Published:Updated:

''மானை வளப்பாங்கோ மான் பாலை கறப்பாங்கோ!''

''மானை வளப்பாங்கோ மான் பாலை கறப்பாங்கோ!''

##~##

''என்னை உருவாக்கின அம்மாவே
நீ பெத்த செல்லத்துக்குப் புள்ளிமான் மிஞ்சிரும்
என்னைக் கருவா உருவாக்கி
கரு வளர்ந்த தோப்பாக்கி
பிஞ்சைப் புளியாக்கி
என்னைப் பெத்த அம்மா
புளியமரக் கன்னாக்கி
பூவால சங்கு பண்ணி
எட்டுதா(ய்) மக்களுக்கும் ஊத்துனியே...''

லெட்சுமி அம்மாள் பெருங்குரல் எடுத்துப் பாடும் போது சாவின் வாசனை நம்மைச் சூழத் தொடங்குகிறது. மரண வீட்டின் மௌன இறுக்கமும் அடர்த்தியான துக்கமும் நம்மை ஆக்கிரமிக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருவண்ணாமலையைச் சேர்ந்த லெட்சுமி ஓர் ஒப்பாரிக் கலைஞர். சாவு வீடுகளில் மட்டுமல்லாது சென்னை சங்கமம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் போன்ற மேடைகளிலும் லெட்சுமி அம்மாளின் ஒப்பாரிக் குரல் ஓங்கி ஒலிக்கும். காலில் சதங்கை கட்டி அவர் ஆடத் தொடங்கும்போது, கூட்டத்தை ஒரு கனமான அமைதி பற்றிக்கொள்ளும்.

''மானை வளப்பாங்கோ மான் பாலை கறப்பாங்கோ!''

''நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் போளூருக்குப் பக்கத்துல இருக்குற மூலக்காடு கிராமம். என்னைய  சொந்தத் தாய்மாமாவுக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சாங்க. எங்களுக்கு ஆறு பிள்ளைகள் பிறந்துச்சு. அதுங்களை எல்லாம் விவசாயக் கூலி வேலை செஞ்சு அதுல கிடைச்ச வருமானத்துல வளர்க்குறதுக்கு கஷ்டமான கஷ்டப்பட்டோம். அதனால, என்னோட வீட்டுக்காரரு சாராயம் காய்ச்சி விக்க ஆரம்பிச்சார். அதை நான் வேண்டாம்னு சொன்னதால எனக்கும், என்னோட மாமாவுக்கும் அடிக்கடி சண்டை வந்துச்சு. அவர்கிட்ட அடி, உதையைத் தாங்க முடியாம என்னோட ரெண்டு குழந்தை களோட தங்கச்சி வீட்டுக்கு வந்துட்டேன். அதுக்குப் பின்னாடி பிள்ளைகளைக் காப்பாத்த தினம் ஏதாவது ஒரு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். கடைசியா, மாட்டுக்கறி வாங்கிக் கூடையில வெச்சு  வியாபாரம்

செஞ்சேன். அப்ப காரப்பட்டுல எங்கிட்ட கறி வாங்குவாங்க ஒரு அக்கா. அந்த அக்காகூட ஏற்பட்ட பழக்கத்துல மாட்டுக்கறி வியாபாரத்தை விட்டுட்டு காய்கறி வியாபாரம் செய்ய ஆரம்பிச்சேன். மார்க்கெட்ல வியாபாரம் செய்யும்போது, காய்கறிகளோட பெயர்களைப் பாட்டா பாடிக் காட்டுவேன். ஒருநாள் என்னோட வியாபாரம் பார்த்த ஒரு அம்மா செத்துப் போய்ட்டாங்க. அவங்களை நெனைச்சும், என்னோட குழந்தைக நெலமைய நெனைச்சும் ஒப்பாரி பாடினேன். அது அப்படியே பரவி, சுத்துவட்டாரத்துல இருக்குற கிராமத்துல எங்க சாவு விழுந்தாலும், என்னைய ஒப்பாரி பாடக் கூட்டிக்கிட்டுப் போக ஆரம்பிச்சாங்க. கூப்புடறது கொஞ்ச கொஞ்சமா அதிகமாகி, இப்ப தர்மபுரி மாவட்டத்துல இருக்குற கிராமங்கள்ல இருந்துகூட என்னை வந்து கூட்டிட்டுப் போறாங்க. 21 வருஷமாப் பாடிக்கிட்டு இருக்கேன். 20,000-த்துக்கும் மேல சாவு வீடுகளிலேயும், பல ஊர் மேடைகளிலும் ஒப்பாரி பாடிக்கிட்டு இருக்கேன். திருவண்ணாமலை சுத்துப்பட்டு கிராமத்துல பெரும்பாலான வீட்டுல நான் பாடாமல்  செத்த உடல் வேகுறதில்லை. ஊர் முழுக்க எம் பாட்டை மெச்சினாலும் உறவுக்காரங்க செத்த பாட்டு, துக்கப் பாட்டு பாடறவனுதான் எளக்காரமாப் பாக்கறாங்க'' என்ற லெட்சுமி அம்மாளின் வார்த்தைகளில் மெல்லிய சோகம் அப்பிக்கிடக்கிறது.

''எங்க அம்மா மானை வளப்பாங்கோ
மான் பாலைக் கறப்பாங்கோ
மாவிலையில சங்கு பண்ணி
மக்களுக்கு ஊத்துவாங்கோ
நீ பெத்த செல்லம்
நா உன்ன பிரிஞ்சு வாடுறேனே...''

- தொடர்கிறது லெட்சுமி அம்மாளின் பாட்டு.

வாழ்க்கை குறித்த இனம் புரியாத கேள்விகளோடும் வெறுமை நிரம்பிய மனதோடும் விடைபெற்றோம்!

 - காசிவேம்பையன், படங்கள்: பா.கந்தகுமார்

''மானை வளப்பாங்கோ மான் பாலை கறப்பாங்கோ!''