Published:Updated:

என் ஊர்!

''சாதியில்லா ஊரில் குடியிருக்க வேண்டும்!''

என் ஊர்!

''சாதியில்லா ஊரில் குடியிருக்க வேண்டும்!''

Published:Updated:
##~##

''எந்த ஊர்?''
''ஆம்பூர்.''
''ஆம்பூரில் எங்கே?''
''கஸ்பா.''
''A-கஸ்பாவா? B-கஸ்பாவா?''

என் ஊர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதில் எனக்குத் தயக்கம் இருந்தது. பொதுவாகவே யாராவது 'ஊர் எது?’ என்று விசாரிப்பது இறுதி யில் ஒருவருடைய சாதியைத் தெரிந்துகொள்வதற்கே என்பதை நான் பலமுறை உணர்ந்து இருக்கிறேன்'' என்று தன் ஊரான ஙி-கஸ்பா பற்றி சொல்லத் தொடங்கினார் 'தலித் முரசு’ இதழின் ஆசிரியர் புனிதபாண்டியன்.

''இதனால் மற்றவர்களுக்கு இருப்பதைப்போல ஊர் குறித்த எந்தப் பெருமிதமும் எனக்கு இல்லை. யாராவது கேட்டால் சென்னை என்றே சொல்லத் தொடங்கினேன். வேலூர் மாவட்டத்தி லேயே இரண்டாவது பெரிய சேரி, கஸ்பா. சேரி என்றால் மக்கள் சேர்ந்து வாழும் இடம் என்று பொருள். வேளச்சேரி, கூடுவாஞ்சேரி, பாண்டிச் சேரி என்று ஊர்களில் சேரி வரலாமாம். ஆனால், அதுவே தலித் மக்கள் வாழும் சேரி என்றால் மட்டும் கேவலமாம். என்ன மாதிரியான மனநிலை இது?

கஸ்பா A-யில் சாதி இந்துக்களும் கஸ்பா B-யில் தலித்துகளும் வாழ்ந்து வந்தோம். கஸ்பா என்பது அரபு வார்த்தை. முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் அரபுச் சொல்லால் அழைக்கப் பட்டது என்று நினைக்கிறேன்.  கையால் மலம் அள்ளும் தொழிலாளிகள் அள்ளிய ஊர் மக்களின் மலத்தை எல்லாம் ஊரின் எல்லையில் கொட்டி வைக்கும் இடமாக எங்கள் சேரி இருந்தது. இதனாலேயே எங்கள் ஊரின் பெயரை B கஸ்பா என்பதற்குப் பதிலாக, 'பீ கஸ்பா’ என்று கிண்டல் செய்வார்கள் ஊரில் உள்ள மாணவர்கள். பள்ளிக்கு வருவதற்கு எங்கள் சேரி வழியாக வந்தால் மிகவும் சுலபமாக வந்தடைந்துவிடலாம். ஆனால், சில கிலோ மீட்டர்கள் சுற்றிக்கொண்டுதான் வருவார்கள். இதற்கு எல்லாம் மலக் கிடங்கு எங்கள் ஊரில் இருப்பதுதான் காரணம் என்று நான் நினைத்துக்கொண்டு இருந்தேன். இதற்கு சாதிய ஏற்றத் தாழ்வுதான் காரணம் என்று 10-ம் வகுப்பு வந்தபின்தான் எனக்கு விளங்கியது.

என் ஊர்!

எங்கள் ஊரில் புகழ்பெற்றது தேர்த் திருவிழா தான். ஆம்பூரில் ஒரு தேர்த் திருவிழா நடக்கும். ஆனால், தேர் எங்கள் கஸ்பாவுக்குள் வராது. ஆனால், எங்கள் தேர்த் திருவிழாவின்போது அம்பேத்கர் திடலில் தொடங்கி ஆம்பூர் முழுவதுக்கும் தேரை இழுத்துக்கொண்டு போவார்கள். 'உங்கள் சாமி எங்கள் ஊருக்கு வருவது இல்லை. ஆனால், எங்கள் சாமி உங்கள் ஊருக்கும் வரும்’ என்ற எதிர்ப்பின் அடையாளமாக, 100 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியக் குடியரசுக் கட்சி, எஸ்.சி - எஸ்.டி. ஃபெடரேஷன் ஆகியவற்றின் கொடிகளோடுதான் முதன்முதலில் எங்கள் கஸ்பாவில் தேர்த் திருவிழா தொடங்கியது. தேரில், தலித் பூசாரிதான் இருப்பார். அன்றைக்குப் பூராவும் ஆம்பூர் முழுவதும் மின்சாரம் இருக்காது. ஏனென்றால் அத்தனை உயரமான தேர் அது. மின்சாரக் கம்பிகளில் பட்டு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்துவிடக் கூடாது என்று மின்சாரத்தை நிறுத்துவார்கள். அதனால், சாதி இந்துக்கள் எரிச்சல் அடைவதும் நடக்கும். மிகவும் பழமைவாத சாதி இந்துக்கள் வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள். மற்றவர்கள் தேரில் உள்ள சாமியை வந்து வணங்குவார் கள். ஆனால், இன்று காலப்போக்கில் அது கங்கையம்மன் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக ஆகிவிட்டாலும், இன்றைக்கும்கூட ஆம்பூரின் அத்தனை பகுதிகளுக்கும் தேர் செல்கிறது. எங்கள் பகுதியின் மிக முக்கிய நிகழ்வு என இந்தத் தேர்த் திருவிழாவைச் சொல்லலாம்.

இந்தியக் குடியரசுக் கட்சி, திராவிட இயக்கம், எஸ்.சி.-எஸ்.டி. ஃபெடரேஷன் போன்றவை ஆழமாகக் கால் பதித்த இடம் வேலூர் மாவட்டம். தலித்துகள் அடர்த்தியாக வாழும் பகுதியும்கூட. இப்போது 'சாணாங்குப்பம்’ என்று பெயர் மருவிவிட்ட 'சான்றோர் குப்பம்’ பகுதி, அடிக்கடி பெரியார் வந்து மக்களைச் சந்தித்த இடம். கோலார் தங்கவயலைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர் கே.எம்.சாமி தலைமறைவாக இருந்தபோது எங்கள் ஊரில்தான் தங்கியிருந்தார்.  

என் ஊர்!

எங்கள் ஊருக்கு அருகில் பெஃபெஸ்தா மருத்துவ மனை என்று ஒன்று உண்டு. அந்த மருத்துவமனையைச் சுற்றி எங்கள் கஸ்பாவைச் சேர்ந்த தலித் மக்களும், கிறிஸ்துவர்களும் குடியேறி இருக்கின்றனர். அவர்களில் பலர் இன்றைக்குப் பெரும்பாலும் டாக்டர்கள், நர்சு கள், லேப்-டெக்னீசியன்கள் என்று மருத்துவத் துறையில் வல்லுநர்களாக இருக்கிறார்கள். புதிதாகத் தோன்றிய இந்தப் பகுதி, 'பெத்லஹேம்’ என்று அழைக்கப்படுகிறது. தலித்துகள் வாழ்ந்தாலும் இந்தப் பகுதி கஸ்பா போன்ற சேரியாக இல்லை என்பது வரவேற்கத்தக்க விஷயம்!''

- கவின் மலர், படங்கள்: என்.விவேக், ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism