பிரீமியம் ஸ்டோரி
வித் லவ், விஜய்!
கலக்கலான பர்சனல் பக்கங்கள்
வித் லவ், விஜய்!
வித் லவ், விஜய்!
 
வித் லவ் விஜய்! (14)
வித் லவ், விஜய்!

ஹாபி... ஹாபி... ஹாஹாபி!

‘‘உ ங்க ஹாபி என்ன விஜய்?’’

‘‘ஆயிரம் முறையாவது இந்தக் கேள்வியைச் சந்திச்சிருப்பேன். ஆரம்பத்தில் எல்லாரும் சொல்ற மாதிரி ‘வாட்சிங் டி.வி., ரீடிங் புக்ஸ், லிஸனிங் மியூசிக்’னு சும்மா அடிச்சுவிடுவேன். ஒரு கட்டத்தில் இதைப் பத்தி கொஞ்சம் சீரியஸா யோசிக்க லாமேனு தோணுச்சு.

வித் லவ், விஜய்!

பொதுவா, நான் சூரியனுக்கு ‘குட்மார்னிங்’ சொல்லும்போது மணி ஏழு ஆகியிருக்கும். காபியை உறிஞ்சிக்கிட்டே பேப்பரை ஒரு புரட்டுப் புரட்டுவேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி, பேப்பரை பின் பக்கத்தில் இருந்து புரட்டுவேன். என் பட விளம்பரம் எப்படி வந்திருக்கு, என்னைப் பத்தி ஏதாவது செய்தி வந்திருக்கா, பொதுவா சினிமா உலகம் பத்தி என்ன செய்திகள்னு என் சப்ஜெக்ட்டை மட்டும் பார்த்துட்டு, கசங்காம பேப்பரை மூடி வெச்சுடுவேன். பல சமயம், முதல் பக்கம் என்ன இருக்குன்னுகூட பார்த்திருக்க மாட்டேன்.

‘ஏம்ப்பா முதல் பக்கத்தில் இருந்து படிக்காம கடைசியிலிருந்து படிக்கிறே?’னு அப்பா கேட்பார். ‘முதல் பக்க நியூஸ்ல வர்ற அளவுக்கு உங்க பையன் இன்னும் பெரிய ஆள் ஆகலை யேப்பா!’னு ஒரு கடி ஜோக் அடிச்சுட்டுப் போயிடுவேன்.

ஆனா, இப்போ அப்படி இருக்க முடியாது. சஞ்சய், ‘இன்னிக்கு டென்னிஸ் ஃபைனல் யார் ஆடுறாங்க?’னு ஒரு கேள்வியைக் கேட்டுட்டு, என் முகத்தைப் பார்த்து நிப்பான். ‘தெரியலியே’னு சொல்ல முடியாது. ‘என்னப்பா, இதுகூட தெரியாதா?’னு மானத்தை வாங்கிடுவான். ஸோ, இப்ப பேப்பரை ரொம்ப சீரியஸா படிச்சே ஆகணும். என்னோட ரீடிங் ஹேபிட் இவ்வளவுதான்!

வித் லவ், விஜய்!

தலையணை மாதிரி பெரிய பெரிய புக்ஸைப் பார்த்தாலே பயம் வந்துடும். காலேஜ் புக்ஸ் பார்த்துட்டு, ‘இன்னாடா இவ்ளோ பெரிய சைஸ்ல தூக்க மாத்திரை தயாரிச்சிருக்காங்க?’னு பஞ்ச் டயலாக் அடிச்ச பையன் நான். ஆனா, எனக்கும் சேர்ந்து என் மனைவி படிக்கிறாங்க. எப்போ பார்த்தாலும் ஏதாவது ஒரு இங்கிலீஷ் புக் அவங்க கையில் இருக்கும். ஸிட்னி ஷெல்டன், அருந்ததி ராய்னு என்னென்னவோ பேரைச் சொல்லி பயமுறுத்துவாங்க. ‘என்னை மாதிரி சின்ன வயசிலேயே ஒழுங்காப் படிச்சிருந்தா இப்ப ‘இவ்ளோ’ படிக்க வேண்டியது இல்லையே’னு அவங்களையும் கடிப்பேன்.

என் பையன் ‘ஜாக் அண்ட் ஜில்’னு அவன் ரேஞ்சுக்கு ஒரு புக்கைக் கையில் வெச்சுக்கிட்டு, அவன் இஷ்டத்துக்கு ஏதேதோ கதை சொல்றான். அவன் சொல்ற ஆக்ஷன், த்ரில் ட்விஸ்ட்களைப் பார்த்தா, அது பத்து ‘கில்லி’ மாதிரி இருக்கு.

ஓ.கே! காபி முடிஞ்சதும் ஜிம்முக்குப் போனால், கொஞ்ச நேரம் ரன்னிங். சின்னச் சின்ன கிரவுண்ட் எக்ஸர்ஸைஸ். அப்புறம் ‘லொகேஷன்’ கேட்டுட்டுக் கிளம்பிடுவேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிட்டா, சினிமா தவிர வேற சிந்தனை எதுவும் வராது. சாயந்திரம் வீட்டுக்குள்ள வந்துட்டா அவ்ளோதான்! குழந்தைகளோடு நேரம் போயிடும். சில நேரம் டான்ஸ் பிராக்டீஸ், டயலாக் டெலிவரினு ஏதாவது கதவைச் சாத்திட்டு ட்ரை பண்ணுவேன். சாப்பிட்டதும் தூக்கம் சும்மா ஜெட் கணக்கா பறந்து வந்துடும். என்னோட லைஃப்ல இருக்கிற நல்ல விஷயங்களில் முக்கியமானது தூக்கம். படுத்த உடனே தூங்கிடுவேன்.

முன்னெல்லாம் நண்பர்களோடு சிட்டி முழுக்கச் சுத்தி வருவேன். இப்போ அது குறைஞ்சுபோச்சு. ரசிகர் களைச் சந்திக்க அப்பப்போ டைம் ஒதுக்கி வைப்பேன். மத்தபடி, நிறைய இங்கிலீஷ் படங்கள் பார்ப்பேன். டி.வி-யில் ஏதாவது முக்கியமான இன்டர்வியூ, நியூஸ்னா மட்டும் எட்டிப் பார்ப் பேன். மற்றபடி ‘மெகா சீரியல் அலர்ஜி’ எனக்கும் உண்டு. இப்ப பையனுக் காக போகோ, டிஸ்கவரி சேனல்கள் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். நிஜமாவே இதுதாங்க என்னோட ஃலைப்!

சின்ன வயசுலகூட எனக்கு ஹாபினு எதுவும் பெருசா இருந்ததில்லை. ஆனா, சில விஷயங்களை ட்ரை பண்ணி டார்ச்சர் ஆகியிருக்கேன். விதவித மான வெளிநாட்டு காயின்களை கலெக்ட் பண்ணான்னு என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தனை எங்க க்ளாஸ் டீச்சர் பயங்கரமா பாராட்டினாங்க. சரினு நானும் களத்தில் இறங்கினேன். கையில கிடைக்கிற பாக்கெட் மணியை வெச்சு சில வெளிநாட்டு காயின்கள் சேகரிச்சேன். அவசரத்துக்கு அந்தக் காசுகளை மாத்தக்கூட முடியாது. அப்புறம் ஞானோதயம் வந்து, இந்த ஹாபியெல்லாம் நமக்கு சரி வராதுன்னு கலெக்ட் பண்ண காயின்களைக் குறைஞ்ச விலைக்கு வித்துட்டேன். ஸ்டாம்ப்ஸ் கலெக்ட் பண்ணலாம்னு ஒரு ஆசை வந்து, கொஞ்ச நாள் அதே வேலையா திரிஞ்சேன். நூறு ஸ்டாம்ப் சேக்கறதுக்குள்ளே டயர்டாகி, அந்த ஹாபியும் வேலைக்காகாதுனு விட்டுட்டேன். அப்புறம் ஸ்போர்ட்ஸ் பக்கம் கவனம் திரும்புச்சு. அதில் மட்டும் கொஞ்சம் நல்ல பேர் வாங்கினேன். வாலிபால், டென்னிஸ் இது ரெண்டும் எனக்கு ரொம்பப் பிடிச்ச கேம்ஸ். வாலிபால்ல ஸ்டேட் லெவல் போட்டிகள்ல ஆடியிருக் கேன். இப்ப கேம்ஸ் எதிலேயும் ‘டச்’ இல்லை. ஆடுறதுக்கும் டைம் இல்லை. ஆனா, ஏதாவது ஒரு விளையாட்டை ரெகுலரா விளையாடணும்னு ஆசையா இருக்கு.

‘ஆதி’ பரபரப்புகள் இப்பதான் முடிஞ்சிருக்கு. அடுத்த படத்துக்கு ரெடியாக, இன்னும் ஒரு மாசம் ஆகும். ரசிகர்களைச் சந்திக்க இப்பதான் நேரம் கிடைக்கும். வீடு, ஆபீஸ்னு எங்கே இருந்தாலும் ரசிகர்களைப் பார்த்து அவங்களோடு போட்டோ எடுத்துக்கு வேன். இதையெல்லாம் மீறி டைம் இருந்தா கேரம் விளையாடுவேன். என் வீட்ல வேலை செய்யறவங்களோட தான் கேரம் கேம்! பல முறை அவங்க ளோட ஆடித் தோத்திருக்கேன். என்னோட ‘ஹாபி’ இவ்ளோதான்!

இனிமே யாராச்சும் ‘உங்க பொழுது போக்கு என்ன?’னு கேட்டா, ‘பொழுது இருந்தாத்தானே போக்குறதுக்கு?’னு ஒரு பஞ்ச் டயலாக் அடிச்சுடறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். சரிதானேங்ணா?!

 
வித் லவ், விஜய்!
(பட்டாசு கிளப்பலாம்)
படங்கள்: வி.விஜய்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு