Published:Updated:

தலை வாரி பூச்சூடி உன்னை...

சிலேட்டுப் பருவத்தின் முதல் நாள்

தலை வாரி பூச்சூடி உன்னை...

சிலேட்டுப் பருவத்தின் முதல் நாள்

Published:Updated:
##~##

'நாளைக்கு ராத்திரி தூங்குறப்போ என்னய அடிச்சேல்ல. நான் இப்போ க்ளாஸுக்குப் போக மாட்டேன் ப்போ...’ குழந்தை பிடிவாதம் பிடிக்க... 'ஸாரிடா கண்ணு... அப்பா உனக்கு இன்னிக்கு ரெண்டு ஜெல்லி வாங்கித் தர்றேன். க்ளாஸுக்குப் போயிட்டு வா சாமி...’ - பத்து நிமிடங்கள் தாண்டி யும் படியவில்லை டீல். ஒரு வழியாக இரண்டுக்கு நான்கு ஜெல்லி என டீல் படிய... கை நிறைய ஜெல்லியுடன் க்ளாஸுக்குப் போகிறான் பையன்!

 'உச்சா வந்தா மிஸ்கிட்ட சொல்லணும். யூனிஃபார்ம்லேயே போயிடக் கூடாது’ என்று கெஞ்சிக் கொண்டு இருந்தார் மம்மி ஒருவர். 'இதெல்லாம் எனக்குச் சொல்லணுமா? எல்லாம் எனக்குத் தெரியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலை வாரி பூச்சூடி உன்னை...

நீ அழாம பத்திரமா வீட்டுக்குப் போம்மா... ஷேம்... ஷேம்...’ என்று அம்மாவுக்கு அட்வைஸ் பண்ணிக்கொண்டு இருந்தாள் இன்னொரு பெரிய மனுஷி.

இன்னொரு பக்கமோ, ''மம்மி, தொட்டுப் பாருங்க. எனக்கு ஃபீவரா இருக்கு, த்ரோட் எல்லாம் வலிக்குது. நெக்ஸ்ட் வீக் ஸ்கூலுக்கு வர்றேனே மம்மி!’ - 'ஐ ஆம் பாவம்’ கணக்காக ஆட்டம் காட்டிக்கொண்டு இருந்தது இன்னொரு வாண்டு. அழகான பொய்களும் செல்லச் சிணுங் கல்களும் ஆர்ப்பாட்டங்களுமாக நிரம்பி வழிகிறது பள்ளிக்கூடத்தின் முதல் நாள்!

சாலைகளிலோ வழக்கத்தைவிட கூடுதல் போக்கு வரத்து நெரிசல். இருந்தாலும் வழக்கத்துக்கு மாறான புன்னகையுடன் அதைச் சரிசெய்கிறார் போக்குவரத்துக் காவலர். அன்று மலர்ந்த பூக்களுக்கு யூனிஃபார்ம் அணிவித்து ரோட்டில் அணிவகுப்பை நடத்தினால் கோபித்துக்கொள்ள முடியுமா என்ன?  சற்று வளர்ந்துவிட்ட மாணவர்களும், மாணவிகளும் இறுகிய முகத்தோடும், தோழியைக் கண்ட சந்தோஷத்திலும் புதுவகுப்பு புகுகிறார்கள். ஆனால், கடவுளின் தோழர்களான கிண்டர் கார்டன் வாண்டுகள்தான் ஆனந்தம், அழுகை, போராட்டம் என்று விதவிதமான உணர்வுகளோடு வகுப்பறை களை எதிர்கொள்கிறார்கள்.

காந்திபுரம் தனியார்ப் பள்ளி வாசலில் மெரூன் கலர் ஃப்ராக்கும், வெண்ணிறச் சாக்ஸுமாக தேவதர்ஷினி, அப்பாவின் தோளில் சோகமாகச் சாய்ந்துகொள்கிறாள். அவளது கண்ணீர்த் துளிகள் முதுகை நனைக்க, ஏதேதோ சமாதானம் சொல்லி இறக்கிப் பள்ளிக்கு அனுப்புகிறார். வாண்டு சிரித்துக்கொண்டே உள்ளே ஓட... குழந்தையாக மாறி அழுகிறார் அப்பா.

பள்ளிக்குள் புது அட்மிஷன் பூக்களைத் தூக்கி வனிதா மிஸ் கொஞ்சிக்கொண்டு இருக்க... பொஸஸிவ் புலியாகப் பாய்ந்து மிஸ்ஸின் ஜடை பிடித்து இழுத்து ரவுடித்தனம் செய்கிறான், முதல் வகுப்பு படிக்கும் ஓல்டு ஸ்டூடன்ட் நந்து. முதல் நாள் வாண்டுகளுக்குப் பாடம் எதுவும் இல்லை. அவர்களை வழிக்குக்கொண்டு வருவதற்குள் விழி பிதுங்கிவிட்டது டீச்சர்களுக்கு. பெற்றோர்கள் வகுப்புகளுக்கு வெளியே நகம் கடித்துக் காத்து இருக்க... நிறைய வாண்டுகள் பெஞ்சில் தலை வைத்துத் தூங்கிவிட்டன. இன்னும் சில அம்மாக்களோ, 'அம்மு குட்டி, பால் குடிக்கிற நேரம்...’ என்று 10.30 மணிக்கு எல்லாம் பால்புட்டியுடன் டீச்சரிடம் பர்மிஷன் கேட்டார்கள். 'அந்தப் பழக்கம் மாறத் தான் ஸ்கூலுக்கு அனுப்பி இருக்கீங்க’ என்று பக்குவ மாகப் பேசி அனுப்பினார்கள் அனுபவப்பட்ட ஆசிரியைகள்.

தலை வாரி பூச்சூடி உன்னை...

இன்னும் சில வாண்டுகளுக்கோ இது புது அனுபவம்போல. 'அப்பா, அம்மா டார்ச்சரில் இருந்து தப்பித்தோம், பிழைத்தோம்’ என டூர் மூடில் மைதானத்துக்குள் புழுதி பறக்க ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தன. மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளையும், தாகூரும் பாவம். தத்தக்கா பித்தக்கா மழலைத் தமிழில் குழந்தைகள் பாடிய தமிழ்த் தாய் வாழ்த்தையும் தேசிய கீதத்தையும் கேட்க கொடுத்த வைக்கவில்லை அவர்களுக்கு!

சில குழந்தைகள் ரொம்பச் சமத்து. நிற்க சொன்னால் நிற்கிறார்கள். உட்காரச் சொன்னால் உட்கார்கிறார்கள். குட்மார்னிங்கும் வணக்கமும் அழகாகச் சொல்கிறார்கள். பரவாயில்லையே என்று பாராட்டினால், 'நிறையா நாளு அப்பா டிரெய்னிங் கொடுத்தாரே!’ என்று உண்மையைப் போட்டு உடைக்கிறார்கள். ஸ்கூல் நடுவே பூங்காவுக்குள் இருக்கும் யேசு சிலையை நோக்கி சிலுவை போட்டு, கண்மூடிக்கொள்கின்றன சில குழந்தைகள். யேசுவுக்கு ஃப்ளையிங் கிஸ் பறக்கவிட்டு நகர்கிறாள் மீனுக்குட்டி.

இரண்டாம் வகுப்பிலோ, பழைய நண்பர்களைக் கண்ட சந்தோஷத்தில் பிஸ்கட் பாக்கெட் கிழித்து, சாக்லெட் பரிமாறி, வாட்டர் பாட்டில் மூடியைத் தொலைத்து, ரிங்கா ரிங்கா ரோஸஸ் பாடி... அரை மணி நேரத்தில் அத்தனை அதகளங்களும் அரங்கேற... ஓரமாக நின்று குறும்புகளை ரசிக்கிறார் வாத்தியார்.

கல்விக் கட்டண பிரச்னை, சமச்சீர் கல்வி குளறுபடி போன்றவற்றால் பள்ளி நிர்வாகங்களும் பெற்றோரும் குழப்பத்திலும் பரபரப்பிலும் இருக்க... 'ராஜ்ஜா... ராஜ்ஜா ராக்கிட்டு ராஜ்ஜா... ஏ, ராஜ்ஜா ராஜ்ஜா பிக்பாக்கெட் ராஜா...’ என்று கூலாகப் பாடிக் கொண்டே பள்ளி முடித்து படி இறங்குகிறது ஒரு வாண்டு!  

- எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ், தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism