Published:Updated:

இலங்கேஸ்வரன் தந்த ஏக முக ருத்ராட்சம்!

இலங்கேஸ்வரன் தந்த ஏக முக ருத்ராட்சம்!

பிரீமியம் ஸ்டோரி
இலங்கேஸ்வரன் தந்த ஏக முக ருத்ராட்சம்!
இலங்கேஸ்வரன் தந்த ஏக முக ருத்ராட்சம்!
இலங்கேஸ்வரன் தந்த ஏக முக ருத்ராட்சம்!
இலங்கேஸ்வரன் தந்த ஏக முக ருத்ராட்சம்!
 
ஆரூர்தாஸ்
இலங்கேஸ்வரன் தந்த ஏக முக ருத்ராட்சம்!
இலங்கேஸ்வரன் தந்த ஏக முக ருத்ராட்சம்!
ரா மசுவாமி சுப்ரமணிய லட்சுமி நரசிம்மன் என்கிற, நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் இன்று நம்மிடையே இல்லை!

தமிழகத்தில் இதுவரை இரண்டே இரண்டு பேரின் இரண்டு நாடகங்கள் மட்டுமே, மூவாயிரம் முறைகளுக்கு மேல் நடைபெற்றுச் சாதனை படைத்திருக்கின்றன. ஒன்று, எம்.ஆர். ராதாவின் ‘ரத்தக் கண்ணீர்’. இரண்டாவது, ஆர்.எஸ். மனோகரின் ‘இலங்கேஸ்வரன்’!

எம்.ஜி.ஆர் - சிவாஜி என இரு திலகங்களுக்கும் ஏராளமான படங்களுக்கு நான் வசனம் எழுதிக்கொண்டு இருந்த பிஸியான கால கட்டத்தில், தனக்கு ஒரு நாடகம் எழுதித் தர வேண்டும் என அன்புக் கட்டளையிட்டார் மனோகர். எனக்கும் விருப்பம்தான். ஒவ்வொரு முறை அவர் கேட்கும்போதும், பலப் பல தலைப்புகளைச் சொல்வேனே தவிர, எழுதித் தந்ததில்லை. நேரம் இன்மைதான் காரணம். ஆயினும், அவர் என்னை விடுவதாக இல்லை.

ஒரு படப்பிடிப்பின்போது, என்னிடம் அவர் ஏமாற்றமும் விரக்தியுமாகச் சொன்னார்... ‘‘என் மேடையில் அரங்கேற்றம் பண்ணணும்னு எத்தனையோ கதாசிரியர்கள் என்கிட்டே படை எடுத்துத் தோத்துட்டாங்க. ஆனா, உங்க ஒருத்தர்கிட்டே மட்டும்தான் நான் தோத்துப்போயிட்டேன்!’’

‘‘இல்லண்ணே! இந்த விஷயத்துல என்கிட்டேயேதான் நான் தோத்துட்டேன்’’ என்றேன். ‘‘விட மாட்டேன். தொந்தரவு பண்ணிக்கிட்டே இருப்பேன். என் முயற்சி ஒரு நாள் பலன் அளிக்கும்னு எனக்குத் தெரியும்!’’ எனச் சிரித்தார்.

இலங்கேஸ்வரன் தந்த ஏக முக ருத்ராட்சம்!

ஒரு முறை அவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, ருத்ராட்சம் பற்றி பேச்சு வந்தது. ‘‘ருத்ராட்சங்களில் ஒரு முகம் கொண்டவை, இரு முகம் கொண்டவை என பத்து முக ருத்ராட்சம் வரை பல வகைகள் உண்டு. இவற்றில் ஏக முகம், தச முகம் உள்ள ருத்ராட்சங்கள் கிடைப்பது அபூர்வம். ருத்ராட்சத் துக்கு மருத்துவ குணம் உண்டு. அது மன எழுச்சியை மட்டுப்படுத்தி, காம உணர்ச்சியை அடக்கி, உள்ளத்தை அமைதிப்படுத்தும். அதனால்தான் சந்நியாசிகள் அதை அணிகிறார்கள். சைவ சமயத்தைச் சார்ந்தவர்களுக்குத் திருநீறு போல ருத்ராட்சமும் ஒரு முக்கியச் சின்னம்; புனிதப் பொருள்’’ என்று விளக்கினேன்.

இது நிகழ்ந்து சில நாட்களுக்குப் பிறகு, ஒரு நாள் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. ‘‘மனோகர் பேசுறேன். நீங்க என் வீட்டுக்கு வர முடியுமா?’’

போனேன். பூஜை அறையிலிருந்து ஒரு சிறு பிளாஸ்டிக் டப்பாவைக் கொண்டு வந்தார்... ‘‘ஒரு பெரிய மடத்துலேர்ந்து இதை எனக்குக் கொடுத்தாங்க. இது ஒரு விசேஷமான, மிக அபூர்வமான ஏக முக ருத்ராட்சம். ஏனோ இதை உங்க ளுக்குக் கொடுக்கணும்னு என் மனசுல தோணுச்சு. இன்னிக்கு ரொம்ப நல்ல நாள். இந்தாங்க. நீங்க அமோகமா இருக்கணும்!’’

நான் நெகிழ்ந்து, அவரை வணங்கி, பயபக்தியுடன் அதைப் பெற்றுக் கண்களில் ஒற்றிக்கொண்டேன். அவர் சிரித்தபடி, ‘‘அவ்வளவுதானா? அது எப்படி இருக்குன்னு திறந்து பார்க்க வேண்டாமா?’’ என்றார். ‘‘எனக்குத் தெரியும்ணே! ஏக முகம்னா காய் நடுவுல ஒரே ஒரு வகிடு மட்டும் இருக்கும்!’’ என்றேன். ‘‘அது மட்டுமில்லே, அதுல இன்னும் சில விசேஷங்களும் இருக்கு. எடுத்துப் பாருங்க!’’ என்றார்.

பார்த்தேன். நான் சொன்னது போல், அந்த ருத்ராட்சக் கொட்டையில் ஒரே ஒரு வகிடு மட்டும்தான் இருந்தது. மற்றபடி, வேறு எதுவும் தெரியவில்லை. ‘‘நல்லா கூர்ந்து பாருங்க’’ என்று சிரித்தார் மனோகர். காயை உருட்டியபடி உற்றுக் கவனித்தேன். அட, ஒருபுறத்தில் ‘திரிசூலம்’ போன்ற வடிவம் தென்பட்டது. சொன்னேன். ‘‘உம்... அப்புறம்?’’ என்றார். உருட்டி னேன். அழகான லிங்க வடிவம் தென் பட்டது. ‘‘சிவலிங்கம் இருக்குண்ணே!’’ ‘‘உம்... அப்புறம்?’’ மீண்டும் உருட்டிப் பார்த்தேன். படமெடுக்கும் நாக உருவம் கண்களில் பட்டது. ‘‘இன்னொண்ணும் இருக்கு. நல்லா தேடிப் பாருங்க!’’ என்றார். ரொம்ப நேரம் உருட்டி உருட்டிப் பார்த்து, கடைசியில் கண்டு பிடித்துவிட்டேன். ருத்ராட்சக் கொட்டைக்கே உரிய அந்த வளைந்து நெளிந்த ரேகைகளினூடே ‘ஓம்’ என்ற சம்ஸ்கிருத எழுத்து வடிவம்!

‘‘பார்த்தீங்களா, இந்தச் சிறு ருத்ராட்சத்தில் மிக நுட்பமான இத்தனை வடிவங்கள்! எனக்கு எத்தனையோ நண்பர்கள் இருக்காங்க. ஆனாலும், இதன் அருமை தெரிஞ்ச உங்களுக்குதான் இதைக் கொடுக் கணும்னு என் மனசு சொல்லிச்சு!’’ என்றவர்,

‘‘சரி, நம்ம பழைய விஷயத்துக்கு வர்றேன். இதுவரைக்கும் நீங்க எனக்கு நாடகம் எதுவும் எழுதித் தரலை. இப்போ நான் ஒரு தலைப்பு கொடுத்தா, அதுக்கான நாடகத்தை எழுதிக் கொடுப்பீங்களா?’’ என்று சிரித்தார்.

‘‘உடனே எழுதித் தரேன். தலைப்பு சொல்லுங்க!’’

‘‘மாணிக்கவாசகர்!’’

இலங்கேஸ்வரன் தந்த ஏக முக ருத்ராட்சம்!

எழுதத் தொடங்கினேன். பாண்டிய மன்னனின் அவையில் அமைச்சராகப் பதவி ஏற்று, தமது அளப்பரிய அறிவாற்றலால் பாண்டியனையும் மற்ற மந்திரிப் பிரதானிகளையும் மாணிக்கவாசகர் வியப்பில் ஆழ்த்தும் அரசவைக் காட்சியை எழுதி, மனோகரிடம் படித்துக் காட்டினேன். ‘‘அடுக்குச் சொல் அலங்காரமும், எதுகை மோனை ஜாலங்களும் நிறைந்த உங்களுடைய இந்த அழகிய தமிழை நான் பேசி நடிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் உங்களை இவ்வளவு காலம் தொந்தரவு செய்தேன். மிக்க நன்றி!’’

ஆனால், நடந்ததோ வேறு! எதிர்பாராமல் இடறி விழுந்ததில் அவருடைய கால் எலும்பு உடைந்து, நிற்கவே முடியாத நிலை ஏற்பட்டு, அதன்பின் அவரால் நாடகமே நடத்த இயலாத சூழ்நிலையில், என் ‘மாணிக்கவாசகர்’ ஒரேயடியாக மௌனத்தில் ஆழ்ந்துவிட்டார்!

கடந்த ஆண்டு மே மாதம்... இயல், இசை, நாடகம் பற்றி நான் எழுதிய ‘முத்தமிழ்க் கொத்து’ என்னும் இலக்கிய நூலின் இயல் பகுதிக்கு ‘ஒரு பேனா பேசுகிறது’ என்னும் தலைப்பில் காவியக் கவிஞர் வாலியிடமும், இசைப் பகுதிக்கு ‘ஓர் ஆர்மோனியம் பேசுகிறது’ என்னும் தலைப்பில் இசைஞானி இளைய ராஜாவிடமும் அணிந்துரைகள் வாங்கிய பிறகு, நாடகப் பகுதிக்கு ‘ஒரு மகுடம் பேசுகிறது’ என்கிற தலைப்பில் அண்ணன் மனோகரை எழுதவைக்க ஆசைப்பட்டு, அவர் வீட்டுக்குப் போய் விஷயத் தைச் சொன்னேன்..

‘‘முந்தா நாள் ஒரு துயரச் சம்பவம் நடந்துடுச்சு. என் மூத்த சகோதரியின் கணவர் இறந்துவிட்டார். அந்த அதிர்ச்சியில் என் சகோதரியும் இறந்து விட்டாள். ஒரே சமயத்தில் ரெண்டு பேரும்... என்னால இதைத் தாங்க முடியலே’’ என்றார் அவர்.

நான் பதறிவிட்டேன். ‘‘ஐயோ அண்ணே! எனக்கு விஷயமே தெரியாது. என்னை ரொம்பவும் மன்னிக்கணும். பரவாயில்லை, நான் பார்த்துக் கறேன்’’ என்று கிளம்ப யத்தனித்தேன்.

‘‘இருங்க! உங்க நூலுக்கு நான் அணிந்துரை எழுதாம வேற யார் எழுதுவா? புத்தகத்தைக் கொடுத்துட்டுப் போங்க. ஒரே வாரத்துல நானே உங்களைக் கூப்பிடுறேன்!’’ என்றார். அடுத்த மூன்றாவது நாளே என் தொலைபேசி ஒலித்தது. ‘‘மனோகர் பேசுறேன். இப்படி ஒரு அருமையான நூலைப் படிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி. படிச்சு முடிச்சு, நேத்து ராத்திரியே அணிந்துரையும் எழுதி வெச்சுட்டேன்!’’

எனது ‘முத்தமிழ்க் கொத்து’ நூலில் ‘ஒரு மகுடம் பேசுகிறது’ தலைப்பில் இடம் பெற்ற, அந்த அணிந்துரையின் சிறு பகுதி இது... ‘அருமைச் சகோதரர் ஆரூர்தாஸ், என் மீது கொண்ட அன்பின் காரணமாக, ‘நாடகத் தமிழை மேடையில் மிளிரச் செய்த மேதைகளின் கடைசி வாரிசு இவர் என்று என்னைக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நாடகத் தமிழின் நிலை அப்படி ஆகிவிடாது; ஆகிவிடக் கூடாது! என்னைப் போல இன்னும் பலர் என் வாரிசுகளாக நிச்சயம் வரு வார்கள். நானும் என்னால் இயன்றவரை சில பேரை யாவது உருவாக்குவேன்.’

அருமை அண்ணன் ஆர்.எஸ்.மனோகர் மீண்டும் மீண்டும் அத்தனை முறை கேட்டும், அவருக்காக ஒரு நாடகம் எழுதித் தர என்னால் முடியவில்லை. ஆனால், நான் ஒரே ஒரு முறை கேட்டதும், அவ்வளவு துயரம் மிகுந்த சோகச் சூழலிலும், என் நூலைப் படித்து முடித்து, அணிந்துரையும் எழுதிக்கொடுத்த அவருடைய அன்புக்கு முன் நான் எம்மாத்திரம்!

 
இலங்கேஸ்வரன் தந்த ஏக முக ருத்ராட்சம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு