Published:Updated:

என் ஊர்!

'சாப்பாடுன்னா அது சேலம்தாய்யா!'

என் ஊர்!

'சாப்பாடுன்னா அது சேலம்தாய்யா!'

Published:Updated:
##~##

சேலம் கண்ணன்... அ.தி.மு.க-வின் ஆரம்பக் கால ஆணிவேர்களில் ஒருவர். எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமான நண்பர். ஜெயலலிதாவின் தொடக்கக் கால ஆபத்பாந்தவன். தனது ஊரான சேலத்தைப் பற்றிய நினைவுகளை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார்!

 ''பேரோடு ஊரும் சேர்ந்து அமையும் வாய்ப்பு சில பேருக்குத்தான் கிடைக்கும். அந்த வகையில நான் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி. சேலம்னு மனசுக்குள்ள ஒரு தடவை சொல்லிப் பார்த்தாலே போதும். என்னையும் அறியாமல் ஒரு புது உற்சாகம் பிறக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ் சினிமாவை வளர்த்ததில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்கும், ரத்னா ஸ்டுடியோவுக்கும் பெரும் பங்கு உண்டு. சினிமாவில் ஜெயித்த முந்தைய தலைமுறைகள் எல்லோருக்குமே தாய் வீடு சேலம்தான். அது தலைவர் எம்.ஜி.ஆராக இருந்தாலும் சரி, கருணாநிதியாக இருந்தாலும் சரி முதல்வராக ஆவதற்கு முன்பே நடிக்கும் காலத்தி லேயே எம்.ஜி.ஆருக்கும் சேலத்துக்குமான தொடர்புகள் அதிகம். சேலத்துல ஒவ்வொரு தெரு வும் எம்.ஜி.ஆருக்கு அத்துப்படியாகத் தெரியும். அவர் அரசியலுக்கு வந்த பிறகுதான் இதெல்லாம் எனக்குத் தெரிய வந்தது.

என் ஊர்!

சேலம் ஐந்து ரோடு சந்திப்புல துவாரகா ஹோட்டல்னு ஒரு பிரமாண்டமான ஹோட்டல் இருந்தது. வி.ஐ.பி-கள் வந்தால் அந்த ஹோட்டல்ல தான் தங்குவாங்க. இன்னிக்கு அந்த ஹோட்டல் இடிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாகி இருக்கிறது. பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல மங்களம்னு ஒரு அசைவ ஹோட்டல் இன்னும்கூட இருக்குது. அதுல மட்டனும் தலைக் கறியும் அவ்வளவு பிரமாதமாக இருக்கும். சாப்பிட உட்கார்ந்தா சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்.

சாப்பாடுனு சொன்னதும் எனக்குத் தலைவர் எம்.ஜி.ஆர். ஞாபகம்தான் வருது. ஒரு சமயம் அவர் சேலம் வரும் போது விடியற்காலை 3 மணி இருக்கும். ஹோட்டல் ரூமுக்குள்ளப் போன தலைவர், 'கண்ணனைக் கூப்பிடுங்க’னு சொல்லி இருக்காரு. நானும் ரூமுக்குப் போனேன். 'நல்லா பசிக்குது கண்ணா. ஏதாவது அசைவம் அயிட்டம் இருந்தா வாங்கிட்டு வா’னு சொல்லிட்டாரு. அந்த நேரத்துல எந்தக் கடையும் கிடையாது. அதைத் தலைவர்கிட்ட சொல்லவா முடியும்? என்னோட நண்பரோட நேஷனல் ஹோட்டலுக்குப் போனேன். தூங்கிட்டு இருந்தவங்களை எழுப்பி விஷயத்தைச் சொன்னேன். புரோட்டாவும், சிக்கன் குழம்பும் உடனே தயார் பண்ணிக் கொடுத்தாங்க. அந்த விடியற்காலை நேரத்தில் அதைத் தலைவர் ரொம்பவும் ரசித்து ருசித்துச் சாப்பிட்டார். அதுக்குப் பிறகு எப்பவுமே, 'சாப்பாடுன்னா அது சேலம்தாய்யா!’ன்னு எல்லோருகிட்டயுமே சொல்லுவாரு.

சேலம் மாவட்டத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் மாந்தோப்பு இருக்கும். சேலத்தில் இருந்து அரூர் போகும் வழியில ஆச்சாங்குட்டப்பட்டினு ஒரு கிராமம் இருக்குது. அங்கே ஒரு தோட்டத்துல ஆறு மாமரங்கள் மட்டும் இருக்கும். அந்த மரத்தோட பழங்கள்னா தலைவருக்கு உசிரு. ஒவ்வொரு வருஷமும் நானே அந்தத் தோட்டத்துக்குப் போய் மொத்தமா பழங்களை வாங்கிட்டுப் போவேன். எம்.ஜி.ஆர். மாமரம்னு அந்த மரங்களைக் கட்சிக் காரங்க கூட சொல்வாங்க.

என் ஊர்!

வெயில் அதிகம் உள்ள ஊருனு எல்லோரும் சொல்லுவாங்க. ஆனா, வெயிலே தரையில படாத அளவுக்கு  ஐந்து ரோட்டுக்கும் நான்கு ரோட்டுக்கும் நடுவுல ரெண்டு பக்கமும் மரங்கள் சூழ்ந்து இருக்கும். பகல் நேரத்திலயே அந்த ரோட்டுல போகும்போது இருட்டா இருக்கும். இன்னிக்கு அந்தப் பாதையில் ஒரு மரம்கூட கிடையாது. எல்லாத்தையும் வெட்டிட்டாங்க. பக்கத்தில் இருக்கிற ஏற்காட்டுக்குப் போயிட்டா இப்பவும் ஏ.சி. போட்ட மாதிரி எப்பவும் ஜில்லுனு இருக்கும். மனசு சரியில்லைனா ஏற்காட்டுக்குப் போயிடுவேன். ஜிலு ஜிலுனு வீசுற காத்துல ஒரு மணி நேரம் அமைதியா உட்கார்ந்திருந்தா மனசு லேசாகிடும்.

தெருவுக்கு ஒரு கோயிலாவது சேலத்துல இருக் கும். எந்தக் கோயிலாக இருந்தாலும் ஒவ்வொரு சீஸன்ல ஒவ்வொரு ஏரியாவுல லவுட் ஸ்பீக்கர்ல 'தாயே கருமாரி... எங்கள் தாயே கருமாரி’னு பாட்டுச் சத்தம் காதைக் கிழிக்கும். அவ்வளவு பக்தி நிறைந்த மக்கள் இங்கே இருக்காங்க.

சேலத்து மக்களுக்கு யாரையும் ஏமாத்தத் தெரி யாது. எந்தத் தொழில் செய்தாலும் அதுல ஒரு நேர்த்தி இருக்கும். கைத்தறியாக இருந்தாலும் சரி, பவர் லூம் தறியாக இருந்தாலும் சரி, விவசாயமாக இருந்தாலும் சரி செய்யுற வேலையைத் தெய்வமா மதிச்சு செய்வாங்க. சேலம் மாவட்டத்துல உற்பத்தி செய்த பொருள் எதுவாக இருந்தாலும் தைரியமா நம்பி வாங்கலாம்.

என்னைப் பொறுத்தவரை என்னோட சேலத்தை,  பெத்த தாய்க்குச் சமமாக மதிக்கிறேன். வேலைக்காக, படிப்புக்காகனு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காலகட்டத்துல சொந்த ஊரைவிட்டு வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்து இருக்கலாம். ஆனால், யாராக இருந்தாலும் அவங்களோட கடைசிக் காலத்தைச் சொந்த ஊர்லதான் கழிக் கணும். அதுதான் நிறைவான வாழ்க்கை. என்னைக் கூட எங்கெங்கோ வரச் சொல்லி கூப்பிட்டுப் பார்த்தாங்க. உசுரு கொடுத்த மண்ணைவிட்டு எங்கே போக முடியும். சொல்லுங்க?''

- கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism