Published:Updated:

“அரசின் கொள்கைகள்தான் எங்களைக் கொல்கிறது!”: விவசாயிகள் #FarmersDay

“அரசின் கொள்கைகள்தான் எங்களைக் கொல்கிறது!”: விவசாயிகள் #FarmersDay
News
“அரசின் கொள்கைகள்தான் எங்களைக் கொல்கிறது!”: விவசாயிகள் #FarmersDay

“அரசின் கொள்கைகள்தான் எங்களைக் கொல்கிறது!”: விவசாயிகள் #FarmersDay

‘உலகை, உள்ளங்கையில் கொண்டுவருபவன் விஞ்ஞானி... உணவை, உள்ளங்கைக்குக் கொண்டுசெல்பவன் விவசாயி’ - என்ற ஒரு கவிஞனின் வரிகளுக்கு ஏற்ப... விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி, ‘விவசாயிகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. விவசாயிகள் இல்லை என்றால், உலகமே இருட்டாகி விடும் என்பது உண்மை. ஆனால், கால வெள்ளத்தில்... அந்த விவசாயிகளும் அழிந்து வருகிறார்கள் என்பதும் உண்மை.

விவசாயிகள் தினம்!

இந்தியாவை ஆட்சி செய்தவர்களில் சரண் சிங்கும் ஒருவர். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து சரித்திரப் புகழ்மிக்க பிரதமர் நாற்காலியில் அமர்ந்த சரண் சிங், விவசாயிகள் தினம் கடைப்பிடிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர். விவசாயத்தை நேசிக்கக்கூடிய மாமனிதரான இவர், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது, நிலம் கையிருப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு முக்கியப் பங்காற்றினார். இந்தியாவில் நெடுநாளைய பிரச்னையாக இருந்து வந்த உழுபவர்களுக்கே நிலம் சொந்தம் என்பதை பல கூட்டங்களில் முன்வைத்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இவர், பிரதமராய் பதவி வகித்த காலத்தில் கொண்டு வரப்பட்டதுதான் ஜமீன்தாரர் ஒழிப்புமுறை. அத்துடன், நிலச் சுவான்தார்கள், வட்டிக்குப் பணம் வழங்குவோர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். வேளாண் விளைபொருள் சந்தை மசோதாவை அறிமுகப்படுத்திய சரண் சிங், 1987-ம் ஆண்டு மே 29-ம் தேதி இறந்தார். டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு, வட இந்திய விவசாயச் சமூகங்களின் அன்பின் காரணமாக ‘கிசான் காட்’ (விவசாயிகளின் நுழைவாயில்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காகக் குரல் கொடுத்ததற்காக, 2001-ம் ஆண்டிலிருந்து வட இந்திய விவசாயிகள் சார்பாக, தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இருந்தாலும், விவசாயிகள் சிந்தும் வியர்வைத் துளிகள்... கண்ணீர்த் துளிகளுக்குச் சமமாகவே காட்சிப்படுத்தப்படுகின்றன.

விவசாயி என்பவர் யார்?

விவசாயி என்பவர், பொதுவாக விவசாயத்தைக் கட்டிக்காப்பவர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில், அவர்கள்தான் விவசாயிகள் என்றால்... அதுதான் இல்லை. விவசாயத் துறையில் 60 சதவிகிதத்தினர் விவசாயத் தொடர்புடையவர்களாக இருக்கிறபோதும், ‘ஆண்டொன்றுக்கு குறைந்தது 183 நாட்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறவரே, பிரதானமான விவசாயி’ என்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் வரையறை செய்யப்பட்டுள்ளது. இவர்தான் முழுமையாக தன்னுடைய தொழிலில், வாழ்வாதாரத்தில் மற்றும் வருமானத்தில் விவசாயத்தைச் சார்ந்திருப்பவராகக் கருதப்படுகிறார். இவர்களுக்கு அடுத்து இருப்பவர்கள் விவசாயத் தொழிலாளர்களாகக் கருதப்படுகிறார்கள். அதாவது, பகுதி நேர விவசாயிகளாகப் பார்க்கப்படுகிறார்கள். பிரதானமான விவசாயிகளாக இருந்தாலும் சரி... பகுதிநேர விவசாயிகளாக இருந்தாலும் சரி... எப்படிப் பார்த்தாலும் தற்போது விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது... இதுவரை 70 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாயத்தைவிட்டு வேறுதொழில்களுக்கு வெளியேறியிருப்பதாக ஆய்வு ஒன்று சொல்கிறது. 1960 - 1980-ம் ஆண்டு காலகட்டங்களில் பெருமளவில் விவசாயிகள் இருந்தனர். ஆனால், தற்போதைய ஆண்டுகளில் அதைக் கணக்கிட்டுப் பார்த்தால் மேற்கண்ட கூற்று உண்மை என்றே தெரியும்.

விவசாயம் பாதிப்பு!

விவசாயிகள், பெரும்பாலும் விவசாயத்தை விட்டு வெளியேறுவதற்குப் போதிய விளைச்சல் இல்லாததே காரணம். பெற்ற பிள்ளையை, கொலை செய்ய எந்தத் தாய்க்குத்தான் மனம் வரும்? எப்படியாவது கடன் வாங்கியாவது விவசாய நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மூலாதாரமான தண்ணீரே இல்லையெனில், அவர்கள் என்ன செய்ய முடியும்? பருவமழை பொய்த்து விட்டதாலும், உரிய நேரத்தில் தண்ணீர் வராததாலும் விவசாயம் செத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும், நம் விவசாயிகள்,  பிள்ளைகளைக் காப்பாற்ற பிச்சையெடுக்கும் சில தாய்மார்களைப் போன்று... குளம், குட்டை, ஏரி, கால்வாய் எனப் பலவற்றிலும் நீரை இறைத்து விவசாயத்தைக் காப்பாற்றுகின்றனர். இப்படித் தேங்கியிருக்கும் நீர்... எல்லா விவசாயிகளுக்கும் எப்படிப் போதுமானதாக இருக்கும்? தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கண்ணீர் வடிப்பதுபோல... பாதிக்கப்பட்ட விவசாயிகளும் கண்ணீர் வடிக்கிறார்கள்; கலங்கி நிற்கிறார்கள்; காணாமல் (இறந்து) போய்விடுகிறார்கள். 

விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

மேற்கண்ட பத்தி உண்மை என்பதை உணர்த்துகிறார் காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் சுகுமாறன். ‘‘தற்போது விவசாய நிலங்கள் குறைந்துகொண்டே வந்தாலும், விவசாயம் செய்வதற்கு விவசாயிகளும் இல்லை... விவசாயத் தொழிலாளர்களும் இல்லை. நகரத்தில் ஒரு சிறு கடைக்காரர் எடுக்கும் லாபத்தைக்கூட கிராமத்தில் 10 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயி எடுப்பதில்லை; எடுக்க முடிவதில்லை. காரணம், அந்த அளவுக்கு விவசாயம் மிகவும் தாழ்ந்து கொண்டே வருகிறது. இன்னும் ஒரு குறிப்பிட்ட தலைமுறை வரைக்கும்தான் விவசாயம் நடைபெறும். அதற்குப் பிறகு, அது எந்த நிலைக்குப் போகும் என்று யாராலும் சொல்ல முடியாது.

விவசாயத்துக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நவீன காலத்துக்குள் புதையுண்டு போய் விட்டன. ஒரு குண்டூசி விற்பவன்கூட அவன் சொன்ன விலைக்குத்தான்... நாம் காசு கொடுத்து வாங்க வேண்டி வருகிறது. ஆனால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு விலையை அரசு நிர்ணயம் செய்கிறது. விஜய் மல்லையாவுக்கு, கடன் கொடுக்கும் வங்கிகள், விவசாயிகளுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுகின்றன. அரசு அறிவிக்கும் எந்தச் சலுகைகளும் முழுதாய் விவசாயிகளுக்குக் கிடைப்பது இல்லை. மேலை நாடுகளில் விவசாயத்தை வளர்க்க... அந்த நாட்டு அரசு பல வழிகளில் உதவி செய்கிறது. ஆனால், இங்கு எதுவுமே இல்லை. அரசு, இங்கு திட்டமிட்டுச் செயல்படாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. தனிப்பட்ட முறையில் பார்த்தால்... ஒரு சாதாரண கடைக்காரர், அரசியல்வாதி, டாஸ்மாக் ஊழியர் ஆகியோருக்கு இருக்கும் மரியாதைகூட விவசாயிகளுக்கு இருப்பதில்லை. தண்ணீர் இல்லையென்றால்... அதைப் பெற்றுத் தருவது அரசின் கடமை. அதை விட்டுவிட்டு இருக்கும் தண்ணீரைத் திறந்துவிட்டதோடு... ‘பருவமழையை நம்பிச் சாகுபடி செய்யுங்கள்’ என்று சொன்ன அரசின் யோசனையால், இன்று சாகுபடி செய்த தமிழக விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் சுருண்டுவிழுந்து சாகிறார்கள். இறந்துபோன கட்சித் தொண்டர்களுக்கு நிதி அளிக்கும் அரசாங்கம், விவசாயிகளுக்கு நிதிதான் தரவில்லை... குறைந்தபட்சம் ஆறுதல் வார்த்தைகளையாவது சொல்லலாம் அல்லவா?’’ என்கிறார், சுகுமாறன் வேதனையோடு.

தொடரும் விவசாயிகள் தற்கொலை!

இந்தியாவின் முதுகெலும்பாய் இருக்கும் விவசாயம் மிகுந்த இந்த நாட்டில், விவசாயிகளின் வாழ்க்கைதான் தற்போது கேள்விக்குறியாகி விட்டது. இந்தியாவில் வேளாண்மை, பெரும்பாலும் பருவ மழையையே சார்ந்திருப்பதால்... அந்த மழை தவறுவது, விளைச்சலுக்கு ஏற்றவிலை இல்லாதது, நிலம் கையகப்படுத்துதல், இடைத்தரகர்களின் சுரண்டல், வறட்சி, கடன் பிரச்னை போன்ற காரணங்களால் விவசாயிகளின் தற்கொலை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவற்றால், கடன் வாங்கிய விவசாயிகளால் உரிய நேரத்தில் கடனைக் கட்ட முடிவதில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாதபோது... கடனை எங்கிருந்து கட்ட முடியும்? இதனால், உயிரையே விட்டுவிடுகிறார்கள் சில விவசாயிகள். காவிரி நீர் உரிய நேரத்தில் வராததாலும்... பருவமழை பொய்த்துப் போனதாலும் நம் தமிழகத்தில் மட்டும் கடந்த ஆறு மாதங்களில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு உள்ளனர். 1995-ல் தேசியக் குற்றங்கள் பதிவு அமைப்பானது, விவசாயத் தற்கொலைகளைப் பட்டியலிட்டது. பத்திரிகையாளர் சாய்நாத் என்பவரால், 1990-ல் விவசாயத் தற்கொலைகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தன. கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி கஜேந்திர சிங் என்ற விவசாயி, டெல்லியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது. ‘‘இந்த நாட்டில் விவசாயிகளுக்கு மதிப்பு இல்லை’’ என்று கத்திவிட்டு உயிரைவிட்ட கஜேந்திர சிங்கின் வார்த்தைகளை... இன்னும் இந்திய அரசு செவிமடுக்காததுதான் தற்கொலை தொடர்வதற்குக் காரணமாக இருக்கிறது. 

விவசாயிகள் சபிக்கப்பட்டவர்கள்!

கடன் வாங்கிய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது ஒருபுறம் என்றால்... கடனைக் கட்டாத விவசாயியை அடித்து இழுத்துச் செல்வது, மறுபுறம். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பாலன். இவர், கடன் மூலம் டிராக்டர் ஒன்று வாங்கியிருந்தார். அதற்கான பெரும்பகுதி தொகையை வட்டியுடன் செலுத்திவந்தார். இந்த நிலையில், நிலுவைத் தொகையைச் செலுத்தவில்லை என்பதற்காக, டிராக்டருக்கு கடன் வழங்கிய நிறுவன ஊழியர்களும், காவல்துறையினரும் சேர்ந்து பாலனிடமிருந்து டிராக்டரை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்ததுடன் அவரைக் கடுமையாக தாக்கிய சம்பவமும் நிகழ்ந்தேறியது. தென்னகத்தில் இப்படி என்றால்... வட இந்தியாவில் விவசாயிகளின் நிலைமை இதைவிட மோசம். விவசாயத்துக்காக, வாங்கியக் கடனைக் கட்டாத விவசாயிகளின் பெயர்களைச் சுவற்றில் எழுதி வைத்து அவமானப்படுத்தியிருக்கின்றன வங்கிக் கிளைகள். கடன் தொகையைச் செலுத்தாத விவசாயிகளை அசிங்கப்படுத்த, சுவரில் திருடர்கள் என்று எழுதுவதும்... அடித்து இழுத்துச் சென்று சித்ரவதை செய்வதும்தான் நாகரிகம் என்றால்... அதானியையும், மல்லையாவையும் விட்டு வைத்திருப்பது எந்தவிதத்தில் நியாயம்? விவசாயிகள் சபிக்கப்பட்டவர்கள் என்பதால்தானோ? விவசாயிகளின் கூக்குரல்களை மட்டும் அரசு அடக்கவில்லை... அவர்களுடைய மொத்தத்தையுமே அடக்கிவிடுகிறது. ‘ பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என அறிவித்து... ‘பொதுமக்கள் சிரமத்தைப் பொறுத்துக் கொள்ளவும்’ என்று சொன்ன மோடிக்கு... பேங்க் வாசலிலும், ஏ.டி.எம் வாசலிலும், போதிய அளவு பணம் எடுக்க முடியாமலும் வரிசையில் நின்று உயிரைவிட்ட விவசாயிகளின் எண்ணிக்கை எப்படித் தெரியும்? 

உழவனுக்கு எங்கே பாதுகாப்பு?

சுதந்திர இந்தியாவில் விவசாயிகளின் சோகத்தைச் சொல்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லுசாமி. ‘‘கடைநிலை ஊழியன்கூட சுவிஸ் வங்கியில் பணத்தைச் சேமித்துள்ளான். ஆனால், நாட்டில் 60 சதவிகிதம் உள்ள விவசாயிகள் எவரும் சுவிஸ் வங்கியில் பணத்தைச் சேமிக்கவில்லை. அரசாங்கம், அரசு ஊழியர்களின் 7-வது சம்பளக் கமிஷன் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. ஆனால், விவசாயிகளின் சம்பளக் கமிஷன் அறிக்கையை கிடப்பில் போட்டது ஏன்? நாட்டில் 2 சதவிகிதமாய் இருப்பவர்களைப் பார்த்து அரசு, தோப்புக் கரணம் போடுகிறது. 60 சதவிகிதம் இருக்கும் விவசாயிகளைப் பார்த்து என்ன செய்வது என்கிறது? அரசு ஊழியர்களின் சம்பளக் கமிஷன் அறிக்கையை ஏற்கும் அரசாங்கம், ஏன் விவசாய சம்பளக் கமிஷன் அறிக்கையை ஏற்கவில்லை? ஒரு கண்ணில் வெண்ணெய். மற்றொரு கண்ணில் சுண்ணாம்பா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொல்கிறோம். அப்படியிருக்கையில், உழவனுக்கு எங்கே இருக்கிறது பாதுகாப்பு? வறட்சியின்போது... அரசு ஊழியர்கள், தொழில் செய்பவர்கள் யாருக்காவது வருமானம் குறைகிறதா? இல்லையே... விவசாயிகளுக்கு மட்டும்தான் வருமானம் இல்லை. ‘கொல்லையே காய்ந்து போனாலும் குருவிக்குப் பொறுக்கு இல்லாமல் போகாது.’ கொல்லை காய்ந்துபோவதால் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். ஆக, குருவி போன்று இருக்கும் அரசு ஊழியர்களுக்கு வருமானம் வந்து கொண்டுதான் இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். உழவனுக்குப் பாதுகாப்பு இருந்தால்தான் உணவுக்குப் பாதுகாப்பு இருக்கும். கடந்த 20 ஆண்டுகளில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் உணவு பாதுகாப்புச் சட்டம் இயற்றியிருப்பது ஓர் ஏட்டுச்சுரைக்காய். நாட்டில் நடப்பது ஒரு காலனி ஆட்சி... காலனி ஆட்சி, என்பது அந்நியனுடைய ஆட்சி. ஆக, இந்தக் காலனி ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்றால்... விவசாயிகள் தங்கள் காலில் இருக்கும் ‘காலணி’களை எப்போது தூக்கிப் பிடிக்கிறார்களோ, அன்றுதான் முடியும். இலவசம், மானியம், கடன், சலுகை, வருமானவரி விலக்கு... இவை எவற்றையும் நாங்கள் கேட்கவில்லை. அரசு ஊழியர்களின் சம்பளக் கமிஷன் பரிந்துரையைப் போல் விவசாயகளின் சம்பளக் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தினாலே போதும்’’ என்கிறார் நல்லுசாமி ஆதங்கத்தோடு.

‘இந்தியாவில் விவசாயிகளுக்கு உண்மையிலேயே மதிப்பு இல்லை’ என்று தெரிவதால்தான், விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்களோ? என்ற ஐயம் எழுகிறது.

- ஜெ.பிரகாஷ்