Published:Updated:

குழந்தைகளுக்கு இறக்கைகள் முளைக்கச் செய்யும் பரிசு #Children'sDay

குழந்தைகளுக்கு இறக்கைகள் முளைக்கச் செய்யும் பரிசு #Children'sDay
குழந்தைகளுக்கு இறக்கைகள் முளைக்கச் செய்யும் பரிசு #Children'sDay

குழந்தைகளை பிடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள். அவர்களின் சேட்டைகளை ரசித்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. இன்று குழந்தைகள் தினம். இந்த தினத்திற்கு கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டிருக்கிறது. அவர்களுக்கு பரிசாக என்ன தரலாம் என்ற யோசனையில் இருப்பீர்கள். பொம்மை, கேக், ஸ்வீட் என வழக்கமாக தருவதோடு வித்தியாசமான பரிசையும் இந்த ஆண்டு கொடுக்கலாமே... அதென்ன வித்தியாசமான பரிசு... புத்தகங்கள்தான். அதுதான் பாடப் புத்தகங்கள் இருக்கின்றனவே என்று நினைக்கிறீர்களா... அவற்றைத்தாண்டியும் புத்தகங்களை குழந்தைகள் அவசியம் வாசிக்க வேண்டும். அவை குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும். 'காட்டில் ஒரு சிங்கம் பசியோடு அலைந்துகொண்டிருந்தது...' என்று ஒரு கதையைப் படித்தால் குழந்தைகள் மனதிற்குள் ஒரு காட்டையும் சிங்கத்தையும் உருவாக்கி கொள்வார்கள். பறவைகள் பற்றி படிக்கும்போது, குழந்தைகள் தங்களுக்கே சிறகுகள் முளைத்தாக மகிழ்வார்கள். அப்படியான மகிழ்ச்சியைத் தரும் பத்து தமிழ்ப் புத்தகங்கள் பற்றி அறிமுகம் இதோ!


1. ஆமை காட்டிய அற்புத உலகம்! -  யெஸ். பாலபாரதி. வெளியீடு: புக் ஃபார் சில்ட்ரன், சென்னை. விலை ரூ 60/-

ஐந்து சிறுவர்களை, ஓர் ஆமை கடலுக்குள் அழைத்துச் செல்லும். அப்படிச் செல்லும்போது, கடலுக்குள் இருக்கும் பலவற்றைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள். அதே சமயம் அவர்கள் ஆபத்து ஒன்றிலும் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து எப்படித் தப்பித்தார்கள் என்பதை அனிமேஷன் படம் பார்க்கும் உணர்வைத் தருவதுபோல எழுதியிருக்கிறார் பாலபாரதி. கதையின் நடுவே கடல் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய பெட்டிகளும் உண்டு.

2. தேவதைக் கதைகள் - முரளிதரன் விகடன் பிரசுரம், சென்னை. விலை ரூ.105/-

குழந்தைகளுக்கு சொல்லும் கதைகளில் நிச்சயம் ஒரு தேவதை வந்துவிடுவாள். அந்த தேவதை செய்யும் அதிசயங்களும் மாயஜாலங்களாலும் குழந்தைகள் வளர்ந்தாலும், தேவதையை மறக்கவே மாட்டார்கள். அதுபோன்ற தேவதைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். ஒவ்வொரு கதைகளிலும் தேவதையின் வருகை எப்போது நிகழும். அது என்ன மேஜிக் செய்து சிக்கலைத் தீர்க்கும் எனும் ஆவலைத் தூண்டும் விதத்தில் இருக்கின்றன. முழு வண்ணத்தில் உள்ள இந்தப் புத்தகத்தில் ஹாசிப்கானின் ஓவியங்கள், கதைகளைக் காட்சியாக்கும் பங்கைச் சிறப்பாக செய்கின்றன. சுட்டி விகடனில் தொடராக வெளிவந்து பரவலான பாராட்டுகளைப் பெற்ற கதைகள் இவை.

3. டோரா வரை... கார்ட்டூன் நாயகர்களுடன் சந்திப்பு - ஆயிஷா நடராஜன், வெளியீடு: புக் ஃபார் சில்ட்ரன், சென்னை. விலை ரூ 70/-

குழந்தைகள் டிவியில் விரும்பி பார்ப்பது கார்ட்டூன் சேனல்களே. தங்களுக்கு வாங்கும் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் உள்ளிட்டவற்றில் அந்த கதாபாத்திர படங்கள் இருந்தால் உடனே வாங்க சொல்வார்கள்.  கார்ட்டூன் கதாபாத்திரங்களை தங்கள் நெருக்கமான நண்பர்களாகவே ஏற்றுக்கொள்கிறார்கள். டோரா வரை... எனும் இந்தப் புத்தகம் பென் டெனிசன், ஸ்பைடர் மேன், சோட்டோ பீம், பார்பி உள்ளிட்ட 25 கதாபாத்திரங்களுடன் சுவையான உரையாடலாக அமைந்திருக்கிறது. ஆயிஷா நடராஜனின் எளிமையான மொழி நடை ஈர்க்கிறது.

4. பந்தயக் குதிரைகள் - பாலு சத்யா - வெளியீடு: அம்ருதா பதிப்பகம், சென்னை- 90

பந்தயக் குதிரைகள் பரபரப்பாக செல்லும் துப்பறியும் நாவல். கும்பகோணத்திலிருந்து சென்னை வந்தக் குட்டிப் பெண், உறவுக்கார சிறுவனுடன் ஊரைச் சுற்றிப்பார்க்க செல்லும்போது, அந்தச் சிறுவன் காணமால் போய்விடுகிறான். அவனை, கண்டுபிடிக்க அவள் எடுக்கும் முயற்சிகள் விறுவிறுவென சம்பவங்களால் சுவாரஸ்யமாக கொண்டுச் சென்றிருக்கிறார் பாலு சத்யா.

5. மாகடிகாரம் - விழியன் - வெளியீடு: புக் ஃபார் சில்ட்ரன், சென்னை. விலை ரூ 30/-

மாகடிகாரம் அறிவியல் கலந்து புனைவு நாவல். தீமன் என்னும் சிறுவன் மாகடிகாரத்தை தேடிச்செல்லும், சாகசமும்தான் கதை. அதில் தீமன் செல்லும் இடம், ஊர் ஆகியவை எல்லாம் நிஜம். அதில் நடக்கும் சம்பவங்கள் கற்பனை. உலகத்தின் நேரமே நின்றுபோகப் போகிறது எனும் ஆபத்தை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் விழியன்.

6. எட்டுக்கால் குதிரை : கொ.மா.கோ.இளங்கோ வெளியீடு: புக் ஃபார் சில்ட்ரன், சென்னை. விலை ரூ 30/-

ஒரு பயணம் என்றால் மனிதர்கள் அல்லது விலங்குகள் செல்வது என்றுதான் இருக்கும். ஆனால் ஒரு வகுப்பறையில் எண்கள் (Numbers) படிக்கின்றன. ஒவ்வோர் எண்ணும் இருக்கும் மகிழ்ச்சி, சிக்கல் ஆகியவற்றை சொல்லும்விதமாக கதை தொடங்குகிறது. எழுத்துகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் கதையில் வருகிறது. இவை எல்லாம் சேர்ந்து ஒரு பயணம் செல்லத் திட்டமிடுகின்றன. அந்தப் பயணத்தில் சந்திக்கும் எட்டுக்கால் குதிரை இவர்களை என்னவெல்லாம் செய்கிறது என்பதுதான் மீதி கதை. தொடக்கம் முதல் முடிவு வரை சோர்வு தராத வகையில் எழுதியிருக்கிறார் கொ.மா.கோ.இளங்கோ.

7. சிறகு முறைத்த யானை - கிருங்கை சேதுபதி - வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14 விலை: ரூ 85/-

தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே ரைம்ஸ் பாடிக்கொண்டிருக்கிறார்கள், தமிழில் அப்படி ஏதும் இல்லையா எனக் கேட்பவர்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும். கிருங்கை சேதுபதி குழந்தைகளை ஈர்க்கும் தலைப்புகளில் சந்தத்தின் சுவை குறையாமல் பாடல்களாக எழுதியிருக்கிறார். கேள்வி - பதில் வடிவில் இருக்கும் பாடல்கள் திரும்ப திரும்பவும் பாட வைக்கும்.

8. மாயக்கண்ணாடி - உதயசங்கர் வெளியீடு விலை ரூ 70/-

சிறுவர்களுக்காக தொடர்ந்து எழுதியும் வேறு மொழிகளிலிருந்து சிறந்த படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வரும் உதயசங்கள் எழுதிய சிறார் கதைகளின் தொகுப்பு இந்த நூல். சக மனிதர்களிடம் காட்ட வேண்டிய அன்பினையும் அதிகாரத்தின் முகங்களை புரிந்துகொள்ள வேண்டியது பற்றியும் சுவையாக சொல்லப்பட்டிருக்கும் கதைகள்.

9 பறக்கும் பப்பிப்பூவும் அட்டைக் கத்தி ராஜாவும். மு.முருகேஷ் வெளியீடு: அகநி பதிப்பகம், வந்தவாசி விலை ரூ.40/-

குழந்தைகள் சிரித்துகொண்டே படிக்கும் விதத்திலான கதைகள் அடங்கிய தொகுப்பு. பப்பி எனும் பறக்கும் பூ அட்டை கத்தி ராஜாவை படாத பாடு படுத்தியதை படிக்க படிக்க அவ்வளவு நகைச்சுவையாக இருக்கிறது. ஒரு விஷயத்தை மிக அழகாக தேவையான அளவில் சொல்வதைச் சிறப்பாக செய்திருக்கிறார் மு.முருகேஷ்.

10.  சிவப்புக்கோள் மனிதர்கள் - க.சரவணன் வெளியீடு:  புக் ஃபார் சில்ட்ரன், சென்னை. விலை ரூ . 50/-

பள்ளியில் தன் வகுப்பு நண்பனின் வீடு இருக்கும் பகுதியில் மின்சாரமே கிடையாது எனும் செய்தியைக் கேட்டு ஆச்சரியமாகிறாள் பவித்ரா. ஒருநாள் நண்பனின் வீட்டில் தங்குவதற்கு பெற்றோரின் அனுமதியோடு செல்கிறாள். அங்கு திடீரென்று வரும் வேறுகிரகத்து வாசிகளால் பவித்ராவும் அவளது நண்பர்களும் விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அங்கு இவர்களுக்கு காத்திருந்தது பெரும் ஆபத்து. அதிலிருந்து எப்படித் தப்பித்தார்கள் என்பதை அருமையாக எழுதியிருக்கிறார் க.சரவணன்.  

இன்றைய நாள் குழந்தைகளுக்கானது. அவர்களுக்கான ரசனையை வளர்ப்பதோடு, குறும்புகளையும் ரசியுங்கள். அதை புகைப்படங்களாக பதிவுசெய்யுங்கள்.

- வி.எஸ்.சரவணன்.