Published:Updated:

என் ஊர்!

பொழிச்சலூரின் அப்பாடக்கரும் பட்டஜிலேபியும்!

ன் சொந்த ஊரான பொழிச்சலூர் பெருமை சொல்கிறார் 'நண்பேன்டா’ சந்தானம்.

''புகழ்சோழ நல்லூர். இதுவே காலப்போக்கில் மருவி பொழிச்சலூர் ஆனது. 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிவன் கோயிலின் அருகே அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட குளம். திருநள்ளாறு போக முடியாதவர்கள் இங்கு உள்ள சனீஸ்வரனைத் தரிசித்து குளத்தில் நீராடினால் புண்ணியம் என்பது ஐதிகம்.

என் ஊர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

பொழிச்சலூர் சென்னை ஏர்போர்ட்டுக்கு நேர் பின்னால் உள்ளது. ஏறுவது, இறங்குவது என்று விமானங்களின் சத்தத்தைக் கேட்டே வளர்ந்தவர்கள் நாங்கள். 'ஃபிளைட் டேக் ஆஃப் ஆகும்போது அதோட வயித்தையே பாத்தவங்க நாங்க’னு பெருமையாப் பேசிப்போம். 'பைலட்டே டயர் லெவல் எப்படி இருக்கு?’னு எங்ககிட்ட கேட்டுத் தான் தெரிஞ்சிப்பாரு’னு அநியாயத்துக்கு அடிச்சு விடுவோம். எல்லா ஊர்லேயும் டவுன் பஸ்ஸை வெச்சு டைம் சொல்லுவாங்க. ஆனா எங்க ஊர்ல, 'ஜெட் ஏர்வேஸ் போகுதுடி. மணி எட்டரை ஆயிடுச்சு’னு சர்வசாதாரணமா ஏரியா அக்காக்கள் பேசக் கேட்டு இருக்கேன். இதைத்தான் 'சிவா மனசுல சக்தி’ல ஒரு ஸீனா வெச்சோம்.

எந்த அளவுக்கு அடங்காம சுத்தினேனோ, அதே அளவு எனக்குக் கோயில் சென்டிமென்ட்டும் அதிகம். கள்ளியம்மன் கோயில் எங்க குலதெய்வம். யாருக்குக் குழந்தை பிறந்தாலும் முதல்ல கள்ளியம்மாள், கள்ளியப்பன்னுதான் பேர்வெச்சு அப்புறமாப் பேர் மாத்துவாங்க. என் முதல் பேர்கூட கள்ளியப்பன்தான். அடுத்து மாரியம்மன் கோயில். முதல் சம்பளம், முதல் கார்னு என் சுக துக்கங்களை இந்த அம்மனிடம்தான் பகிர்ந்துக்கு வேன். மீன் பிடிச்சி மறுபடியும் ஆத்துல விடுறது, சேத்துல குதிச்சி விளையாடுறதுனு 'ரோஜா’ மதுபாலா மாதிரி ஏதாவது சொல்லலாம்னு ஆசை தான். ஆனால், அந்த மாதிரி எனக்கு எந்த அனுபவமும் கிடையாது. கில்லி, கோலி, பம்பரம், காத்தாடி, கலாய்ப்புகள்னே பொழுது போச்சு.

என் ஊர்!

காத்தாடி டீலுக்காக வருஷத்துக்கு நான்கைந்து முறை பர்த்டே கொண்டாடி அக்கம் பக்கத்தினரிடம் கலெக்ஷன் பண்ணி, அப்பாவிடம் அடி வாங்கியது, ஃப்ரெஷ்ஷா வர்ற டீச்சர்ஸ் இன்னிக்கு என்ன கலர் சேலை கட்டி வருவாங்கனு பசங்களுடன் பெட் கட்டி பிரின்சிபாலிடம் மாட்டியது, தினமும் அடித்து உதைக்கும் ஆசிரியரிடமே டியூஷன் சேர்ந்து, அவரோட சித்திரவதையில் இருந்து தப்பியதுனு நமக்குப் பொழிச்சலூர்ல இன்னொரு முகம் இருக்கு பிரதர்!  

பொழிச்சலூரின் கேரக்டர்களைத்தான் நான் படத்தில் பிரதிபலிக்கிறேன். எப்போது பார்த்தாலும் 'உனக்கு தீட்சை தர்றேன்டா’ என்னும் பாசக்காரர் அதில் முக்கியமான கேரக்டர். ஒருநாள் பாலீத்தின் பையுடன் அவர் முன்னால் நின்று, 'நீதான திராட்சை தர்றேன்னு சொன்னே, அதான் வந்தேன்’ என்று கலாய்த்தேன். அவசரமாக் கூப்பிட்டு 'ஏன் ஜி பூனை குஞ்சான்னு பேர் வெச்சிருக்காங்கள்ல ஏன் யானை குஞ்சான்னு பேர் வைக்கிறதில்லை?’ என்று கலாய்த்துக் கலங்கடிப்பேன். சமீபத்தில் ஒரு இலையைப் பறித்து வந்தவரு, 'இதைச் சாப்பிட் டீன்னா உன் கிரியேட்டிவிட்டி எகிறிடும்’ என்று ரோட்டோரத்தில் நின்று பொட்டலத் தைப் பிரித்தார். அந்தச் சமயம் பார்த்து ரோட்டில் லாரி போக, அந்த வேகத்தில் இலை காற்றில் பறந்துபோனது. 'மாப்ள நமக்கு எதிரா ஏதோ பிளான் பண்றானுங் கடா’ என்றார். 'இவரு தேவர் மகன் கமல், லாரிய வெச்சு பிளான் பண்றாணுங்க’ என்று நான் கலாய்க்கச் சிரித்துக்கொண்டார்.

என் ஊர்!

இன்னொரு மாம்ஸ். அவர்தான் எங்க ஊர் அப்பாடக்கர். சரக்கைப் பாலோட மிக்ஸ் பண்ணி அடித்து ஒரு வாரம் வாந்தி பேதியில் அவதிப்பட்டவர். அதேபோல் போலீஸைப் பார்த்து பயந்து ஓடி கரன்ட் கம்பத்தில் ஏறி மிரட்டியவரைத்தான், 'தில்லாலங்கடி’ படத்தில் 'மாத்திரை சாப்பிடணும்னா எல்லாரும் என்கூட ட்ரெயின் விளையாட வரணும்’னு சொல்லி கரன்ட் கம்பியைப் பிடிக்கும் காட்சியா மாத்தினோம். தினமும் சரக்கு அடித்து விட்டு, நாராச வார்த்தைகளில் திட்டி அதையே எங்களின் தாலாட்டாக மாற்றிய ஏரியா சின்னத் தம்பி, கிழிந்த 100 ரூபாய் நோட்டை டாஸ்மாக்கில் கொடுத்து திட்டு வாங்கிய சித்தப்பு, என்னை வைத்து ஆந்திரா ஆஸ்துமா மீனை இறக்குமதி செய்ய நினைச்ச 'பட்டஜிலேபி’ பங்காளினு ஏகப்பட்ட கேரக்டர்கள். இவங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்ப்பதால் பெயர்களைத் தவிர்க் கிறேன். எங்கு திரும்பினாலும் நிற்கும் பாசக்கார பங்காளி பயமக்கள், 'நீ எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் எப்போதும் எங்க சந்தானம்தான்டா’ என்று உரிமையுடன் தோளில் கைபோடும் தோழர்கள். இவர்களே நான் இன்னமும் பொழிச்சலூரிலேயே தங்கி இருப்பதற்கான காரணம்!''

- ம.கா.செந்தில்குமார், படங்கள்: என்.விவேக்