நாளைய நம்பிக்கை!
நாளைய நம்பிக்கை!
நாளைய நம்பிக்கை!
நாளைய நம்பிக்கை!
 
ரோகிணி
நாளைய நம்பிக்கை!
வயது 19

‘சு னாமி’க்குப் பிறகு, காற்று வாங்கக் கடற்கரைக்குச் செல்லவே தயக்கமாக இருக்கிறது நம்மில் பலருக்கு!

ஆனால், ரோகிணி ராவ் சாகசப் பிரியை. காற்றோடும் கடலோடும் மல்லுக்கட்டுவதில் கில்லாடி. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். பாய்மரத்தின் உதவியால் காற்றை எதிர்த்துப் படகைச் செலுத்தும் ‘லேசர் ரேடியல் செய்லிங்’கில் இவர்தான் இப்போது இந்தியாவின் சேம்பியன்!

நாளைய நம்பிக்கை!

சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 15 பதக்கங்கள் குவித்திருக்கிற இந்தப் பெண்ணிடம், ‘‘ரிஸ்க்கான இந்த ஆட்டத்தை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்று கேட்டால், ‘‘ரிஸ்க்கா, யாருக்கு?’’ என அழகாகச் சிரிக்கிறார் ரோகிணி.

‘‘உங்களுக்கு வேண்டுமானால் கடல் புதிதாக இருக்கலாம். ஆனால், இது எனக்கு இன்னொரு தாய் மடி!

நாளைய நம்பிக்கை!

நான் சின்னக் குழந்தையாக இருந்தபோது, என் அப்பாவும், அம்மாவும் லண்டனில் இருந்தார்கள். பொழுதுபோக்குக்காக அவர்கள் கடலில் போட்டிங் செல்லும்போதெல்லாம், என்னையும் அழைத்துப்போவார்கள். பிறகு, அவர்கள் இந்தியா திரும்பி சென்னையில் செட்டிலான பிறகும், போட்டிங் ஆசை மட்டும் போகவில்லை. மெட்ராஸ் போட் கிளப்பில் சேர்ந்தார்கள். என் அம்மாவுக்கு என்னை ‘செய்லிங்’கில் வீராங்கனை ஆக்க ஆசை. 11வயதில் என்னை ‘செய்லிங்’கில் சேர்த்துவிட்டார்.

‘லேசர் ரேடியல் போட்’ ஓட்டுவது ஆண்களுக்கே சவாலான விஷயம். அந்த விளையாட்டில் நான் சாதித்துக்காட்ட வேண்டும் என்பது அம்மாவின் விருப்பம். அவரது தீவிரமான ஆசையும் என் ஆர்வ முமே என்னை இந்த ஆட்டத்தில் சாதிக்க வைத்தன’’ என்கிறார் ரோகிணி.

‘‘இதற்கு முதல் தேவை ஃபிட்னெஸ். கைகள் வலுவாக இருப்பது மிக முக்கியம். அதற்கு மட்டுமே தினம் ஒரு மணி நேரம் தனிப் பயிற்சி செய்கிறேன். ஒவ்வொரு முறையும், போட்டிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே கடுமையான பயிற்சியை ஆரம்பிப்பேன். போட்டி நாள் நெருங்க நெருங்க, பயிற்சியின் நேரம் கூடிக்கொண்டே போகும். போட்டிக்கு ஒரு வாரம் முன்னதாகவே, போட்டி நடைபெற இருக்கும் ஊருக்குப் போய் அங்கே நடுக்கடலில் என் படகுடன் தீவிரமான பயிற்சியில் இருப்பேன். போட்டி நடக்கும் கடலின் தன்மையைப் பழகிக்கொண்டால், அது நமக்கு ப்ளஸ் பாயின்ட்டாக அமையும்’’ என்கிறார் ரோகிணி.

இந்த மாதிரி அறிமுகம் இல்லாத இடங்களில் பயிற்சிகளில் ஈடுபடுவது, சில சமயம் ரோகிணியை ஆபத்திலும் சிக்க வைத்துள்ளது. பிரான்ஸில் சர்வ தேசப் போட்டி ஒன்றின் முன்தினம் பயிற்சிக்காக நடுக் கடலுக்குச் சென்றிருக்கிறார் ரோகிணி. பயிற்சி மும்முரத்தில் ரோகிணி நீண்ட தூரம் சென்றுவிட, திடீரென்று படகின் ஹாண்டில் ஸ்ட்ரக் ஆகி, அப்படி இப்படி நகர்த்த முடியாமல்சிக்கிக்கொண்டது.இருட்டிக்கொண்டு வரும் நேரம்... கிடுகிடுக்க வைக்கும் குளிர்க் காற்று, நடுக் கடல்... ரோகிணிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. படகு கைவிட்டாலும், தன் தைரியத்தை விடாமல் நடுக்கடலில் ரொம்ப நேரம் தாக்குப் பிடித்திருக் கிறார் ரோகிணி. மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, கடலுக்குள் பயிற்சிக் காகப் போன இந்தியப் பெண் இன்னும் திரும்ப வில்லையே என்பதை உணர்ந்த போட்டி அமைப் பாளர்கள், மற்றொரு படகை அனுப்பித் தேடி ரோகிணியைக் காப்பாற்றிக் கரை சேர்த்திருக்கிறார்கள்.

நாளைய நம்பிக்கை!

‘‘ஆயிரமாயிரம் ரசிகர்கள் சுற்றி நின்று உற்சாகப்படுத்த, ஆடும் ஆட்டங்களுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. நடுக் கடலில் பெரும்பாலும் தனிமையில், காற்றின் திசைக்கும் வேகத்துக்கும் படகைச் செலுத்தவேண்டிய விளையாட்டு இது. புயல், குளிர், சில சமயம் சுறா மீன்கள் என என்னென்னவோ ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டி வரும். ஆனால், சவால்களைச் சந்திப்பதுதானே வாழ்க்கை!’’ என்கிறார் ரோகிணி சின்னப் புன்னகையுடன்.

ஒலிம்பிக்கில் இதுவரை செய்லிங் விளையாட்டு இல்லை. அடுத்த ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ‘லேசர் ரேடியல் செய்லிங்’கைச் சேர்ப்பதென இப்போது திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்காகச் சந்தோஷப்படும் ரோகிணி, ‘‘இந்தப் பிரிவில் நான் நிச்சயம் தங்கம் வாங்குவேன்’’ என்கிறார் நம்பிக்கை யாக.

ஒலிம்பிக் தங்கத்துக்கு அடுத்ததாக, ரோகிணியின் கனவு டாக்டராவது. ஆனால், இரண்டிலுமே இப்போது சின்ன சிக்கல். சென்னையில் இருந்தவரையில், ரோகிணி நினைத்தபோதெல்லாம் கடலுக்குள் சென்று பயிற்சி பெற முடிந்தது. இப்போது செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் படிப்பதால், சரிவரப் பயிற்சி செய்ய முடியாமல் இருக்கிறது. ‘‘அங்கே செய்லிங் பயிற்சிக்கு ஏற்ற சரியான நீர்நிலைகளும் இல்லை. அதனால், சென்னை மருத்துவக் கல்லூரியில் எனக்கு சீட் தரும்படி முதல்வரைக் கேட்டிருக்கிறேன்’’ என்கிற ரோகிணி,

‘‘செய்லிங் என்பது காஸ்ட்லியான ஸ்போர்ட்ஸ்! இதற்குப் பயன்படும் ஒரு படகின் விலை மட்டுமே இரண்டு லட்சம் ரூபாய். இதற்கான வசதியும் சூழலும் எனக்கு வாய்த்ததால்தான், நான் இதில் பல பதக்கங்களை ஜெயிக்க முடிந்தது. ஆனால், என்னைவிடவும் திறமை மிக்க பலர் வசதியில்லாததால் இதில் கலந்துகொள்ள வழி இல்லாமல் இருக்கிறார்கள். வருங்காலத்தில் அப்படிப் பட்ட வீரர்களை ஆதரிக்க, ஒரு கிளப் தொடங்கலாம் என்று இருக்கிறேன்!’’ என்கிறார். நம்பிக்கை வெல்லட்டும்!

 
நாளைய நம்பிக்கை!
\ சி.திலகவதி
படங்கள்: ‘ப்ரீத்தி’ கார்த்திக்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு