Published:Updated:

என் ஊர்!

''கிராமம் என்பது புனிதம் அல்ல!''

##~##

''கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி வட்டத்தில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 45-ல் இருக்கிறது என்னுடைய ஊர் கழுதூர். முக்கியமான தொழில் விவசாயம். வானம் பார்த்த பூமி. ஊரில் 10 முதல் 20 சதவிகிதம் பேர் சென்னையில் முன்பு பழ மார்க்கெட்டுக் குப் பெயர் பெற்ற பந்தர் தெருவிலும், இப்போது கோயம்பேடு மார்க்கெட்டிலும் கூலிகளாக வேலை செய்கிறார்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் என்ன பழம் விற்கப்படுகிறதோ அது எங்கள் ஊரில் மறுநாளே கிடைக்கும். எங்களுடைய ஊரில் இருந்து சென்னை, திருச்சிக்கு 24 மணி நேரமும் போக முடியும். சிறுவர்கள், பெண்கள்கூடத் தனியாக லாரியில் ஏறிச் செல்வார்கள்.

என் ஊர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 ஊருக்கு மேற்கில் பெரிய ஏரி ஒன்று இருக்கிறது. ஏரிக்கு நடுவில் குள்ளக்கருப்புசாமி என்று நான்கு ஐந்து கற்கள் நடப்பட்டு இருக்கும். அந்தக் கற்கள் இருக்கும் இடத்தில் இருந்து 200, 300 மீட்டர் தூரத்தில் தெற்குக் கரையில் பெரிய ஆலமரம் இருக்கிறது. பல்வேறு காரணங்களால் தூக்குப் போட்டு, விஷம் குடித்து இறந்தவர்கள் எல்லாரும் பேயாக உருமாறி அந்த ஆலமரத்தில் குடிகொண்டு இருப்பதாக நம்புகிறார்கள். மதிய நேரத்தில் இளம்பெண்கள், தீட்டுக்காரப் பெண்கள் அந்த வழியாகப் போக மாட்டார்கள்.ஆலமரத்தில் இருக்கும் பேய் பிடித்துக்கொள்ளும் அல்லது குள்ளக்கருப்புசாமிக்குத் தீட்டு ஆகாது என்பதால் கெடுதல் செய்யும் என்பது நம்பிக்கை.  அந்த நம்பிக்கை இன்றும் இருக்கிறது. ஆதிதிராவிடர் இனப் பெண்களை மட்டுமே பேய் பிடிப்பதுதான் அதிசயம்!

ஊருக்குக் கிழக்கே பெரிய குளம் ஒன்று இருக்கிறது.  காலைக்கடனை முடித்துவிட்டு ஆண்கள் எல்லாரும் குளத்தில் வந்துதான் கால் கழுவுவார்கள். எல்லாச் சாதியினரும் வந்துபோகிற ஒரே இடம் அந்தக் குளம் மட்டும்தான்.  கழுதூர் ஜோசியத்துக்குப் பெயர் பெற்றது. தட்சிணாமூர்த்தி, மகாலிங்கம் என்ற இரண்டு பேரும் புகழ்பெற்றவர்கள்.  அதே மாதிரி திருட்டுக்கும் பெயர் பெற்றதுதான் என்னுடைய ஊர். விட்டம், மாயவேல் என்று இரண்டு பேர் இருந்தார்கள். அவர்களுடைய தொழில் ஆடு திருடுவது மட்டும்தான்.  அதே மாதிரி நாடக செட்டுக்குப் புகழ்பெற்றது.  கோவிந்தசாமி செட்டு என்று இருந்தது. பிறகு, செடல் செட்டு என்றிருந்தது. செடல் ஒரு பெண்.  பொட்டு கட்டி விடப்பட்டவர். கடலூர் மாவட்டம், விழுப்புரம், சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் அவர் ஆடாத ஊர் குறைவாகத்தான் இருக்கும்.

என் ஊர்!

1960-லிருந்து பள்ளிக்கூடம் இருந்தாலும் அரசாங்க வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை இன்று 10 கூட இருக்காது.  ரோட்டின் ஓரமாக இருப்பதற்காக ஒரு காலத்தில் பெருமைப்பட்டோம்.  ஆனால், இன்று நிலைமை தலைகீழ்.  தேசிய நெடுஞ்சாலை  நாற்கர சாலை என்பதால், ரோட்டோரத்தில் இருந்த 90 சதவிகித நிலத்துக்கு மேல் சினிமாக்காரர்கள் வாங்கி

விட்டார்கள். ஒரு காலத்தில் கடையில் பொருட்கள் வாங்கியதை இழிவாகக் கருதிய தலைமுறை இருந்தது. அந்தத் தலைமுறையை இழந்துகொண்டு இருக்கிறது ஊர்.

என்னுடைய  ஊர் எனக்கு மட்டுமானதல்ல.  இறந்துபோனவர்களுக்கு உரியதாக, தற்போது உயிருடன் இருப்பவர்களுக்கு உரியதாக, இனிமேல் பிறக்கப்போகிறவர்களுக்கு உரியதாக உள்ளது.  கிராமம் புனிதமானது அல்ல. என்னுடைய ஊரில் இன்றும் சாதி இருக்கிறது.  வறுமை இருக்கிறது. மதியச் சாப்பாடு என்பது அரிதானதாக இருக்கிறது. பெரியவர்களுக்கு இணையாகக் குழந்தைகள் வேலை செய்கிறார்கள்.  ஆண்களைவிடப் பெண்களே அதிகம் உழைக்கிறார்கள்.  தமிழ் சினிமா சித்திரிக்கிற கிராமத்துக்கும் என்னுடைய ஊருக்கும் சிறு தொடர்பும் இல்லை.  என்னுடைய ஊரில் ஒரு திரௌபதி அம்மன் கோயில் இருக்கிறது.  பதினெட்டு நாள் மகாபாரதம் படிப்பார்கள்.  ஒவ்வோர் ஆண்டு திருவிழாவின் போதும் சாதிச் சண்டை நடக்கும். தமிழின் மிகவும் முக்கியமான நாவல்கள் என்று பேசப்பட்ட 'கோவேறு கழுதைகள்’, 'செடல்’ ஆகியவற்றின் கதாநாயகிகளான ஆரோக்கியம், செடல் இருவரும் என்னுடைய ஊர்க்காரர்கள்தான்.

என் ஊர்!

என்னுடைய ஊரில் இரண்டு பள்ளிகள், இரண்டு கோயில்கள், இரண்டு கிணறுகள், இரண்டு சுடுகாடு, இரண்டு குளிக்கிற இடம், இரண்டு வாழ்கிற இடம், கக்கூஸ் போக இரண்டு இடம் என்று எத்தனையோ இரண்டிரண்டு இடங்கள் இருக்கின்றன. எத்தனை இரண்டு இடங்கள் இருந்தாலும், உலகில் நான் விரும்புகிற, வாழ்வதற்கு ஆசைப்படுகிற இடம் என் ஊர் தான். என் உடலின் தோலாக இருப்பதுஊரின் மண்தான்.  நான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், வாழ்ந்தாலும் எனக்கான அடையாளம் என் தோல்தான். காரணம், எனக்கான சோற்றையும், எனக்கான சுடு காட்டையும் அதுதான் வைத்திருக்கிறது!''

படங்கள்: தேவராஜன்