Published:Updated:

ஆட்டோ vs டாக்ஸி - கேரளாவில் தொடரும் சச்சரவு

ஆட்டோ vs டாக்ஸி - கேரளாவில் தொடரும் சச்சரவு
ஆட்டோ vs டாக்ஸி - கேரளாவில் தொடரும் சச்சரவு

ஆட்டோ vs டாக்ஸி - கேரளாவில் தொடரும் சச்சரவு

பேருந்துக்காக காத்திருந்து நாம் செல்ல நினைத்த இடங்களுக்குச் சென்று கொண்டிருந்த காலம் எல்லாம் தற்போது மாறிவிட்டது. மாநகரப் பேருந்துகளை எதிர்பார்க்காமல் ஆட்டோவை மட்டுமே தேர்ந்தெடுத்த நிலை மாறி, இப்போது ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையம், விமான நிலையம் என எங்கிருந்து வெளியே வந்தாலும் நாம் முதலில் தேடுவது மொபைல் 'ஆப்கள்' மூலம் முன்பதிவு செய்யப்படும் ஆட்டோக்கள் மற்றும் ஆன்லைன் கால் டாக்ஸிகளைத்தான். 

சாதாரண ஆட்டோ என்றால், ஓட்டுநரிடம் நாம் செல்ல வேண்டிய இடத்தைத் தெரிவித்து, பேரம் பேசி வாக்குவாதம் செய்து கட்டணத்தை செலுத்த நேரிடும். ஆனால், ஆன்லைன் டாக்ஸிகள் வந்தபிறகு, விரல் நுனியில் இந்த 'ஆப்கள்' நமது பயணத்தை எளிதாக்கி விடுகின்றன. எந்த நேரமானாலும், எந்த இடமானாலும் நாம் செல்லக்கூடிய இடத்திற்கு, பயணத்தை அமைத்துக் கொள்ளக் கூடிய வசதிகள், இந்த 'ஆப்களில்' இருப்பதால் மக்களும் இவற்றையே பெரும்பாலும் விரும்பி புக் செய்கிறார்கள். ஆன்லைன் டாக்ஸிகள் வந்த பிறகு ஆட்டோ டிரைவர்களின் நிலை மிகவும் மோசமாகி விட்டது. பொதுமக்களும் ஆட்டோக்களை எதிர்பார்ப்பதை நிறுத்திவிட்டு, ஆன்லைன் டாக்ஸிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஆட்டோ ஓட்டுநர்கள் டாக்ஸி டிரைவர்களுடன் மோதலில் ஈடுபடும் சூழ்நிலை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சி வடக்கு மற்றும் தெற்கு ரயில் நிலையங்களுக்குள் டாக்ஸி ஓட்டுநர்களை அனுமதிக்காமல் தகராறு செய்ததாக ஆட்டோ ஓட்டுநர்கள் 31 பேரை கொச்சி நகர காவல்துறை கைது செய்துள்ளது. ஓட்டுநர்களின் தகராறு அடிதடியில் முடிந்துள்ளது. இதனால், ரயில்நிலையங்களில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இதுகுறித்து பயணிகள் சிலர், காவல்நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். கொச்சி ரயில் நிலையப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 31 பேருக்கு எதிராக பல்வேறு சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் கூறுகையில், ரயில்வே நிலையப் பகுதிக்குள் ஆட்டோக்களை நிறுத்துவதற்கும், பயணிகளை ஏற்றுதல், இறக்கி விடுவதற்கும் உரிமம் பெற்று ரயில்வே துறைக்கு கட்டணம் செலுத்துவதாகத் தெரிவிக்கின்றனர். மேலும் மற்ற வாகனங்கள் ரயில்நிலையப் பகுதிக்குள் நுழைய அனுமதி ரத்து செய்யபட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், ராயில்வே அதிகாரிகளோ, அதுபோன்ற கட்டணம் எதுவும் பெறபடுவதில்லை, அதனால் டாக்ஸிகளை ஆட்டோ ஓட்டுநர்கள் தடுத்து நிறுத்தி, மறிப்பதற்கு எந்தக் காரணமும் கிடையாது என்று தெரிவிக்கின்றனர்.

கொச்சி உயர்நீதிமன்ற வளாகத்திலும், டாக்ஸி ஓட்டுநர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே இதேபோன்ற மோதல் ஏற்பட்டு வருவதால், அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், ஆட்டோ ஒட்டுநர்கள், டாக்ஸி டிரைவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என்று காவலர்களிடம் எதிர்ப்புக் குரல் கொடுக்கிறார்கள்.

”டாக்ஸிகள் நிலையான கட்டணங்களை வசூலிக்க வேண்டும். டாக்ஸிகளில் குறைவான கட்டணங்கள் பெறுவதால், மக்கள் ஆட்டோக்களை நாடாமல், டாக்ஸிகளுக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது” என்று கொச்சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

மக்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப, மாற்றங்களை நாடிச் செல்லும் போது, மற்ற துறையினரோ அல்லது வேறு போட்டியாளர்களோ பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மத்திய-மாநில அரசுகளின் கடமையாகும். அப்படிச் செய்வதால் மட்டுமே, இதுபோன்ற ஓட்டுநர்களிடையே மோதல் தவிர்க்கப்படும்.

- நந்தினி சுப்பிரமணி

அடுத்த கட்டுரைக்கு