Published:Updated:

ரயில் பயணம் தினம் தியானம்!

ஆவடி டு திருவள்ளூர்

##~##

திருவள்ளூர், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி  என்று சுற்றுவட்டாரங்களில் இருந்து சென்னைக்குள் வர பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்துச் சாதனம், மின்சார ரயில்தான்!  

 'வீட்டுக்குத் திரும்பும்போது மறுநாள் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நறுக்குவது, பூ கட்டியபடியே பயணம் செய்வது, மாற்றுத் திறனாளி வியாபாரிகள், நெய் பிஸ்கட் விற்கும் சகோதரர்கள் என்று எலெக்ட்ரிக் டிரெய்னில்தான் எத்தனை சுவாரஸ்யங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதோ காலை நேர ஆவடி டு  திருவள்ளூர் ரயில் பயண அனுபவம்.

''இந்த ரயிலுங்க எங்க அம்மா வீடு மாதிரி சாமி. நாங்க 100 பேருக்கு மேல இந்த வழியாப் போகுற ரயில்கள்லதான் வியாபாரம் பண்றோம். கொக்கு, குருவி, நரிகளைச் சுட்டு பொழப்பு நடத்துன நாங்க இன்னிக்கு கொக்கு, குருவி பொம்மைகளை வித்து வாழ்க்கை நடத்தறோம். காலையில ரயில் ஏறினா சாயங்காலம் வீடு போய் சேர்ற வரைக்கும் ஒரே தமாஷ்தான். நைட்டு நாங்க தங்கியிருக்குற கூடாரத்துக்குப் போன உடனே அன்னிக்கு பூரா ரயில்ல நடந்த சங்கதிகளை ஜாலியாப் பேசிச் சிரிச்சுப்போம்'' என்கிறார் நரிக்குறவப் பெண் ரோஜா.

ரயில் பயணம் தினம் தியானம்!

அடுத்து நாம் ஏறியது லக்கேஜ் கேரேஜில். அன்னக் கூடையில் மீன்களைக் குவித்துவைத்தபடி வாசல் அருகே அமர்ந்திருந்த வயதான பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்தோம். ''என் பேரு மல்லிகா தம்பி. தினமும் கருக்கல்ல 5 மணிக்குத் திருவள்ளூர்ல இருந்து பீச் ரயில் ஏறி வண்ணாரப்பேட்டையில் இறங்கி, புது மீனாப் பாத்துப் புடிச்சுட்டு வருவேன். உடனே அடுத்த ரயிலில் ஏறி என் வியாபாரத்தை ஆரம்பிச்சிடுவேன். இளசுங்க எல்லாம் 'என்ன நாறுது?’னு கிண்டல் அடிப்பானுங்க. நான் கோபத்தை மறைச்சி வெச்சிக்கினு, 'தம்பி இப்போ நாறும் சாப்பிடும்போது மணக்கும்’பேன். அதே மாதிரி 'மல்லிகா எப்போ மீனு எடுத்துனு வருவா?’னு நிறைய கஸ்டமருங்க காத்துகிட்டு இருப்பாங்க. ஏன்னா... நான் யார்கிட்டேயும் கோபப்பட மாட்டேன். கூட குறைச்சு கொடுத்துட்டுப் போய்க்கினே இருப்பேன். இந்த ரயில்ல ஒரு நாளைக்கு ரெண்டு தபா போயிட்டு வர்றேன். ஆனாலும் கூடை தூக்கி வியாபரம் பண்ற அலுப்பே தெரியாது தம்பி'' என்கிறார் மல்லிகா சந்தோஷத்தோடு.

''என் ஊரு திருவாலங்காடு சார். விடியறதுக்கு முன்னாலயே பாலைக் கறந்து கேன்ல ஊத்தி எங்க ஊர் ஆட்கள் 10, 15  பேரோட வில்லிவாக்கம் கொண்டுவந்து வியாபாரம் பண்ணிட்டு இருக்கோம்'' என்று தொடங்கும் ரமேஷ் டீமின் அரட்டைக் கச்சேரி ரயில் ஏரியாவில் பிரபலமாம். ''நாங்க கும்பலா ரயில்ல ஏறி உக்காந்துகிட்டு கச்சேரியைத் தொடங்கினா பழக்கப்பட்ட மத்த ஆட்களும் கூட சேர்ந்துக்குவாங்க. அதனாலேயே ரயில்ல எங்களுக்குப் பாசக்கார நண்பர்கள் அதிகம்.  இந்த எலெக்ட்ரிக் டிரெயின்ல வந்தே ஏகப்பட்ட பேர் காதல், கல்யாணம்னு செட்டில் ஆகியிருக்காங்க. அதே மாதிரி கசப்பான சம்பவங்களும் நிறைய நடந்திருக்கு. மும்பையில எங்களை மாதிரியான ரயில் பயணிங்க எல்லாம் சேர்ந்து சங்கம்வெச்சு அருமையா நடத்துறாங்கனு கேள்விப்பட்டு இருக்கேன். இங்கேயும் அந்த மாதிரி இருந்தா இன்னும் நல்லா இருக்கும்ல?'' என்கிறார் ரமேஷ்.

''எனக்குப் பார்வை இல்லாட்டியும் மத்த பயணிங்கதான் என் கண்கள். கொஞ்சம் தடுமாறினாலும் ஏழெட்டுப் பேர் வந்து தாங்கிப் பிடிக்கிறதை அடிக்கடி உணர்கிறேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி வரை மளிகைக் கடை நடத்தினேன். அது நஷ்டமாயிடுச்சு. பிறகு அதை ஏறக்கட்டிட்டு ரயில் ஏறி வியாபாரம் செய்ய ஆரம்பிச்சேன். அந்தக் கசப்பான கஷ்ட கால அனுபவங்களை இந்த ரயில்தான் மறக்கடிச்சிடுச்சு... இந்தப் பயணிங்கதான் என் சொந்தபந்தங்கள். மாமா, மச்சான்னு அவங்களுக்குள்ள சந்தோஷமாப் பேசி கிண்டல் பண்ணிக்கிறதைக் கேட்கும்போது நானும் சந்தோஷமாயிடுவேன். இப்படி ஒவ்வொரு நாள் பயணம் செய்யச் செய்ய என் வயசு குறையுது தம்பி'' என்கிறார் தேவாசிர்வாதம். மின்சார ரயில் பயணம் என்பது ஏதோ ஓர் இயந்திரத்தில் பயணிப்பது அல்ல; உயிர்ப்புள்ள ஏராளமான மனிதர்களைச் சந்திப்பது.

- பி.சுபாஷ்பாபு, படங்கள்: அ.ரஞ்சித்