பிரீமியம் ஸ்டோரி
ஹாய் மதன்
ஹாய் மதன்
ஹாய் மதன்
ஹாய் மதன்
 
கேள்வி-பதில்
ஹாய் மதன்

ரெ.வேல்முருகன், சீர்காழி.

கோல்ஃப், பணக்காரர்களுக்கான விளையாட்டாகக் கருதப்படுவதற்குக் காரணமென்ன?

விளையாடுவதற்காக மொத்த மைதானத்தையும் ஒரே ஒருவர் எடுத்துக்கொள்வது கோல்ஃப் விளையாட்டில் மட்டும்தான்!

ஹாய் மதன்

எம்.சேவியர் பால், கோயம்புத்தூர்.

அருவிகளில் குளித்தால், தலைக்குள் நீர் இறங்குமாமே, உண்மையா?

ஆமாம்! தலையில் ஏற்கெனவே ஓட்டை ஏதாவது இருந்தால்!

ஹாய் மதன்

எஸ்.முரளி, குறிஞ்சிப்பாடி.

‘என் கன்னத்தைவிட, பீகார் ரோடுகள் இனி வழு வழுவென மாறும் என்று நம்புகிறேன்’ என பாலிவுட் நடிகை ஹேமமாலினி தெரிவித்துள்ளாரே?

தெரியலையே! அப்படி ஆகிவிட்டால், தர்மேந்திராதான் இரண்டையும் ‘செக்’ பண்ணிவிட்டு நமக்குச் சொல்ல வேண்டும்!

மகா, திருப்பூர்-3.

திரை நட்சத்திர ஜோடிகளில் ‘மேட் ஃபார் ஈச் அதர்’ என்று யாரைச் சொல்வீர்கள்?

நம்மூரில் என்றால், இப்போதைக்கு ஒளிவீசும் இருவர்தான்!

புத்தார்தா, காரைக்குடி.

ஹாய் மதன்

புத்தகங்களை இரவல் கொடுக்கும் வழக்கம் உங்களுக்கு உண்டா?

நெருக்கமான யாருக்காவது புத்தகம் இரவல் தந்தாலும், தினம் தினம் ‘படிச்சாச்சா?’ என்று கேட்டுப் பிறாண்டித் தள்ளிவிடுவேன். ஆகவே, யாருமே என்னிடம் இரவல் கேட்பது இல்லை!

பி.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காரணகர்த்தா ‘கெர்ரி பேக்கர்’ மரணம் குறித்து..?

‘ஒன்டே மேட்ச்’சின் பிரம்மா அவர்! கிரிக்கெட்டுக்குப் புத்துயிர் ஊட்டி, ‘பழம் பெருச்சாளித் தன’த்தை pack செய்து அனுப்பியவர் Pack-er!

ஹாய் மதன்

பொன்விழி, அன்னூர்.

கயிற்றின் மேல் நடக்கிறார்களே, இது எப்படிச் சாத்தியமாகிறது?

தரையில் கயிற்றை நீட்டி வைத்து, அதன் மீது உங்களால் சுலபமாக நடக்க முடியும். அடுத்த கட்டமாக ஒரு ஜாண் உயரத்தில் கயிற்றைக் கட்டி, அதன் மீது நடக்க முயலுங்கள். பேஜாராகிவிடும். ஆனால், மாசக்கணக்கில் தொடர்ந்து பயிற்சி செய்தால், உங்களால் அது முடியும்! ‘பேலன்ஸ் செய்வது’தான் ரொம்ப முக்கியம். நிச்சயம் விழ மாட்டீர்கள் என்கிற நிலை வந்துவிட்டால், பிறகு உயரமெல்லாம் ஒரு பொருட்டல்ல!

ராட்சத அருவியான நயாகரா மீது கயிறு கட்டி, அதன் மீது நடந்து சாதனை புரிந்தவர்கள் உண்டு. அமெரிக்காவில், 1998-ல், ஜே கொக்ரேன் என்பவர் இரண்டு 50 மாடிக் கட்டடங்களின் உச்சியில், குறுக்கே 600 அடி நீளத்துக்குக் கயிறு கட்டி, கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு (blind folded) வெற்றிகரமாக நடந்தார்! விடாமல் பழகினால் எங்கு வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேலன்ஸ் செய்ய முடியும்!

பிரான்ஸ் நாட்டில், ஹென்ரீஸ் என்பவர் செய்த பாலன்ஸிங் ஆச்சர்யமானது. செங்குத்தான மலை உச்சியின் விளிம்பில் ஒரு நாற்காலி போட்டு, அதன் மீது இரு டம்ளர்கள் வைத்து, அவற்றின் மீது இன்னொரு நாற்காலியின் பின்னங்கால்களை மட்டும் பொருத்தி, அதில் அமர்ந்து பல நிமிடங்கள் பேலன்ஸ் செய்தார் அவர். விழுந்தால் 13,000 அடி பாதாளம்!

இவர்கள் எல்லாரையும் விட... கணவனுடைய சம்பளத்தில் வீட்டு நிர்வாகத்தைக் கச்சிதமாக பேலன்ஸ் செய்கிற மனைவி தான் கிரேட்!

எம்.சேவியர் பால், கோயம்புத்தூர்.

மனிதனுக்கு வால் இருந்திருந்தால், இன்று அது எதற்குப் பயன்பட்டிருக்கும்?

அடேங்கப்பா! பக்கம் பக்கமா எழுதலாமே!

ஹாய் மதன்

காலையில் சோப்புப் போட்டுத் தேய்த்துக் குளித்துக்கொண்டே டூத் பிரஷ்ஷால் பல் தேய்க்கலாம். சூடான காபியை உயரத்திலிருந்து ஆற்றிக் குடிக்கலாம். ஓடும் பஸ்ஸில் அலட்சியமாகத் தாவி ஏறி ஆபீஸ் போகலாம். கடன் கொடுத்தவர் எதிரில் வந்தால், முகம் முழுவதையும் வாலால் சுற்றி மறைத்துக்கொள்ளலாம். டி.வி-க்கு ரிமோட் தேவையிருக்காது. சினிமாவில் ஹீரோக்கள் ஒரே சமயத்தில் மூன்று ரிவால்வர்களால் வில்லன் கோஷ்டியைச் சுடுவார்கள். லஞ்சம் வாங்க, மேஜைக்கு அடியில் மெனக்கெட்டுக் கையை நீட்டவேண்டியிருக்காது. ‘சீ, போங்க!’ என்று கூச்சத்துடன் ஓடப் பார்க்கும் மனைவியின் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கட்டிலுக்கு இழுக்க உபயோகமாக இருக்கும். சபையில் முதல்வர் குரலை உயர்த்தி முழங்கும்போது, ஆளுங்கட்சி அங்கத்தினர்கள் மேஜையை ‘படபட’வென்று வாலால் தட்டி ஆமோதிப்பார்கள். ஐயோ, உடனே வால் வேணுமே... ப்ளீஸ்!

வி.சுவாமிநாதன், திருச்சி-2.

மதனிடம் வாசகர்கள் கேட்கும் கேள்விகள் - பார்லிமென்ட்டில் எம்.பி-க்கள் கேட்கும் கேள்விகள்... ஒப்பிடுக.

பெரிய வித்தியாசம் - ஒரு வாசகர்கூட பணம் வாங்கிக்கொண்டு கேள்வி கேட்பது கிடையாது!

 
ஹாய் மதன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு