Published:Updated:

பழனிச்சாமியின் குதிரை!

Vikatan Correspondent
##~##

ர்மபுரி மாவட்டத்தின் அழகிய மலைக் கிராமம் வத்தல் மலை. இங்கு வசிக்கும் மக்களின் கலாசாரத்தையும் குதிரையையும் பிரிக்கவே முடியாது. குதிரை இல்லாமல் ஊருக்குள் எந்த விசேஷமும் இல்லை!

வத்தல் மலை... கோடையிலும் கம்பளி கேட்கும் ஜிலுஜிலு குளுகுளு கிராமம். மலை மேல் எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்கள். இங்கு வசிக்கும் மக்களுக்குக் குதிரை என்றால் அப்படி ஒரு பிரியம். கல்யாணம், காது குத்து, ஊர்த் திருவிழா என்று எந்த விசே ஷத்துக்கும் 'கூப்பிடு குதிரையை’ என்கிறார்கள். கல்யாணத்தில் தாலி கட்டும் முன்பாக மண மகளை, மணமகன் குதிரையில் ஏற்றி ஊர்வலமாகக் கூட்டி வந்து மணமேடைக்கு ஏற்றுவார். தாலி கட்டி முடிந்ததும், தம்பதியர் ஜோடியாக அந்தக் குதிரை மீது ஏறி, ஊர்வலமாகக் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

பழனிச்சாமியின் குதிரை!

இந்தச் சடங்கு முடிந்ததும், குதிரைக்கு மரியாதை. குதிரைக்கு புத்தாடை போர்த்தி, திலகமிட்டு, குதிரையின் காலை தம்பதியர் தொட்டுக் கும்பிட வேண்டும். அப்போது, 'உன் கால் பாதங்களில் இருக்கும் குளம்புகள்போல என்றும் இணைபிரியாமல் வாழ்வோம்...’ என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள்!  

பழனிச்சாமியின் குதிரை!

அன்றைய தினம் மாலையில் இன்னும் ஒரு சடங்கு. மாப்பிள்ளை கோபித்துக் கொண்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்துக் கொள்வார். சம்பந்தி வீட்டார் தேடி அலைந்து மாப்பிள்ளையைக் கண்டுபிடித்துச் சமாதானம் செய்து அவரை குதிரை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள். இப்படி ஒவ்வொரு விசேஷத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான குதிரை சடங்கு.

இந்த விசேஷங்களுக்கு குதிரை சப்ளை செய்வது மலையடிவார கிராமமான சுங்கரஅள்ளியைச் சேர்ந்த பழனிச்சாமி. குதிரை வளர்ப்பில் ஸ்பெஷலிஸ்ட். ''வத்தல் மலை மக்கள் சூது, வாது தெரியாத வெள்ளந்திகள். இவங்க பெரும்பாலும் ஒரே நேரத்தில் நாலைஞ்சு கல்யாணங் களை முடிச்சுடுவாங்க. விசேஷத்துக்கு முதல் நாளே குதிரைகளைக் கூட்டிட்டு மலை மேலே ஏறிடுவேன். இப்ப என்கூட இருக்குறது செம்புரவி. ரொம்ப சுறுசுறுப்பு... பாசக்காரப் பையன். முன்னாடி ஒரு குதிரை வெச்சிருந்தேன்... பேரு தேசிங்கு ராஜா. ஒருமுறை அவன் மேல மாப்பிள்ளை ஏறப்போன சமயம், பசங்க பட்டாசு வெடிச்சிட்டாங்க. மிரண்டு காட்டுக்குள்ள ஓடிட்டான். கல்யாணமே நின்னு போகிற சூழ்நிலை. ஒருவழியா தேடிப்பிடிச்சு வந்து கல்யாணத்தை நடத்தினோம். குதிரைக்காக பெருசா காசு பணம் வாங்க மாட்டேன். இந்த சனங்களோட பாசத்துக்கு முன்னாடி பணம் என்னா பணம்!'' என்று நெகிழ்கிறார் பழனிச்சாமி.

- எஸ்.ராஜாசெல்லம், படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

பழனிச்சாமியின் குதிரை!