Published:Updated:

பூமியை நோக்கி வரும் மிகப்பெரிய விண்கல்...! #KillerAsteroid

Vikatan Correspondent
பூமியை நோக்கி வரும் மிகப்பெரிய விண்கல்...! #KillerAsteroid
பூமியை நோக்கி வரும் மிகப்பெரிய விண்கல்...! #KillerAsteroid

செவ்வாய் கிரக ஆராய்ச்சி, பறக்கும் தட்டுகள், விண்கற்கள், வால்நட்சத்திரங்கள் பற்றிய ஆராய்ச்சி உலக வானவியல் விஞ்ஞானிகளால் பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. இவற்றுள் நம்மை அடிக்கடி அச்சுறுத்துவது பூமியை நோக்கி வரும் பெரிய விண்கற்கள். 1996, 2014 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு மிக அருகே வந்த விண்கற்கள் பூமியின் ஈர்ப்பு விசைக்குள் வராமல் விலகிச்சென்றுவிட்டன. ஆனால் அப்போது உலகின் எல்லா ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளிலும் இந்த செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. மக்கள் அச்சம் கொள்ளத்தொடங்கினர். பிறகு இந்தப் பயம் கொஞ்சம் கொஞ்சமாக அகன்றது. இப்போது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் மூத்தவிஞ்ஞானி ஜோசப் நுத் ஒரு புதிய அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளார்.

நாசா விஞ்ஞானி ஜோசப் நுத் மேற்கொண்ட விண்வெளி ஆராய்ச்சியில் பூமியின் ஈர்ப்பு விசைக்குள் ஒரு மிகப்பெரிய விண்கல் வரஇருப்பதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் மூத்த விஞ்ஞானி ஜோசப் நுத், கடந்த வாரம் நடந்த நாசாவின் புவிஈர்ப்பு மற்றும் வானியல் தொடர்பான கூட்டத்தில் பேசும்போது இன்னும் 100 ஆண்டுகளில் 'கில்லர் ஆஸ்ட்ராய்டு' எனப்பெயரிடப்பட்டுள்ள மிகப்பெரிய விண்கல் பூமியின் புவிஈர்ப்பு விசைக்குள் வர 0.01 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். “இந்த விண்கல் பூமியின் பரப்பில் விழுவதற்கு முன்னரே அதனை விண்வெளியில் வேறு திசைக்குத் திருப்ப 'கைனெடிக் இம்பாக்ட்டர்' என்னும் விண்கலத்தை உருவாக்க நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த விண்கலத்தை வடிவமைக்க குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும். விண்கல் பூமியின் புவி ஈர்ப்பு விசைக்குள் சென்று, பூமியின் மேற்பரப்பில் மோத வரும்போது  இந்த 'கைனெடிக் இம்பாக்ட்டர்' விண்கலம் விண்ணில் ஏவப்படும். இது, விண்கல் மீது மோதி அதன் பாதையை திசைதிருப்பும். ஆனால் இந்தச் செயல்பாடு சிறிய விண்கற்களை திசைதிருப்ப மட்டுமே பயன்படும். பெரிய விண்கற்களை திசை திருப்ப சக்திவாய்ந்த அணுகுண்டுகள் தயார்செய்யவேண்டும். இந்த அணுகுண்டுகள் மூலமாக பூமியை நோக்கி வரும் விண்கல்லை வெடித்துச்சிதற வைக்கமுடியும். பெரிய விண்கல் பூமியில் மோத வரும்போது அது விழப்போகுமிடத்தில் இந்த அணுகுண்டை செலுத்தினால், விண்கல் பத்து லட்சத்துக்கு மேலான சிறிய துண்டுகளாக சிதறிவிழும். ஆனால் இந்த செயல்முறை உலக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம். சிதறிவிழும் துண்டுகள் நிலப்பரப்பில் விழுவதால் உலகின் பல்வேறு இடங்களில் கட்டட இடிபாடு, உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பத்து கிலோ மீட்டர் அகலம் கொண்ட சிக்ஸுலப் அப்ஸ்ட்ராக்டர் (Chicxulub impactor) எனப்படும் விண்கல் பூமியில் மோதியதால் தான் மெக்ஸிகோ வளைகுடா உருவானதாக நம்பப்படுகிறது. 1908-ம் ஆண்டு சைபீரியாவின் மேற்பரப்பில் 60-190 மீட்டர் விட்டம் கொண்ட விண்கற்கள் பல துண்டுகளாக வெடித்துச் சிதறியது. இந்த விண்கல் 770 சதுரமைல் காட்டுப்பகுதியை அழித்தது. இந்த விண்கல் வெடிப்பு 15-30 மெகாடன் ஆற்றலை வெளிப்படுத்தியது. 1945-ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமாவைத் தாக்கிய 'Fatman' அணுகுண்டை விட 1000-2000 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. அப்போது சைபீரியாவில் மனித நடமாட்டம் அதிகம் இல்லாததால், இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சமீபத்தில் 2013- ல் ரஷ்யாவின் உரால் மலைத்தொடரில் 13000 டன் எடைகொண்ட செலியாபின்ஸ்க் விண்கல்  (Chelyabinsk meteor) மோதியது. இந்த விபத்தில் 1500 பேர் காயமடைந்தனர். 112 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 7000 கட்டடங்கள் சேதமடைந்தன. 2014-ம் ஆண்டு சைடிங் ஸ்ப்ரிங் (Siding Spring) வால்நட்சத்திரம், செவ்வாய் கிரகத்தின்மேல் மோதவந்து விலகிச்சென்றது. ஒருவேளை அது செவ்வாய் கிரகத்தின் பரப்பில் மோதி வெடித்திருந்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு 24 பில்லியன் மெகாடன் டிஎன்டி அணுகுண்டு (Trinitrotoluene)  வெடித்தல் ஏற்படும் பாதிப்புக்குச் சமம்” என நுத் கூறினார். 

பூமியைத் தாக்கவரும் ஆபத்தான விண்கற்கள் மற்றும் வால்நட்சத்திரங்களைத் திசைதிருப்பிவிட நாசாவின் ஆஸ்ட்ராய்டு ரீடைரக்ட் மிஷன் (Asteroid Redirect Mission -ARM) முழுவீச்சில் களம் இறங்கியுள்ளது. இந்த மிஷனில் 'கிராவிட்டி டிராக்டர்' என்னும் விண்கலம் பூமியைச்சுற்றிக் கொண்டிருக்கும். ஆபத்தான பெரிய விண்கற்கள் பூமியின் அருகே வந்தால், அவற்றை திசைதிருப்ப 'கிராவிட்டி டிராக்டர்' விண்கலத்தின் ஈர்ப்புவிசை பயன்படுத்தப்படும். இவை விண்கற்களைத் தொடாமலேயே அவற்றின் பாதையை திசைதிருப்ப உதவும்.

கிராவிட்டி டிராக்டர் பூமியை ஆபத்தான விண்கற்களிடம் இருந்து பாதுகாக்கும்  சிறந்த தொலைநோக்கு முன்னெச்சரிக்கைத் திட்டமாக நாசா விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. ஆனால் இந்த முறை மூலமாக 1000 மீட்டர் விட்டம் கொண்ட மிகப்பெரிய விண்கற்களை திசைதிருப்புவது கடினம். எது எப்படியோ இப்போதைக்கு கில்லர் ஆஸ்ட்ராய்டு 50-60 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில்தான் உள்ளது. அது பூமியை நோக்கி வர இன்னும் பல வருடங்கள் ஆகும். அருகே வந்தாலும் மயிரிழையில் பூமியை மோதாமல் செல்லவும் வாய்ப்புள்ளது.  

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்.