Published:Updated:

2017 பஜாஜ் பல்ஸர் - மிஞ்சியது என்ன... மாறியது என்ன? #AutoUpdates

2017 பஜாஜ் பல்ஸர் - மிஞ்சியது என்ன... மாறியது என்ன? #AutoUpdates
2017 பஜாஜ் பல்ஸர் - மிஞ்சியது என்ன... மாறியது என்ன? #AutoUpdates

இன்றைய போட்டிமிகுந்த இந்திய பைக் மார்க்கெட்டில், கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்கவை என்ற ரகத்தில் முதலிடத்தில் இருப்பது பஜாஜின் பல்ஸர் பைக்குகள்தான். அற்புதமான டிஸைன் - அதிக சிறப்பம்சங்கள் - அதிரடியான பெர்ஃபாமென்ஸ்/மைலேஜ் - அசத்தலான கையாளுமை - அட்டகாசமான விலை/பராமரிப்புச் செலவுகள் என ஆல்ரவுண்டர் பேக்கேஜாக இருப்பதால், பல மிடில் கிளாஸ் இளைஞர்களின் சாரதியாக பல்ஸர் திகழ்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. பல்ஸர் விற்பனைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகியுள்ளதுடன், இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு புதிய மாடல்கள் மற்றும் ஃபேஸ்லிஃப்ட்களைப் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு வரவிருக்கும் BS-IV மாசு கட்டுப்பாடு விதிகளைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப மேம்படுத்தப்பட்டுள்ள பல்ஸர் பைக்குகளைத் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது பஜாஜ். இவற்றில் 135சிசி, 150சிசி, 180சிசி, 200சிசி, 220சிசி எனப் பல வேரியன்ட்கள் இருந்தாலும், 150சிசி மாடல் இன்னும் BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படாதது வியப்பளிக்கிறது. அதே போல Triple Spark Plug-களைக் கொண்டுள்ள 200சிசி பல்ஸர்களின் (NS,AS,RS) BS-IV வெர்ஷன்களையும் விரைவில் பஜாஜ் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். 

பஜாஜ் பல்ஸர் 135LS

பல்ஸர் மாடல்களிலே சிறிய இன்ஜினைக் கொண்டுள்ள 135LS பைக்கின் டிஸைனில் மாற்றங்கள் இல்லை. இன்ஜின் வெளிப்படுத்தும் பவர் & டார்க்கும் அதேதான். ஆனால் பைக்கை உற்று நோக்கினால் வசதியான சிங்கிள் பீஸ் சீட் & கிராப் ரெயில், மேட் ஃபினிஷ் உடன் கூடிய எக்ஸாஸ்ட் & ஹேண்டில்பார் என வித்தியாசங்கள் தென்படுகின்றன. இதனுடன் Heel Toe முறையிலான கியர் லீவர், புதிய பாடி கிராஃபிக்ஸ் & கலர் ஆப்ஷன், அலாய் வீல்களில் Pin Strip, அலாய் பாகங்களில் Gun Metal கலர் ஃபினிஷ், மேம்படுத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் & வைஸர், தங்க நிற டிஸ்க் பிரேக் காலிப்பர், மேனுவல் சோக், கிரோம் லோகோ ஆகியவை இடம்பெற்றுள்ளன. 2017-ம் ஆண்டுக்கான  BS-IV பல்ஸர் 135LS பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை, 71 ஆயிரத்தைத் தாண்டுகிறது. 

பஜாஜ் பல்ஸர் 150 DTS-i

CMVR-படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 65கி.மீ மைலேஜ் தரக்கூடிய பல்ஸர் 150தான், பல்ஸர் வேரியன்ட்களிலே அதிகம் விற்பனையாகும் மாடலாகும். 2007 தொடங்கி ஒரே டிஸைனில் இருக்கும் இந்த பைக்கின் 2017-ம் ஆண்டுக்கான மாடலிலும் பெரிய மாற்றங்கள் இல்லை. மேட் ஃபினிஷ் உடன் கூடிய ஹேண்டில்பார், கூடுதல் சொகுசுக்காக முன்னேற்றப்பட்ட இருக்கை, புதிய பாடி கிராஃபிக்ஸ் & கலர் ஆப்ஷன், அலாய் வீல்களில் Pin Strip, அலாய் பாகங்களில் Gun Metal கலர் ஃபினிஷ், தங்க நிற டிஸ்க் பிரேக் காலிப்பர், டியுப்லெஸ் டயர்கள் ஆகியவை புதிதாக இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த பைக்கின் இன்ஜின், BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப ரி-ட்யூன் செய்யப்படவில்லை. 2017-ம் ஆண்டுக்கான பல்ஸர் 150 DTS-i பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை, 86 ஆயிரத்தைத் தாண்டுகிறது. 

பஜாஜ் பல்ஸர் 180 DTS-i

பஜாஜ் பல்ஸர் 200NS வருகைக்கு முன்பாக இருந்த 200சிசி பல்ஸர் DTS-i பைக்கின் விற்பனை, 2009-ல் நிறுத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. எனவே 200சிசி மாடலில் இருந்த வசதிகளை அப்போதே 180சிசி பல்ஸரில் பஜாஜ் பொருத்தியது கவனிக்கத்தக்கது. இந்த பைக்கின் இன்ஜின் BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டிருந்தாலும், பவர் & டார்க்கில் மாற்றம் இல்லை. பைக்கின் டிஸைனும் அதேதான். மேட் ஃபினிஷ் உடன் கூடிய ஹேண்டில்பார், கூடுதல் சொகுசுக்காக முன்னேற்றப்பட்ட இருக்கை, புதிய பாடி கிராஃபிக்ஸ் & கலர் ஆப்ஷன், அலாய் வீல்களில் Pin Strip, அலாய் பாகங்களில் Gun Metal கலர் ஃபினிஷ், தங்க நிற டிஸ்க் பிரேக் காலிப்பர், நீல நிற பேக்லிட் உடனான மேம்படுத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 230மிமீ பின்பக்க டிஸ்க் பிரேக், இன்ஜின் ஸ்மூத்தாக இயங்குவதற்கு உதவக்கூடிய புதிய டைமிங் செயின் ஆகியவை தற்போது புதிதாக பொருத்தப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டுக்கான பல்ஸர் 180 DTS-i பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை, 93 ஆயிரத்தைத் தாண்டுகிறது. 

பஜாஜ் பல்ஸர் 220F DTS-i

2009-ல் அறிமுகமான கார்புரேட்டர் உடனான பல்ஸர் 220F DTS-i, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வேகமான பைக் என அறியப்பட்டது. ஆனால் தற்போது இதைவிட பவர்ஃபுல்லான, மாடர்ன்னான பைக்குகள் விற்பனைக்கு வந்துவிட்டாலும், வேகப் போட்டியைத் துவக்கிவைத்ததில் கணிசமான பங்கு இந்த பைக்கிற்கு உண்டு. பல்ஸர் 220-ன் முன்பக்கத்தில் இருக்கும் புரொஜெக்டர் ஹெட்லைட் உடனான செமி-ஃபேரிங்கைத் தவிர்த்துப் பார்த்தால், பைக் அப்படியே பல்ஸர் 180தான். எனவே பல பாகங்கள், மற்ற பல்ஸர் பைக்குகளில் இருப்பதுதான் என்பதாலேயே, பைக்கின் விலை கச்சிதமாக இருந்துவருகிறது. இப்போது இந்த பைக்கின் இன்ஜின் BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப டியூன் செய்யப்பட்டிருந்தாலும், பவர் & டார்க்கில் மாற்றம் இல்லை. பல்ஸர் 150 போல, 2007 தொடங்கி இந்த பைக்கின் டிஸைனும் அப்படியேதான் இருக்கிறது. தற்போது கூடுதல் சொகுசுக்காக முன்னேற்றப்பட்ட இருக்கை, மேட் ஃபினிஷ் உடன் கூடிய எக்ஸாஸ்ட் & ஹேண்டில்பார், புதிய பாடி கிராஃபிக்ஸ் & கலர் ஆப்ஷன், அலாய் வீல்களில் Pin Strip, அலாய் பாகங்களில் Gun Metal கலர் ஃபினிஷ், நீல நிற பேக்லிட் உடனான மேம்படுத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தங்க நிற டிஸ்க் பிரேக் காலிப்பர், மேனுவல் சோக், இன்ஜின் ஸ்மூத்தாக இயங்குவதற்கு உதவக்கூடிய புதிய டைமிங் செயின் போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் சேர்ந்துள்ளன. 2017-ம் ஆண்டுக்கான பல்ஸர் 220F DTS-i பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை, 1.06 லட்சத்தைத் தாண்டுகிறது.

முதல் தீர்ப்பு

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 135சிசி தொடங்கி 220சிசி வரை இருக்கும் பல்ஸர் பைக்குகளின் 2017-ம் மாடல்களின் அடிப்படை டிஸைனில் மாற்றங்கள் இல்லை. சுற்றுச்சூழலுக்கு உகந்த இன்ஜின் டியூனிங் மற்றும் காலத்துக்கு ஏற்ற டெக்னிக்கல் மாற்றங்கள், ஓட்டுதல் அனுபவத்தை சிறப்பாக்கக்கூடிய அம்சங்கள் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் விலை அதிகமான பல்ஸர் RS200 பைக்கில் இருப்பதுபோன்ற Fi சிஸ்டம், இந்த பைக்குகளில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது பல்ஸர் ஆர்வலர்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது. அவை (NS,AS) ஆகிய 200சிசி பல்ஸர்களிலாவது இடம்பெறுமா என்பதை காலம்தான் உணர்த்தும்!

- ராகுல் சிவகுரு.