Published:Updated:

தலை வாரி பூச்சூடி உன்னை...

சிலேட்டுப் பருவத்தின் முதல் நாள்

தலை வாரி பூச்சூடி உன்னை...

சிலேட்டுப் பருவத்தின் முதல் நாள்

Published:Updated:
##~##

மச்சீர் கல்வி வழக்கு விவகாரங்கள், இரு வார காலத்துக்கு என்ன மாதிரியான பாடங்களை நடத்துவது என்ற குழப்பம் என இனம் புரியாத சூழலில் கடந்த 15-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்றரை மாதங்களுக்கு மேல் விடுமுறையில் இருந்து திரும்பும் குழந்தைகள், பிளே ஸ்கூல், ப்ரீகேஜி, எல்.கே.ஜி-யில் சேர வரும் குழந்தைகள் என்று இந்த முதல் பள்ளி அனுபவங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கவிதைகள். குழந்தைகளைப் பள்ளியில் விட வரும் பெற்றோர்களின் முகத்தில், 'ஸ்ஸ்... அப்பாடா ஸ்கூல் திறந்தாச்சு. நாலஞ்சு மணி நேரம் ஃப்ரீயா இருக்கலாம்... இருந்தாலும் ஸ்கூல்ல ஒழுங்கா சாப்பிடுவானா, மேல கீழ விழுந்து அடி பட்டுக்கிட்டு வருவாளோ, டீச்சருங்க ஒழுங்கா கவனிச்சுக்குவாங்களா, அடம் பண்றாளேனு ஆயாம்மா அடிச்சுடுவாங்களோ?’ என்று கலவையான கவலை ரேகைகள் ஓடுவதைப் பார்க்க முடிந்தது.

கோபாலபுரத்தில் ஒரு மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் வாசலில் ஒரு குழந்தை தன் பிஞ்சுக் கைகளால் அம்மாவின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு இறங்க மறுத்தது. 'என் செல்லம்ல, சும்மா ஒரு மணி நேரம்தான். அம்மா பக்கத்துலயே இருப்பேனாம். இங்கப் பாரு எவ்வளவு பாப்பா இருக்காங்க பாரு. அவங்களோட நீயும் விளையாடுவியாம். அப்பப்ப அம்மா ரித்விக்கோட புது பாக்ஸ்ல இருந்து சுண்டல் எடுத்துக் கொடுப்பேனாம். ரித்விக் குட்டி காக்கா மாதிரி ஓடியாந்து வாங்கிட்டுப் போயிடுவியாம்’ என்று என்னென்னமோ சொல்லி தாஜா செய்கிறார். 'இல்ல... நீ பொய் சொல்ற. நான் உள்ள போனதும் நீ போயிடுவ’ என்று ரித்விக் அடம் பிடிக்க... அம்மாவின் முகத்தில் ஆத்திரமும் அழுகையும்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலை வாரி பூச்சூடி உன்னை...

ஸ்கூலுக்குள் இன்னொரு குழந்தை அழுது அடம்பிடிக்க, டீச்சர் தன் செல்போனை எடுத்துப் பேசுவதுபோல பாவ்லா செய்கிறார். 'ஹலோ! தினகரோட அம்மாவா... பாவம் தினகர். எவ்வளவு நேரமா அழுதுட்டு இருக்கான். இன்னும் அவனை அழைச்சுட்டுப் போக நீங்க வரலையா? சீக்கிரம் வாங்க’ என்றபடி, 'தினகர் உங்க அம்மா வர்றாங்களாம் செல்லம்’ என்றார். அடுத்த நிமிஷம் தினகர் சமத்தாக பொம்மைகளுடன் விளையாடத் தொடங்கிவிட்டான்.

சில சீனியர் சுட்டிகள் சத்தமாகக் கடந்த ஆண்டு மனப்பாடம் செய்த ரைம்ஸ்களை எடுத்துவிட, ஜூனியர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் பக்கத்து கிளாஸ்களில் இருந்து மலங்க மலங்க விழித்தனர். சில நிமிடங்கள் அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டுஇருந்த சில குழந்தைகள், மணிச் சட்டங்களைப் போட்டு உடைத்தும், பிளாஸ்டிக் சறுக்குகளைத் தள்ளிவிட்டும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினர்.

'உங்க பிள்ளை சமத்துங்க. இவன்தான் வாலுப் பயல். அக்கம்பக்கம் டெய்லி கலவரம்தான்’ என ஓர் அம்மா தன் பையனைப் பற்றி எரிச்சலாவதுபோல் பெருமை பேச, மற்றொரு அம்மா, 'இவனும்தாங்க. அவ்வளவு ரைம்ஸ் சொல்லுவான். இடம் புதுசா இருக்குறதால அமைதியா இருக்கான்’ என்று விட்டுக்கொடுக்காமல் பேசினார்.

'அங்கப்பாரு சந்தோஷ், எவ்வளவு சமத்துப் பிள்ளையா இருக்கான் பாரு’ என்ற மிஸ்ஸிடம், 'நான் மிஸ்.. நான் மிஸ்...’ என்று ஆளாளுக்குக் கைகளை உயர்த்த, 'யெஸ்... நீங்க எல்லாருமே சமர்த்துப் பசங்கதான்’ என்றபடி கெஞ்சிக் கொஞ்சுகிறார் மிஸ்.

ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு படிக்கும் சூப்பர் சீனியர் குமரன், தன் அம்மாவிடம், 'மறுபடியும் எப்பம்மா லீவு விடுவாங்க?’ என்றபடி கவலையோடு பேக்கை மாட்டிக்கொண்டு வகுப்பறை நோக்கி நடக்கிறான்!

க.நாகப்பன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism