Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : லட்சுமிநா.கதிர்வேலன், படம் : கே.கார்த்திகேயன்

நானும் விகடனும்!

இந்த வாரம் : லட்சுமிநா.கதிர்வேலன், படம் : கே.கார்த்திகேயன்

Published:Updated:

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

விகடனைப் பத்தி நான் ஏன் பேசணும்? இப்படிக் கேட்டால் என்கிட்ட சொல்றதுக்கு உடனே பதில் இருக்கு. அப்படிப் பேச எனக்குக் கடமை இருக்கு. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்னு சொல்வாங்க. விகடன் எனக்கு ஆசான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1962 சமயங்களில் எனக்குத் தமிழ் தெரியாது. இந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம்லாம் புகுந்து விளையாடுவேன். ஸ்கூலில் தமிழ்தான் எடுக்கணும்னு அப்பா உறுதியாகச் சொல்லிவிட்டார். அவர் ஒருவழிப் பாதை. போனா போனதுதான். அந்தச் சமயத்தில்தான் விகடன் வீட்டுக்கு வந்துச்சு. அது அம்மா, சித்தியில் ஆரம்பிச்சு கடைசியில்  சமையல்கார அம்மா வரை போகும். இப்ப சீரியலுக்கு உட்கார்ந்திருக்கிற மாதிரி அப்போ எல்லோரும் விகடனுக்காக உட்கார்ந்திருப்பாங்க. 'உங்க ஆத்துக்கு விகடன் வந்துடுத்தோ’ன்னு எல்லோர் வாசலிலும் குரல் கேட்கும். எங்க அப்பா- அம்மாவுக்கு சுப்ரபாதம், கோலம், இந்து பேப்பர், டிகிரி காப்பியோடு கட்டாயம் விகடன் வேண்டும். பழைய காலங்களில் நாங்கள் வீட்டுக்கு விலக்காகி உட்கார்ந்திருந்த சமயங்களில் விகடன்தான் எங்களுக்குத் துணையாக இருந்து நிம்மதி தந்தது.

நானும் விகடனும்!

ஸாரி, மறுபடியும் எனக்கு விகடன் ஆசானாக இருந்த கதைக்கு வர்றேன். எழுத்துக்கூட்டிப் படிச்சு, பெரிய தலைப்பு வாசிச்சு, சின்னச் சின்ன எழுத்துகளுக்குத் தாவி, கொஞ்சம் கொஞ்சமா படிச்சுத் தேர்ந்தேன். எவ்வளவு கதைகள்... எத்தனை நகைச்சுவை! சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்’ வாசித்து முடிக்கிற சமயம் கிடைக்கிற திருப்தி, சந்தோஷம், அடுத்த வாரம் வரை காத்திருக்கணுமேங்கிற பொறுமையின்மை  எல்லாமே ஞாபகத்துக்கு வருது. எங்க தமிழ் ஆசிரியை பத்மாவதி 'விகடனை எடுத்து எழுத்துக்கூட்டிப் படி’ன்னு சொல்வாங்க. அந்த அளவுக்கு 13 வயசுப் பொண்ணு மனசு சலனப்படாத வகையில் தரமா இருந்தது செய்திகள். 'உனக்கு நல்ல ஹ்யூமர் சென்ஸ் இருக்கு’ன்னு என்னை என் நண்பர்கள் சொல்வாங்க. அவங்களுக்குத் தெரியாத காரணம்.. விகடன்தான். இப்போ நண்பர்கள் செல்போனில் ஆயிரம் பேசலாம். சிரிச்சு கலையலாம். ஆனால், நாங்க மனசோடு மனசு பேசிக்கிட்டது விகடனில்தான். விகடன் என் நண்பன்!

திடீரென்று ஒரு திருப்பம். ஜெயகாந்தன் விகடனில் எழுத ஆரம்பிச்சார். பெண்களை வேறு வடிவமாக மாற்றிய கதைகள். 'உனக்குன்னு ஒரு சுதந்திரம் இருக்கு. அதை எந்தச் சமயத்திலும் கைவிடாதே’ன்னு மனசுக்கு இதமா, ஆறுதலாகத் தோளில் தட்டிச் சொன்னது அந்தக் கதைகள். 'அக்னிப் பிரவேசம்’ வந்தப்போ, விகடனை நான் காதலிச்சேன். அப்போ விகடன் தாத்தா தடதடன்னு பல படிகள் இறங்கி வந்து 18 வயசா குறைஞ்சு நின்னார். விகடன் என் காதலன்!

சனிக் கிழமை, ஞாயிற்றுக் கிழமையானா விகடனை பரீட்சைக்குப் படிக்கிற மாதிரி படித்த காலங்கள் எவ்வளவு அருமையானவை. அப்போதுதான் 'சில நேரங்களில் சில மனிதர்கள்’ தொடர் விகடனில் வருது. விழுந்து விழுந்து படிக்கிறோம். காலங்கள் மாறி, அதே 'சில நேரங்களில் சில மனிதர்கள்’ படமாகப்போகிறது. 'லட்சுமிதான் சரியா இருப்பாங்க’ன்னு என்னைப் பரிந்துரைக்கிறார் ஜெயகாந்தன். எவ்வளவு கொடுப் பினை பாருங்க. நாம் தொலைவில் நின்னு... பார்த்து ஆச்சர்யப்பட்டவரே நம்மைத் தேர்ந்தெடுக்கிறார். உங்களுக்குத் தெரியுமா? 'சில நேரங்களில் சில மனிதர்கள்’ முதல்வர் ஜெயலலிதா நடிச்சிருக்க வேண்டிய படம். அவருக்கு நேரம் இல்லாததால் எனக்கு வந்த வாய்ப்பு இது. நன்றி முதல்வரே! எனக்கு அந்த சினிமாவுக்காக தேசிய விருது கிடைத்தது. முதல் தடவையாக ஒரு நடிகையின் படம் விகடனில் வருது. விகடன் ஆபீஸில் இருந்து பரணீதரன் வந்து பொக்கே தருகிறார். எத்தனை தடவை அந்த அட்டையைத் திருப்பித் திருப்பிப் பார்த்திருப்பேன்னு தெரியலை. விகடனில் எழுத்துக்கூட்டிப் படித்த பெண்ணுக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரமா? அப்போது விகடன் என் நாயகன்!

அனுராதா ரமணன் எழுதிய 'சிறை’, ஜே.கே. எழுதிய 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ எல்லாமே எனக்காகவே விகடனில் எழுதப் பட்டதுபோலவே இருந்தது. எனக்கான மரியாதையை வெளியே காண்பித்த படங்களாக இவை அமைந்திருந்தன. இதற்கு நடுவில் 'மழலைப்பட்டாளம்’னு ஒரு படம் பண்ணினேன். ஷூட்டிங் நடத்த ஒரு பத்திரிகை அலுவலகம் தேவைப்பட்டது. விகடனைக் கேட்காமலேயே 'விகடன் ஆபீஸ் போயிடலாம் கே.பி. சார்!’னு உரிமையா பேசினேன். ஏன்னா, விகடன் என் வீடு!

என்னோட பெர்சனல் வாழ்க்கையில் எவ்வளவோ நடந்தது. அதைச் செய்தி ஆக்காமல் என்னைத் தனியாக இருக்க விட்டது விகடன். நினைச்சிருந்தால் என்னைப்பற்றி தாறுமாறாக எழுதி பத்திரிகைகளின் பிரதிகளை நூற்றுக்கணக்கில்  கூட்டியிருக்கலாம். அதை ஒருபோதும் செய்தது இல்லை விகடன்.

திடீரென்று என் மகளைக் காணவில்லை. எங்கே இருக்கிறாள் என்ற தகவலும் இல்லை. உடனே, விகடனில் இருந்து வந்தார் பொன்ஸீ. கூடவே இருந்து தட்டிக் கொடுத்து தைரியம் கொடுத்தது விகடன். அவளைக் கண்டுபிடித்தும் தந்தார்கள். ஆனால், அதைப்பற்றி ஒரு வரிச் செய்திகூட வரவில்லை. அப்படிப் பட்ட மனசு உடையது விகடன். அப்போது விகடன் என் தாய்!

பாலகுமாரன், இந்துமதி, மறைந்த சுப்ரமணியராஜு இன்னும் என் நினைவுக்கு வராத ஏராளமான நண்பர் களை எனக்கு அறிமுகப்படுத்திக் கொடுத்தது விகடன்தான்.

எனக்கு ஆச்சர்யம் அளிப்பது, 'விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்.’ நான் உலகத்தின் எந்த மூலையில் பயணம் செய்தாலும், யாராவது ஒருவர் வந்து தன்னை 'முன்னாள் மாணவப் பத்திரிகையாளர்’ என அறிமுகப்படுத்திக்கொள்வார்கள். அவர்கள்  உயர்ந்த பதவியில் இருப்பார்கள். பெரும் சம்பளம் வாங்குவார்கள். ஆனாலும், அவர்கள் பெருமை எல்லாம், 'நான் விகடன் மாணவ நிருபர்’ என்பதாகவே இருக்கிறது. விகடனின் சிறப்பு அந்நிய தேசத்திலும் உணர முடிகிற தருணம் அது.

இப்போது விகடனுக்கு முகம் மாறி விட்டது. கற்பக விருட்சமாய் வளர்ந்து விட்டது. விகடனின்

நானும் விகடனும்!

கிளைகள் பரவி விட்டன. எல்லாமே வாழ்க்கைக்கு அவசியமான புத்தகங்கள். மறந்துபோன விவசாயத்துக்கு 'பசுமை விகடன்’,  பெண்களின்  பிரச்னைகளைப் பேச..களைய 'அவள் விகடன்’, குழந்தைகளின் உலகத்தில் உறவாடும் 'சுட்டி விகடன்’, பரபரப்பான அரசியலுக்கு 'ஜூனியர் விகடன்’, தெய்வீகமான ஆன்மிக அமைதிக்கு 'சக்தி விகடன்’, வாகன உலகத்தில் பயணிக்க 'மோட்டார் விகடன்’.

என்னைக் கொண்டாடிய விகடனுக்கு பதிலுக்கு நான் என்ன செய்துவிட முடியும்? மனதின் ஆழத்தில் இருந்து, மிக்க பிரியத்துடன், தூய அன்போடு சொல்கிறேன்.

'ஐ லவ் யூ விகடன்’!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism