பிரீமியம் ஸ்டோரி
ஓ... பக்கங்கள்!
ஓ...பக்கங்கள்!
ஓ... பக்கங்கள்!
ஓ... பக்கங்கள்!
 
ஞாநி 37
ஓ... பக்கங்கள்!

படிக்கச் சொல்கிறார் பின்லேடன்!

ன்ன புத்தகம் படிக்கலாம் என்று வாசகர்கள் கேட்பதும், எழுத்தாளர்களும் அறிஞர்களும் சில நூல்களைப் பரிந்துரை செய்வதும் வழக்கம்.

ஓ... பக்கங்கள்!

ஆனால், வித்தியாசமான ஒரு நபர், இப்போது ஒரு புத்தகத்தைப் பரிந்துரை செய்திருக்கிறார். அமெரிக்காவுக்கு இன்னமும் சிம்ம சொப்பனமாக இருந்துகொண்டிருக்கும் ஒசாமா பின் லேடன், சென்ற வாரம் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் தெரிவிக்கும் பரிந்துரை: “புஷ் தன் பொய்களையும் ஒடுக்குமுறையையும் தொடரப் போகிறாரென்றால், ‘ரோக் ஸ்டேட்’ (rogue state) என்ற நூலைப் படித்துக் கொள்வது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.”

பின் லேடன் பரிந்துரைத்த மறுநாளே, ‘ரவுடி அரசு’ என்கிற அந்தப் புத்தகம் அமேசான் நூல் விற்பனைப் பட்டியலில் 2,05,763-வது இடத்தில் இருந்து 27-வது இடத்துக்குத் தாவிவிட்டது. புத்தகம் வெளிவந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது, மறுபடியும் பின் லேடன் தயவில் வேகமாக விற்றுக்கொண்டிருக்கும் Rogue state : A guide to the world’s only superpower நூலை எழுதியவர் அமெரிக்கரான வில்லியம் பிளம். (William Blum).

உலகத்தின் வல்லரசாக அல்ல, ரவுடி அரசாக அமெரிக்கா காலம் காலமாக இருந்து வருகிறது என்பதை ஏராளமான புள்ளி விவரங்கள், அரசின் உளவுத் துறையின் ரகசிய அறிக்கைகள் போன்றவற்றுடன் கூறியிருக்கிறார் வில்லியம். அவர் தெரிவிக்கும் விஷயங்களை எல்லாம் படித்த பின்னர், புத்தகத்தின் தலைப்பு ரொம்ப நியாயமானது என்று தோன்றுவது நிச்சயம்.

ஓ... பக்கங்கள்!

வில்லியம் ஏன் இப்படிப்பட்ட ‘தேச துரோக’ புத்தகத்தை எழுதினார்? உண்மையில், அவர் எழுதியிருப்பதற்கு அடிப்படையே தேச பக்திதான். இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில், உலகம் முழுவதிலும் அமெரிக்கா வுக்கு இருந்த நல்ல பெயரை, தொடர்ந்து வெளிநாட்டு விவகாரங்களில் ஒவ்வொன் றாகத் தலையிட்டுக் கெடுத்துக்கொண்டே வருகிறது அமெரிக்க அரசு என்பதுதான் வில்லியமின் வருத்தம்.

வில்லியம், அமெரிக்க அரசின் உள்துறை யில் வேலை பார்த்த அதிகாரி. வியட்நாமில் அமெரிக்கா நடத்திய யுத்தத்தால் வருத்த மடைந்து, 1967-ல் அரசு வேலையை உதறித் தள்ளினார். பிறகு, வாஷிங்டன் ஃப்ரீ பிரஸ் என்கிற செய்தித்தாளை உருவாக்கினார். அடுத்த இரண்டே ஆண்டுகளில், அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ-வை அம்பலப் படுத்தும் கட்டுரைகளையும் நூலையும் வெளியிட்டார். சி.ஐ.ஏ-வின் நூற்றுக்கணக் கான ரகசிய ஊழியர்கள் பெயர்ப் பட்டியலை வில்லியம் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்க அரசு தன் ராணுவத் தினரைக்கூட ஒழுங்காக நடத்துவதில்லை. இரண்டாம் உலகப்போரின்போது அறுபதாயிரம் சிப்பாய்கள் மீது மஸ்ட்டர்ட் கேஸ், பிளிஸ்ட்டர் கேஸ் ஆகியவை சோதிக்கப்பட்டன. இதனால் அவர்கள் நோயுற்றார்கள். இராக் யுத்தத்துக்குச் சென்ற அமெரிக்க சிப்பாய்கள் 'சரின்' கேஸால் பாதிக்கப்பட்டார்கள். முதலில் அரசு இதை மறுத்தது. பிறகு, சில நூறு பேர்தான் என்று சொல்லியது. அடுத்தபடியாக, 20,876 பேருக்குதான் பாதிப்பு என்றது. கடைசியில், ஒரு லட்சம் அமெரிக்க சிப்பாய்கள் பாதிக்கப்பட்டி ருப்பதை இப்போது ஒப்புக்கொண்டிருக்கிறது.

அமெரிக்க அரசு 1945-லிருந்து இதுவரை 40 நாடுகளின் முறையான அரசாங்கங்களைக் கவிழ்க்கவும், 30 நாடுகளில் மக்களுடைய விடுதலைப் போராட்டங்களை ஒடுக்கவும் சி.ஐ.ஏ-வைப் பயன்படுத்தியிருக்கிறது.

‘ரவுடி அரசு’ நூலில், இப்படிப் பல அதிர்ச்சித் தகவல்களைச் சொல்லும் வில்லியமுக்கு, இப்போது வயது 72. அவரது புத்தகத்தை பின் லேடன் பரிந்துரைத் திருப்பது பற்றி கேட்டபோது, ‘‘இதனால் புத்தகம் விற்றால் ஓ.கேதான்!’’ என்பதற்கு மேல் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை வில்லியம்.

பின் லேடன் போன்ற தலைமறைவுத் தீவிரவாதிகள் நம்மைச் சில புத்தகங்களைப் படிக்கும் படி பரிந்துரைப்பது போல, வேறு சிலர் நாம் சில புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று மிரட்டுகிறார்கள்.

மராத்திய மன்னன் சிவாஜி பற்றி அமெரிக்க ஆராய்ச்சியாளர் ‘ஜேம்ஸ் லேய்ன்’ எழுதிய இரண்டாவது புத்தகத்தையும் மகாராஷ்டிர அரசு தடை செய்துவிட்டது. 2003-ல், முதல் புத்தகத்தை எதிர்த்து சரத்பவார் கட்சிக்கு நெருக்கமான ‘சம்பாஜி படை’ என்ற அமைப்பு, புனேவில் இருக்கும் பண்டார்கர் ஆய்வு நிறுவனத்தைச் சூறையாடியது. இந்த முறை, சம்பாஜி படையெடுப்புக்கு முன்பே, அரசாங்கம் தானாகவே புத்தகத்தைத் தடை செய்துவிட்டது. முதல் புத்தகத்தில், சிவாஜியின் அப்பா யார் என்பது பற்றி நிலவிய சர்ச்சையை ஆய்வாளர் குறிப்பிட்டு இருந்தார். இரண்டாவது புத்தகத்தில், சிவாஜிக்கு அவரது தந்தை யுடன் எப்போதும் இருந்த விரோதத்தைக் குறிக்கும் வகையில், ‘ஈடிபஸ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி யிருந்தார். (கிரேக்க புராணக் கதைப்படி, ஈடிபஸ் தன் தந்தையைக் கொன்றுவிட்டுத் தாயை மணக்கிறான். அதனால், உளவியல் அறிஞர் ஃபிராய்ட், ஆண் குழந்தைக்குத் தாய் மீது ஈர்ப்பும், தந்தை மீது கசப்பும் இருப்பதை ‘ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ்’ என்று குறிப்பிட்டார்.)

என்ன ஒரு விசித்திரம் பாருங்கள்... ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, புத்தகம் படிக்கத் தடை விதிக்கிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத தீவிரவாதி, புத்தகம் படிக்கப் பரிந்துரை செய்கிறார்!

மினி ஓ அல்ல...சீ!

பாசமான தோற்றத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் படத்தில் முகத்தை மட்டும் மாற்றி, குஷ்புவின் முகத்தை அதில் பொருத்தி, கன்னித் தன்மையைக் கிண்டல் செய்து வெளியிட்டிருக்கிறது, லண்டனில் இருந்து வெளியாகும் ஓர் ஆங்கிலப் பத்திரிகை. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பத்திரிகைத் துறையில் முதலீடு செய்ய அனுமதிக்கக் கூடாது என்று சிலர் போராடுவது நியாயம்தான் என்று தோன்றுகிறது. படத்துக்குக் கீழே ‘இது 100 சதவிகிதம் பொய்’ என்று அந்தப் பத்திரிகையே வெளியிட்டுவிட்டதாலேயே, செய்திருக்கும் அயோக்கியத்தனம் துளியும் குறைந்து விடாது. ‘இது பொய்தான்’ என்று கூடவே அறிவித்துவிடுவது சட்டப்படிகூட அந்தப் பத்திரிகையைக் காப்பாற்றாது. பத்திரிகைகள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் குலைக்கும் இத்தகைய போக்கு, தமிழ் உள்பட உலகம் முழுவதும் சில கறுப்பு ஆடுகளால் பின்பற்றப்படுகிறது. இவற் றைக் கலாசாரக் காவலர்கள் கண்டு கொள்ளாவிட்டாலும், சக பத்திரிகையாளர் கள் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

இந்தச் சமயத்தில், இன்னொரு ஆங்கிலப் பத்திரிகையை நினைவு கூர்வோம். சரியாக 226 ஆண்டுகளுக்கு முன்பு, ஜனவரி 29, 1780-ல்தான் இந்தியாவின் முதல் பத்திரிகை வெளி யானது. ஆங்கில ஏடான ‘கல்கத்தா கெசட்’ என்ற அந்தப் பத்திரிகையைத் தொடங்கிய ஆங்கிலேயர் ஹிக்கியின் நோக்கம், ஊழல் செய்யும் ஆங்கிலேய அதிகாரிகளை அம்பலப்படுத்துவதாகும். ஹிக்கி இதற்காகச் சிறைக்கு அனுப்பப் பட்டார்!

 

மினி ஓ

திகபட்சம் 5 ஆயிரம் ரூபாய்; குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய். ஒரு பெண்ணை விலைக்கு வாங்கத் தேவைப்படும் தொகை அவ்வளவு தான்! தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, கென்யா, துபாய், ஓமன், பஹ்ரைன், தென் கொரியா, பிரிட்டன், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு விபசாரத்துக்காக இந்தியாவிலிருந்தும் நேபாளத்திலிருந்தும் பெண்களை விலைக்கு வாங்கிக் கடத்துவோரிடம் தேசிய மனித உரிமை ஆணையம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. இந்தக் கடத்தல்காரர்களில் 68 சதவிகிதம் பேர், போலீஸ் உதவியுடன் தொழில் செய்வதாகச் சொன்னார்கள். தமிழ் நாட்டில் பெண் கடத்தல் அதிகம் நடக்கும் இடங்கள்... திண்டுக்கல், மதுரை, திருச்சி, செங்கல்பட்டு.

 

மினி ஓ

நா ன்கு வருடங்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்த 50 சதவிகிதம் பேருக்கும், இரண்டு வருடம் கல்லூரியில் படித்த 75 சதவிகிதம் பேருக்கும் பத்திரிகைத் தலையங்கங்கள்கூடப் புரிய வில்லையாம். டிகிரி/டிப்ளமா வாங்கிய பிறகும்கூட, கிரெடிட் கார்ட் கம்பெனிகள் வெவ்வேறு வட்டி விகிதம் பற்றிச் செய்யும் அறிவிப்புகள் புரியவில்லையாம். செய்யத் தெரிந்த ஒரே விஷயம், மேப் பார்த்து, இடத்தைக் கண்டுபிடிப்பதுதான். இந்த அழகு - இங்கே அல்ல... அமெரிக்காவில்!

 

 
ஓ... பக்கங்கள்!
- ஓ போடுவோம்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு