Published:Updated:

விவசாயி..விளிம்புநிலையும் வாழ்நிலையும்! #FarmersDay

விவசாயி..விளிம்புநிலையும் வாழ்நிலையும்! #FarmersDay
News
விவசாயி..விளிம்புநிலையும் வாழ்நிலையும்! #FarmersDay

விவசாயி..விளிம்புநிலையும் வாழ்நிலையும்! #FarmersDay

தேசிய விவசாயிகள் தினம்’ கடைபிடிக்கும் அதே சமயம் விவசாயம்தான் நாட்டின் முதுகெலும்பு என்பதை நாம் பெரிதும் உணரவேண்டிய சூழலில் இருக்கிறோம். 2016-ல் விவசாயத்தின் வளர்ச்சிநிலை பற்றி உங்கள் கருத்துகளை பகிரமுடியுமா என்றதற்கு பெரும்பாலானவர்கள், கடந்த பல வருடங்களாக விவசாயத்துக்கு ஏறுமுகமே இல்லை என்பதை வருத்தமான குரலில் பதிவுசெய்தனர். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பயிர்கடன்களை ரத்து என்று அரசாங்கம்  திட்டங்களை அறிவித்து வந்தாலும் யானைப்பசிக்கு சோளப்பொறி என்னும் கணக்கில் விவசாயிகளுக்கு அது நலன் அளிப்பதாக இல்லை.  மேலும், செயற்கையாக விவசாயிகள் தங்கள் நிலங்களின் மீது ஏற்படுத்தியுள்ள பாதிப்பு ஒரு பக்கம். பெருவெள்ளம், பெரும்புயல் என இயற்கையே விவசாயிகளைக் கையறுநிலைக்குத் தள்ளுவது ஒரு புறம் என,”யார்தான் உதவுவார்கள் எங்களுக்கு?” என்கிற கண்ணீர் நிலையில்தான் விவசாயிகள் இருக்கின்றனர். 

உண்மையில் விவசாயி கவலை கொண்டால் நாடே கவலை கொள்ள வேண்டும். ஆனால் பருப்பு தொடங்கி அனைத்தையும் இறக்குமதி செய்யத் தொடங்கிவிட்ட நிலையில் ‘இனி எங்களுக்கு உங்களைப் பற்றி என்ன கவலை?’ என்கிற ரீதியில் அவர்களது கண்ணீரைப் புறந்தள்ளி வருகிறோம். இன்னும் பத்து வருடங்களில் உலகின் பெரும்பாலான பகுதிகள் ஊட்டச்சத்து குறைவாலும், உணவின்மையாலும் தமது மனிதர்களை இழக்கும் சூழல் இருக்கிறது.  இன்றைய தேதிக்கு நாம் போஷாக்கு அளிக்க வேண்டியது நம் விவசாயிகளுக்குதான்.  

தொடர்பற்றுப் போகும் நீரும் விதைப்பும்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பட்டம் பார்த்து பயிர் செய்த விவசாயிகள் இன்று பயிர் செய்து விட்டு என்ன ஆகுமோ என்னும் அச்சத்தில்தான் உழல வேண்டி இருக்கிறது, இயற்கை விவசாயி 'நல்லகீரை' ஜெகன்னாதன் கூறுகையில்,”இயற்கை விவசாயம் செய்பவர்களுக்காவது குறைந்த பட்சம் மகசூல் கிடைக்கிறது. செயற்கை உரம் போன்றவற்றை உபயோகித்து விவசாயம் செய்பவர்கள் பெரும்பாலும் அதனை கைவிட்டுப்போகும் நிலையில்தான் இருக்கிறார்கள். மேலும் சென்ற ஆண்டு வெள்ளம் வந்து மொத்தப் பயிரையும் நாசம் செய்தது. இந்த ஆண்டு ஒரு பக்கம் புயல் வந்து அனைத்தையும் சுருட்டிக் கொண்டுபோனது, மறுபக்கம் மழையும் இல்லை தண்ணீரும் இல்லை. நிலம் பாதிப்பில்லாமல் நன்றாக இருந்தாலும் நீர் இருந்தால்தான் விதை வளரும். ’ஐப்பசி மாதம் அடைமழை கார்த்திகைக்குப் பிறகு மழை இல்லை’ என்பார்கள். ஆனால் நாம் உருவாக்கி வைத்துள்ள பருவநிலை மாற்றத்தால் எல்லாமே தலைகீழாக நடந்து வருகிறது. அடிப்படையாக அனைவரும் இயற்கை விவசாயம் குறித்தான விழிப்புணர்வைப் பெறுவதுதான் இதற்கான முதற்கட்டத் தீர்வு. மேலும் ஒரு வகைப் பயிரை மட்டும் நம்பி இருக்காமல் சுழற்சி முறையில் பயிர் செய்தல், ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்புகளை ஊக்குவித்து செயல்படுதல் என ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் செயல்பட்டால்தான் விவசாயம் உயிர்த்து இருக்க முடியும்” என்கிறார்.

அரசியலால் அல்லல்படும் விவசாயியும் விவசாயமும்

கடந்த 2014-ல் 5064 என்கிற எண்ணிக்கையில் இருந்த விவசாயிகள் தற்கொலை, 2015-ல் 8000 என உயர்ந்தது. 2016-ல் இது 40 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. அதுவும் முதல் நான்கு மாதங்களில் மட்டும் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 400 விவசாயிகள் இறந்துள்ளனர். சத்தமில்லாமல் நடந்த கொலைகள் என்று இதனைச் சொல்லலாம்.  டெல்டா பகுதி நெல் விவசாயியான ஜெயராமன் கூறுகையில்,"பருவமழை வருடம் தவறாமல் பொய்த்து வந்தாலும் உரிய தண்ணீர் கிடைத்தால் ஓரளவுக்காவது பயிர் ஈட்ட முடியும். இந்த முறை நடந்த பல அரசியல் களேபரங்களுக்கு நடுவே இவர்கள் காவிரியிலிருந்து பெற்றுத் தரவேண்டிய நீரைப்பற்றி மறந்தேவிட்டார்கள். இதனால் நெல் உட்பட அனைத்துப் பயிர்களும் விளைச்சலில்லாமல் வீணானது. நேரடி விதைப்பிலும் மகசூல் இல்லை. தமிழகத்தில் மட்டும் இதுவரை 60-க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டும் மன உளைச்சலுக்கு ஆளாகியும் இறந்துள்ளனர். ஆனால், அவர்கள் ஆறுதல் அடையும் அளவுக்கு அரசும் எவ்வகையிலும் உதவவில்லை. பயிர்கடன் ரத்து செய்தது கூட சிறுவிவசாயிகளுக்குதான் ஆனால் பெருவிவசாயிகள் தான் இங்கு எண்ணிக்கையில் அதிகம். மற்றொரு பக்கம் நெல், மஞ்சள், தக்காளி என விளைவித்தவர்கள் அதனை சந்தையில் விற்கமுடியாமல் தள்ளாட்டத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு ஆதார விலையாவது கிடைக்கவேண்டும். மற்றொரு பக்கம் பருப்பு உற்பத்தி இல்லை என்பதற்காக அரசு பெரும் பொருள் கொடுத்து இறக்குமதி செய்துவருகிறது ஆனால் தமிழக விவசாயிகளே முறையான பயிற்சி அளித்தால் பருப்பு சாகுபடிக்கும் தயாராக இருக்கிறார்கள். உதவி கிடைத்தும் தேவையறிந்து உதவி கிடைக்காததால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் விவசாயிகள்” என்கிறார்.

கார்பரேட்டுகளின் ஆக்கிரமிப்பு

ஒருபக்கம் செயற்கை முறையிலான விவசாயம் பெரும் வீழ்ச்சி நிலையில் இருக்கிறது என்றால், இயற்கை விவசாயம் குறித்து நாட்டின் கடைக்கோடிகள் வரை பேசத் தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக   பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் கூட இயற்கை விவசாயத்தில் பங்கெடுக்கத் தொடங்கிவிட்டன இது ஆபத்து என்கிறார் ’வானகம்’ வெற்றிமாறன், "இயற்கை வேளாண்மையும் அது சார்ந்து இயங்குபவர்கள் தற்சார்பு விவசாய முறையைப் பின்பற்றவேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம். ஆனால், இயற்கை விவசாயத்தில் களம் இறங்குபவர்கள் அப்படியான எண்ண ஓட்டத்தில் இருப்பதில்லை. நகரங்களில் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்பவர்கள் தங்களது பொழுதுபோக்காகதான் இதனைபார்க்கிறார்கள். இதில் நல்ல லாபம் கிடைக்கும் என யாராவது கூறினால் தங்கள் மொத்தப் பணத்தையும் இதில் முதலீடு செய்துவிட்டு அதற்கான லாபத்தை எதிர்நோக்குகிறார்கள். மறுபக்கம் செயற்கை விவசாய முறை செய்தவர்கள் இயற்கை விவசாய முறைக்கு மாறும்போது அவர்களுக்குப் போதிய உதவிகளைச் செய்யும் நபர்களும் குறைவு இதனால் அவர்களுக்கு இதில் விளைச்சல் கிடைத்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதனால் ரிலையன்ஸ், பிர்லா போன்ற நிறுவனங்கள், முழுவதும் இயற்கை விவசாயம் செய்வது கடினம் அதனால் நீங்கள் எங்களது உரங்களை வாங்குங்கள் என அவர்களை அணுகத் தொடங்கிவிட்டார்கள். இதில் இருக்கும் அரசியலைப் புரிந்துகொண்டவர்கள் பிழைத்துக் கொள்ளலாம். விவசாயம் தொடர்பாக இந்த ஆண்டில் மட்டும் இவ்வளவு பாதகங்கள்  இருந்தாலும் இதில் இருக்கும் ஒரு  நேர்மறை அம்சம் விவசாயத்தின் தேவையை உணர்ந்து பல இளைஞர்கள் இன்று விவசாயம் செய்யத் தொடங்கி இருப்பது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள்” என்கிறார்.

பட்டநிலத்தில் சிந்தும் கண்ணீரில் உயிர்பெற்றுத் துளிர்விடும் ஒற்றைப்பசுமைதான் அங்கும் இங்குமாய் இளைஞர்கள் விவசாயத்தில் களமிறங்கி இருப்பதும். நம்பிக்கைகளை அவர்களிடம்தான் விதைத்துள்ளோம். அவர்கள் வழியேனும் வாழட்டும் விவசாயமும் அது சார்ந்து இருக்கும் மொத்த தேசமும்.

-ஐஷ்வர்யா 

படங்கள்: ந.வசந்தகுமார்.