Published:Updated:

ஜெயலலிதா தந்த சி.டி-க்கள்!

ஜெயலலிதா தந்த சி.டி-க்கள்!

##~##

''குற்றவாளிகளைத் தேடித் திரிவதைவிட குற்றவாளிகளே இல்லாத இளைய சமூகத்தை உருவாக்குவதே என் நோக்கம்!'' - தெளிவாகவும் தீர்க்கமாகவும் பேசுகிறார் பேராசிரியர் அமிர்தலிங்கம். 23 ஆண்டுகள் காவல் துறையில் பணிபுரிந்தவர், அந்தப் பணியைத் துறந்துவிட்டு அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியர் ஆகி இருக்கிறார்.

ஜெயலலிதா தந்த சி.டி-க்கள்!

 ''நாகை மாவட்டம் திருக்கடையூர் சொந்த ஊர். முதல் தலைமுறை பட்டதாரி. பொறையார் லுத்ரன் கல்லூரியில் வரலாறு பாடத்தில் எம்.ஏ., எம்.ஃபில். முடித்தேன். 'தமிழக அரசியலில் செல்வி ஜெயலலிதாவின் எதிர்காலம்’ இது 82-ல் எம்.ஏ. இறுதி ஆண்டில் நான் சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரை. இந்தத் தலைப்பை நான் சொன்னபோது,  'இதெல்லாம் ஒரு தலைப்பாடா? அந்தம்மாவால் அரசியலில் அடுத்த அடி கூட எடுத்து வைக்கமுடியாது’ என என் நண்பர்கள் ஏளனம் செய்தனர். ஏன் பேராசிரியர்கள்கூட 'ஏம்ப்பா உனக்கு வேற தலைப்பே கிடைக்கலையா?’ என்று கிண்டலடித்தனர். ஆனால், மனம் தளராமல் என் ஆய்வுக் கட்டுரை குறித்து மேடத்திடம் அப்போது பேசினேன். எவ்வித மறுப்பும் இன்றி என் ஆய்வுக்கு உதவ நேரம் ஒதுக்கியவர், 'தாராளமாக் கட்டுரை எழுதுங்க. ஆனால், கல்லூரியில் சமர்ப்பிப்பதற்கு முன் எனக்குப் படிக்கத் தருவீர்களா?’ என்று கேட்டார். மேலும் கடலூர் மாநாட்டு முதல் சொற்பொழிவு தொடங்கி, தான் பேசிய 40 ஒலிநாடாக்களை என்னிடம் தந்தார். இதைத் தவிர அவருடைய 30-க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அதையும் ஆய்வுக் கட்டுரையில் பதிவு செய்தேன். அந்த ஆய்வுக் கட்டுரையை 'எம்.ஜி.ஆருக்குப் பிறகு அ.தி.மு.க-வை செல்வி ஜெயலலிதாவே வழிநடத்துவார்’ என்று முடித்து இருந்தேன். இது வெறும் புகழ்ச்சிக்காக எழுதப்பட்டது அல்ல; அப்போதே மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கு என்னை அப்படி எழுதவைத்தது.  

நான் ஒரு விளையாட்டு வீரர் என்பதால் 1987-ல் சப்-இன்ஸ்பெக்டர் ஆனேன். கடலூர், சென்னை, மத்திய குற்றப் பிரிவு, உளவுப் பிரிவு, என்று பல்வேறு ஊர்களில், பிரிவுகளில் சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் என்று 23 ஆண்டுகள் காவல்துறைப் பணி. இதற்கிடையில் 1996-ல் அரசின் அனுமதி பெற்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் 'சமகால வரலாறு’ என்ற தலைப்பில் பி.ஹெச்டி., ஆய்வுக்கு விண்ணப்பித்து 2003-ல் டாக்டரேட் பெற்றேன். டாக்டரேட் பெற்ற ஒரே போலீஸ் இன்ஸ்பெக்டர் நான்தான். இந்த நிலையில்தான் ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் தேர்ச்சி பெற்று அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகி இருக்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே ஆசிரியர் பணி மீதுதான் என் ஆர்வம். குடும்பச் சூழல் காரணமாக, வந்த வாய்ப்பை ஏற்று காவல்துறையில் பணியாற்றினேன். ஆனால் மக்களின் அறியாமை, இயலாமை, குற்றச் செயல்கள், நல்லவர், கெட்டவர் என்று இனம் பிரித்துப் பார்க்கும் திறன் என, இந்த 23 ஆண்டு கால அனுபவம் என் வாழ்க்கைக்கான மிகப் பெரிய உந்து சக்தி.

ஜெயலலிதா தந்த சி.டி-க்கள்!

ஒருமுறை என் கல்லூரி பேராசிரியர் தாமஸ் எட்மன்ஸ் வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்தபோது,  அவருக்கு ஒரு தந்தி வந்தது. வாங்கிப் படித்தவர் எவ்விதச் சலனமும் இன்றி அதை நான்காக மடித்து சட்டைப் பையில் வைத்துவிட்டு, விட்ட இடத்தில் இருந்து பாடத்தை நடத்தி முடித்தார். வகுப்பு நேரம் முடிந்து அவர் வெளியே கிளம்பிய போது, 'என்ன தந்தி சார்?’ என்றோம். 'எங்கப்பா இறந்துட்டார்’ என்றபடி கிளம்பிச் சென்றார். இப்போதும் நான் நினைத்து வியக்கும் அந்த தொழில் பக்தியே என்னைப் போன்ற ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம்.

பேராசிரியராக முதல்நாள் வகுப்பறை சென்றபோது, 'என்ன சார் பைசா வர்ற வேலையை விட்டுட்டு பாடப் புத்தகத்தோடு மல்லுக்கட்ட வந்துட்டீங்க. பொழைக்கத் தெரியாத ஆளு சார் நீங்க’ என்று மாணவர்கள் கிண்டல் அடித்தனர். 'உங்கள் அனைவரையும் என்னைப்போலவே பிழைக்கத் தெரியாதவனாக மாற்றத்தான் அந்த வேலையை விட்டுட்டேன்’ என்ற என் பதிலுக்கு மாணவர்கள் மத்தியில் ஏக ரெஸ்பான்ஸ். பேராசிரியராக ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிக்கிறேன். அனுபவிக்கிறேன்'' என்கிறார் அமிர்தலிங்கம்.

அ.இராமநாதன், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு