பிரீமியம் ஸ்டோரி
வசன யுத்தம்
வசன யுத்தம்!
வசன யுத்தம்
வசன யுத்தம்
 
வீயெஸ்வி
வசன யுத்தம்

ன்புள்ள டைரக்டருக்கு,

‘அங்கவஸ்திரத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு அடாவடி பண்ணும் ஆறுமுகத்துடன் உனக்கு என்ன சகவாசம்?’ என்று ஒரு வசனம் உங்களுடைய சமீபத்திய சினிமாவில் இடம் பெற்றுள்ளதாக அறிந்தேன்.இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

வசன யுத்தம்

ஆறுமுகம் என்பது என்னு டைய பெயர். அங்கவஸ்திரத்தை இடுப்பில் கட்டிக்கொள்வது என் நீண்ட நாள் வழக்கம். அது அடா வடி பண்ணுவதற்காக அல்ல. வேகமாக நடக்கும்போது வேட்டி அவிழ்ந்துவிடாமல் இருக்க, நான் பயன்படுத்தும் உத்தி!

ஆக, உண்மைக்கு நேர்மாறாக, என்னைக் கேவலப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத் துடன் இந்த வசனத்தை நீங்கள் படத்தில் சேர்த்திருக்கிறீர்கள்.

இதை உடனடியாக நீக்குவதோடு, நீங்களும், வசனகர்த் தாவும் பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அதுவரையில் என் போராட்டம் தொடரும்.

இப்படிக்கு, ஆறுமுகம்

ன்புள்ள திரு.ஆறுமுகம்,

குறிப்பிட்ட அந்த வசனம் உங்கள் மனதை மிகவும் புண்படுத்தியிருப்பது அறிந்து மகிழ்ந்தேன். என் படத்துக்கு இலவசமாக விளம்பரம் கொடுக்க முன்வந்திருப்பதற்கு நன்றி!

வசன யுத்தம்

நிற்க, என்னுடைய வசனகர்த்தா இந்த வசனத்தை எழுதவில்லை. எனவே, மன்னிப்புக் கேட்கும் விளை யாட்டில் அவரைச் சேர்த்துக்கொள்ள வேண்டாம். நானும் அந்த வசனத்தை எழுதவில்லை. ஸோ, மன்னிப்பு டீமில் எனக்கும் இடம் இல்லை.

அது ஒருபுறமிருக்க, பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், எந்தப் பொது இடம் என்று தெரிவிக்க வில்லை. சினிமா தியேட்டரா, மெரீனா கடற் கரையா, அண்ணா சதுக்கமா, அரசு விருந்தினர் மாளிகையா என்பது தெளிவாகத் தெரிந்தால், காவல் துறையினரிடம் அனுமதி பெற எளிதாக இருக்கும்!

தயவுசெய்து போராட்டத்தை நிறுத்திவிடாதீர் கள். என் படம் நூறு நாட்கள் ஓடுவது உங்கள் கையில்தான் இருக்கிறது.

இப்படிக்கு, டைரக்டர்

டை ரக்டருக்கு,

இரண்டாவது கடிதத்திலேயே உங்கள் மீது நான் கொண்டிருந்த அன்பு காணாமல் போய் விட்டதைக் கவனித்தீர்களா?!

குறிப்பிட்ட அந்த வசனத்தை உங்கள் வசன கர்த்தாவும் எழுதவில்லை, நீங்களும் எழுதவில்லை என்றால், வேறு யார்தான் எழுதினார்கள்?

உங்கள் கடிதத்தில் கேலி மட்டுமே விஞ்சி நிற்கிறது. இது என் கோபத்தை மேலும் கிளறி விட்டிருக்கிறது. எனவே, என் போராட்டத்தில் சர்வாதிகார ஆடவர் முற்போக்குக் கழகமும் இப்போது இணைந்துவிட்டது!

உங்கள் படம் எப்படி நூறு நாட்கள் ஓடுகிறது என்பதையும் பார்த்து விடுகிறேன்!

இப்படிக்கு, ஆறுமுகம்

ன்புள்ள ஆறுமுகம்,

நான் தீவிர முருக பக்தர். எனவே, ஆறுமுகத்திடம் என்றும் எனக்கு அன்பும், பக்தியும் குறையாது!

வசன யுத்தம்

நிற்க. அந்த அங்கவஸ்திர வசனத்தை, அந்தக் காட்சிக்கு டப்பிங் குரல் கொடுத்த ஆர்ட்டிஸ்ட்டே டப்பிங் சமயத்தில் உற்சாகமாகப் பேசிவிட்டார். அது நன்றாக அமைந்திருக்கவே நானும் அப்படியே விட்டுவிட்டேன்.

தயவுசெய்து போராட்டத்தை வாபஸ் பெற்று, என் தயாரிப்பாளர் தலையில் அங்கவஸ்திரம் - மன்னிக்க, துண்டு போடும்படி செய்துவிடாதீர்கள்!

இப்படிக்கு, டைரக்டர்

டை ரக்டனுக்கு,

‘ர்’ போட்டு மரியாதையுடன் விளிக்க என் தன்மானம் இடம் தரவில்லை!

பழியை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மீது போடுகிறீர்களே, வெட்கமாக இல்லை?

எது எப்படியோ... படம் முப்பது நாட்கள் ஓடி, இந்தப் படத்துக்காகப் போட்ட முன் பணத்தை தயாரிப்பாளர் எடுத்துவிடுவதைக்கூட நான் விரும்பவில்லை. எனவே, உடனடியாக என் போராட்டத்தைக் கைவிடுகிறேன்.

ஆனால், ஒரு விஷயம்... நீங்கள் கேவலப் படுத்திவிட்ட அந்த அங்கவஸ்திரத்தை இனியும் நான் இடுப்பில் அணியமாட்டேன். இதனால், என் வேட்டி அவிழும் என்று நினைக்க வேண்டாம். இனி, பெல்ட் கட்டிக்கொள்ள முடிவு செய்துவிட்டேன்!

இப்படிக்கு, ஆறுமுகம்

ன்புள்ள ஆறுமுகம்,

என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள்? நீங்கள் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்ற கோரிக்கையோடு என் தயாரிப்பாளர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறாராம்! போலீஸ் கமிஷனரிடமும் புகார் தந்துவிட்டார்!

ஆக, போராட்டத்தைக் கைவிட்ட காரணத்துக்காகக் கைதாகும் முதல் நபராக உங்கள் பெயர் சரித்திரத்தில் இடம்பெறப் போகிறது!

உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

இப்படிக்கு, டைரக்டர்

 
வசன யுத்தம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு