக்கும் அவர் பாட்டி! பாட்டியைப்போலவே ஸ்ரீநிதியிடம் உரிமை கொண்டாடும் மற்றொரு நபர் 'பூனி’ - ஸ்ரீநிதியின் செல்லப் பூனைக்குட்டி!

''சித்திரை வெயில் சுட்டெரிக்கிற ஒரு மதியம் மொட்டைமாடியில் இருந்து சத்தம் வந்தது! போய்ப் பார்த்தா 'இது’ பிறந்து கண் திறக்காத நிலையில் கத்திட்டிருக்கு. பதறிப் போய்த் தூக்கிட்டு வந்தேன். என்ன ஊட்டறதுன்னு புரியாம ஃபீடிங் பாட்டிலிலும் சிரிஞ்சிலும் பால் கொடுத்தேன் அப்படியே இங்கே செட்டில் ஆயிடுச்சு!''- நெகுநெகுந்த அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கி, மடியிலிட்டுக்கொண்டு வரிசைப் பற்கள் மின்னச் சிரிக்கிறார் ஸ்ரீநிதி.

பரதநாட்டியம்...

ஆரம்பத்தில் இருந்தே சினிமா வாய்ப்பு இந்த நடன நட்சத்திரத்தின் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறது! ராமானந்த சாகர் 'ராமாயணம்’ எடுத்தபோதே, 'இவர்தான் சீதை’ என்று தீர்மானித்துவிட்டாராம். ஸ்ரீநிதி மறுத்த பின்புதான் அந்த வாய்ப்பு 'தீபிகா’வுக்குப் போய் இருக்கிறது!

ஐந்து வருடங்களுக்கு முன் இவரது புகைப் படத்தை ஒரு பத்திரிகையில் பார்த்துவிட்டு வைரமுத்து, 'ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்’ என்ற எனது கதையைப் படமாக்கப்போகிறேன். அதற்குச் சரியான பெண் நீங்கள்தான். வந்து நடித்துத் தர வேண்டும்!'' என்று வேண்டுகோள் விடுத்தாராம்.

'சினிமா வேண்டாம்!’ என்று ஸ்ரீநிதி உறுதியாக மறுத்துவிட்டாலும், வைரமுத்துவின் வைராக்கியமும் முயற்சியும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்புகூட ஒரு விழாவில் ஸ்ரீநிதியைப் பார்த்த வைரமுத்து இப்படி நினைவு படுத்தினாராம்:

''அந்தக் கதையும் நானும் உங்கள் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கிறோம் ஸ்ரீநிதி!''

- லோகநாயகி