Published:Updated:

செல்லப்பிராணிகள் உங்கள் குழந்தைகளுக்குத் தரும் பரிசுகள்?! #Petsgivegiftstoyourchildren

செல்லப்பிராணிகள் உங்கள் குழந்தைகளுக்குத் தரும் பரிசுகள்?! #Petsgivegiftstoyourchildren
செல்லப்பிராணிகள் உங்கள் குழந்தைகளுக்குத் தரும் பரிசுகள்?! #Petsgivegiftstoyourchildren

செல்லப்பிராணிகள் வளர்ப்பதென்றால் எல்லோருக்கும் பிடிக்கும். ஒரு நாய், குட்டி போடப்போகிறது என்றால், அதைத் தொடர்ந்து கண்காணிக்கவும், யார் யார் குட்டிகளை எடுத்துக்கொள்வது என்பது பற்றியும் திட்டமிட ஆரம்பித்துவிடுவார்கள் கிராமத்துச் சிறுவர்கள். அந்த நாய், குட்டி ஈன்ற இடத்தைக் கண்டுபிடிக்க, ஒருவன் சிபிஐ வேகத்துடன் செயலில் இறங்குவான். தாய் நாய் இருக்கும்போது குட்டியைத் தூக்கிவர முடியாது. அது எப்போது வெளியே போகும் என்று காத்திருந்து நெருங்க வேண்டும் என நாயின் உளவியலை நண்பர்களுக்கு விளக்கிக்கொண்டிருப்பான் மற்றொருவன். நாய் எத்தனை குட்டி போட்டிருக்கிறது, அதில் பெண் எத்தனை ஆண் எத்தனை, நகம், விரல், காது எப்படி இருந்தால், அதன் குணம் என்னவாக இருக்கும் என விஞ்ஞானத் தகவல்களை அடுக்குவான் அடுத்தவன். பிறகு, தாய் நாய்க்கு போக்குக்காட்டி, ஒருவழியாக குட்டிகளை அள்ளிவந்து, தங்களுக்குள் பிரித்துக்கொள்வார்கள்... அவரவர் வீடுகளில் வளர்க்க.

வீட்டில் குட்டியும் கையுமாகச் சென்று நிற்க, 'உள்ளதையே பார்க்க முடியல. இத வேற இங்க எங்க வெக்கிறது, வளர்க்குறது..?' என்பதான திட்டில் இருந்து அடி வரை கிடைக்கப்பெறுவார்கள் குழந்தைகள். ஆனாலும், அவர்கள் அனைவரது வீடுகளிலும் அடுத்த நாளில் இருந்து நாய்க்கும் பால் வைக்கப்படும். சிறுவர்களின் அடுத்த பொதுக்கூட்டம், தங்கள் நாய்களுக்கு என்ன பெயர் வைப்பது என்பது பற்றியதாக இருக்கும்.

''சிறு வயதில் குழந்தைகள் ஆசைப்படும் விஷயங்களில் மிக முக்கியமானது நாய், பூனை, கிளி என

ஏதாவது ஒரு செல்லப்பிராணியை வளர்ப்பதையே. உணவு வைப்பது, பேசுவது, விளையாடுவது, பராமரிப்பது என அவற்றுடன் அவர்கள் கழிக்கும் நேரத்தால் அந்த விலங்குகளை விட, மனவளம் விஷயத்தில் அந்தக் குழந்தைகளுக்குக்  கிடைக்கப்பெறும் நன்மைகள் அதிகம்'' என்கிறார், மனநல மருத்துவர் செந்தில்வேலன்.

''செல்லப்பிராணி வளர்ப்பு என்பது, பொழுதுபோக்கு மட்டுமல்ல. குழந்தைகளிடம் இயல்பாக உள்ள அன்பு, பாசம், கருணை போன்ற குணங்களை வளர்த்தெடுக்க அந்தப் பழக்கம் தூண்டுகோளாக அமையும்.       

அப்பா ஒரு நாய்க்குட்டி வாங்கித் தந்ததும், அதன் கழுத்தில் கட்ட ஒரு மணி வாங்க வேண்டும் என்றும், அது வெளியே சென்றுவிடாமல் இருக்க ஒரு செயின் வாங்கவேண்டும் என்றும், அதற்கு தண்ணீர், சாப்பாடு வைக்க ஒரு பாத்திரம் வாங்க வேண்டும் என்றும்... இப்படி அவர்களையும் அறியாமல் குழந்தைகளிடம் ஒரு பொறுப்புஉணர்வு வளர்கிறது. பொம்மைகளைவிட, 'உயிருள்ள ஒரு ஜீவனை நான் வளர்க்கிறேன்' என்பதில் குழந்தைகளுக்கு சந்தோஷம் அதிகம். அந்த உணர்ச்சியை எதனோடும் ஒப்பிட முடியாது. அவர்களுக்கிடையேயான மணித்துளிகள், ஆயுள் வரை குழந்தைகள் உடன் வரும்.
செல்லப் பிராணிகள் வளர்க்கும் பழக்கம், குழந்தைகளின் நேர்மறையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். உடற்பயிற்சி, செயல்களில் நேர்த்தி, மனநிறைவு, உதவும் குணம், சமூக இணக்கம், தேடல், தன்னம்பிக்கை,  இந்த அனைத்துப் பண்புகளையும் அது குழந்தைகளிடம் உண்டாக்கும். எப்படி என்று பார்ப்போம்.

உடற்பயிற்சி
நாய்க்கு விளையாட்டுக்காட்டுவது, அதனுடன் விளையாடுவது, கதவிடுக்கில் ஒளிந்துகொள்ளும் பூனையை துரத்தித் தேடிப் பிடிப்பது போன்ற செயல்பாடுகளால், குழந்தைகள் ஆரோக்கியமான உடல் இயக்கங்கள் கிடைக்கப்பெறுவார்கள். டி.வி முன் சிலையாக அமர்ந்திருப்பது, ஸ்மார்ட்ஃபோன், ஐபேடில் தலை கவிழ்ந்துக் கிடப்பது போன்றவை தவிர்க்கப்படும்.

செயல்களில் நேர்த்தி
தன் ஷூ, சாக்ஸைக்கூட கழற்றியவுடன் முறையாக அதற்குரிய இடத்தில் வைக்காத குழந்தைகள்கூட, செல்லப் பிராணி வளர்க்க ஆரம்பித்தவுடன், லவ் பேர்ட்ஸ் கூண்டைச் சுத்தம் செய்வது, மீன் தொட்டியைக் கழுவுவது, நாய்க்கு நேரத்துக்கு உணவு கொடுப்பது, கிளிக்கு தண்ணீர் வைப்பது எனத்  தங்கள் செயல்களில் நேர்த்தியடைவார்கள், பொறுப்புஉணர்வு கிடைக்கப்பெறுவார்கள்.

மனநிறைவு
ஒரு தாய், தன் குழந்தை சமர்த்தாகச் சாப்பிட்டால் எவ்வளவு மகிழ்ச்சிகொள்வாரோ, அப்படியொரு மகிழ்ச்சியைத்தான் தங்கள் செல்லப்பிராணிகள் ஒவ்வொரு முறை வயிறு நிறையும்போதும் அந்தக் குழந்தைகள் உணர்வார்கள். டெம்பிள் ரன், ஆங்ரி பேர்ட் விளையாட்டுகளில் வெற்றிக்களிப்பு கிடைக்கலாம். ஆனால், மனம் இப்படி மகிழ்ந்து மலரும் தருணங்கள் கிடைக்குமா என்ன?!

உதவும் குணம்
வாலாட்டும் நாய் முதல், கீச் கீச்  எனப் பேசும் கிளி வரை ஒவ்வொரு பிராணியும்  தன் நன்றியை மிக ரசனையாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்தும். தன் கால் நகங்களின் பிடிமானத்துக்கு ஏதுவாக தனக்காக  கூட்டுக்குள் குறுக்காக ஒரு குச்சியை வைக்க ஏற்பாடு செய்துதந்த குழந்தை, தன் கூண்டின் அருகில் வந்து நிற்கும்போதெல்லாம் அதை நோக்கி சிறகுகள் படபடக்க வந்து நிற்கும் லவ் பேர்ட். அந்த நன்றிக்கு உரியவன் நான் என்று உணரும் குழந்தை, அதைத் தொடர்ந்து தரிசிக்கத்  தன் செல்லப் பிராணியிடம்  இன்னும் அக்கறை செலுத்தும். மற்றவருக்கு என்ன தேவை என்று யோசித்துச் செய்யும். இந்த ஈரமும் உதவும் குணமும், குழந்தைகளை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும்.

சமூக இணக்கம்
'அங்கிள் வந்திருக்காங்க பாரு...' என்றால், எத்தனை பிள்ளைகள் எழுந்து வந்து வந்திருக்கும் விருந்தினருடன் இயல்பாகப் பேசுவார்கள்? அதுவே, 'இது என்ன முயல் வளர்க்குறீங்க?' என்று விருந்தினர் கேட்க, 'அது என் பொண்ணோட பெட்! பார்த்துப் பார்த்து வளர்க்குறா' என்று அறிமுகம் தந்து மகளை அழைக்கும்போது, தன் செல்லப் பிராணி குறித்த விருந்தினரின் பாராட்டைப் பெறவும், அது குறித்த தன் அனுபவங்களை அவருடன் பகிர்ந்துகொள்ளவும் அந்தக் குழந்தை மனதில் ஒரு ஆர்வம் எழும். அதேபோல, பெட் அனிமல் வளர்க்கும் குழந்தைகளை மற்ற குழந்தைகளுக்கு மிகப் பிடிக்கும். அவர்களுக்கு இடையே நட்பு வளர, அது பாலமாக இருக்கும்.

தேடல்
தன் செல்லப்பிராணிக்குக் கொடுக்கக்கூடிய உணவுகள் என்னென்ன என்பதில் ஆரம்பிக்கும் அவர்களின் தேடல், பருவநிலைக்கேற்ற  பராமரிப்பு, விலங்குகளின் குணங்கள், வாழிடம், நோய்கள், சிகிச்சை என்று விரியும். சங்கிலித் தொடராகப் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள்.

தன்னம்பிக்கை
தன்னால் ஓர் உயிரை வளர்க்க முடிகிறது என்பதே, அவர்களுக்குப்  பெரிய பூஸ்ட்டாக இருக்கும். 'அவளோட கிளி அவகிட்ட மட்டும்தான் பேசும், நாம போனா கத்தும்' என்று சொல்லும்போது, ஓர் சாதனை உணர்வு ஏற்படும். இந்தச்  சின்னச்சின்ன சந்தோஷங்களும் அங்கீகாரங்களும் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும்.

குழந்தைகள் செல்லப் பிராணிகள் வளர்க்கும்போது கவனித்தில்கொள்ள வேண்டியவை...
* குழந்தைகளின் வயதுக்கேற்ப செல்லப்பிராணி வளர்ப்புப் பொறுப்புகளை அனுமதிக்க வேண்டும். உதாரணமாக, நாய்க்கு 3 வயதில் உணவு எடுத்து வைக்கவும், 5 வயதில் நாயின் இருப்பிடத்தை ஒழுங்குபடுத்தவும், இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் வாக்கிங் அழைத்துச் செல்லவும் அனுமதிக்கலாம். டீன் ஏஜ் பிள்ளைகளிடம் நாயை முழுமையாக ஒப்படைத்துவிடலாம்.
* செல்லப்பிராணிகளுக்கான தடுப்பூசிகளைத்  தவறாமல் போட வேண்டும். அவற்றின் சுகாதாரத்திலும் ஆரோக்கியத்திலும் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
* செல்லப்பிராணிகளை 'பெட் க்ளினிக்' அழைத்துச் செல்லும்போது, குழந்தையையும் உடன் அழைத்துச் சென்று, அது குறித்து மருத்துவர் வலியுறுத்தும் விஷயங்களை நேரடியாகக் கேட்டறியச் செய்ய வேண்டும்.

மொத்தத்தில், செல்லப்பிராணிக்கும் குழந்தைக்கும் இடையே பலமான பிணைப்பு உண்டான பின், தன் தாயுடன் உணரும் கதகதப்பை அந்த விலங்குகள் குழந்தையிடம் உணர்வார்கள் என்றும், தன் பெற்றோர் உடன் இருக்கும் உணர்வையும் மகிழ்வையும் குழந்தைகள் அந்த விலங்கிடம் உணர்வார்கள் என்றும் தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே, பெட் அனிமல்ஸ் நல்லது!" என்கிறார் டாக்டர் செந்தில்வேலன்.

உங்கள் குழந்தையின் கைகளுக்கு ஓர் உயிரைப் பரிசளிப்பதைவிட, மகத்தான மகிழ்ச்சியை அவர்களுக்குத் தந்துவிட முடியுமா என்ன?!

- கே.ஆர்.ராஜமாணிக்கம்