Published:Updated:

என் ஊர்!

தூத்துக்குடி தண்ணீரை தூர்த்துக் குடி!

##~##

ன்மிகச் சமயச் சொற்பொழிவாளர், இலக்கி யச் சிந்தனையாளர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர் எனப் பன்முகம்கொண்ட இளம்பிறை மணிமாறன், தன் சொந்த ஊரான தூத்துக்குடி பற்றி மனம் திறக்கிறார்...

''தூத்துக்குடி ஓர் அழகான கடற்கரைப் பட்டினம். இந்தியா முழுக்கவே தூத்துக்குடி உப்புக்குத் தனி மவுசு உண்டு. காரணம், இயற்கையிலேயே கண்ணைப் பறிக்கும் வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் தூத்துக்குடி உப்பு. சுமார் 100 வருடங்களுக்கு முன்னாடி, கடற்கரைப் பகுதியில் ஒரு அடி ஆழம் தோண்டினால் நல்ல தண்ணீர் வந்துரும். தண்ணீரைக் குடிச்சிட்டு குழியை தூர்த்துவிட்டு (மூடிவிட்டு), அடுத்த குழி தோண்டி தண்ணீர் எடுப் பாங்க. இப்படித் தூர்த்து, தூர்த்து தண்ணீர் குடிச்சதால்தான் இந்த ஊருக்கு, 'தூத்துக்குடி’ன்னு பெயர் வந்துச்சாம். தூத்துக்குடிக்கு 'முத்து நகர்’னு இன்னொரு பேரும் இருக்கு. ஒரு காலத்தில் சிப்பிகளை வீட்டுக்குக் கொண்டு வந்து முத்து எடுப்பாங்களாம். அப்போ வீட்டுப் பெண்கள் பல்லாங்குழி ஆடும்போது, சோழிக்குப் பதிலா முத்து போட்டு விளையாடுவாங்களாம். அதனால் முத்து நகர்னு பெயர் வந்ததாச் சொல்வாங்க. இதை எல்லாம் இப்போ நினைச்சுப் பார்த்தா,  கனவுபோல இருக்கு. தமிழ் செய்யுளில் கூறப்பட்டு இருக்கும் ஐவகை நிலங்களையும் தூத்துக்குடியைச் சுற்றிப் பார்க்கலாம். தூத்துக்குடி கடல் 'நெய்தல்’, திருச்செந்தூருக்குச் செல்லும் வழியில் அமைந்திருக்கும் ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதிகளில் வாழை, தென்னந்தோப்புகள் 'மருதம்’, உடன்குடி பகுதி 'முல்லை’, தூத்துக்குடிக்கு வடக்குப் பகுதி 'பாலை’, வல்லநாடு மலைப் பகுதி 'குறிஞ்சி’!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என் ஊர்!

நான் அலாய்சியஸ்  பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். எங்கே பேச்சுப் போட்டி நடந்தாலும், கலந்துகொண்டு முதல் பரிசு வெல்வது வழக்கம்.   ஒரு முறை எங்கள் பள்ளியிலேயே 'பாரதியார்’ என்ற தலைப்பில் நடந்த பேச்சுப் போட்டியில் ரெண்டாவது பரிசுதான் கிடைச்சது.  வெளியே முதல் பரிசு ஜெயிச்சுட்டு, சொந்த ஸ்கூலில் ரெண்டாவது பரிசுதான் கிடைச்சுதேன்னு  வருத்தத்தில் அழுதேன். 'நீதான் நல்லா பேசுனே. ஆனா, ஹெட் மாஸ்டர் இன்னொரு பொண்ணுக்குக் கொடுத்துட்டாரு’ன்னு என்னை தேத்துனாங்க. இருந்தாலும் எனக்கு மனசு கேட்கலை. அப்புறம் போட்டிகளில் கலந்துக்கிறதையே நிறுத்திட்டேன்.  என் பெற்றோர் ரொம்ப வற்புறுத்தி என்னை போட்டிகளுக்குத் திரும்ப அனுப்பினாங்க. அப்புறம் எங்கே போனாலும் முதல் பரிசுதான். அந்த அளவுக்கு வெறியோட பயிற்சி எடுத்துப் பேச ஆரம்பிச்சேன். செயின்ட் மேரீஸ் காலேஜுல பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிச்சப்போ, ஒரு பேச்சுப் போட்டியில் கலந்துக்கிட்டேன். அங்கே எனக்கு முதல் பரிசு கொடுத்தது... முன்னாடி எனக்கு ரெண்டாவது பரிசு கொடுத்த அதே ஹெட்மாஸ்டர். பரிசு கொடுத்ததும், என்னைப் பார்த்து சிரித்தவர், 'அன்னிக்கு ஸ்கூல் பேச்சுப் போட்டியில் நீதான் நல்லாப் பேசின. ஆனாலும் உனக்கு இரண்டாவது பரிசு கொடுத்தேன். இல்லைன்னா 'நம்மளை அடிச்சுக்க ஆளே கிடையாது’ன்னு உனக்கு ஒருவித கர்வம் வந்துடும். அப்புறம் உன்னை நீ இந்த அளவுக்கு மெருகேத்தி இருக்க மாட்டே’ன்னு சொன்னாரு. 'இவ்வளவு நாளா உங்களை தப்பா நினைச்சுட்டு இருந்தேன் சார்’னு உடனேமன்னிப்புக் கேட்டேன்.

என் ஊர்!

அந்தக் காலத்தில் நாடகம் போடணும்னா ஓலைக் கீற்றுகளைவெச்சு, கூடாரம் மாதிரி போட்டு நாடகம் போடுவாங்க. தமிழ்நாட்டிலேயே நாடகத்துக்குன்னு முதன்முதலா 'டெல்பின்’னு தியேட்டர் கட்டுனது தூத்துக்குடி மக்கள்தான். இப்போ அது இல்லை. கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் அங்கே நாடகம் பார்க்கப் போறதுதான் எங்க பொழுதுபோக்கு.

பாரதியார், வ.உ.சி., கட்டபொம்மன் போன்ற போராளிகள் பிறந்த மண்ணில் நானும் பிறந்து இருக்கேன்னு நினைச்சா, ரொம்பப் பெரு மையாத்தான் இருக்கு. எல்லாருக்கும் சொந்த ஊர்ல வாழணும்கிறது பெரும்பாலும் கனவா இருக்கும். ஆனா,  தூத்துக்குடியிலேயே பிறந்து, வளர்ந்து, திருமணம் முடிச்சு, பேராசிரியையாகப் பணி புரிந்து, முதல்வராக ஓய்வு பெற்றேன். என்னைவிட பாக்கியசாலி வேறு யார் இருப்பாங்க?''

- இ.கார்த்திகேயன்,படங்கள்: ஏ.சிதம்பரம் 

என் ஊர்!