பாஸ்வேர்டு்
##~##

 'நம்ம முத்தியாலு ஐயா, செஞ்சி பக்கத்துல ஒரு ஊர்லதான் இருக்காராம். போய் பார்த்துட்டு வருவோமாடா?’ என்று நண்பன் கேட்டபோது ஆச்சர்யமாக இருந்தது. அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்காத ஆசிரியர் அவர். அவனுக்கு மட்டுமல்ல, நான் உள்பட எங்கள் நண்பர்கள் நிறையப் பேருக்கு அவரைப் பிடிக்கவே பிடிக்காது.

ஸ்டடி ஹாலில் பேசி சிக்கினால், அவர் படுத்தும் பாடு தாங்க முடியாது. இரண்டு விரல்களுக்கு இடையில் பென்சிலை வைத்து கடைந்து எடுத்துவிடுவார். ஒரு நாளும் சிரித்துப் பேசாத மனிதர். பாடத்தில் தப்பு செய்தால், முறைப்பதோடு நிறுத்திக்கொள்வார். ஒழுக்கரீதியான விஷயங்களில் தவறுகிறபோது, 'மனுஷனாடா இந்த ஆளு?’ என்று கதறி அழும் அளவுக்குத் தண்டிப்பார்!

பென்சில் குடைச்சல் தொடங்கி அடிக்கடி முட்டி போட்டது வரை அவரிடம் பல தண்டனைகள் பெற்ற முருகேசன், இப்போது அவரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று அழைக்கிறான். நான் ஆச்சர்யமாகப் பார்ப்பதைப் புரிந்துகொண்டு அவனே சொன்னான், 'அந்த மனுஷன் கொஞ்சம் கோபக்காரர்தான்டா. ஆனா, அவர் மட்டும் இல்லாமப்போயிருந்தா, சத்தியமா நான்லாம் உருப்படாமப் போயிருப்பேன்!’ என்றான் அமைதியாக. அன்று பார்க்கவே பிடிக்காத மனிதரை, இன்றைக்கு 300 கிலோமீட்டர் தாண்டிச் சென்று, ஏதோ ஒரு கிராமத்தில் தேடிக் கண்டுபிடித்துப் பார்க்கும் அளவுக்குப் பிடித்திருக்கிறது.

நம் உலகின் அற்புதமான மனிதர்கள், ஆரம்பத்தில் அருகில் இருக்கும்போது பிடிக்காதவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள். நமக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ளாத மனிதர்களை நமக்குப் பிடிப்பது இல்லை. ஆனால், நமக்குப் பிடிக்காத அந்த மனிதர்கள்தான், நம் வாழ்வின் பல படிநிலைகளில் நம்மை சரியான திசையில் வழிநடத்தியவர்கள்.

அப்பா திட்டுகிறபோது, 'விடு மாப்ள... இந்த அப்பனுகளே இப்படித்தான்’ என்று சமாதானம் சொல்லி டீ குடிக்க அழைத்துச் செல்லும் நண்பன், அப்பாவைவிட பிடித்துப்போன மனிதன் ஆகிறான். தனக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ளாத அப்பா வில்லன் ஆகிறார். ஆனால், 'தன் பிள்ளை தன்னைப் பற்றி எப்படி நினைத்தாலும் பரவாயில்லை... அவன் நல்லா இருக்கணும்’ என்று நினைக்கும் 'அப்பா’ என்ற அற்புதமான ஆத்மாவை நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடிவது இல்லை.

பாஸ்வேர்டு்

செய்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தபோது, எங்கள் சீனியர் ஒருவரை எனக்குப் பிடிக்கவே  பிடிக்காது. நாங்கள் செய்தியாளர் சந்திப்பில் கேட்கும் கேள்விகளைவிட, அந்தச் செய்தியாளர் சந்திப்பு பற்றி அவர் எங்களிடம் கேட்கும் கேள்விகள் அதிகம்.      'நீ என்ன கேள்வி கேட்ட?’ என்பார். கேள்வியைச் சொன்னால், 'எதுக்கு அந்தக் கேள்வியைக் கேட்ட?’ என்பார். அதற்கு விளக்கம் சொல்லி முடிக்கும் முன்னே, அடுத்த கேள்வி தயாராக இருக்கும். செய்தியை எழுதிக் கொடுத்துவிட்டு அவர் அருகிலேயே நிற்க வேண்டும். கேள்விகள் வரிசையாக வந்து விழும். 'எதற்கு இந்த லீட் எடுத்த?’ என்பார். அதற்கு ஒரு விளக்கம் சொன்னால், அடுத்த கேள்வி பாயும் அல்லது சமயங்களில் ஸ்க்ரிப்ட் பேப்பர் முகத்தின் மீது விசிறி அடிக்கப்படும். பிறகு, 'எதை லீட் எடுக்கணும்னு தெரியுமா?’ என்று ஒரு லெக்சர் நடக்கும். நான்கைந்து முறை அடித்துத் திருத்தி எழுதிக்கொடுத்த பிறகு, ஒருவழியாக ஸ்க்ரிப்ட் ஏற்றுக்கொள்ளப்படும்.

நானும் இரண்டு நண்பர்களும் அவரை என்ன பண்ணலாம் என்று டீக்கடையில் நின்று திட்டம் போடுவோம். 'ஆள் வைத்து அடிக்கலாமா?’ என்பது வரை திட்டங்கள் யோசிக்கப்படும். ஆனால், எந்த விஷயத்தை முன்னிலைப்படுத்தி செய்தி எழுத வேண்டும் என்பதை நாங்கள் அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டோம் என்பதை புரிந்துகொள்வதற்குள், அவர் வேறு இடத்துக்குப் போய்விட்டார். அவரும் எங்களிடம் விளையாட்டாகப் பேசிச் சிரித்து நட்பு பாராட்டும் மனிதர் அல்ல.

அதிசயமாக மிகவும் கடுமையாகத் திட்டிவிட்ட தினங்களில் எங்களை ஆட்டோவில் அள்ளிப்போட்டுக்கொண்டு உட்லண்ட்ஸ் டிரைவ்-இன் ஹோட்டலில் போண்டாவும் காபியும் வாங்கித் தருவார். 'காறித் துப்பிட்டு காபியும் வாங்கித் தர்றாரே’ என்று கடுப்பாக இருக்கும். ஆனால், முகத்துக்கு நேரே எங்களைத் திட்டும் அவர், உயர் அதிகாரிகளிடமும் அலுவல்ரீதியான மீட்டிங்குகளிலும் எங்களைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது. 'இவருக்கு நம்ம மேல கொஞ்சம்கூட ஈவிரக்கமே இல்லையே’ என்றுதான் யோசித்துக்கொண்டே இருந்தோம். அவரும், 'நான் உங்க மேல எவ்வளவு பாசமும் பிரியமும் வெச்சிருக்கேன் தெரியுமா?’ என்றெல்லாம் எங்களுக்கு விளக்கம் கொடுத்தது இல்லை.

'நம்மை, இவர்கள் கெட்டவனாக நினைப்பார்களே’ என்று கவலைப்படாமல், 'இந்தப் பசங்க நல்லா வரணும்’ என்ற நோக்கில் எங்களை முரட்டுத்தனமாகக் கையாண்ட அந்த மனிதரின் ஒவ்வொரு சிடுசிடுப்பும் கடுகடுப்பும் பிரியத்தின் இன்னொரு வடிவம்தான் என்று இப்போது தோன்றுகிறது. நாங்கள் மூன்று பேருமே சொந்த வாழ்க்கையில், பணியில் அடுத்தடுத்த உயரத்துக்குப் போனபோது முதலில் அவரிடம்தான் அதைச் சொல்ல வேண்டும் என தோன்றியது. 'ஆள் வைத்து அடிக்கலாமா?’ என்று நினைத்த மனிதர், இன்றைக்கு அற்புதமான மனிதராகத் தெரிகிறார்.

'ஏன் சார் அப்ப அந்தப் பாடுபடுத்துனீங்க? உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்னு ஃப்ரெண்ட்லியா சொல்லி இருக்கலாமே!’ - இன்று அவரிடம் கேட்க முடிகிறது. 'நீங்க மூணு பேருமே நல்ல பசங்கதான். ஆனா, சோம்பேறிங்க... உங்ககிட்ட ஃப்ரெண்ட்லியா இருந்தா, நீங்க வேலையில சின்சியரா இருந்திருக்க மாட்டீங்க...’ என்று அவர் சொல்லும் காரணமும் மிகச் சரியானதாக இப்போது தோன்றுகிறது.

முத்தியாலு ஐயாவைப் பார்த்துவிட்டு வந்த பிறகு, ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தேன். பள்ளிக்கூடத்தில், கல்லூரியில், அலுவலகத்தில், நட்பு வட்டாரத்தில், உறவுகளில் யாரெல்லாம் எனக்குப் பிடிக்காதவர் என்று. உண்மையில், 'எனக்குப் பிடிக்காத அந்த மனிதர்கள்தான் என்னை அதிகமாக நேசித்தவர்கள்’ என்று தோன்றுகிறது. அவர்கள் தங்கள் கரிசனத்தையும் அன்பையும் எனக்குப் பிடித்த மாதிரி வெளிப்படுத்தவில்லை என்ற ஒரு சிக்கலைத் தவிர, அவர்களின் அன்பில் ஒரு குறையும் காண முடியவில்லை.

'உனக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்கிறவன் யாரு? உண்மையாவே உன் மேல அன்பு வெச்சிருக்கிறவன் யாருனு கண்டுபிடிக்கத் தெரியணும். அது தெரியலைன்னா வாழ்க்கை ரொம்ப சிக்கல் ஆயிடும்’ என அருள்ராஜ் சார் நிறைய வகுப்புகளில் சொல்லுவார். அந்த உண்மையை உணர்ந்துகொள்ளத் தேவைப்படும் திறந்த மனம், நம் அனைவருக்கும் இருக்கிறதா என்பது சந்தேகம்தான். முகத்துக்கு முன் அன்பைக் கொட்டிவிட்டு, முதுக்குக்குப் பின் வெறுப்பை உமிழ்கிற மனிதர்களை நல்லவனாக நம்புகிற நாம், அன்பை ஆயுதமாகப் பயன்படுத்தாமல், பாசாங்கு செய்யாமல் பழகும் மனிதர்களை பல நேரங்களில் தள்ளிவைத்துப் பார்க்கவே பிரியப்படுகிறோம். அப்படிப்பட்ட மனிதர்களை அடையாளம் காணாமல்போனால், நம் வாழ்வில் நடக்கவேண்டிய பல நல்ல விஷயங்களுக்கு நாமே தடைக்கற்களைப் பதித்துக்கொண்டதைப் போல் ஆகிவிடும்.

பாஸ்வேர்டு்

உறவினர்களோ, அலுவலகப் பணியாளர்களோ நாம் விரும்பியபடி நடந்துகொள்ளவில்லை என்பதற்காக அவர்களின் நோக்கத்தை நாம் குறை சொல்லிவிட முடியாது. அன்பையும் கரிசனத்தையும் வெளிப்படுத்துவதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கிறது. அது அவரவரின் அனுபவம், நெருக்கடி, பொறுப்புகள்... எனப் பல காரணிகளைச் சார்ந்தது.

நன்றாகக் கவனித்துப் பாருங்கள்... பெரும்பாலும் வீட்டின் மூத்த பிள்ளைகள் கொஞ்சம் இறுகிய முகத்தோடுதான் இருக்கிறார்கள். இரண்டு தம்பிகள் இரண்டு தங்கைகளை கரைசேர்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஓர் அண்ணனால், சிரித்த முகத்தோடு தன் அன்பை எப்போதும் வெளிப்படுத்த முடிவது இல்லை.

அலுவலகத்தில் உள்ள மேலதிகாரி ஒருவர், புன்னகையோடு எதையும் சொல்லித்தருகிறார். இன்னொருவரின் அணுகுமுறை அதற்கு நேர் எதிராக இருக்கிறது. தவறுகளை, 'பரவாயில்லை’ என்று பொறுத்துப்போகிறவர் நல்லவர் போலவும், அதைச் சரிசெய்வதற்காக கொஞ்சம் கடுமையாக நடந்துகொள்பவர் கெட்டவர் போலவும் படுவது, அந்த மனிதர் நமக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்ளவில்லை என்பதால்தான். நமக்குப் பிடிக்காத மாதிரி நடந்துகொள்கிறவர்கள் அற்பமானவர்களோ, அன்பு செலுத்தத் தகுதியற்றவர்களோ அல்ல. அவர்களுக்குள் பதுங்கிக்கிடக்கும் அன்பைப் புரிந்துகொண்டால், அவர்களைவிட அற்புதமானவர்கள் யாரும் இருக்க முடியாது!

- ஸ்டாண்ட் பை...