Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
##~##

'வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே...
திறமை இருக்கு மறந்துவிடாதே...
திருடாதே...  பாப்பா திருடாதே...’

இந்தப் பாடலை எந்தத் திசையிலிருந்து எப்போது கேட்டாலும் சரி, அடுத்த நொடி, வலுக்கட்டாயமாக ஆற்றுக்குள் தள்ளிவிடப்பட்ட  நிறைமாதப்  பசுவைப் போல உடலும் மனமும் அப்படி உதறுகிறது. உடனே, என் வலது கை திருட நினைப்பது போலவும், இடது கை அதை அடித்து ஒடித்துத் தடுப்பதுபோலவும் ஒரு வதந்தி உடல் முழுவதும் பரவி என் மீது எனக்கே அச்சம் படர்கிறது. அன்றாடத் தேவைக்குத் திருடுகிறவர்கள் 'திருடர்’களாகவே தங்கிவிட, பலப்பல தலைமுறைகளின் தேவைக்கு மேலும் திருடியவர்கள் 'தலைவர்’களாக மாறிவிட்ட சமூகத்தில், 'திருட்டு’ என்பது எளியவர்கள் நடத்தும் முதல் போராட்டம் என்று சொன்னால், நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்ன?

விகடனில் 'மறக்கவே நினைக்கிறேன்’ வந்த முதல் வாரம் விளம்பர போஸ்டர்களில்  என் புகைப்படம் பார்த்துவிட்டு மச்சான் ரமேஷ் அலைபேசியில் அழைத்தார்...

''மாரி... இங்கே பேப்பர்ல உன் போட்டோ போட்டுத் தொங்குதே... என்னடே விஷயம்?''

''ஆமா மச்சான்... ஆனந்த விகடன் புக்கு இருக்குல்ல... அதுல ஒரு தொடர் எழுதுறேன். இன்னைக்குதான் மொத வாரம். வாங்கிப் படிச்சிட்டு சொல்லுங்க'' என்றதும் அவ்வளவு சந்தோஷப்பட்டவர், தற்போது தன்னிடம் காசு இல்லை என்றும், மறுநாள் வாங்கிப் படித்துவிட்டுப் பேசுகிறேன் என்று சொல்லி அழைப்பை அவசரமாகத் துண்டித்தார். மறுபடி அரை மணி நேரத்தில் அழைத்தார்.

மறக்கவே நினைக்கிறேன்

''மாப்ள மாரி... படிச்சேன்டே. நல்லா இருக்குடே'' என்றவரிடம் ''புத்தகம் எப்படி வாங்குனீங்க மச்சான்?'' என்று நான் கேட்டிருக்கக் கூடாது. ''இல்லடே... சும்மா எடுத்துப் புரட்டிப் பார்த்துட்டு இருந்தேன். கடைக்காரர் அந்தப் பக்கமா திரும்பும்போது புத்தகத்தை சாரத்துக்குள்ள போட்டு எடுத்துட்டு வந்துட்டேன்டே'' என்று ஒரு ஏ.டி.எம். வாட்ச்மேனாக இருக்கும் ரமேஷ் மச்சான் சொல்லிச் சிரித்தபோது, கண்ணீர் கசிந்துவிட்டது எனக்கு!

இப்படி வெறுமென சிரித்து கடந்து போகக்கூடிய சில விஷயங்கள், சமயங்களில்... உங்களுக்கு ஒரு சொட்டு கண்ணீரையாவது வரவழைத்துவிட்டால், உங்களின் ஏதோ ஒரு நாளின், ஏதோ ஒரு தருணத்தில், ஏதோ ஓர் அழுகையின் வெளிவராத கண்ணீரின் கடைசித் துளியாக இருக்கலாம். எனக்கு அன்று வந்தது பிடிபட்ட ஒரு களவின் கடைசித் துளி!

ஏழாம் வகுப்பு படிக்கும்போது காலாண்டு பரீட்சை எழுதி, பசி கிறக்கிய மதியம் அது. பள்ளியிலிருந்து வீட்டுக்கு இரண்டு கிலோ மீட்டருக்கும் மேல் நடக்க வேண்டும். முதலில் கிட்ணகுளம் வரும். அப்புறம் சொக்கர் கோயில் ஆலமரம். அதில் சிறிது நேரம் இளைப்பாறலாம்.  கொஞ்சம் நிழலைக் குடித்த தெம்பில் எழுந்து நடந்தால், அதற்கடுத்து பெரிய குளம். அதன் கரையைப் பிடித்துக்கொண்டு நடந்துபோனால்,  நிறைய வாழைத் தோட்டங்கள் வரும். அந்த வாழைத் தோட்டங்களுக்குள், ஏதாவது ஒரு  தோப்புக்குள் ஒரு வாழைத் தாராவது பழுத்துத் தொங்கும். நாலைந்து பழங்கள் பறித்துச் சாப்பிட்டு  கொஞ்சம் தண்ணீரை  அள்ளிக் குடித்துவிட்டால், பசியால் சுற்றும் தலைசுற்றல் நின்றுவிடும் என்று வேகவேகமாக நடந்து போனேன்.  

'காட்டு நரிக்குக்கூட கொள்ள பசி வந்தா முதல்ல நாலு வாழைப்பழம்தான் திங்கும்’ என்று எப்பவோ அம்மா சொன்னது எவ்வளவு உண்மை என்று வாழைக் காட்டுக்குள் இறங்கிய பிறகுதான் புரிந்தது.

எத்தனை நாளானாலும் எண்ணிவிட  முடியாத வாழைகள். அதில் ஒரு வாழைத் தாரிலாவது ஒரு பழமாவது பழுத்திருக்காமலா போய்விடும் என்று தலையை வாழையின் உச்சியைப் பார்த்து நிமிர்த்திக்கொண்டு நான்கு திசைகளிலும் ஓடிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு வாழைத் தோட்டமாகத் தாவித் தாவி தேடி அலைந்ததில், 'நான் அம்மா சொன்ன காட்டு நரியாக மாறிவிட்டேனோ!’ என்ற அச்சம் வர, அவ்வப்போது முகத்தைத் தடவிப் பார்த்துக்கொண்டதை இப்போது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது. என் அலைச்சல் வீண் போகவில்லை.

பழுத்த ஒரு வாழைத்தார் என் கண்ணில் பட்டது. அந்தத் தோட்டத்துக்கு சவுக்கு கம்புகளால் வேலி கட்டியிருந்தார்கள். ஒரு நரி நுழையும் அளவுக்கு இருந்த இடைவெளியில் உடலை மடக்கிக் குறுக்கி, பத்தும் பத்தாததற்கு கொஞ்சம் சவுக்கை உடைத்து உள்ளே நுழைந்துவிட்டேன். அந்த வாழை உயரமாக இருந்தது. அதன் பழங்களும் உயரத்தில் இருந்தன. வாழையைப் பிடித்து ஆட்டினால், உதிர்ந்துவிடும் அளவுக்கு அந்தப் பழங்கள் இன்னும் பழுக்கவும் இல்லை. நரியின் கைக்கு எட்டிய பழம், வாய்க்கு எட்டவில்லை. உடல் முழுக்க வயிறாகி, பசி.. பசி.. பசி.. என்று கதறியது. வேறு வழி இல்லை என்று வாழை மடல்களை இறுகப்பிடித்து வெறிகொண்ட வேகத்தோடு இழுத்ததில், தலைச்சுமையோடு நின்ற வாழை பாதியாக முறிந்து என் பக்கம் சாய்ந்த சந்தோஷத்தைக்கூட கொண்டாடாமல், முதல் பழத்தைப் பறித்து முதலில் தின்றுவிட்டேன். இரண்டாவது பழத்தைப் பறித்து பாதி வாயில் நுழைத்துக்கொண்டிருக்கும்போது, என் பின் மண்டையில் விழுந்தது ஓர் அடி! வாயில் இருந்த பழமும் லபக்கென்று வெளியில் விழ, திரும்பிப் பார்த்தேன்.

பட்டாபட்டி அண்ட்ராயரோடும், முறுக்கிய மீசையோடும், அடிப்பதற்குத் தோதான நல்ல உருளை வாழை மட்டையோடும் நின்ற அந்த மனிதரைப் பார்த்த அடுத்த நொடியில், சரசரவென நீர் முட்டிவிட்டது.

'யாருல நீ?'

மறக்கவே நினைக்கிறேன்

'புளியங்குளம்ணே... பள்ளிக்கூடம் போயிட்டு வந்தேன். பசிச்சுச்சு... அதான்!'

'ஆமாலே... பள்ளிக்கூடம் போயிட்டு வரும்போதெல்லம் பழம் பறிச்சி நீ திங்குறதுக்கு உங்க அம்ம தோட்டமால இது?''

''அண்ணே... தெரியாமப் பண்ணிட்டேம்ணே. ரெண்டு பழம்தான் தின்னேன். நாளைக்கு வேணும்னா, காசு கொண்டுவந்து கொடுத்திருதேண்ணே!''

''தின்ன பழத்துக்குக் காசு கொடுத்திடுவ. முறிஞ்ச வாழைக்கு உங்க அப்பனா வந்து காசு கொடுப்பான்?'' என்ற மனுஷன், ஆத்திரத்தோடு ஓங்கி என் பின்னாடி அப்படி ஒரு மிதி மிதிப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. சகதிக்குள் போய் சொத்தென்று விழுந்தேன். முக்கி முனங்கி எழுந்து நின்ற என் தலைமுடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனவர், ''இனிமே எந்த வாழையில பழம் தொங்குனாலும் வாழையைப் பிடிச்சி இழுத்து மொறிக்கக் கூடாது நீ. வா வந்து மொறிஞ்ச வாழைய தூக்கி நிறுத்து!'' என்றபடி முறிந்து கிடந்த வாழையைக் கஷ்டப்பட்டுத் தூக்கி என் தோளில் வைத்தார்.  

வாழை என் தோளுக்கு வந்த அடுத்த  கணத்தில், உடம்பு மண்ணுக்குள் புதைவது போல் இருந்தது. தட்டுத்தடுமாறி முள் கிரீடத்தோடு சிலுவையைத் தூக்கிக்கொண்டு முதுகு வளைந்து ஒடிந்து, வடியும் கண்ணீரோடு வானத்தைப் பார்த்தபடி நிற்பாரே யேசு, நிஜமாகவே அப்படி நின்றுகொண்டிருந்தேன் நான். உடல் வலியிலும், உள்ளம் பசியிலும் தலை சுற்றிக்கொண்டு வந்தது.

''நான் சொல்ற வரைக்கும் இப்படிதா நிக்கணும். போட்டுட்டு ஓடின, விரட்டிப் பிடிச்சிக் கொண்டுபோய் போலீஸ்ல கொடுத்திருவேன்'' என்று தன் நாக்கைத் துருத்திக்கொண்டு சொன்ன மீசைக்காரனுக்கு, மன்னிப்பு கேட்டு வலி பொறுக்க முடியாமல் நான் கதறி அழுதது, காதில் விழவே இல்லை.

அழ அழ திடீரென்று அம்மாவின் ஞாபகம் வேறு வந்துவிட்டது. அம்மா மட்டும் இந்தக் காட்சியைப் பார்த்தால், இந்த மீசைக்காரனின் முடியைப் பிடித்து இழுத்து சகதிக்குள் போட்டு நகத்தால் அவன் உடம்பைக் கீறி எடுத்திருவாள். ஒருவேளை அண்ணன்கள் பார்த்தால், அவ்வளவுதான்... சத்தியமாக ஆத்திரத்தில் மீசைக்காரனின் மண்டையை உடைத்திருப்பார்கள். அக்கா பார்த்தால், மீசைக்காரன் பயப்பட வேண்டாம். அவள் யாரையும் எதுவும் செய்ய மாட்டாள். உடனே, தோட்டத்தின் நடுவே மண்டியிட்டு மீசைக்காரன் அடுத்த நொடியே நரகத்துக்குப் போகும்படி ஜெபிப்பாள். அவ்வளவுதான் அவளால் முடியும். ஆனால், அதிர்ச்சியாக அப்பா பார்த்துவிட்டால்..? அதை நினைத்தபோது... மீசைக்காரன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கும்படி, சத்தம் போட்டு அழுதுவிட்டேன்.

மறக்கவே நினைக்கிறேன்

ஆமாம், அப்பா மட்டும் பார்த்துவிடக் கூடாது. பார்த்துவிட்டால்,  கண்டிப்பாக  இதோ இந்த மீசைக்காரனின் காலில் விழுந்து கெஞ்சுவார்; அழுவார். அது அவருக்கு அபூர்வமாக வாய்த்த கடவுளின் சுபாவம். பாவிகளின் காலைக் கழுவுவதில், யேசுவின் முகம் அவருக்கு.

அப்பாவை நினைக்க நினைக்க  குருட்டு தைரியம் வந்தது எனக்கு. தோளில் சிலுவையைப் போலக் கிடந்த அந்த வாழையை அப்படியே தூக்கி, பின் பக்கம் இருந்த மீசைக்காரன் மீது போட்டுவிட்டு ஓடத் திட்டமிட்டேன். அப்படியே செய்தேன். ஆனால், மீசைக்காரன் விரட்டிப் பிடித்துவிட்டான். வயிற்றிலிருந்து மண்டைக்குப் பரவிய பசி, பாவத்தின் ருசியை நக்கிப் பார்க்க நினைத்ததுபோல... அவன் வலது கையில் நறுக்கென ஒரு கடி, பல்லிடுக்கில் குருதி வடிய சிக்கிக்கொண்ட அவன் கை சதையுடன் எடுத்தேன் ஓட்டம்.

'The 400 Blows’ படத்தில் ஆந்த்ரே என்கிற சிறுவன் ஓடிய ஓட்டம் அது. அவனுக்கு, பிரபஞ்சத்தின் எல்லையாக கடல் இருந்தது. எனக்கு, தாமிரபரணி நதிக்கரை இருந்தது.

நதி நீரை அள்ளிக் குடித்து, சுருண்டு விழுந்து முழு இரவும் உறங்கிப்போனவனை எப்படித்தான் அண்ணன் தேடிக் கண்டுபிடித்து வீட்டுக்குத் தூக்கிப் போனானோ! கண் விழிக்கும்போது அம்மா சாப்பாட்டுத் தட்டோடு எனக்கு சாதம் ஊட்டிக்கொண்டு இருந்தாள்.

அடுத்தவர் வாழைத் தோட்டத்துக்குள் நுழைந்ததற்காக, வாழையை முறித்துப் போட்டதற்காக, வாழைக்காரரின் கையை வெறிபிடித்துக் கடித்ததற்காக, எல்லாவற்றையும் செய்துவிட்டு முழு இரவும் காணாமல்போன ஒரு திருட்டுப் பிள்ளையைப் பெற்றதற்காக... ஊர் பஞ்சாயத்தில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு 500 ரூபாய் அபராதம் கட்டிவிட்டு வீட்டுக்கு வந்தார்கள் அப்பாவும் அண்ணனும்.

என் முகத்தைப் பிடித்துத் திருப்பி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குனிந்திருந்தபோது, ''புள்ள ராத்திரி முழுசுக்கும் கொலப் பசியோட கெடந்திருக்கு. முதல்ல அவன் சாப்பிடட்டும். அப்புறம் வெச்சுக்கோங்க உங்க பஞ்சாயத்தை'' என்று உம்மென்றிருந்த வாய்க்குள் சோற்றைத் திணித்த அம்மா, அப்பாவையும் அண்ணனையும் அதட்டினாள். அப்போது அடி வயிற்றிலிருந்து அள்ளிக்கொண்டு வந்து நான் கதறியழுத அந்த அழுகைக்கு, கொலைப் பசிதான் காரணம் என்பது, நல்லவேளை இன்னும் தெரியாது என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும்!

- இன்னும் மறக்கலாம்...