Published:Updated:

அவமானங்களை விருதாக மாற்றிய ஆஸ்திரேலிய 'இந்தியர்'!

விகடன் விமர்சனக்குழு
அவமானங்களை விருதாக மாற்றிய ஆஸ்திரேலிய 'இந்தியர்'!
அவமானங்களை விருதாக மாற்றிய ஆஸ்திரேலிய 'இந்தியர்'!

சீக்கிய மக்களும் நம்மவர்களைப் போலவே 'திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு ரகம்தான்'. பல நாடுகளில் பரந்து விரிந்து வாழ்பவர்கள். குறிப்பாக பிரிட்டன்,ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான சீக்கியர்கள் வசிக்கின்றனர். 

வெளிநாடுகளில் உணவகங்கள் நடத்துவது, டாக்சி ஓட்டுவது போன்றஆஈ சீக்கியர்களின் முக்கியத் தொழில். அதே சமயம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதிலும் சீக்கிய மக்கள் தயக்கம் காட்டுவதில்லை. பேரிடர் காலங்களில் குருத்வாராக்களில் இடைவிடாமல் உணவு தயாரிப்பு  பணி நடைபெறறுக்கொண்டே இருக்கும். அந்த சமயங்களில் சொந்த வேலைகளை போட்டு விட்டு குடும்பம் குடும்பமாக சீக்கிய மக்கள், உணவு தயாரிப்பில் ஈடுபட்டு உணவு அளிப்பார்கள். 

சமூகத்துக்கு பல விதங்களில் உதவியாக இருக்கும் சீக்கியர்கள் வீரம் செறிந்தவர்கள், கடுமையான உழைப்பாளிகள், நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள். ஆனால் அவர்கள்தான் 'சர்தார்ஜி ஜோக் ' கில் மூளையில்லாதவர்களாக என்று கேலி கிண்டலும் செய்யப்படுகிறார்கள். வெளிநாடுகளில் தங்கள் மதச் சம்பிரதாயப்படி அணியும் தலைப்பாகையால் பல நேரங்களில் பல விதங்களில் சீக்கியர்கள் பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். 

கடந்த வருடம் நியூசிலாந்தில் நடந்த  விபத்தில், சிறுவன் ஒருவன் காயம் அடைந்தான். இதனைக் கண்ட  ஹெர்மான் சிங் என்ற சீக்கிய இளைஞர் தனது டர்பனை கழற்றி கட்டுப் போட்டு, சிறுவனின் உயிரைக் காப்பாற்ற உதவியாக இருந்தார். அந்த புகைப்படம் வெளியாகி, 'நியூசிலாந்தின் ஹீரோ 'ஆனார் ஹெர்மான் சிங். நியூசிலாந்தில் இந்தியர்கள் மீதான மதிப்பை உயர்த்திய சம்பவம் இது. 

ஹெர்மான் சிங் போன்றே இப்போது ஆஸ்திரேலியாவின் ஹீரோ ஆயிருக்கிறார் மற்றொரு  இந்தியர். ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணம், டார்வின் நகரில் தஜிந்தர் பால் சிங் என்ற சீக்கியர் டாக்சி ஓட்டி வருகிறார். நியூசிலாந்து போல ஆஸ்திரேலியா அல்ல. இங்கு இனவெறி அதிகம். குறிப்பாக டர்பன் அணிந்திருக்கும் சீக்கியர்கள் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாவார்கள்.

தஜிந்தர் பால் சிங்கைக் கூட  ஆஸ்திரேலியர் ஒருவர் தாக்க முயற்சித்துள்ளார். ஆனாலும் சில ஆஸ்திரேலியர்கள் வைத்திருக்கும் இந்தியர்கள் மீதான எதிர்மறை சிந்தனைகளை மாற்ற, தஜிந்தார் பால் சிங் முடிவு செய்தார்.“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” 'என்றக் குறளைப் பின்பற்றி, ஆஸ்திரேலிய மக்கள் மனதில் இடம் பிடிக்க முடிவு செய்தார். 

தஜிந்தர்பால் சிங், தினமும் 12 மணி நேரம் டாக்சி ஓட்டி சம்பாதிப்பார். ஒவ்வொரு மாதத்திலும், கடைசி ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில் தஜிந்தர் பால் சிங் வீட்டில் பெரிய பெரிய அண்டாக்களில் உணவுத் தயாரிப்பு தீவிரமாக நடைபெறும். சுமார் 80 கிலோ அரிசி கொண்டு சாதமும் மற்றும் காய்கறிகளைக்கொண்உ உணவுகளை சமைப்பார். பின்னர் தனது வேனில் எடுத்துச் சென்று ஏழை மக்களுக்கு விநியோகிப்பார். அதற்கு ஃபுட் வேன் என்றே தஜிந்தர் பெயரிட்டிருந்தார். அவரது மகன் நவ்தீப் சிங்கும் இதற்கு உதவியாக இருந்தார். 

கடந்த 4 ஆண்டுகளாக இந்த பணியை தஜிந்தர்பால் சிங்  செய்து வருகிறார். இதற்காக வேறு யாரிடமும் கையேந்துவதில்லை.சீக்கிய அமைப்பு ஒன்று நிதி உதவி செய்ய முன்வந்தபோது கூட,  தஜிந்தர் பால் சிங் அதனை ஏற்கவில்லை. தனது சொந்த பணத்தில் இருந்தே இந்த காரியத்தை செய்து வருகிறார். தஜிந்தர் பால் சிங்கை பார்த்து பலரும் இதேப்போன்று ஏழைகளுக்கு இலவசமாக உணவு விநியோகம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இப்படி பலருக்கும் முன்னுதாரணமாக இருந்த காரணத்தினால், தஜிந்தர்பால் சிங் இந்த ஆண்டுக்கான 'வடக்கு மாகாண லோக்கல் ஹீரோ ' என்ற சிறந்த ஆஸ்திரேலியருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெர்ராவில், ஜனவரி 25ம் தேதி இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. 

-எம்.குமரேசன்