Published:Updated:

2016-ல் கவனம் ஈர்த்த 15 புத்தகங்கள்... பரிந்துரைக்கும் 15 பிரபலங்கள்!

2016-ல் கவனம் ஈர்த்த 15 புத்தகங்கள்... பரிந்துரைக்கும் 15 பிரபலங்கள்!
2016-ல் கவனம் ஈர்த்த 15 புத்தகங்கள்... பரிந்துரைக்கும் 15 பிரபலங்கள்!

”புத்தகங்களை வாசித்துக்கொண்டே இரு, ஆனால் புத்தகம் என்பது வெறும் பக்கங்கள் மட்டுமே. சிந்தித்தல் எனும் அதன் நீட்சியை நீதான் கற்றுணர வேண்டும்”. ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் வரிகள் இவை. வான் பார்த்து அல்லாமல் நிலம் நோக்கி சிறகு விரித்திருக்கும் சுதந்திரப் பறவைகள்தான் புத்தகங்கள். 2016-ம் வருடம் நிறைவடைய இருக்கும் நிலையில், தங்களுக்குள் அப்படிப்பட்ட சிந்தனையையும், தாக்கத்தையும் ஏற்படுத்திய புத்தகங்கள் பற்றி குறிப்பிடுகிறார்கள் பிரபலங்கள்.

  பி.சி.ஸ்ரீராம், ஒளிப்பதிவாளர்

சக ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் எழுதிய ‘ஒளி ஓவியம்’ புத்தகத்தைக் குறிப்பிடலாம். கேமிரா தொடர்பான டெக்னிக்கல் விஷயங்களை நாம் வேண்டாம் என்றாலும் ஆங்கிலத்தில்தான் படித்தாக வேண்டும். வேறு வழியில்லை. ஆனால் ‘ஒளி ஓவியம்’ மாதிரியான தமிழ் படைப்புகள் வழியாகப் படிக்கும்போது, எளிதில் உள்வாங்கிக் கொள்ள முடியும். இப்படியான மொழியின் தேவை அறிந்து வெளிவரும் புத்தகங்கள் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்து இருக்கிறது, இது வரவேற்கப்பட வேண்டியது.

தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர்

கார்த்திகை பாண்டியன் எழுதி இருக்கும் 'மர நிறப் பட்டாம் பூச்சிகள்'. எளிய மனிதர்களின் கதை, தமிழ் இலக்கியச் சூழலுக்குப் புதிதல்ல. ஆனால், இதில் கவனிக்கப்பட வேண்டியது கார்த்திகையின் எழுதும் வடிவம். எழுத்தாளரின் எழுத்தில் இருக்கும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட மொழி ஆளுமைக்காக, இந்தப் புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும் எனக் கூறுவேன்.

இரா. முத்தரசன், மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட்                            

சம்சுதீன் ஹீரா எழுதிய ’மௌனத்தின் சாட்சியம்’. தலைப்பு போலவே வலுவான ஒரு களத்தை எளிமையாக நமக்கு சொல்லி இருக்கிறார் எழுத்தாளர். கோவை குண்டு வெடிப்பு மற்றும் அதையொட்டி நிகழ்ந்த சம்பவங்கள், போலீஸ் எப்படி சார்பு நிலையைப் பின்பற்றினார்கள் என பல தகவல்கள் உள்ளன. தீவிரவாதம் இரு பக்கமுமே இருக்கிறது என்பதை விளக்கி இருக்கிறார். எந்தப் பக்கமும் அவர் சார்புநிலை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனு ராமசாமி, திரைப்பட இயக்குநர்  

நாஞ்சில் நாடன் முன்னுரையுடன் கூடிய ‘ஆ. மாதவன் சிறுகதைகள் தொகுப்பு’ புத்தகத்தை அண்மையில் வாசித்தேன். சாகித்ய அகாடமியில் இருக்கும் சிலருக்கே ஆ.மாதவனின் படைப்புகள் பற்றி தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார் நாஞ்சிலார். உண்மையும் அதுதான், எவ்வளவு பெரிய படைப்புகளை கொடுத்துவிட்டு, தற்போது கேரளாவில் யாருமறியாத ஒரு ஊரில் வசித்து வருகிறார். அவரது 'சிறுகதை தொகுப்புகள்' ஒரு இயக்குநராக எனக்கு ரசனையை அதிகரித்திருக்கு. வாழ்வின் மீதான தனி மனிதர்களுடைய பார்வையை உணர முடிகிறது.

நாகப்பன், பங்குச்சந்தை நிபுணர்  

கென்னத்  எழுதிய ‘The curse of cash'  புத்தகம் தற்காலச் சூழலில் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகங்களில் அவசியமான ஒன்று.  சர்வதேச பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டுவர அதன் அடித்தளமான அமெரிக்கப் பொருளாதாரத்தில் சிறு மாற்றமாக  அவர்கள் 100 டாலர் மற்றும் 50 டாலர்  புழக்கத்தை முடக்கவேண்டும் என்கிறார் கென்னத், ஆனால் அவற்றை மொத்தமாகச் செய்யாமல் ஒவ்வொன்றாக நடைமுறைக்குக் கொண்டு வருவதன் மூலமே மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் செயல்படுத்த முடியும் எனவும் குறிப்பிடுகிறார். பொருளாதார வல்லரசுக்கு அவர் அறிவுறுத்தும் அதேநிலை கிட்டத்தட்ட நமக்கும் பொருந்தும்.தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய்  பணமுடக்கத்தால்  பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தனிநபரும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.   

உமாதேவி, கவிஞர்

எழுத்து பதிப்பகத்தின் ‘உப்பு வேலி’ நாவல். ஆங்கிலத்தில் ராய் மாக்ஸம் எழுதியுள்ள இதனை தமிழில் சிறில் அலெக்ஸ் மொழி பெயர்த்துள்ளார். சர்வதேச அளவில் உப்பு,  அரசியலில் எவ்வளவு பெரிய பங்கு வகிக்கிறது?, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஏன் உப்பு சத்யாக்கிரகம் பேசப்பட்டது? காந்தி உப்பை அரசியலாக்கியதன் பின்னணி? அவர் ஏன் உப்பை சுதந்திரத்துக்கான ஆயுதமாகக் கையில் எடுக்க வேண்டும்? என்ற பல கேள்விகளுக்கு இதில் பதில் கிடைக்கிறது. உப்பு வேலிகளைச் சுற்றி பாதுகாத்த தலித்துகள் பற்றி இது விரவிப் பேசுகிறது. அரசியல் நுண்ணார்வலர்களுக்கு 2016-ன் சிறந்த புத்தகமாக இதைப் பரிந்துரைப்பேன்.

அருள்மொழி, வழக்கறிஞர்   

’குஜராத் கோப்புகள்’, துணிவின் அடையாளமாக ஒரு பெண்ணைக் குறிப்பிடச் சொன்னால் இந்தப் புத்தகத்தை எழுதிய ராணா அயூப்பைக் குறிப்பிடுவேன். 2002-ல் நடந்த குஜராத் கலவரத்தில் நீதிமன்றமே குற்றவாளிகள் என அறிவித்த நபர்களை, மைதிலி என்ற வெளிநாடுவாழ் பெண்ணாக மாறுவேடத்தில் சந்தித்து டாகுமெண்டரி என்னும் போர்வையில் உண்மைகளைக் கண்டறிகிறார். ராணா சந்தித்தவர்கள் அனைவருமே அமைச்சர்கள், அதிகாரிகள் என அரசின் உயர்மட்ட வகுப்பினர். இவரது அடையாளம் சிறிது வெளிப்பட்டிருந்தாலும் உயிருக்கே உலைவைத்திருக்கும். ஆனால் அதையும் தாண்டி வெற்றிகரமாகச் செயல்பட்டு உண்மையை வெளிக்கொண்டு வந்தார். அவரது புத்தகமும், அவரும் நமக்கு நல்லதொரு பாடம்.

இரா. முருகவேள், எழுத்தாளர் 

பொன்னுலகம் பதிப்பகத்தின் வெளியீட்டில் வந்திருக்கும் என்.கண்ணா குட்டியின் ’போராட்டம் என் வாழ்க்கை' என்ற நூல் நான் இந்த ஆண்டில் படித்த புத்தகங்களில் தனித்துவமானது. 1970-களில் வெளியிடப்பட்ட புத்தகம், தற்காலத் தேவைக்காக மீள்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 70-களின் காலகட்டத்தில்தான் தொழிற்சங்கங்கள் வலுப்பெற்று இருந்தன. அதன் எழுச்சி மதவாத சக்திகளை பின்னுக்குத் தள்ளி இருந்தது. அந்த தொழிற்சங்கங்கள் வலுவிழந்து வந்த சூழலில்தான் மதம் என்னும் அடையாளமே சமூகத்தில் பெரும் அடையாளம் பெறுகிறது. அதனை விவரிக்கும் நூல்தான் இது. போராட்ட அரசியலைப் படிக்கும் ஆர்வலர்களே, அவசியம் இந்த நூலைப் படிங்க!

நக்கீரன், எழுத்தாளர் 

எதிர் வெளியீட்டின் பதிப்பில் வெளிவந்திருக்கும் ‘இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு!” வெண்டி டோனிகர் எழுதிய இப்புத்தகத்தை தமிழில் க. பூரணசந்திரன் மொழி பெயர்த்திருக்கிறார். புனிதம், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பின்பற்றும் மதம் என பல அடையாளம் உடைய ஒன்றின் வேறொரு பக்கத்தை இந்த நூல் காட்டுகிறது. இந்த நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் உண்மையான அரசியல் எது என்று உணரும் நிலையில் நாம் இருக்கிறோம். அந்த வகையில் நாம் வாசிக்க வேண்டிய புத்தகத்தில் இது முதன்மை இடம் பெறும்.

வெற்றிமாறன், சூழலியலாளர் 

“மண்ணின் மரங்கள்”, இயல்வாகை பதிப்பகமும் மதுரையைச் சேர்ந்த நாணல் நண்பர்களும் இணைந்து வெளியிட்ட புத்தகம். இந்த சூழலில் இதைக் குறிப்பிட்டதற்கான காரணம், சென்னையை சமீபத்தில் புரட்டிப்போட்ட வர்தா புயலின் பாதிப்பு. புயலினால் பெரிதும் சேதமடைந்தது மரங்கள்தான். அதுவும் தூங்குமூஞ்சி மரம், வேப்பமரம் போன்றவை. கடல் சார்ந்த பகுதியில் அந்த பகுதிகளுக்கு ஏற்ற மரங்கள் நடப்படாததுதான் காரணம் என்று பெரிதும் பேசப்பட்டு வருகிறது. புன்னை, கொன்றை போன்ற மரங்கள் நடப்பட்டிருக்க வேண்டும். இதன் மீதான விவாதத்திற்கும் இனிமேல் மரங்களை எப்படித் தேர்ந்தெடுத்து நடவேண்டும் மற்றும் மரங்களின் மீதான புரிதலுக்கும் இந்த கட்டுரை மிகவும் உதவும்.

வி. மோகன், நீரிழிவு நோய் நிபுணர்   

2016-ல் அதிகம் பேசப்பட்ட வார்த்தை நீரிழிவு. நீரிழிவு நோயைப் பற்றி தெரிந்து கொண்டால் மருத்துவத்தையே தெரிந்து கொண்டதாகத்தான் பொருள். அந்த அளவிற்கு இந்தியாவில் பரவியிருக்கும் நோய். இதனைப் பற்றி பொதுமக்களும் ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். இப்படியிருக்க, இந்திய நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையம் இந்தியர்களிடையே பரவியிருக்கும் நீரிழிவு நோய் குறித்து, ”Text book of diabetes mellitus" என்னும் புத்தகத்தை இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது. மக்களே! நீரிழிவு வந்தால் உடலுக்கு எல்லா வியாதியையும் கூடவே கூட்டிக்கொண்டு வரும். படிச்சு உங்க உடலையும் பத்திரமாப் பார்த்துக்கங்க.

லஷ்மி சரவணகுமார், எழுத்தாளர் 

ஷிஞ்ஜி தாஜிமா என்னும் குழந்தைகளுக்கான ஜப்பானிய சிறுகதை எழுத்தாளரின் புத்தகம். தமிழில் வெங்கட் சாமிநாதன் மொழிபெயர்க்க, 2009-ல் சாகித்ய அகாடெமி ‘ஆச்சரியம் என்னும் கிரகம்’ என்ற தலைப்பில் வெளியிட்டது. அண்மையில்தான் அதனைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மொத்தம் ஆறு கதைகள் இந்த புத்தகத்தில் இருக்கிறது. குறிப்பாக சர்வதேச அளவில் பேசப்பட்டு வரும் அணுஉலை பிரச்னை தொடர்பாக, குழந்தைகளுக்குப் புரியும் எளிய வகையில் கதையாக்கி இருப்பார்கள். கதையென்றால் நிகழ்வுகளைத் தொகுப்பது மட்டுமே இல்லை. இம்மாதிரியான கதைகள் சொல்லப்படுவதற்கு ஒரு அடிப்படை அறம் இருக்கு. அதன்வழியாக, வாழ்வியல் அறத்தை குழந்தைகளுக்கு கற்றுத்தருவது. அந்த வரிசையில் இந்த மொழிபெயர்ப்பு கவனிக்கப்படவேண்டிய ஒன்று. 

குணசேகரன், ஊடகவியலாளர் 

தடாகம் பதிப்பக வெளியீட்டில் வந்த மீஞ்சூர் கோபியின் ”நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள்” எனது பரிந்துரை. முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய வட தமிழகத்தில் என்ன மாதிரியான சமூக மாற்றங்கள் நிகழ்ந்தன மற்றும் அங்கிருந்த விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் போராட்டங்கள் குறித்தான பதிவுகளை சொல்கிறது இந்த புத்தகம். இவை பெரும்பாலும் நான் எனது இளம்பிராயத்தில் கண்டு உணர்ந்ததும் கூட. மிகவும் பேசப்படாத ஆனால் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் என்னும் வரிசையில் கண்டிப்பாக இந்த புத்தகம் இடம்பெறும்.   

சல்மா, கவிஞர்     

எனக்கு தனிப்பட்ட முறையில் செல்லப்பிராணிகள் பிடித்தம். அந்த வகையில் காலச்சுவடு பதிப்பக

வெளியீட்டில் வந்திருக்கும் டாக்டர். நொயல் நடேசன் எழுதிய ’வாழும் சுவடுகள்’  என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் வாழும் சூழல் பற்றி அழகியலோடு கூறியிருக்கிறார். தமிழில் இப்படியான படைப்புகளை காண்பது அரிது. கணவன், மனைவி இருவரும் பிரிந்திட நேருகையில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஆசையாக வளர்த்த நாய்க்குட்டி ஒன்றின் மனநிலை எப்படி இருக்கும்? என்பதுவரை எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார். என்னைப் போன்ற விலங்கினங்களை நேசிக்கும் சக நண்பர்களுக்கு இதனை நிச்சயம் பரிந்துரை செய்வேன். 
 

மாரி செல்வராஜ், திரைப்பட இயக்குநர்

தமிழ்நதி எழுதிய, ‘பார்த்தீனியம்’ நூலை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டது. சர்வதேச அரசியலில் ஈழப் போர் ஏன் பேசப்பட வேண்டும் என்பதை அரசியலாக அல்லாமல்... போர்க் காலத்தில் அங்கே வாழ்ந்த மக்களின் வாழ்வியல் வழியாகச் சொல்லி இருக்கும் நாவல். மேலும், ஈழப்போரில் இலங்கை அல்லாமல் பிறநாடுகள் குறிப்பாக, இந்தியா போர்க்காலத்தில் இலங்கைக்கு எந்த வகையில் உதவியாக இருந்தது என்பதைப் பேசுகிறது. படித்து முடிக்கையில், பார்த்தீனியச் செடி பிடுங்கி எறியப்பட்ட மண்ணில் மிச்சமிருக்கும் தழும்புபோல நம் மனதிலும் உறுத்தல் ஒன்று ஒட்டிக்கொள்ளும்.

- ஐஷ்வர்யா