Published:Updated:

இயக்குநர் சேரனின் டூரிங் டாக்கீஸ்!

இயக்குநர் சேரனின் டூரிங் டாக்கீஸ்!

பிரீமியம் ஸ்டோரி
இயக்குநர் சேரனின் டூரிங் டாக்கீஸ்!
இயக்குநர் சேரனின் டூரிங் டாக்கீஸ்!
இயக்குநர் சேரனின் டூரிங் டாக்கீஸ்!
இயக்குநர் சேரனின் டூரிங் டாக்கீஸ்!
 
இயக்குநர் சேரனின் டூரிங் டாக்கீஸ்!

ந்தப் பக்கம் பெரியார், அந்தப் பக்கம் அண்ணா!

அப்பனும் அண்ணனும் சிலைகளாக எனக்குக் காவல் இருக்க, மவுண்ட் ரோட்டில் சிம்சன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். பயிற்சிப் பிரிவில் அப்ரன்டீஸ்... மாசம் 300 ரூபாய் சம்பளம்!

இயக்குநர் சேரனின் டூரிங் டாக்கீஸ்!

திருவல்லிக்கேணி மேன்ஷ னில் இடம்பிடித்தேன். அங்கே காற்றெல்லாம் ஆண்கள் வாசம். அது ஆண்கள் மட்டுமே அதிகமாக வாழும் பிரதேசம்.

‘‘என்னண்ணே!’’ என்பான் மதுரைத் தம்பி. ‘‘என்ன அண்ணாச்சீ!’’ என்பது நெல்லைத் தமிழ். ‘‘ஏனுங்க!’’ எனக் கொஞ்சுவது கோவை பிரதர். ‘‘என்னப்பு!’’ என்றால், செட்டி நாடு. ‘‘எல மக்கா!’’ என்பவன் நாஞ்சில் சகோதரன். ‘‘என்ன மாப்ளே!’’ என்பது தஞ்சை நண்பன் என ஒரே கூட்டுக்குள் விதவிதமான தமிழ். வித்தியாசமான வாழ்க்கைப் பின்னணிகள்.

முக்குக்கு முக்கு கையேந்தி பவன்கள், முட்டுச் சந்துக்களில் மெஸ்கள். தொட்டுவிடும் தூரத்தில் மவுண்ட் ரோடு. பத்து நிமிஷ நடையில், மணல் பாய் விரித்த மெரீனா கடற்கரை. திருவல்லிக்கேணியை பிரமச்சாரி களின் சொர்க்கம் என்பார்கள்... நிஜம்!

சிம்சனில் எனக்குப் பிடித்தது கேன்டீன்!

3 பைசாவுக்கு டீ, 5 பைசா தந்தால் சூடான வெண்பொங்கல், 25 பைசா எடுத்துப்போட்டால் முழுச் சாப்பாடே கிடைக்கும். 25 ரூபாய் இருந்தால் ஒரு மாசத்துக்குப் போதும். சீனியர்கள் சிலரிடம் இலவச டோக்கன்கள் வாங்கி, நான் ஆசைஆசையாகச் சாப்பிடும் ஆர்வத்தையும் வேகத்தையும் பார்த்து, நெகிழ்ந்து எனக்கு நெருக்கமான நண்பர்கள் நிறைய. அப்படி எனக்கு அறிமுகமான ஒருவர் கமலநாதன். என்னைப் போல ஊருவிட்டு ஊரு வந்து உழைக்கிற சின்னப் பையன்களை, தன் வீட்டுக்கு அழைத்து தீபாவளி, பொங்கல் மாதிரி திருநாட்களில் சாப்பாடு போடுவார். காரணமும் சொல்வார்... ‘‘ஒங்கள மாதிரி வந்தவன்தாம்ப்பா நானும். பண்டிகை நாளுனா, இங்க எல்லா ஓட்டலும் லீவு விட்ருவாங்க. இவ்ளோ பெரிய ஊர்ல ஒரு வாய்ச் சோத்துக்கு எங்கே போறதுனு புரியாம நிக்கிறப்ப ஒவ்வொருத்தன் மனசும் எப்படிப் பொங்கும்னு எனக்கும் தெரியும்ப்பா!’’ என்பார். மறக்க முடியாத ஈர இதயம்!

இயக்குநர் சேரனின் டூரிங் டாக்கீஸ்!

மேன்ஷன் வாடகை 150 ரூபாய். 50 ரூபாய் என் செலவுக்கு. மிச்சம் பிடித்து, மாசாமாசம் 100 ரூபாய் வீட்டுக்கு மணியார்டர் அனுப்பி விடுவேன். அந்தத் தாளின் கீழே இரண்டு வரிகள் மட்டுமே எழுத இருக்கும் இடத்தில், பழையூர்பட்டி வாழ் மக்கள் அத்தனை பேரின் நலத்தையும் விசாரித்து எழுதுவதில், நான் மணியார்டர் திருவள்ளுவர்!

அண்ணா சிலையின் கீழே இருக்கும் ‘சப்- வே’ ஆச்சர்யமும் அதிர்ச்சியுமான நிழல் உலகம். பிச்சைக்காரர்கள் ஒதுங்கிக்கிடப்பார்கள். போதையில் சிலர் கிடப்பார்கள். சிறுசிறு குற்றங்கள் எழுதிய முகங்களுடன் சிலர் முறைப் பார்கள். இருக்கிற சேலையை இறுக்கிக்கட்டி எடுப்பாக நிற்கும் சில பெண்கள், ‘‘அய்யே, என்னா பாக்குறே?’’ எனச் சுண்டி இழுப்பார்கள். எப்போது அந்த சப்-வேக்குள் இறங்கி னாலும் ஆர்வமும் அச்சமும் சரிபாதியாக என்னைத் தாக்கும்.

சாந்தி, தேவி தியேட்டர் பக்கம் மாலை நேரங்களில் நிற்போம். சுவாசித்தறியாத நறுமணங்கள், பார்த்தறியாத அழகுப் பெண்கள், வியப்பூட்டும் ஹை ஹீல்ஸ் பாதங்கள், கூச்சம்கொள்ளச் செய்யும் சிரிப்புகள், சிணுங்கல்கள் என சைட் அடிப்பதும் ஒருவகையில் யோகாதானோ?

சினிமா பார்க்க கூட்டம் கூட்டமாக... குடும்பம் குடும்பமாக தேவதைப் பெண்கள் வரு வார்கள். அவள் யார் தெரியாது, பேர் தெரியாது, ஊர் உறவு எதுவும் தெரியாது. கடக்கிற விநாடிகளில் கவர்வாள். அந்த ஒரு தருணம், அவள் மட்டுமே நம் உலகம் நிறைப்பாள். பரவசத்தில் துள்ளும் மனம். சில விநாடிகளே என்றாலும், ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம்!

பக்கத்தில் ஒரு கட்டடத்தில் ‘ச்சில்ச்சில்ச்சில்’ என இசை சிதறும். என் நண்பர்கள் திடீரெனப் பரபரப் பாவார்கள். தங்களுக்குள் சிரிப்பார்கள். சஸ்பென்ஸ் தாளாமல், ‘‘என்னடா என்னமோ பாக்குறீங்க... நீங்களா சிரிச்சுக்கிறீங்க?’’ என ஒரு நாள் கேட்டேன். ‘‘டேய், நெஜமாவே தெரியாதாடா உனக்கு?’’ என அவர்கள் சொல்லச்சொல்ல... இன்ப அதிர்ச்சி.

இயக்குநர் சேரனின் டூரிங் டாக்கீஸ்!

‘‘அந்த மாடி இருக்குல்ல மாப்ளே, அங்க காபரே டான்ஸ் நடக்குதுரா. சினிமாப் பாட்டா போட்டுவிட்டு கௌப்புவாய்ங்க டான்ஸு. கேரளா, ஆந்திரானு செம ஃபிகருங்க. அந்தா ஒரு ஜன்னல் இருக்குல்ல, அந்தப் பக்கம் அப்பப்போ கிராஸ் ஆவாளுங்க. மேக்கப்பும் ஜிகினா டிரெஸ்ஸுமா, அய்யய்யோ... ஏன் கேக்குறே?’’ என்றான் ஒருவன்.

நான் ஆச்சர்யமாக அந்தக் கட்டடத்தைப் பார்த்தேன். ‘‘போடா, சும்மா ரீல் விடாத!’’ என்று சொல்லும்போதே, ஜன்னல் வழியே ஒரு பெண் கடந்தாள். ‘‘டேய், ஆமாடா!’’ என்றேன் அதிர்ச்சியில்.

‘‘கேட்டுக்க, 75 ரூபா டிக்கெட்ரா. ஒரு நாளு நானும் எட்வினும் போயிட்டோம்ல. உள்ள இருட்டு, கலர்கலரா லைட்டு. சும்மா கும்கும்முனு இருக்காளுக. அவனவன் காசை வீசியெறியறான். ஒருத்தன் அப்படியே பத்து ரூபா நோட்டா விசிறியடிக்கிறான். ஹூம், பணக்காரனாப் பொறந்திருக்கணும்டா!’’ என்றான். எனக்கோ அந்தக் கட்டத்தைப் பார்ப்பதே பெரும் கிளர்ச்சியாக இருந்தது.

ஆண்டவன் வெச்சான் பாரு ஆப்பு!

சிம்சனில் கைரேகை ஜோசியம் சொல்வார் ஒரு அண்ணன். அவர் சொல்வது அப்படியே நடக்குமாம். நாங்கள் அவரிடம் கை நீட்டினோம். வேலை, கல்யாணம், பிள்ளைகள் எனப் பட்டியலிட்டு, ஒவ்வொரு வனையும் கற்பனைத் தேரில் ஏற்றி ஊர்வலம் அனுப்பிக் கொண்டே இருந்தார். கடைசி யாக எனது கை!

வலது கை, இடது கை என இரண்டையும் பார்த்தவர், சடாரெனத் தட்டிவிட்டு ‘‘போப்பா!’’ என்றார். ‘‘என்னண்ணே, ஒண்ணுமே சொல்லல’’ என்றேன் புரியாமல். ‘‘போடா, யார்ட்டயும் இனிமே கை காட்டாதே’’ என்றார். ‘‘ஏண்ணே?’’ என்றேன் கலவரமாக. ‘‘போப்பா’’ என்று விரட்டினார். வருத்தத்துடன் விலகி வந்து விட்டேன். கமலநாதன் அவரிடம் ஏதோ பேசினார். அவர் என்ன சொன்னார் என்பதை, இவரும் என்னிடம் சொல்லவில்லை.

ஒரு நாள், என் வருத்தங்களை கமலநாதன் அண்ணனிடம் சொல்லிக்கொண்டு இருந்தபோது, ‘‘மனுஷ வாழ்க்கையே கொஞ்ச காலம்தாண்டா, இருக்கிறவரைக்கும் சந்தோஷமா இருப்பம்டா’’ என்றார். எனக்கு அன்றைக்குப் பார்த்த ஜோசியம் நினைவுக்கு வர, ‘‘ஏண்ணே, அவர் ஏண்ணே என் கையத் தட்டிவிட்டாரு?’’ என்றேன். ‘‘அதவிடு சேரா. பெரிய பொல்லாத ஜோசியம், என்னமோ ஒன் கையில ஆயிள் ரேகை டப்புனு ரெண்டாப் பொளந்திருக்காம். நீ இம்புட்டு நாளு இருந்ததே அதிசயம். இன்னும் ஒரு வருஷம் இருந்தேன்னா, பெரிய அதிசயம்’னாருப்பா’’ என்றார். நான் சுக்கு நூறாய்ச் சிதறினேன். அய்யய்யோ, என் கதை முடியும் நேரமா இது?

இயக்குநர் சேரனின் டூரிங் டாக்கீஸ்!

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல் லாம் பேய் என்பார்களே, அப்படி ஆனது என் வாழ்க்கை. ஒரு ஸ்விட்ச் போடப்போனால், ஷாக்கடிக்குமோ எனப் பயம். ரோட்டில் மாடு போனால், முட்டிவிடுமோ எனப் பயம். ஒரு பஸ் வந்தால், என்னை இடித்துவிடுமோ எனப் பயம். நடுராத்திரியில் திடீர்திடீரெனத் தூக்கம் கெட்டு முழிப்பேன். என் எல்லா நிம்மதியும் போயிற்று. போதாக்குறைக்கு சிம்சனில், பயிற்சிக் காலம் முடிந்தது, வேலை கிடைக்கவில்லை. வாழ்க்கை ஒரு பெரும்பூத மாக என்னைப் பயமுறுத்தியது. இனி, சோற்றுக்கு என்ன வழி?

அமிஞ்சிக்கரையில் சண்முகம் மாமா வீட்டுக்கு பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடினேன். மாமாவும் சுசீலா அத்தையும் என்னைத் தங்களின் முதல் பிள்ளையாகப் பார்த்துக்கொண்டவர்கள்.

அங்கேயே தங்கினேன். விடிந்து எழுந்தால், சைக்கிளில் கிண்டி, அம்பத்தூர் எனத் தொழிற்பேட்டைகள் பக்கம் போவேன். சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் தவிர மற்ற எல்லா வாசல்களும் ஏறி இறங்கினேன். மனம் வெறுத்துப்போய், புழுக்கத்துடன் அலைவேன்.

இடையிடையே ஏவி.எம், பிரசாத், விஜயவாகினி போன்ற ஸ்டுடியோக்களுக்குள் நுழைய முயற்சிப்பேன். ‘சேரன்னு ஒருத்தன் வருவான், அவன உள்ளே விட்டேன்னா, எங்க பொழப்பெல்லாம் போயி ரும்ப்பா’ என ரஜினியும் கமலும் ஏற்கெனவே சொல்லி வைத்திருப் பார்களோ என ஒரு சந்தேகம். என்னையும் சைக்கிளையும் பார்த்ததுமே, நிறுத்தி விடுவார்கள் வாட்ச்மேன்கள்!

ஒரு நாள் சாப்பிடும்போது, சண்முகம் மாமா கேட்டார்... ‘‘அப்புறம் என்ன பண்றதா உத்தேசம்?’’

என்னிடம் பதிலே இல்லை. மௌனமாகத் தலை கவிழ்ந் திருந்தேன்.

‘‘இந்தா பாருப்பா, நான் கூலிக்காரனா இந்த ஊருக்குள்ள வந்தவனப்பா. தட்டுத் தடுமாறி ஒரு இடத்துல கணக்குப் பிள்ளையா ஒக்காந்தேன். ஒழைக்கச் சலிச்சதில்ல. வாயக் கட்டி வயித்தக்கட்டி, விசு வாசம்னா அப்படி ஒரு விசு வாசம். நான் திங்கிற ஒவ்வொரு பருக்கைச் சோறும் என் மொதலாளி குடுத்ததுனு நன்றியோட நினைச்சுப்பேன்.

ஆனா, ஒரு வாய்ப்பு வந்துச்சு. அங்க இங்கனு பொரட்டி ஒரு லாரி வாங்கினேன். ராப்பகலா ஒரே சிந்தனையாக் கெடந்து, கடன அடைச்சதுக்கு அப்புறந்தேன், நல்ல சட்டை துணிமணியே உடுத்த ஆரம்பிச்சேன். இப்ப ரெண்டு லாரி ஓடுது. ஆனா, மனசுக்குள்ள இன்னமும் நான் முதலாளி கெடையாது. அதே கூலிக்காரப் பயதான். இப்ப நீ என்ன பண்ணப்போறே சொல்லு?’’ என்றார். கலைஞனாகத் தவித்த எனக்கு, என்னை மனிதனாக்கப் பார்த்த மாமாவின் மனசு அப்போது புரியவில்லை.

எம்.வி.எஞ்சீனியரிங் என்ற கம்பெனியில் வேலை கிடைத்தது. சாதாரண லேபர் வேலை. கஸ்தூரி அப்பத்தா என எங்களின் தூரத்துச் சொந்தத்தின் வீடு தேடி விழுந்தடித்து ஓடினேன். தாய்க் கிழவி என்பார்களே, அப்படி ஒரு அப்பத்தா அது. சோமசுந்தரம் தாத்தாவும் சொக்கத் தங்கம்.

ஒருகாலத்தில் அம்மாச்சி சொல்லும், ‘‘நாலு பக்கமும் திண்ணை வெச்சுக் கட்டுன வீடுப்பா நம்ம தாத்தன் வீடு. நம்ம திண்ணையில ஒக்காந்து சாப்பிடாதவுகளே கிடையாது. வீட்ல எப்ப ஒல வெச்சாலும் எச்சா ஏழெட்டுப் பேருக்குச் சேத்துச் சமைப்பாக. இன்னிக்கு நாதியத்துப் போயிட்டோம். ஆனா, செஞ்ச தர்மம் தலை காக்கும்டா சாமி!’’

தர்மம், தலைமுறைகளையும் காக்கும் என்பது உண்மை. எத்தனையெத்தனை கஷ்டம் இருந்தாலும், நான் சாப்பாட்டுக்கு மட்டும் கஷ்டப்பட்டதே இல்லை. இங்கே, கஸ்தூரி அப்பத்தா எனக்கும் சேர்த்து வடித்துக்கொட்டியது. மூன்று வருஷங்கள், என்னை ஒரு செல்லப் பிராணி போல பார்த்துக் கொண்ட குடும்பம் அது.

பல காலம் வேலை இல்லாமல் கிடந்தேன். சைக்கிளில் பிழைப்பு தேடித் திரிந்த காலத்தை விட, சினிமா தேடி அலைந்ததுதான் நிறைய. திக்கேது திசையேது எனப் புரியாமல், அரை மயக்க நிலையிலேயே சைக்கிள் மிதிப்பேன். சினிமாவை விட்டு வெகு தூரம் வெளியே திரிகிறேனே என்ற வருத்தம் என்னை அப்புகிற ஒவ்வொரு முறையும், என் அனுபவங் கள் ஒவ்வொன்றும் சினிமாவுக்காக நான் சேர்த்துவைக்கும் பொக்கி ஷங்கள் என்பதை உணரவில்லை.

இயக்குநர் சேரனின் டூரிங் டாக்கீஸ்!

மயிலாப்பூர் பக்கம் போகும் போது, வெயிலுக்கு ஒதுங்கிய இடத்தில் ஏதோ ஒரு விழா. உள்ளே போனால், அது உடல் ஊனமுற்ற, பார்வை யற்ற குழந்தைகளுக்கான விழா. வியர்வை வழியும் முகத்துடன் உள்ளே போன என்னை உலுக்கியது அந்தக் காட்சி.

விழிகள் இரண்டும் வெள்ளைப் படலங்களாக மிதக்கச் செல்லும் யாரோ ஒருவரைக் கடந்தாலே, எனக்கு மனசு நடுங்கும். அங்கேயோ பார்வை இல்லாத நூற்றுக்கணக்கான வெள்ளை விழிகள். காற்றுடனோ, கடவுளுடனோ பேசும் விழிகள்!

விழாவுக்குச் சிறப்பு விருந்தினர்... கங்கை அமரன். நான் பார்த்த முதல் சினிமாக்காரர். உடல் ஊனமுற்று உள்ளத்திலும் சோர்வுற்ற குழந்தைகளை மகிழ்விக்க, அமரன் ஒரு பாடல் பாடினார். ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே? இன்பத்தில் ஆடிடும் என் மனமே! கனவுகளின் சுயம்வரமோ? கண் திறந்தால் சுகம் வருமோ?’

அந்த ஒரு வரி கேட்டதும், அரங்கத்திலிருந்த அத்தனை விழிகளும் வெள்ளை தீபங்களாக ஜொலித்த அந்தக் காட்சி என்னைக் கலங்கடித்து, கண்ணீர் வழியவைத்தது.

ஒரு பாடல், ஒரு வார்த்தை, ஒரு கனவு, ஒரு ஆறுதல், ஒரு நம்பிக்கை... அடடா, எத்தனையெத்தனை வல்லமைகொண்டது சினிமா!

என் வாழ்வில் நான் ஆட்டோகிராஃப் வாங்கிய முதல் மனிதரும் ஒரே மனிதரும் கங்கை அமரன் அவர்கள்தான்.

எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு என் ‘ஆட்டோகிராஃப்’ படத்தில், ‘ஒவ்வொரு பூக்களுமே’ என நம்பிக்கை பேசும் பாடலாக வைத்ததும் அதே காட்சியைத்தான்!

 
இயக்குநர் சேரனின் டூரிங் டாக்கீஸ்!
-(நினைவுகள் தாலாட்டும்)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு