Published:Updated:

மணி எடுத்தால் மனைவி!

நரிக்குறவர் நாகரிகம்

##~##

காஞ்சிபுரம் உத்திரமேரூர் அருகில் உள்ளது அகஸ்தியப்பர் நரிக்குறவர் காலனி. கொளுத்தும் கோடையின் ஓருநாள் பொழுதை நரிக்குறவர்களுடன் கழித்தோம். ''இவ நதியா சாமி. என் அண்ணன் பொண்ணு. புருஷன்காரன் கூட சண்டை போட்டுட்டு இங்க வந்து மூணு நாளாவுது. இதுவரைக்கும் புருஷன்காரன் வந்து எட்டி கூடப் பாக்கலை. எங்க சாதியில சண்ட போட்டுக்கினு பொண்ணு வீட்டுக்கு வந்துட்டா, மூணு நாளைக்குள்ளாற வூட்டுக்காரன் வந்து கூட்டிட்டுப் போகணும். இல்லைனா                       பஞ்சாயத்துக்காரங்க போய் மாப்ளைகிட்டப் பேசுவாங்க. அப்படியும் அவன் மசியலேன்னா அவனை சாதியவிட்டே தள்ளி வெச்சிடுவாங்க'' என்ற குமாரைத் தொடர்கிறார் அவரது மனைவி அஞ்சலிதேவி. ''அவரு மன்மதரு. அவ்ளோ சீக்கிரம் வர மாட்டாரு. நாங்கூட அப்பப்ப சண்ட போட்டுட்டுப் போயிடுவேன். ரெண்டாம் நாளே அடிச்சுப் புடிச்சுக்கினு இது வந்து கூட்டிக்கினு வந்துடும்'' என்று வெட்கப்படுகிறார். ''என் சித்தப்பு குடிச்சுட்டு அடிக்கிறாருன்னு நீ ஓடுவே. ஆனால் என் மன்மதன், வப்பாட்டி வெச்சிக்குனுல்ல என்னை உதைக்கிது!'' என்று நதியா கவுண்ட்டர் கமென்ட் கொடுக்க... எல்லோரும் சிரித்தார்கள்.

மணி எடுத்தால் மனைவி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 ''வேலைக்குப் போகலியா?'' என்றதும், ''ஏன் சாமி நாங்க என்ன கலெக்டர் ஆபீஸுல கணக்குவழக்கா பாக்குறோம்? வேட்டைக்குத்தான் போவணும். அதுவும் எலெக்ஷனுக்காக மூணு மாசத்துக்கு முந்தியே எங்க துப்பாக்கியைப் பிடுங்குன போலீஸ் சாருங்க இன்னும் தரலை. காடை கவுதாரின்னு குழந்தைங்க சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு சாமி'' என்கிற குமாரின் குரலில் வேதனை.

மணி எடுத்தால் மனைவி!

சற்றுத் தூரத்தில் ஒய்யாரமாகப் படுத்து தாரளமாகக் காற்று வாங்கிக் கொண்டு இருந்த சந்திரசேகர்தான் அந்த ஏரியாவின் நாய் சேகராம். ''இது பண்ணாத அமர்க்களம் இல்லீங்க. காலையில் எந்திருச்சி பூஜை, நெத்தியில பட்டைனு நாட்டு மருந்து யாவாரத்துக்குப் போனார்னா 'அட, இவனா அவன்’னு ஆச்சர்யமா இருக்கும். ஆனா சாயங்காலமாத் திரும்பி வரும்போது தண்ணியப் போட்டுக்கினு நாராசமாத் திட்டிகினே வரும். 'யோவ் என்னய்யா இப்புடி திட்டுற?’னு கேட்டா, 'அது வேற வாய், இது நாற வாய்’னு வடிவேலு டயலாக் விடும். ஏஞ்சாமி வண்டலூர்ல கரடி, சிங்கம், புலிகளையெல்லாம் போட்டு அடைச்சி வெக்கிறாங்களாமே. தயவுபண்ணி இதையும் அங்க அடைச்சி வெக்க ஏற்பாடு பண்ணினா உங்களுக்கு ரொம்பப் புண்ணியமாப் போவும்'' என சந்திரசேகரை ஒரு அம்மா வார, ''உன்னைக் குளிச்சிட்டு வந்து வெச்சுக்குறேண்டி'' என்று மிரட்டியபடி, கீழே கிடந்த துண்டை உதறி தோளில் போட்டபடி கிளம்பினார் ஏரியா தாதா.

நரிக்குறவர் குழந்தைகளுக்கு என்று நடத்தப்பட்டு வரும் பால்வாடி பள்ளியில், குழந்தைகள் ஒருவரையும் காணவில்லை. கக்குவான் பரவி இருப்பதாக யாரோ கிளப்பிவிட்ட புரளியால், மூணு மாதமாக ஊழியர் லட்சுமி மட்டும்தான் பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறாராம்.  வீதியில் நின்ற வாண்டுகளிடம், ''என்ன கிளாஸ் படிக்கிறீங்க?'' என்றோம். ''நான் 6-வது, நான் 9-வது, அண்ணேய் நான் 17-வது, நான் காலேஜி'' என ஆளாளுக்கு விரல்களை உயர்த்தியபடி நம்மைக் கலாய்த்தனர். சினேகா, ரேவதி, த்ரிஷா என அத்தனை குழந்தைகளுக்கும் அழகுப் பெயர்கள். சினேகாவின் நிஜப் பெயர் மொட்டையாம். ''மவராசன் சத்தியமா எம்பேரு சினேகாதாண்ணே'' என்று வெட்கத்துடன் ஓடி ஒளிந்துகொள்கிறாள் சினேகா.

''அண்ணே இங்க படிச்சவங்க கம்மி. நாங்க எம்.பி.சி. கோட்டாவுல படிக்கிறோம். எஸ்.டி. பிரிவுல சேத்தா இன்னும் நிறைய படிக்க முடியும். இதை மறக்காம எழுதுங்கண்ணே'' என்கிறார் கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்கும் வரதராஜன்.

23-ம் எண் வீட்டு வாசலில் வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்த பெரியவர் ஓயாமல்லி, ''சாமி... பொண்ணு, புள்ள ரெண்டையும் கட்டிக்குடுத்து எதுத்தாப்ல குடிவெச்சேன். என்னா பிரயோசனம்? பையன் பொஞ்சாதி பேச்ச கேட்டுக்குனு என்னையவே தொரத்திட்டான். காட்லயும் மேட்லயும் வேட்டையாடி அவன வளத்ததுக்கு நல்ல பரிகாரம் பண்ணிட்டான். வெளியே போனாலும் வீட்டைப் பூட்டிட்டு போயிடறான். பகல்ல படுக்க எடமில்ல. 'ஊட்ல வந்து படுத்துக்க நைனா’னு பொண்ணு சொல்லுது. பொண்ணு கொடுத்த இடத்துல கை நனைக்க மனசு வரலை சாமி'' என்று மூக்கை உறிந்த ஓயாமல்லிக்கு ஆறுதல் சொல்லி அங்கு இருந்து நகர்ந்தோம்.

மணி எடுத்தால் மனைவி!

''நீங்க எங்க ஏரியா காதல் ஜோடிகளைப் பார்த்தே ஆகணும்'' என ஓர் இளவட்டம் நம்மை வெங்கடேசன்- தேவயானி ஜோடியிடம் அழைத்துச் சென்றார். ''ஒரு வகையில் தேவயானி எனக்கு உறவுதாங்க. எங்க சாதியில சித்தரை மாசம் நடக்கும் திருவிழாவுலதாங்க தேவயானியை முதல்ல பாத்தேன். செவசெவனு தக்காளி கணக்கா இருந்தா. பாத்ததும் 'இவதான் என் பொஞ்சாதி’னு முடிவு பண்ணினேன். அப்பப்ப பாத்துப்போம். நான் அஜீத் ரசிகனுங்க. இவளுக்கு விஜய் படம் பிடிக்கும். இவளுக்காகவே நான் விஜய் ரசிகனா மாறினேன். ஒரு வாட்டி விஜய் படம் பாக்குறப்ப, இவளோட மாமங்காரன் பாத்துட்டு ஊரெல்லாம் பத்தவெச்சுட்டான். பஞ்சாயத்தாயிடுச்சு. எங்க நரிக்குறவர் இனத்துல மொத்தம் 21 சாதிங்க. சாதி மாத்தி பொண்ணு எடுத்தா தள்ளி வெச்சுடுவாங்க. 'நாங்க ஒரே சாதிதானே சேத்துவைங்க’னு பெருசுங்க கைலகால்ல விழுந்தோம். வருத்தத்துல பாவி செருக்கி இவ அரளி விதையை அரைச்சிக் குடிச்சிட்டா'' என்று வெங்கடேசன் விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறார் தேவயானி.

''பிறகு, 'சாமி முன்னாடி மணிபோட்டு பாப்போம். சாமி சம்மதிச்சா கல்யாணம்’னு என் அம்மாக்காரி இறங்கி வந்தா. சாமி முன்னாடி கொட்டுக் கூடை அளவு மணிகளை கொட்டி விட்ருவாங்க. ஏதாவது நம்பரைச் சொல்லி கைல மணிகளை எடுத்துத் தரணும். மூணு முறையும் தப்பா எடுத்தா... சாமி ஒப்புக்கலைனு அர்த்தம். மூன்றாவது முறை 21-னு சொல்லி சரியா 21 மணிகளை எடுத்து இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்'' என்று வெட்கப்படுகிறார் தேவயானி. இந்தக் காதல் தம்பதிக்கு இலக்கியா என்ற பெண் குழந்தை உள்ளது. பழசாக் கட்டிக்கிட்ட ஜோடிக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வந்தோம்!

- எஸ்.கிருபாகரன், படங்கள்: வீ.ஆனந்தஜோதி