பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பே குழந்தைகளிடம் பல்பத்தையும் பலகையையும் கொடுத்துக் கிறுக்க வைத்த காலம் காணாமல் போய், இன்று டேப்லட் கொடுத்துப் பழக்கிக் கொண்டிருக்கிறோம். எழுத்து என்பதே மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உணர்வுகளைக் கொட்டிக் கடிதம் எழுதிய காலங்கள் போயே போச்சு! உணர்வுகள் சுருங்கிப் போன மாதிரியே கடிதங்களும் சுருங்கின. இ மெயிலிலும் வாட்ஸ்அப்பிலும் வார்த்தைகள் மட்டுமின்றி வாழ்க்கையும் குறுகிப் போனது.

எழுதிப் பழக வேண்டிய பள்ளிக் குழந்தைகள், ஸ்மார்ட் போர்டுகளின் பயன்பாட்டால் எழுத மறந்தனர்.

இப்படி கடிதம் எழுதுவது முதல் கையெழுத்து போடுவது வரை எல்லாம் டிஜிட்டல் மயமானதில், கிட்டத்தட்ட எல்லோருமே எழுத மறந்து போனோம்.

எழுத மறந்தவர்களுக்கு மட்டுமின்றி, எழுத விரும்புவோருக்கும் ஒரு நாள் கொண்டாடப்படுகிறது என்பதை அறிவீர்களா?

யெஸ்...  வருடந்தோறும் நவம்பர் மாதம் 15-ம் தேதியை 'ஐ லவ் டு ரைட் டே' என்கிற பெயரில் கொண்டாடுகிறார்கள்.அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் ஜான் ரிடில் என்பவர்தான் இப்படியொரு தினத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்.

''எதையாவது எழுத வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த நாள் அரிய வாய்ப்பு. தெரிந்தவர்களுக்குக் கடிதம் எழுதலாம். கதையோ, கவிதையோ, கட்டுரையோ எழுதுவதற்கான பிள்ளையார் சுழியை போடலாம். டைரி எழுதலாம். என்ன எழுதுவது, எதில் எழுதுவது எனத் தெரியாதவர்கள் அந்த நிமிடத்தைய உணர்வுகளை அப்படியே ஒரு வெள்ளைத்தாளில் எழுதிப் பதிவு செய்யலாம். இப்படி எல்லா வயதினருக்கும் எழுத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டவும், அதைத் தொடர வைக்கவுமே இப்படியொரு தினம்...'' என்கிறார் ஜான் ரிடில்.

ஐ லவ் டு ரைட் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமான எழுத்துப் பயிற்சிப் பயிலரங்குகள் நடைபெறுகின்றன.  சிறப்பாகவும் சரியாகவும் எழுதுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. எழுத்தாளர்கள் மற்றும் புத்தக ஆசிரியர்களுடனான கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. நூலகங்களிலும்,  திறமையான எழுத்தாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக வரவழைக்கப்பட்டு அவர்களது எழுத்து அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

எத்தனையோ விஷயங்களை வெளிநாடுகளில் இருந்து காப்பியடிக்கிற நாம், எழுத்தைக் கொண்டாடும் இந்த நல்ல விஷயத்தையும் பின்பற்றலாம். யாருக்காவது திடீர் கடிதம் எழுதி ஆச்சர்யம் அனுப்பலாம். குழந்தைகளிடம் பேப்பரையும் பேனாவையும் கொடுத்து அவர்கள் கற்பனைக்கேற்ப என்ன நினைக்கிறார்களோ, எதை வேண்டுமானாலும் எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தலாம்.
பள்ளிக் குழந்தைகளிடம் எழுத்துப் பயிற்சியை ஒரு குழு நடவடிக்கையாக செய்ய வைக்கலாம். யாருடைய கையெழுத்து அழகாக இருக்கிறது என்பதற்குப் போட்டிகள் வைப்பதற்குப் பதில் யாருக்கெல்லாம் எழுத வருகிறது என போட்டிகள் நடத்தலாம். எழுதுவதற்கான முயற்சிகள் எடுக்கும் குழந்தைகளுக்குப் பரிசுகள் தரலாம்.

தொடக்கக் கல்வியை முடித்து வெளியேறும் குழந்தைகளில் பெரும்பாலானவர்களுக்கு எழுத்துகளை வாசிக்கத் தெரிவதில்லை என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு. அதற்குக் காரணம் அவர்களுக்கு எழுதுவதில் பயிற்சியின்மை என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது.

பாடங்கள் மனதில் பதியவில்லையா...? பல முறைகள் எழுதிப் பழகுங்கள் எனப் பிள்ளைகளுக்கு போதித்த ஆசிரியர்களும் பெற்றோர்களும் இன்று அருகி விட்டனர். ஆசிரியர்களே முன்பிருந்த ஆசிரியர்கள் எழுதும் அளவுக்கு எழுதுகிறார்களா என்பது கேள்விக்குறிதான்! 

எழுத மறந்த கதையை எடுத்துச் சொல்கிற 'ஐ லவ் டு ரைட்' தினத்தை  எல்லோரும் கொண்டாடுவோம்!

- ஆர்.வைதேகி
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு