Published:Updated:

புத்தகத் தாத்தா!

புத்தகத் தாத்தா!

##~##

துரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி. படிக்கும் மாணவர்கள் அனைவரும் தங்ளுடைய ஆய்வுக் கட்டுரையில் நன்றியோடு நினைவுகூரும் பெயர் 'புத்தகத் தாத்தா’ முருகேசன். முனைவர் திருமலையின் 'பேச்சுக் கலை’ என்ற புத்தகம், இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 208 கல்லூரிகளில் தமிழ் பட்டப் படிப்பில் ஒரு பாடமாக உள்ளது. அந்தப் புத்தகத்தைப் பேராசிரியர் திருமலை யாருக்குச் சமர்ப்பணம் செய்து இருக்கிறார் தெரியுமா? இதே முருகேசன் தாத்தாவுக்குத்தான்!

 யார் அந்த முருகேசன் தாத்தா?

புத்தகத் தாத்தா!

இரண்டாம் வகுப்பைக்கூட எட்டிப் பார்க்காத, பழைய பேப்பர் கடைக்காரர்தான் முருகேசன். பெரிய துணிப்பை ஒன்றில் 30, 40 புத்தகங்களைச் சுமந்துகொண்டு தள்ளாடியபடி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்குள் நுழைகிறார் புத்தகத் தாத்தா. தமிழியிற்புல (தமிழ்த் துறை) கட்டடத்தின் படிக்கட்டில் அவர் வந்து அமர்ந்ததும், 'தாத்தா   வந்தாச்சு’ என்று பெரிய படையே அவரை முற்றுகை இடுகிறது.

புத்தகத் தாத்தா!

முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு, ஆய்வுக்குத் தேவையான கருத்துக்கள் அடங்கிய புத்தகங்களைத் தேடுவது என்பது ஞானப் பழத்துக் காக உலகத்தைச் சுற்றி வருவதைப் போன்று கஷ்ட மானது. ஆனால், புத்தகத் தாத்தாவைச் சுற்றி வந்தால் நொடியில் கிடைத்துவிடுகிறது அந்த ஞானப் பழம்.

அவரைப் பற்றி பெருமைப் பொங்கப் பேசுகிறார் கள் ஆய்வு மாணவர்கள். வத்திராயிருப்பைச் சேர்ந்த ஆய்வு மாணவர் குருசாமி கூறுகையில், 'காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காக நான் தேர்ந்தெடுத்து இருந்த தலைப்பு 'இலக்கணப் புறநடைகள்’. அதாவது 'எக்ஸப்ஷன் ஆஃப் கிராமர்’. ரொம்பவே சிக்கலான தலைப்பு. அது தொடர்பான  புத்தகங்களை எங்கே தேடுவது? என்று குழப்பத்தில் இருந்தேன். தாத்தா பத்திக் கேள்விப்பட்டதுமே போய்ப் பார்த்தேன். நாலே நாள்ல புத்தகத்தைக் கொண்டுவந்து கொடுத்துட்டார். இங்கே மட்டும் இல்லை. எல்லாப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தாத்தா அவ்ளோ பரிச்சயம்!' என்றார் ஆச்சர்யம் விலகாமல்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி அம்பிகாவதி,  ''எங்கே எந்தப் புத்தகம் கிடைக்கும் என்பதை நன்றாகத் தெரிந்துவைத்து இருப்பார். ஏன்னா நூற்றுக்கும் மேற்பட்ட நூலகர்கள், பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள் தாத்தாவுக்குப் பழக்கம். எப்போ தும் தாத்தா சிரிச்சுக்கிட்டே இருப்பார். நாம வாங்கின புத்தகத்தைத் தொலைச்சுட்டோம்னு தெரிஞ்சா மட்டும் டென்ஷன் ஆகிருவார்.       'எத்தனை பேருக்குப் பயன்படுகிற புத்தகத்தை இப்படி தொலைச்சுட்டியே’னு கோபப்படுவார்'' என்கிறார். பல்கலையின் தமிழியற்புலத் தலைவர் மு.மணிவேல், 'இந்தச் சேவையை இலவசமாகவே செஞ்சு தர்றார். மாணவர்கள் அன்பாகக் கொடுக்குற காசுதான் அவரோட ஒரே வருமானம். ஒருவேளை கூட சாப்பிட மாட்டார். டீ, வடை சாப்பிட்டுக்கிட்டே ஊர் ஊரா அலைவார். ஆய்வு மாணவர்களுக்கு இவர் பெரிய வரப்பிரசாதம்'' என்றார்.

புத்தகத் தாத்தா!

'நான் பிறந்தது மதுரை மாவட்டம் குமாரம் அருகே உள்ள தண்டலை கிராமம். 14 வயசுல பிழைப்புக்காகத் திண்டுக்கல் போனவன், ஒரு பலசரக்குக் கடையில நின்னேன். பெரியவன் ஆனதும் தனியா பலசரக்குக் கடை போட்டதோடு, பக்கத்திலேயே பழைய பேப்பர் கடையும் நடத்தினேன். அப்போ கடைக்கு வரும் பழைய பேப்பர் தொடங்கி கையில் கிடைச்சதை எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். அபூர்வமான தகவல்கள் எதாவது தென்பட்டா, அந்தப் பக்கத்தைக் கிழிச்சு வெச்சுப்பேன். முக்கியமான புத்தகங்கள்னு தோணுறத பத்திரப்படுத்த ஆரம்பிச்சேன். 1990-ம் ஆண்டு மதுரை யாதவர் கல்லூரிக்குச் சென்றபோது பேராசிரியர் தண்டபாணி, 'உங்கக்கிட்டே அரிய புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. அதை ஆய்வுக்குக் கொடுக்க லாமே’ன்னு கேட்டார். எனக்கு புரியவில்லை. உடனே, 'ஆய்வுப் பணின்னா என்ன?’ என்று சொல்லிக் கொடுத்தவர், பல ஆய்வு மாணவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியும் வைத்தார். என்னிடம் புத்தகம் வாங்கி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த மாணவர்கள் பலர், இப்போது தமிழ்நாடு முழுக்கப் பல கல்லூரிகளில் பேராசிரியரா இருக்காங்க'' என்று பொக்கை வாய் காட்டி புன்னகைக்கிறார் தாத்தா!

      - கே.கே.மகேஷ், படங்கள்:   க.கார்த்திக்

அடுத்த கட்டுரைக்கு