''பரதம் கற்க பாரதம் வந்தோம்!''
##~## |
மதுரை பொன்மேனி புறநகரில் ஃபிரான்ஸ் தேச மகளிர் சிலர் உலவியதை அவ்வளவு சிரத் தையாகக் கவனிக்கவில்லை ஏரியாவாசிகள். ஆனால், ஒரு சுபயோக சுபதினத்தில் அந்த ஆறு பெண்களும் பொன்மேனி முனியாண்டி கோயிலில் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்த, ஆச்சர்யப்பட்டு போனார்கள் ஏரியாவாசிகள்.
அவர்களைச் சந்திக்கச் சென்றால், வீட்டின் வர வேற்பறையில் மிருதங்கம் வாசித்துக்கொண்டு இருந்தார் செஃபஸ்டீன். ஹாலில் நடன பயிற்சி பெற்றுக்கொண்டு இருந்தனர் கிறிஸ்டீன், ஆயிஷா, ஓட்ரே, அலீன், மெலனி, ஸ்டெஃபனி ஆகியோர். அவர்களின் உள்ளூர் பரத டீச்சர் அர்ச்சனா.

பாவனையிலேயே வணக்கம்வைத்து ஆரம்பித்தார் அர்ச்சனா. ''மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் படிச்சப்போ ஃபிரான்ஸ் போக வாய்ப்புக் கிடைச் சது. அங்கே கிறிஸ்டீன், ஆயிஷா அறிமுகம் கிடைச் சது. ஆயிஷா, தான் கத்துக்கிட்ட பரதத்தை மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுத்துட்டு இருந் தாங்க. அவங்க ஆர்வத்தைப் பார்த்து, பரதத்தை அவங்களுக்கு முழுமையாச் சொல்லிக் கொடுத்தேன். அவங்க பழகுறதுக்குள்ள என் வேலை முடிஞ்சு ஊருக்கு வந்துட்டேன்.
இந்தச் சமயத்தில் கிறிஸ்டீன் இந்தியா வந்தாங்க. அவங்களை திருப்பதியில் என் பரதநாட்டிய அரங் கேற்றத்துக்கு அழைச்சுட்டுப் போனேன். அதை வீடியோ எடுத்த கிறிஸ்டீன், ஆயிஷாவுக்கு அதைப் போட்டுக் காட்டி இருக்காங்க. உடனே, அவங்க தன் மாணவர்களை எல்லாம் அழைச்சுட்டு இந்தியாவுக்கு வந்துட்டாங்க!'' என்றபடி, ஆயிஷா பக்கம் திரும்பினார்.

குறிப்பு அறிந்து தொடர்ந்தார் ஆயிஷா. ''அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் ஒரு மாமிக்கிட்ட பரதம் கத்துக்கிட்டேன். அவங்களுக்கு முழுமையா பரதம் தெரியாது. எனக்காக இந்தியாவுக்குப் போகும்போது எல்லாம் ஏதாவது கத்துக்கிட்டு வந்து எனக்குச் சொல்லித் தருவாங்க. ஃபிரான்ஸ் கலையை, கலைஞர்களைக் கொண்டாடும் தேசம் என்பதால் அங்கேயே தங்கிட்டேன். ரொம்ப தூரத்தில் இருந்தெல்லாம் வந்து என்கிட்ட பரதம் கத்துக்கிட்டாங்க. என்னோடு இந்தியா வந்திருக்கும் இந்த அஞ்சு பேரும் முழு நேர டான்ஸர் கள் கிடையாது. அலினும், ஜோயலும் விவசாய ஆலோசகர்கள். மெலினின் பொம்மலாட்டக் கலைஞர். ஓட்ரே கம்ப்யூட்டர் இன்ஜினீயர். தோட்டக் கலை நிபுணரா இருக்காங்க ஸ்டெஃபனி. பரதம்தான் எங்களை இணைச்சது. கொஞ்ச நாள் எங்க வகுப்புக்கு வந்த அர்ச்சனாவை எங்க எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. ஆர்வம் காரணமா அவங்களை இந்தியாவுக்குக் கூட்டிட்டு வந்தேன். இப்போ நல்லா பரதம் கத்துக்கிட்டு அரங்கேற்றமும் பண்ணியாச்சு. ஃபிரான்ஸிலும் ஒரு அரங்கேற்றம் பண்ணணும். எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். இனி, அடிக்கடி மதுரை வருவோம்!'' என்கிறார் ஆயிஷா!
- கே.கே.மகேஷ், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்
