Published:Updated:

இப்படிக்கு, வாழ்க்கை

இப்படிக்கு, வாழ்க்கை

பிரீமியம் ஸ்டோரி
இப்படிக்கு, வாழ்க்கை
இப்படிக்கு, வாழ்க்கை
இப்படிக்கு, வாழ்க்கை
இப்படிக்கு, வாழ்க்கை
 
‘‘நசுக்கப்படுகிறோம் நண்பர்களே!’’
இப்படிக்கு, வாழ்க்கை

‘‘ஒ ரு கொடியில் பூத்து வந்த ஜாதி மல்லி- இப்போ
ஒதுங்கி நின்னு தவிக்கிறதே வீதி மல்லியாய்... இறைவா
உன் படைப்பினிலே ஏன் இந்த சோதனையோ? உன் ஒய்வு
நேர விளையாட்டில் உதித்து வந்த யோசனையோ?’’

இப்படிக்கு, வாழ்க்கை

- லேசான கரகரப்பு இருந்தாலும், மனசைக் கவ்வுகிற குரலில் பாடுகிற ரேவதியின் சிறகடிக்கும் விழிகளில் தெரிவது பெரும் சோகம்.

‘‘என்னை மாதிரியான அரவாணிகளைப் பற்றி யாரோ எழுதின கவிதை இது.

இப்போ என் கதை சொல்லட்டுமா?

நான் ஒரு தமிழன், தமிழச்சி, தமிழ்ப் பிறப்பு.

இதே தமிழ் நாட்டில் ஒரு கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எனக்கு ஒரு அக்கா, மூன்று அண்ணன்கள். நான் கடைக்குட்டி என்பதால், ரொம்பச் செல்லம். அதிகாலைகளில் அக்கா கோலம் போடும்போது பக்கத்தில் போய் உட்காருவேன். அக்காவின் மனசுக்குள் இருக்கிற அழகான கோலம் வரி வரியாக நெளி நெளியாக எப்படி வாசலில் உருவெடுக்கிறது என்பதை ஆசை ஆசையாகப் பார்ப்பேன்.

விதைவிதையாய் அக்கா புள்ளி வைத்து, அதையே அழகான மலராக, மயிலாக எப்படியெல்லாம் மாற்றுகிறாள் எனப் பார்ப்பதில் ஒரு ஆனந்தம். அப்புறம், அக்கா எழுந்திருக்கும் முன்பே நானே கோலங்கள் வரைய ஆரம்பித்தேன். ‘அண்ணாதுரை எவ்ளோ அழகா கோலம் போடறான்’ என எல்லோரும் வியப்பதில், என் மனசு பூக்கும். சமையலுக்கு அம்மாவுடன் பக்கத்தில் போய் நிற்பேன். பாத்திரங்கள் கழுவித் தருவேன். சமையல் அறையின் வாசனை என்னை மயக்க, அம்மாவை நகர்த்திவிட்டு, ரசனையுடன் ஒருநாள் நானே சமைக்க ஆரம்பித்தேன்.

ஒரு பெண்ணுக்கு இன்னின்ன வேலைகள் எனச் சமூகம் என்னென்ன தீர்மானித்ததோ, அது அத்தனையையும் பழகினேன். பிறப்பால் ஆண் பிள்ளையானாலும், எனக்குள் நான் பெண்ணாக மாறிக்கொண்டு இருந்தேன். ‘என்ன இது, பொட்டச்சிக மாதிரி திரியுறான் அண்ணாத்தொர பய’ எனக் கேலி பேச ஆரம்பித்தனர் எல்லோரும். அப்படிச் சொல்லச் சொல்ல, என் ஆனந்தம் அதிகமானது.

ஸ்கூலுக்குச் செல்லும்போது, பெண் பிள்ளைகள் மாதிரி நோட்டுப் புத்தகங்களை என் மார்புடன் அணைத்துக்கொண்டு போவேன். கேலிப் பேச்சுக்கள், நக்கல் சிரிப்பு கள், விகாரமான பார்வைகள், வக்கிரமான சீண்டல்கள் எனக் கொஞ்சங் கொஞ்சமாக கூனிக் குறுக ஆரம்பித்திருந்தேன். வகுப்பில் ஆண்கள் பக்கம் அமர்ந்திருப்பேன். மனசு முழுக்கப் பெண் பிள்ளைகள் பக்கம்தான் இருக்கும். என் சந்தோஷங்களே, துக்கமாக மாறத் துவங்கியபோது, ‘ஆண்டவா! என்னை மட்டும் ஏன் இப்படிப் படைச்சே?’ என இரவெல்லாம் குமுறிக் குமுறி அழுவேன்.

‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில், ‘அழகு மலராட, அபிநயங்கள் கூட, சிலம்பொலியும் குலுங்குவதைக் கேள்’ பாட்டுக்கு ரேவதி ஆடுவாரே, அந்தப் பாட்டுக்கு என்னை நான் ரேவதி போலவே வேஷங் கட்டி, ஸ்கூல் நிகழ்ச்சியில் ஆடினேன். ‘எல்லாரும் பாருங் கடா, நான் இனி பொண்ணு!’ என இந்த உலகத்துக்குச் சொல்லிவிட்டேன் என்று நினைத்தேன். அந்த நிகழ்ச்சி பரபரப்பாகிவிட, பையன்கள், என் கன்னத்தைக் கிள்ளுவார்கள். அதுவரை அண்ணாத்துரையாக இருந்த நான், ரேவதிக் குட்டியானேன். நான் ஒரு பெண்ணாகவே மாறியது அப்போதுதான்!

என்னைப் போலவே சக ஜீவனான அருணாவுக்கு நடந்த கொடுமை எனக்கு நினைவிருக் கிறது. ஒரு நாள் வேதியியல் வகுப்பு. உலோகம் - அலோகம் பற்றின பாடம். ‘உலோகம்னா இரும்பு போல கனமா இருக்கும். அலோகம்னா இரும்பு மாதிரி இருக்கும்; ஆனா, கனம் இருக்காது. அது ஒழுங்கற்ற உருவம். அதுக்கு எடுத்துக்காட்டு, இதோ இவன்தான்’ என்று அருணாவைக் கைகாட்டிய ஆசிரியர், ‘பார்க்க ஆம்பளை மாதிரி இருக்கான். ஆனா பேச்சு, நடவடிக்கை எல்லாமே பொம்பளை மாதிரி இருக்கு பாருங்க, இதுதான் அலோகம்’ எனக் கிண்டலாகச் சொல்ல, கிளாஸ் ரூமே சிரித்தது. என் தோழி அருணா நொறுங்கிப் போனாள்.

நான் பத்தாவது படிக்கும்போது, எனக்கும் அப்படி ஒன்று நடந்தது. கணக்கு டீச்சர் என்னை மட்டும் கேள்வி மேல் கேள்வி கேட்பார். ‘ஏண்டா... பொட்டை மாதிரி நிக்கிற, முதல்ல ஆம்பளை மாதிரி நிக்கப் பழகுடா’ எனச் சிரித்துக்கொண்டே அடிப்பார். என் உடம்பிலும் மனசிலும் அடிகள் விழ விழ, வகுப்பறையே சிரிக்கும். நான் தப்பாகப் பதில் சொன்னதற்கு விழும் அடிகள் அல்ல அவை; நான் பொட்டை மாதிரி நிக்கிறேன் என்பதற்காக விழுகிற அடிகள்.

வீடாவது ஆறுதலாக இருக்கும் என்பதும் போச்சு! கிரிக்கெட் மட்டையால் அண்ணன் அடிப்பான். அம்மா வும் சேர்ந்து திட்டும். ‘இங்க இருந்தா ஒரு நாள் இவங்களே நம்மை அடிச்சுக் கொன்னுடுவாங்க’ என்ற பயத்தில் ஓட ஆரம்பித்தேன். வீடு, வீதி, தேசம் எல்லா இடங்களிலுமே மனிதர்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். நானும் ஓடிக் கொண்டே இருக்கிறேன். நின்று இளைப்பாற நிழலில்லாத ஓட்டம் என்னுடையது; என்னைப் போன்ற ஆயிரமாயிரம் அரவாணி களுடையது!’’ - ஆணாகப் பிறந்து, பெண்ணாக உணர்ந்து, அரவாணியாக விதியின் விளையாட்டில் சிக்கி, தீராத வலியையும் வேதனையையும் சுமந்து அலைகிறார் ரேவதி. அரவாணிகளின் வலியான வாழ்க்கையை வாய்மொழிக் கதைகளாகக் கேட்டு ‘உணர்வும் உருவமும்’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.

இப்படிக்கு, வாழ்க்கை

ரேவதிக்கு இப்போது பல அடை யாளங்கள் உண்டு. ‘தூக்கம்’ (sleep) என்ற அரவாணிகள் பற்றிய படத்தில் நடித்திருக்கிறார். பாலின அடையாளத்தை பெண்ணாக சட்டபூர்வமாக நிரூபித்து, பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார். இப்போது ரேவதி ஒரு போராளி.

‘‘என் பயங்கள் அத்தனையையும் தொலைத்துவிட்டேன். ஊரிலிருந்து ஓடிப்போய் டெல்லியில் இறங்கியபோது நான் புடவையில் இருந்தேன். என்னை மாதிரி அரவாணிகளைக் கண்டு அவர் களுடன் இணைந்தேன். பொதுவாக, ஓடி வருபவர்களை ஆதரவாக அணைத்துக்கொள்வது அரவாணி களின் தர்மம். ‘அலி, பொட்ட, ஒம்போது’ என எங்களைக் கேவலமாக அழைத்த பெயர்களெல்லாம் போய் அழகாக ‘இஜிடா’ என்று அழைத் தார்கள். டெல்லியில் பதாய் என்றொரு சம்பிரதாயம் உண்டு. குழந்தை பிறக்கிற வீடுகளுக்குப் போய் ஆடிப் பாடி ஆசீர் வதித்து வருவதுதான் பதாய். அரவாணி ஸ்தானத்திலேயே மிக உயர்ந்ததும் உன்னதமானதும் பதாய். ஆனால் பதாய் பண்ண நான் போக முடியாது. காலங்காலமாக அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள், என்னைத் தங்களின் மகளாகத் தத்தெடுத்தால்தான், அந்த மரியாதை கிடைக்கும். அதனால், நான் வீதிவீதியாக, கடைகடையாக கை கொட்டிப் பாடும் தொழிலுக்குப் போனேன். அப்படிச் செல்கிறவர்களின் கடைசிப் புகலிடம் பாலியல் விடுதிகள்.

நானும் பாலியல் தொழிலாளியானேன். இரண்டு வருடம் அதில் கிடந்தேன். ஒருவன் காசு தந்தால், நான்கு ரௌடிகள் இலவசமாக வருவார்கள். வார்த்தைகளில் விவரிக்க முடியாத வக்கிரங்கள். பாலியல் தொழிலில் மிக மோசமான சுரண்டல் இது. ‘நீ கூலி கொடு, என் உடம்பைத் தருகிறேன்’ என்கிற பாலியல் தொழிலின் தர்மத்திலும் அரவாணிகளுக்கு இடமில்லை.

ஒவ்வொரு இரவும், விதவிதமான துன்பங்களில் சிக்கும்போது, ஸ்கூலில் என்னைப் ‘பொட்டை’ என அடித்த கணக்கு டீச்சர் நினைவுக்கு வருவார். அருணாவை ‘அலோகம்’ எனச் சொன்ன கெமிஸ்ட்ரி வாத்தியார் நினைவுக்கு வருவார். அவர்களைக் கூட்டி வந்து, எங்களின் பாலியல் கூடாரத்தைக் காட்ட வேண்டும் என நெஞ்சு துடிக்கும். அங்கே இருக்கிற ஒவ்வொரு அரவாணியின் கதையையும் அவர்கள் கேட்க வேண்டும். வாழ்க்கை எப்படியெல்லாம் எங்களைத் துரத்து கிறது பாருங்கள் என்று காட்ட வேண்டும். ‘எங்களை ஏன் உலகத்தில் இருந்து துரத்தினீர்கள்? ஒரு வேளை உணவுக்கு இப்போது என்னவெல்லாம் செய்கிறோம் பாருங்கள்?’ எனக் கதற வேண்டும் என நினைப்பேன். ‘நாளை உங்க பிள்ளைக்குக்கூட இப்படி நேரலாம்?’ என எச்சரிக்க விரும்புவேன். ஆனால், நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன?’’ இப்போது சொல்லும் போதும், கோபத்தைவிட வேதனையே வழிகிறது ரேவதியின் முகத்தில்.

‘‘ஒரு நாள் ‘அம்மாவுக்கு சீரியஸ்’ எனத் தகவல் வந்தது. பதறியடித்து ஊருக்கு ஓடினேன். ஊருக்கு வெளியே ஒரு இடத்தில் என்னை நிற்கவைத்து, என் தலையை மொட்டையடித்து, அடித்து இழுத்துப் போனார்கள். என்னை என் வீட்டுக்காரர்களே பைத்தியம் என்று ஊருக்குச் சொன்னார்கள். நான் என் மனசுக்குள் மறுபடியும் இறந்துபோனேன். நான் நிர்வாணமானது (ஆபரேஷன் மூலம் பெண்ணாக மாற்றிக்கொள்ளுதல்) வீட்டுக்குத் தெரியாது. மறுபடியும் தப்பி ஓடி, பெங்களூருக்கு வந்தேன். ‘இனி பாலியல் தொழிலுக்குப் போகக் கூடாது. அங்கே தொழில் செய்கிற பெண்களும் கௌரவமாக வாழ நாம் போராட வேண்டும்’ என முடிவெடுத்தேன். ‘சங்கமா’ எனும் அமைப்பில் சேர்ந்தேன். நான் கேட்ட, பார்த்த, அனுபவித்த கதைகளை வாக்குமூலங் களாக, கதைகளாகப் பதிவு செய்தேன். அதுதான் ‘உணர்வும் உருவமும்.’’

இப்போது ரேவதி, பயந்தாங்குளி அல்ல, உரிமைப் போராளி. ‘‘என் வீட்டில் சொத்து பிரித்த போது, அரவாணியானாலும் சொத்துரிமை உண்டு என்பதை நிரூபிக்க சட்டப்படி போராடி என் பங்கை வாங்கினேன். இந்தியத் தண்டனைச் சட்டம் இ.பி.கோ-377ஐ (இயற்கைக்கு மாறான உறவு) மாற்றச் சொல்லி போராடி வருகிறேன். ஏன், அரவாணி களுக்கு பாலியல் தேவையே கிடையாதா? இருக்கக் கூடாதா? ஒரு அரவாணி ஒரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வது இயற்கையான உறவன்றி வேறென்ன என்று கேட்கிறேன்.

எனக்கு ஒரு காதலன் இருந்தான். நானும் அவனும் திருமணம் செய்துகொண்டோம். ஒரே வருடத்துக்குள், நான் அவனுக்குப் போரடித்துவிட, சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போனான். இப்போது எனக்கென்று காதலன் யாரும் இல்லை. யாராவது தோழமையோடு நேசித்தால் ஏற்றுக்கொள்கிறேன். நான் ஒன்பதாவது படித்தபோது ஒரு பையன் எனக்கு பூ கொடுத்தான். அவனுக்கு நான் சில முத்தங்களைக் கொடுத்தேன். எனக்கு அது போதும். ‘என் மீது அன்பு செய், நான் உனக்கு என்றென்றும் அன்பானவளாக இருக்கிறேன். எனக்குத் துன்பம் செய்தால், என்றென்றைக்குமாக விலகிப் போய்விடுகிறேன்’. அவ்வளவுதான், என் வாழ்க்கை.

புறக்கணிக்கப்பட்ட என் வாழ்க்கையில் புதிய பூக்கள் பூத்திருக்கின்றன. நான் என் போன்ற மூன்று மகள்களைத் தத்தெடுத்திருக்கிறேன். எனக்கு ஒரு அம்மா இருக்கிறார். இப்படி என் அரவாணி குடும்பம் ஒரு பக்கம். என்னைத் துரத்தித் தூக்கி வீசிய குடும்பம் ஒரு பக்கம். எந்த அம்மா என்னை அடித்தாரோ, அதே அம்மாவை உடன்பிறந்தோர் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். இப்போது என் தாயையும் என் பாதுகாப்பில் வைத்துப் பராமரிக்கிறேன்.

இதுதான் என் சமூகம். என் உலகம். இப்போது நான் தனி மனுஷி இல்லை. புறக்கணிக்கப்படும், வெறுத்து ஒதுக்கப்படும் ஒரு சமூகத்தின் உரிமைக் குரல்!’’ என்கிற ரேவதி, இறுதியாகச் சொல்வது ஒன்றே ஒன்றுதான்...

‘‘நசுக்கப்படும் வர்க்கம், ஒரு நாள் முளைத்து எழும் என்கிறது சித்தாந்தம். நாங்கள் இன்று நசுக்கப்படுகிறோம் நண்பர்களே!’’

 
இப்படிக்கு, வாழ்க்கை
\ டி. அருள்எழிலன்
படங்கள்: கே ராஜசேகரன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு